Nov 24, 2013

அப்படியே மண்டைக்குள் ஊறணும்

ஊரில் ஒரு நடுத்தர வயதுக்காரர் இருக்கிறார். அவருக்கு இளம் மனைவியும் உண்டு- பெயர் கிருஷ்ண வேணி. குழந்தைகள் பெற்றுக் கொண்டு ஒழுங்காக போய்க் கொண்டிருக்கும் குடும்பத்தில் சடாரென்று கடும் புயல் அடிக்கிறது. இளம் மனைவிக்கும் கொண்சீ என்று அவளால் செல்லமாக விளிக்கப்படும் குணசேகரனுக்கும் காதல் உருவாகிவிடுகிறது. கொண்சீ உள்ளூரில் இருக்கும் டீக்கடையில் வேலை செய்கிறான். சிறுவயதிலேயே அப்பாவின் அடி பொறுக்கமாட்டாமல் ஊரைவிட்டு ஓடி வந்த காலத்திலிருந்து இந்தக் கடையில்தான் வேலையில் இருக்கிறான். இதுவரைக்கும் ஒழுக்கமாகத்தான் இருந்தான். கொண்சீக்கும் அவளின் கணவர் ரத்தினத்துக்கும் நல்ல பழக்கம் உண்டு. அவரைப் பார்ப்பதற்கு வீட்டுக்கு போய் வருவான். முதலில் கொண்சீக்கும் அவளுக்கும் வெறும் பேச்சுவார்த்தைதான். ஆனால் இதெல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். பிறகு அவன் தனது வீட்டுக்கு வரும் போது தனது ஆடைகள் விலகியிருப்பதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது போன்ற அவனோடு நடத்தும் சீண்டல்கள் எல்லை மீறி அரிசி மூட்டைகள் அடுக்கி வைத்திருக்கும் பண்டகசாலையில் அவனை அவள் அனுமதிக்கிறாள்- முழுமையாக.

வந்தவன் வட்டிலில் வாயை வைத்தால் வீட்டுக்காரன் அமைதியாக இருப்பானா? ரத்தினம் தனது மனைவியை கண்டிக்கிறார். அவளுக்கு அடியும் விழுகிறது. விவகாரம் வெளியில் கசிந்து கொண்சீ வேலை செய்யும் கடையின் முதலாளி அவனுக்கு அறிவுரை சொல்கிறார். அடி பொறுக்கமாட்டாமல் ‘இனி என்னைப் பார்க்க வேண்டாம்’ என அவளும் சொல்லிவிட கொண்சீக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ‘என்னோடு வா’என்கிறான். குழந்தைகளை விட்டு வர முடியாது என்கிறாள். அசுபயோக அசுபதினத்தில் அதிகாலையில் அவளது வீட்டு முன்பாக கெரசினை ஊற்றிக் கொளுத்திக் கொள்கிறான். அவனைப் பார்ப்பதற்கு அவள் வெளியே போக முயற்சிக்கும் போது ரத்தினம் ஓங்கி அறைகிறான். வீட்டைப் பூட்டிக் கொண்டு மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு போகிறான். கொண்சீயின் உடலைத் திரும்பிப் பார்த்தபடியே மிரட்சியோடு நடக்கிறாள் அவள்.

அழகிய பெரியவனின் ‘நெரிக்கட்டு’ தொகுப்பில் முதல் கதையே இதுதான். இப்படி இரண்டு பத்தியில் நாம் கதையைச் சொல்லும் போது வெறும் கள்ளக்காதல் கதைதான் என்று தெரியும். ஆனால் அழகிய பெரியவன் தனது கதையை சொல்லும் நேர்த்தி க்ளாஸிக்.  ‘ஒரு ஊரில் ஒருத்தன் இருந்தானா.....’ என்று ஆரம்பித்து கதையை நேர்கோட்டில் சொல்வது ஒரு வித்தை என்றால், அழகிய பெரியவனின் வித்தை வேறு மாதிரி. க்ளைமேக்ஸூக்கு முந்திய காட்சியை வைத்துத்தான் கதையே தொடங்குகிறது.  மொத்தக் கதையையும் நான்கைந்து துண்டுகளாக கத்தரித்து அவற்றை வரிசை மாற்றி அடுக்கி வைத்திருக்கிறார். ஆனால் வாசிக்கும் போது துளி கூட சிரமம் இல்லாமல் நகர்கிறது. இது ஒரு கதை மட்டும்தான் உதாரணம் இல்லை.

மொத்தம் பன்னிரெண்டு கதைகள். ஒவ்வொன்றுமே ஏதாவது விதத்தில் வித்தியாசமாக இருக்கிறது. 

அழகிய பெரியவனின் இயற்பெயர் அரவிந்தன். வேலூர் மாவட்டம் பேராணம்பட்டைச் சேர்ந்தவர். இப்பொழுதும் அங்குதான் வசிக்கிறார் என நினைக்கிறேன். அவரின் கவிதைத் தொகுப்புகளை வாசித்ததுண்டு; ஆனால் அவற்றை விடவும் சிறுகதைகள்தான் பிடித்திருக்கின்றன. பிடித்திருக்கின்றன என்பதை விடவும் மிகப் பிடித்திருக்கின்றன என்பது பொருத்தமாக இருக்கக் கூடும்.

அழகிய பெரியவனின் கதையின் பாத்திரங்கள் எல்லோருமே மிக எளிமையான மனிதர்கள்தான். ஒழுகும் வீட்டில் வசிப்பவர்கள், செருப்புத் தைப்பவர், தோல் பதனிடும் தொழிற்சாலையிம் கடும் உழைப்பைக் கொடுக்கும் வயதான மனிதர், பீடி சுற்றுபவர்கள், சாய்பு வீட்டு பண்ணையத்தில் இருப்பவர்கள் என்று ஒவ்வொருவருமே வாழ்வின் அடித்தட்டு மனிதர்கள்தான். தொகுப்பின் முக்கியமான அம்சம்- இவர்கள் யாவருமே தலித் சமூகத்தைச் சார்ந்தவர்கள். ஆனால் கதையில் எந்த இடத்திலும் அவர்கள் தலித் என்பது துருத்திக் கொண்டிருப்பதில்லை. இந்த துருத்தலின்மையின் வழியாகவே அவர்களின் வலியை நமக்குள் பாய்ச்சிவிடுகிறார்.

வெறும் வலிகளால் மட்டும் நிறைந்ததில்லை இந்தத் தொகுப்பு. 

யட்சிணி என்றொரு கதை. ஒருவன் ஒரு பெண்ணைத் தழுவும் போது ‘ஒளி’ என்கிறாள். அவள் பாலியல் தொழிலாளி. அவன் பெயர் ஒளிச்சந்திரன். அவனது பெயரைத்தான் சொல்லியிருக்கிறாள். இதற்கு முன் அவளோடு தொடர்பு எதுவும் இருந்ததில்லை. அவளுக்கு அவனைத் தெரிந்திருக்கிறது. ஆனால் அவனுக்கு அவள் யாரென்றே தெரிவதில்லை. தனது வாழ்நாளில் எதிர்கொண்ட வெவ்வேறு பெண்களின் முகங்களை கற்பனை செய்து பார்க்கிறான். அந்த ஒவ்வொரு முகமும் இவளோடு பொருந்திப் போகிறது என்றாலும் ‘அவள்தான் இவள்’ என்று முடிவு செய்ய முடிவதில்லை. இப்படியே கதையின் முடிவு வரைக்கும் ஒளிச்சந்திரன் ஒவ்வொரு முகமாகக் கற்பனை செய்கிறான்; அந்த ஒவ்வொரு முகத்தோடும் ஒரு கிளைக்கதை விரிகிறது. ஒருவிதமான ஃபேண்டஸி கதை இது.

இப்படியே ஒவ்வொரு கதையாகச் சொல்லிப் போனால் வாசிக்கும் போது உங்களுக்குத் த்ரில் இல்லாமல் போய்விடக் கூடும். வாய்ப்பு கிடைத்தால் தொகுப்பை நிச்சயம் வாசித்துவிடுங்கள். உயிரிடம் கதையில் வரும் அன்னமும், கண்காணிக்கும் மரணம் கதையில் வரும் ரகுபதியும், உள்ளூர் அளவில் நடைபெறும் அரசியலைப் பேசும் யாரும் யாரையும் கதையில் வரும் வேல்முருகனும், மனோகரனும், பால்மறதியில் வரும் ஏலாசியும், மின்றாவும், கண்மணியும் ஏதாவது ஒரு வகையில் நம்மைச் சலனப்படுத்திவிடுவார்கள். 

இந்தத் தொகுப்பை ஒரே நாளில் வாசிப்பதில் பெரிய சுகம் இல்லை. முதலில் ஒரு கதையை வாசிக்க வேண்டும். பிறகு மூடி வைத்துவிட வேண்டும். கதையின் களமும் கதை மாந்தர்களும் அடுத்த ஓரிரண்டு நாட்களுக்காவது மண்டைக்குள் ஊறிக் கொண்டே கிடக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களில் அவர்கள் எப்படியும் நம் மனதுக்குள் கிடக்கும் இண்டு இடைவெளிகளில் நுழைந்து தங்களுக்கான இடத்தை பிடித்துக் கொள்வார்கள். பிறகு அடுத்த கதையைத் தொடங்க வேண்டும். 

இந்தக் கதைகளில் இன்னொரு முக்கியமான அம்சமாகத் தெரிவது கதையின் அழகியல். அழகியல் என்று வர்ணனைகளைச் சொல்கிறேன். ஒரு இடத்தை வர்ணிப்பதென்றாலும், மனிதர்களின் மனநிலையை வர்ணிப்பதென்றாலும் அழகிய பெரியவனுக்கு சர்வசாதாரணமாக கைவருகிறது. அதை ஒரு கலையாகவே செய்கிறார்.

இந்தத் தலைமுறையின் சிறுகதை எழுத்தாளர்களில் அழகிய பெரியவன் மிக முக்கியமானவர் என்று நம்புகிறேன். அழகிய பெரியவனின் கதைகளை ஏற்கனவே வாசித்தவர்களுக்கு இந்த நம்பிக்கை ஏற்கனவே வந்திருக்கும். ஒருவேளை வாசித்திருக்கவில்லை என்றால் தொகுப்பு ஆன்லைனில் கிடைக்கிறது. வாசித்துவிடுங்கள். பிறகு முந்தய வரியில் இருக்கும் எனது நம்பிக்கை உங்களுக்கும் வந்துவிடக் கூடும்.