Nov 26, 2013

தினமும் எதையாவது எழுத முடியுமா?

இணையத்தில் எழுதும் போது consistency மிக முக்கியம் என நினைக்கிறேன். தினமும் எழுதுவது அத்தனை சுலபமில்லைதான். ஆனால் அது ஒன்றும் சாத்தியப்படாத காரியமும் இல்லை. முதல் நான்கைந்து மாதங்களுக்கு தினமும் எழுதுவதில் பெரிய சிரமம் இருக்காது. வாத்தியார் அடித்தது, டீச்சர் கொட்டியது, முதல் காதல், கல்லூரி வாழ்க்கை, நெருங்கிய மரணம் என்று சிறு வயதிலிருந்து நம் மண்டைக்குள் கிடப்பதையெல்லாம் எழுதிவிடலாம். அதன் பிறகு ஒரு வறட்சி வரும் பாருங்கள். எழுதுவதற்கு ஒன்றுமே இல்லாமல் தீர்ந்துவிட்டது போலத் தோன்றும். மனம் ஏதோ பாலைவனம் ஆகிவிட்டது போலவே இருக்கும். இனிமேல் எந்தக் காலத்திலும் எழுத மாட்டோம் என்றுதான் நினைப்போம். ஆனால் அதிக நாட்களுக்கு இந்த வறட்சி நிலவாது. ஓரிரண்டு மாதங்கள்தான். ஆனால் இந்த வறட்சிக்காலத்தில் எப்படி தப்பிக்கிறோம் என்பதில்தான் வெற்றி இருக்கிறது என நம்புகிறேன்.

பிடித்த புத்தகங்களை வாசித்து அதைப் பற்றி எழுதுவது, பயணத்தின் மூலமாக அனுபவங்களைத் தேடுவது என்று எப்படியாவது survive ஆகிவிட வேண்டும். அப்படி தப்பித்து விட்டால் தினமும் எழுதுவது என்பது நம்முடைய தினசரி பழக்கமாகிவிடக் கூடும்- குளிப்பது மாதிரியோ அல்லது தம் அடிப்பது போலவோ. எழுதுவதை பொறுத்தவரை பழக்கம் என்பதையும் தாண்டி அதற்கு அடிமையாகிவிடுவது உசிதம். addicted. அதுவும் பெரிய சிரமம் இல்லை. இன்னும் கொஞ்ச நாளைக்கு தொடர்ந்து எழுதியபடியே இந்தப் பழக்கத்தை இழுத்துப் பிடித்தால் addicted ஆகிவிடலாம். அவ்வளவுதான்.

அடிக்ட் ஆகிவிட்ட பிறகு மிகப்பெரிய பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடுவோம். ‘எதை எழுதுவது’ என்ற முக்கியமான பிரச்சினையைச் சொல்கிறேன். எழுதுவதற்கு வேண்டிய கச்சாப் பொருளை நம்மையும் அறியாமல் மனம் தேடத் துவங்கிவிடுகிறது. அதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் எழுதுவதற்கான ‘மேட்டர்’ கிடைத்துவிடும். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான முகங்களை பார்க்கிறோம். அதுமட்டுமில்லை. சண்டை, விபத்து, திருமணம், கொண்டாட்டம், துக்கம், அதிர்ச்சி என்று தினமும் ஒரு முக்கியமான நிகழ்வையாவது எதிர்கொள்கிறோம். இவை தவிர, பத்து ரூபாயைத் தொலைத்துவிட்டு அழும் சிறுவன், அப்பாவிடம் அடி வாங்கிவிட்டு அழும் சிறுமி, வகுப்பறையின் வெளியே மண்டியிட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள், முதலமைச்சரின் அறிக்கை, பிரதமரின் மெளனம் என தினமும் எதிர் கொள்ளும் ஆனால் விரைவில் மறந்துவிடக் கூடிய செய்திகள் நூற்றுக் கணக்கில் கண் முன்னால் வந்து போகின்றன. இவற்றை எல்லாம் addict ஆகிக் கிடக்கும் ஆழ்மனம் பற்றிக் கொள்ளும். 

இப்படி பற்றிக் கொண்ட செய்திகளைக் கட்டுரை ஆக்குவதும் ரொம்ப சிம்பிள். பயிற்சி இருந்தால் போதும். எழுதுவது என்பதே வெறும் பயிற்சிதான். சென்ற மாதத்தில் எழுதிய கட்டுரைகளை இன்றைக்கு வாசிக்கும் போது போரடித்தால் முன்னேறிக் கொண்டிருக்கிறோம் என்று நினைத்துக் கொள்வேன். அதுவே,  இன்றைய கட்டுரை முந்தைய கட்டுரைகளை விட சுவாரசியம் இல்லாமல் இருப்பதாகத் தெரிந்தால் எங்கோ பிரச்சினை இருக்கிறது என்று அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டியதுதான். இப்போதைக்கு மட்டுமில்லை எப்போதைக்குமே சுவாரசியம்(Readability) என்பதைத்தான் அளவுகோலாக வைக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆயிரம் பிரச்சினைகளோடு நமது எழுத்தை வாசிக்க வருகிறார்கள். நமக்கு வளைத்து வளைத்து எழுதத் தெரியும் என்பதையெல்லாம் அவர்களிடம் ஏன் நிரூபிக்க வேண்டும்? 

சொல்வதற்கு எளிமையாக இருந்தாலும் ‘எழுதுவதற்கு அடிமையாதல்’ என்பதை முயற்சிக்கும் போது சில பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம். வீட்டில் திட்டுவார்கள். குடும்பத்திற்கான நமது நேரம் குறையும். வண்டியில் போகும் போதும் வரும் போதும் கவனம் சிதறும். வேலையில் கொஞ்சம் பிசகுவோம். ஆனால் கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் சிலவற்றை அடையவே முடியாது.  எழுத்துக்காக இவற்றை காம்ப்ரமைஸ் செய்து கொள்ளலாம். அவ்வளவுதான்.

இதை வாசித்துவிட்டு ‘ஒன்றரை வருஷம் எழுதற இவன் எல்லாம் டகால்ட்டி ஆகிவிட்டான். ஐடியா கொடுக்கிறான் பாரு’ என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். எழுத்தை தவமாக அல்லது எழுத்தை புனிதமாகச் செய்து கொண்டிருக்கும் அல்லது செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கும் யாரும் இதைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இப்பொழுதெல்லாம் ‘தினமும் எழுதுவதற்கு எப்படி முடியுது?’ என்ற கேள்வியை அடிக்கடி எதிர்கொள்கிறேன். அந்தக் கேள்வியை எழுப்பியவர்களுக்கான பதில்தான் இது. 

ஒருவருக்காவது நமது அனுபவம் உதவும் என்றால் நல்லதுதானே?

ஏழு கோடி தமிழர்களில் குறைந்தபட்சம் ஒரு கோடி பேர்களாவது இணையத்தில் புழங்குபவர்களாக இருக்கக் கூடும் என நம்புகிறேன். இதில் சினிமா மற்றும் செய்திகள் தவிர்த்த பிற தமிழ் இணையதளமோ அல்லது வலைப்பதிவோ அதிகபட்சம் எத்தனை ஹிட் அடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? தினமும் ஐந்தாயிரத்தில் இருந்து பத்தாயிரம். அவ்வளவுதான். இன்னும் தொண்ணூற்று ஒன்பது லட்சத்து தொண்ணூறாயிரம் பேர் பாக்கியிருக்கிறார்கள். இவர்களை எல்லாம் இழுத்துப் பிடிக்கவும், மிச்சமிருக்கும் ஆறு கோடி பேர்களும் இணையத்திற்குள் வரும் போது அவர்களுக்கு தேவையான தீனி போடவும் என்று கணக்குப் பார்த்தால் இன்னும் பல லட்சம் பேர் எழுத வந்தாலும் எழுதுபவர்களுக்கான தேவை இருந்து கொண்டேதான் இருக்கும். 

இங்கு பொறாமையே இல்லாமல் எழுதலாம். யாரைப் பற்றியும் கவலையே பட வேண்டியதில்லை. இணையத்தில் மட்டுமில்லை எந்த ஊடகத்தில் அவரவரின் எழுத்து அவரவருக்கு. கதிர்பாரதி எழுதுவதை கணேசகுமாரன் எழுத முடியாது. ஜ்யோவ்ராம் சுந்தர் எழுதுவதை வா.மு.கோமு எழுத முடியாது. அப்புறம் எதற்கு அடுத்தவரைப் பார்த்து பயப்பட வேண்டும். பொறாமையும் பயமும் இங்கு அவசியமே இல்லை. 

இணையத்தில் எழுதும் போது வேறு சில விஷயங்களையும் கண்டிப்பாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன் -

அச்சு ஊடகத்தைப் பொறுத்த வரையில் எழுதுபவனுக்கும், வாசிப்பவருக்கும் இடையில் மிகப் பெரிய இடைவெளி உண்டு. எழுத்தாளன் என்ற பிம்பத்திற்கு நிறைய மரியாதை உண்டு. இணையத்தில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. வாசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் எழுதுபவர்கள் அல்லது தன்னால் எழுத முடியும் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள். இவர்களிடம் நமது ‘அறிவுஜீவி’ பிம்பத்தை உருவாக்க முயற்சித்தால் பொடனியிலேயே அடி விழும். தான் மட்டுமே பெரியவன் என்று ஸீன் காட்டினால் கழுத்து மீதே குத்துவார்கள். அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. அதிக பட்சம்- பத்து நிமிடங்களில் இந்த அடி விழுந்துவிடும்.

ஆனாலும் அடங்கி இருக்க முடியுமா? நான்கு பேர் மின்னஞ்சல் அனுப்பினால் கூட நமது ஈகோ லேசாகத் துருத்தத் துவங்கும். அடுத்தவர்களை விடவும் நாம் ஒரு படி மேலே என்ற நினைப்பு வரும். முடிந்தவரையில் இந்த ஈகோவை கத்தரித்துவிடுவது நல்லது. கத்தரிப்பது அவ்வளவு சுலபம் இல்லைதான். குறைந்தபட்சம் சுருட்டியாவது வைக்கலாம். 

இன்னொரு விஷயம்- வசவுகளும், திட்டுக்களும். இதைத் தாண்டுவதுதான் மிகப் பெரிய விஷயம். போகிற போக்கில் ‘புளிச்’ என்று உமிழ்ந்துவிட்டு போவார்கள். சாணத்தை உருண்டை பிடித்து ‘சத்’ என்று முகத்திலேயே எறிவார்கள். ‘நான் கஷ்டப்பட்டு எழுதுகிறேன். இவன் யார் கேள்வி கேட்பது; இவன் யார் நக்கலடிப்பதற்கு’ என்று தோன்றும். ஆனால்  பதில் சொல்வதைவிடவும் முடிந்தவரைக்கும் பற்களைக் கடித்துக் கொண்டு கண்டு கொள்ளாமல் இருப்பது பெரும் பலன் தரும். ஆயிரம் பேர் திட்டிக் கொள்ளட்டும். நமக்கு என்ன ஆகிவிடப் போகிறது? காதுகளை மூடிக் கொண்டு நம் வழியை பார்த்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருப்போம்- அதுவும் வெறித்தனமாக. மற்றது எல்லாம் தானாக நடக்கும்.