Nov 25, 2013

கரும்பு மெஷினுக்குள் தலையை விட முடியுமா?

ஒரு பெண் குழந்தை. ஆறாம் வகுப்பிலோ அல்லது ஏழாம் வகுப்பிலோ படித்துக் கொண்டிருக்கிறாள். அவளது பெற்றோர்கள் உள்ளூரில் இல்லை. கல் உடைக்கும் வேலைக்காக ஆந்திர மாநிலம் சித்தூரில் இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு ஒரு முறை மட்டும் ஊருக்கு வருவார்கள். அந்தப் பெண்ணும் அவளது தம்பி மட்டும் தர்மபுரிக்கு பக்கத்தில் வசிக்கிறார்கள். வெறும் வயிற்றோடு பள்ளிக்குச் செல்வார்கள். மதிய உணவுக்கு சத்துணவு. இரவில் வந்து எதையாவது வேகவைத்து வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். பிறகு கதவைத் தாழிட்டுக் கொண்டு படுத்துக் கொள்வார்கள்.  அதைக் கதவு என்று கூட சொல்ல முடியாது. ஒரு தகரம். அவ்வளவுதான்.

பெயருக்குத்தான் பள்ளிக்கு போகிறார்கள். அ, ஆ, இ, ஈ கூட வாசிக்கத் தெரியாது. உடல் சற்று உறுதியானவுடன் படிப்பை நிறுத்திவிட்டு பெற்றோருடன் கல் உடைக்கச் சென்றுவிடுவார்கள். அடுத்த ஓரிரு வருடங்களில் யாருக்காவது கட்டி வைத்துவிடுவார்கள். அவன் மட்டும் என்ன செய்யப் போகிறான்? ‘தன்னோடு வா’ என்று கல் உடைப்பதற்கு அழைத்துச் சென்றுவிடுவான். அவர்களின் பிள்ளைக்கும் இதே விதிதான் இம்மி பிசகாமல் எழுதப்பட்டிருக்கும். இப்படி ஒன்றில்லை- நூறு கதைகளைப் பார்க்கவும் கேட்கவும் முடிந்தது -கடந்த வெள்ளிக்கிழமை.

இந்த இடத்தில் ‘வாழை பற்றிச் சொல்லிவிடுவது உசிதம். 

இதுவரைக்கும் வாழை பற்றி எனக்கு பெரிதாகத் தெரியாது. கேள்விப்பட்டிருக்கிறேன். ஸ்ரீனி, திரு போன்ற பெங்களூர் நண்பர்கள் ‘வாழை’ ‘வாழை’ என்பார்கள். ஆனால் அவ்வளவாக அலட்சியம் செய்ததில்லை. ‘பத்தோடு பதினொன்று அதோடு இது ஒன்று’ என்று நினைத்துக் கொள்வேன். இப்படி குருட்டுத்தனமாக நாம் எதையாவது நினைத்துக் கொண்டிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் அந்த நினைப்பு தவிடு பொடியாகிவிடுமல்லவா? அப்படித்தான் நடந்தது.

ஓரிரு வாரங்களுக்கு முன்பாக வெங்கட் அழைத்திருந்தார். அவர் வாழை அமைப்பின் உறுப்பினர். முதல் முறையாக பேசுகிறோம். ‘தர்மபுரிக்கு அருகில் பள்ளிகளுக்கு இடையிலான சில போட்டிகளை நடத்துகிறோம் வர முடியுமா’ என்றார். ‘வர முடியாது’ என்று சொல்லும் அளவுக்கு நான் என்ன பெரிய அப்பாடக்கரா? வந்துவிடுகிறேன் என்று சொல்லியிருந்தேன். ஆனால் அலுவலகம்தான் தனது பெருவாய்க்குள் என்னை இறுகக் கவ்விப் பிடித்திருந்தது. வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்றால் ஒட்டுமொத்த அலுவலகக் கட்டடத்தையும் வெடி வைத்துத் தகர்க்க வந்தவனைப் போல பார்க்கிறார்கள். நல்லவேளையாக வெள்ளிக்கிழமை காலையில் ‘படுக்கையை விட்டு எழ முடியாத அளவுக்கு காய்ச்சல் வந்துவிட்டது’- இப்படி அலுவலகத்தில் சொல்லிவிட்டு வாழை அமைப்பினரோடு வண்டி ஏறிக் கொண்டேன். அலுவலகத்தில் நான் சொன்னதை நம்பிக் கொண்டார்கள். அப்பாவிகள்.

ஆறு பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள் அது. அனைத்துமே அரசு பள்ளிகள். ஏரியூரிலும், நெருப்பூரிலும், சின்ன வத்தலாபுரத்திலும் இருக்கும் அரசு பள்ளிகளில் கலெக்டரின் மகனும், எம்.எல்.ஏவின் மகளுமா படிப்பார்கள்? எளிய மனிதர்களின் பிஞ்சுகள் அவை. அந்தக் குழந்தைகளின் முகத்தை ஒரு முறை நேருக்கு நேர் பார்த்தால் கூட கண்கள் கலங்கிவிடும். விகல்பம் இல்லாத நீரோடைகள் அந்தக் குழந்தைகள். அவற்றின் மிரட்சியான பார்வையும், பயம் கலந்த வார்த்தைகளும் நெகிழச் செய்துவிடும். அந்தக் குழந்தைகளுக்கான போட்டிகளுக்காகத்தான் இந்த ஏற்பாடுகள். தர்மபுரியிலிருந்து ஓகேனக்கல் செல்லும் வழியில் உள்ள ஏரியூர் என்ற சிற்றூரில் ஒரு திருமண மண்டபத்தில் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். 

பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என்று வழக்கமான போட்டிகள்தான். கவிதைப் போட்டிக்குத்தான் என்னை நடுவராக இருக்கச் சொன்னார்கள்.  என்னைக் கவிஞன் என்று நம்பிய அந்த நல்ல உள்ளங்கள் வாழ்க சில நூற்றாண்டுகள் என்று மனசுக்குள் வாழ்த்தியபடியே அமர்ந்திருந்தேன். பெயருக்குத்தான் கல் உடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயக் கூலிகளின் பிள்ளைகள். அந்த வயதில் நான் கிறுக்கிய குப்பைகளை விட பன்மடங்கு நல்ல கவிதைகளை எழுதியிருந்தார்கள். இதை ஃபார்மாலிட்டிக்காகச் சொல்லவில்லை. நிஜமாகவே அந்த குழந்தைகளின் வயதையும், வாழும் சூழலையும் பொருட்படுத்தும் போது அவை ஆகச் சிறந்தவை. கலக்கிக் கொண்டிருந்தார்கள்.

இப்படியே அந்த மண்டபத்தின் வெவ்வேறு இடங்களில் மற்ற போட்டிகளை எல்லாம் நடத்திவிட்டு பரிசளிக்கும் விழாவில் என்னையும் இன்னொரு ஆசிரியரையும் மேடைக்கு அழைத்துவிட்டார்கள். பரிசளிக்க வேண்டுமாம். மற்றவரவாவது தமிழாசிரியர். என்னை எதற்கு மேடைக்கு அழைத்தார்கள் என்று படு குழப்பமாக இருந்தது. தன்னடக்கம் என்றெல்லாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. உண்மையிலேயே ‘வாழை’ அமைப்பினரோடு ஒப்பிட்டால் நான் பத்து பைசா பெற மாட்டேன் என்று தெரியும். அந்த அளவிற்கு அவர்கள் தகுதியானவர்கள். 

அவர்கள் வெறும் போட்டிகளை மட்டும் நடத்துவதில்லை. இந்த அமைப்பில் நூற்றுக்கணக்கான உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதில் நாற்பது பேர் mentorகளாகச் செயல்படுகிறார்கள். இந்த ஒவ்வொரு Mentor ம் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். இந்த தத்தெடுத்தலை பெயருக்குச் செய்வதில்லை. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதே திருமண மண்டபத்தில் சந்திக்கிறார்கள். தாம் தத்தெடுத்துக் கொண்ட குழந்தையோடு இரண்டு நாட்களை முழுமையாகச் செலவிடுகிறார்கள். இடையில் வாரம் ஒரு முறையாவது அந்தக் குழந்தையோடு தொலைபேசி, அஞ்சல் என்று தொடர்பில் இருக்கிறார்கள்.  பத்தாம் வகுப்பு வரை அந்தக் குழந்தை சரியான பாதையில் செல்வதற்கும், படிப்பை பாதியில் விட்டு நின்றுவிடாமல் தொடர்வதற்கும் பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள். இது மட்டுமில்லை- இன்னும் என்னனென்னவோ செய்கிறார்கள்.

எவ்வளவு பெரிய விஷயம் இது? நாலணாவுக்கு கூட சமூகத்துக்கு பிரயோஜனம் இல்லாதவனெல்லாம் இந்த நாட்டையே கட்டிக் காக்க வந்தவன் போல அரற்றிக் கொண்டிருக்கும் போது போக்குவரத்துச் செலவிலிருந்து அத்தனையும் கைக்காசு போட்டு வந்து குழந்தைகளோடு நாட்களைக் கழிக்கிறார்கள். இத்தனையும் செய்துவிட்டு சப்தம் இல்லாமல் இருக்கிறார்கள். 

அந்த மண்டபத்தில் அவர்கள் சுற்றிச் சுழன்றதை பார்த்திருக்க வேண்டும்- பார்த்த எனக்கே கால் வலித்தது. 

இதையெல்லாம் பார்த்தால் நாமும் வாழ்நாளில் ஒரு குழந்தைக்காவது Mentor ஆக இருக்க வேண்டும் என்று தோன்றியது. வீட்டில் இதைச் சொன்னால் முதல் வாக்கியம் என்ன வரும் என்று தெரியும். ‘முதலில் உங்க பையனுக்கு Mentor ஆகுங்க. அப்புறம் பார்க்கலாம்’ என்பார்கள். இப்போதைக்கு அடக்கி வைத்திருக்கிறேன். 

வெள்ளிக்கிழமை போட்டிகள். சனி,ஞாயிறு மேற்சொன்ன வொர்க்‌ஷாப். மூன்று நாட்களும் தங்கியிருந்து குழந்தைகளின் செயல்பாட்டை பார்க்க வேண்டும் என நினைத்திருந்தேன். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா என்ன?

வெள்ளிக்கிழமை மாலையே கரும்பு மெஷின்காரர் அழைத்தார். அவருக்கு ப்ராஜக்ட் மேனேஜர் என்ற பெயரும் உண்டு. 

‘மணி, சாரி டூ டிஸ்டர்ப் யூ’- தொடங்குவது மட்டும்தான் இப்படித் தொடங்குவார்கள் என்றுதான் நமக்குத் தெரியுமே. அவர்களா அப்பாவிகள்? நான்காம் பத்தியில் அவர்களுக்கு கொடுத்த சர்டிபிகேட் வாபஸ். படுபாவிகள்.

‘இட்ஸ் ஓகே. சொல்லுங்க’ என்றுதான் நாம் ஆரம்பிக்க வேண்டும். அதுதான் மேனர்ஸ்.

‘நாளைக்கு ஒரு ப்ரொடக்‌ஷன் வேலை இருக்கு. வர முடியுமா?’ என்றார். அதோடு நிறுத்திக் கொள்ள மாட்டார். 

‘உனக்கு உடம்பு சரியில்லைன்னு தெரியும். சனிக்கிழமை விடுமுறைதான். ஆனாலும் வேறு வழியில்லை. வர முடியுமா?’ இவர்களிடம் எப்படி முடியாது என்று சொல்வது? 

‘கரும்பு மெஷினுக்குள் தலையை விட முடியுமா?’ என்று கேட்பது போலவே இருக்கும். சரி என்று சொல்லிவிட்டு அப்பொழுதே கிளம்பினேன். 

கிளம்பும் போது ‘விழாவில் ஏதாச்சும் குறை இருந்தா சொல்லுங்க’ என்று கேட்டார்கள்.

‘குறையா? ஒவ்வொருத்தரும் காலைக் கொடுங்க பாஸ். தொட்டுக் கும்பிட்டுக்கிறேன்’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு வண்டியேறினேன்.