Nov 23, 2013

மூன்றாம் உலகம்

எங்கள் அலுவலக இருக்கும் வளாகத்தில் வேறு சில நிறுவனங்களும் இருக்கின்றன. அத்தனையும் ஐ.டி நிறுவனங்கள்தான். இப்படியான பெருநிறுவனங்கள் இருக்கும் வளாகங்களில் மதியம் இரண்டு மணிக்கு மேல் கவனித்திருக்கிறீர்களா? ஆசுவாசமான வேறொரு உலகம் இயங்கிக் கொண்டிருக்கும். அது Cab driverகள் உருவாக்கிய இரண்டாம் உலகம். 

தலைப்புக்கும் கட்டுரைக்கும் இது மட்டும்தான் சம்பந்தம். சினிமா விமர்சனம் என்று நினைத்து தெரியாத்தனமாக உள்ளே வந்துவிட்டவர்கள் தொடர்ந்து வாசிக்க வேண்டாம். வாசித்தாலும் கூட பரவாயில்லை. கடைசியில் கண்டபடிக்கு சாபம் விட்டுவிடுவார்கள். அதுதான் பிரச்சினை.

சாபம் விடாதவர்கள் மட்டும் அடுத்த பத்திக்கு நகரவும்.

டிரைவர்களின் அந்த இரண்டாம் உலகத்தை கவனித்திருக்கிறீர்களா? சொர்க்கம். தனிப்பட்டவர்களுக்காக கார்களை ஓட்டுபவர்கள், நிறுவனங்களின் Cab ஓட்டுபவர்கள் என்று அத்தனை ஓட்டுனர்களும் மொத்தமாக சேர்ந்து ஒரு சொர்க்கத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். மதிய உணவை முடித்துவிட்டு சிலர் சாவகாசகமாக சீட்டு விளையாடத் துவங்குவார்கள். வேறு சிலர் ஏதாவது ஒரு வண்டியில் படம் பார்த்துக் கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் வண்டிக்குள்ளேயே காலை நீட்டித் தூங்கிக் கொண்டிருப்பார்கள்.

அனுஷ்காக்கள் இல்லாத வெறும் ஆர்யாக்களினால் நிறைந்த சொர்க்கம் அது. இந்த சொர்க்கத்தை பார்ப்பதற்காகவே இரண்டு மணிக்கு மதிய உணவை முடித்துவிட்டு ஒரு குட்டி ரவுண்ட் சென்று வருவது வாடிக்கையாக்கிக் வைத்திருக்கிறேன். தங்களின் சொர்க்கத்தை நிர்மாணிக்க முயன்று கொண்டிருக்கும் பெரும்பாலான டிரைவர்கள் நம்மைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள். ஆனாலும் விட முடியுமா? ஒரு டிரைவருடன் நட்பாகிக் கொண்டேன். அவர் தமிழ்க்காரர்தான். அவர் தினத்தந்தி வாசித்துக் கொண்டிருந்த போது ‘நம்மாளு’ என்று பேச்சுக் கொடுத்து நட்புக் கரம் நீட்ட அது அப்படியே இறுகி ஃபெவிக்கால் நட்பு ஆகிவிட்டது.

அந்த தம்பி- என்னை விட நான்கைந்து வயது இளையவன். திருப்பத்தூர் பக்கம் ஒரு கிராமம். பெங்களூரு வந்து ஒரு வருடம்தான் இருக்கும். பக்கத்து நிறுவனத்தில் எக்ஸிகியூடிவ் டைரக்டராக இருக்கும் ஒரு தமிழ் பொம்மனாட்டிக்கு டிரைவர் ஆகிவிட்டார். காலையில் எட்டு மணி வாக்கில் வந்து வண்டியை ‘பளிச்’ என்று கழுவித் தயாராக இருந்தால் பொம்மனாட்டி ஒன்பதரை வாக்கில் வந்து வண்டியில் ஏறிக் கொள்வார். அரை மணி நேரம்தான் அலுவலகம் வந்து சேருவதற்கு ஆகும்- அதுவும் ட்ராபிக் இருந்தால். இல்லையென்றால் இருபது நிமிடமோ அல்லது இருபத்தைந்து நிமிடமோ. திரும்பவும் ஐந்தரை அல்லது ஆறு மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஆறரை மணிக்கு மேல் கோடி ரூபாய் கொடுத்தாலும் பொம்மனாட்டி அலுவலகத்தில் இருக்க மாட்டார் என்பதால் அதோடு தம்பிக்கு பணி முடிந்தது. இதற்கு மாதம் பன்னிரெண்டாயிரம் சம்பளம். 

ஒரு நாள் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் அந்தத் தம்பியிடம்  ‘மாசம் பூராவும் வெட்டியாவே இருக்க சங்கடமா இல்லையா?’ என்று கேட்டுவிட்டேன். அவனுக்கு அது உறைத்திருக்கக் கூடும். 

‘எந்தக் கூலி வேலைக்கு போனாலும் ஒரு நாளைக்கு ஐந்நூறு அல்லது அறுநூறு தருவார்கள். விடுமுறை எடுத்தால் அதுவும் வராது. அத்தனை கஷ்டப்பட்டு சம்பாதிப்பதைவிடவும் இப்படியே இருந்துகொண்டு இந்த அளவுக்கு சம்பாதித்தால் போதும்’

-கொஞ்சம் சுருக்கென்றுதான் சொன்னான். அதன்பிறகு அவனிடம் இது பற்றி பேசுவதில்லை. அடங்கிக் கொண்டேன். 

தினத்தந்தி செய்திகளைப் பேசுவதோடு எங்களின் நட்பு நின்றுவிட்டது. அரசியல் பேசுவான். ஊரைப் பற்றி பேசுவான். அப்புறம் இப்பொழுது இருக்கும் பெங்களூர் பற்றி புகழ்வான். இப்படி ஓடிக் கொண்டிருக்கையில் சில மாதங்களுக்கு முன்பிலிருந்து தம்பியோடு இன்னொரு ட்ரைவர் பழக்கமாகியிருந்தான். சித்தூர்க்காரன். அவனுக்குத் தெலுங்கும் தெரியும்; தமிழும் தெரியும். கன்னடமும் சக்கை போடு போடுவான். அவ்வப்போது அவனிடமும் பேசியிருக்கிறேன். திருப்பத்தூர் தம்பியளவுக்கு சித்தூர் சின்னவன் சகஜம் இல்லை. கேட்டால் பதில் சொல்வான். இல்லையென்றால் அமைதியாக நிற்பான். அடுத்தவனின் கோபத்தைக் கூட சமாளித்துவிடலாம். அமைதியை எதிர்கொள்வதுதான் சிரமம். நகர்ந்துவிடுவேன்.

இப்பொழுது என்ன பிரச்சினையென்றால் ஆர்யாக்களுக்கு இடையில் ஒரு அனுஷ்கா வந்து சேர்ந்துவிட்டாள். ஜீன்ஸ் அணிந்த குத்துவிளக்கு. பக்கத்து நிறுவனத்தில்தான் பணியில் இருக்கிறாள். ஐடிக்காரி. மூன்று பேரில் யார் முதலில் நூல் விட்டார்களோ தெரியவில்லை- மதிய நேரங்களில் அவள் இவர்களுக்கு அருகில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருப்பது சகஜமாகியிருந்தது. அந்தச் சமயத்தில் ‘என்ன தம்பி’ என்று நாம் போய் பல்லிளித்தால் அது தர்மசங்கடமாக இருக்கும். என்று போவதைக் குறைத்துக் கொண்டேன். ஆனால் சொர்க்கம் அப்படியேதான் இருந்தது. அதே சீட்டாட்டம். அதே வீடியோ. அதே உறக்கம். எக்ஸ்ட்ரா ஒரு தேவதை. அவ்வளவுதான். 

ஆனால் இரண்டு பேரில் யார் அவளை பிக்கப் செய்கிறார்கள் என்று தெரியவே தெரியாது. ஒரு முறை சித்தூர்க்காரனிடம் பேச்சுக் கொடுத்த போது திருப்பத்தூர்க்காரனுக்கும் அவளுக்கும் கனெக்‌ஷன் என்கிற ரீதியில் பேசினான். திருப்பத்தூர்க்காரன் பேசினால் சித்தூர்க்காரனை கை நீட்டுவான்.

எல்லாம் இரே மாதிரி ஓடிக் கொண்டிருக்காது அல்லவா? க்ளைமேக்ஸ் வந்துதானே தீரும். இதோ க்ளைமேக்ஸ்.

சென்ற வாரம் முழுவதும் அலுவலகத்தில் கடும் பணி. மதிய நேரத்தில் வசந்த கால வாக்கிங்குக்கு வாய்ப்பே இல்லை. முந்தாநாள்தான் நேரம் கிடைத்தது. சென்றிருந்த போது சொர்க்கம் அப்படியேதான் இருந்தது. தம்பிக்குத்தான் முகத்தில் காயம். ப்ளாஸ்திரி போட்டிருந்தான். யூகித்திருப்பீர்களே? அதேதான். அனுஷ்காவால் வந்த வினைதானாம். அந்த அனுஷ்கா சாதாரண ஆள் இல்லை. ஏதோ ரெட்டி குடும்பத்து வாரிசு. வீட்டில் கொட்டிக் கிடந்தாலும் பொழுது போக்க வேலைக்கு வந்திருக்கிறாளாம். வந்தோமோ நிறுவனத்தில் நாற்காலியைத் தேய்த்தோமா என்றில்லாமல் அவள் இங்கே வர, பையன்கள் மனசு கெட்டு நூல் விட...இருங்கள். என்ன ஆனது என்று முழுமையாகச் சொல்லிவிடுகிறேன்.

இரண்டு நாட்களுக்கு முன்பாக ‘அய்யா அழைக்கிறார்’ என்று கூப்பிட்டிருக்கிறார்கள். திருப்பத்தூரானுக்கு சந்தேகம்தான். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. காரில் அழைத்துச் சென்ற போது அங்கே ஏற்கனவே சித்தூர்க்காரன் இருந்திருக்கிறான். அவன் அடி வாங்கிய சந்தானம் போல முகத்தை வைத்திருக்க கூடும். இவனுக்கு மூத்திரம் முட்டத் தொடங்கியிருக்கிறது. ஏதோ மிரட்டியிருக்கிறார்கள். பிறகு அங்கேயே ஒரு அறை விழுந்திருக்கிறது. தாறுமாறாக எச்சரித்தார்களாம். அறையோடு முடிந்தது என்று நம்பிக் கொண்டிருக்கும் போதே வீட்டிற்கு பின்புறமாக இருக்கும் கார் ஷெட்டுக்கு அழைத்துச் சென்று கும்மியிருக்கிறார்கள். ஒவ்வொரு அடியும் ஊமைக் குத்தாகவே விழுந்திருக்கிறது. அப்படியிருந்தும் ஒருவன் உணர்ச்சி வசப்பட்டு கையில் வைத்திருந்த ஸ்பேனரையோ திருப்புளியையோ வீசியதில்தான் முகக் காயம். மற்றபடி வெளியே ஒரு காயம் இல்லை. ஒவ்வொரு எலும்பிலும் நெட்டி முறித்துவிட்டார்கள் என்றான். இதைச் சொல்லும் போது அவன் முகத்தை பார்த்திருக்க வேண்டும். காலாகாலத்துக்கும் மறக்க முடியாத முகத்தின் சித்திரம் அது.

இன்னும் சித்தூர்க்காரனைக் காணவில்லை.அவனைப் பற்றி விசாரித்தால் ‘அவன்தான்ணா அவளை சினிமாவுக்கு கூட்டிட்டு போனான். அதனால் அவனுக்குத்தான் அடி அதிகம். இன்னும் ஒரு வாரம் எந்திரிக்க மாட்டான்’ என்றான். 

‘சரி உனக்கு எதுக்கு அடி?’ என்றால் 

‘அவனுக்கு ஃப்ரெண்டா இருந்ததுக்கு’ என்கிறான்.

மொத்தத்தில் அந்தப் பெண்ணை சினிமாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். சினிமாவுக்கு போவது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறில்லை. ஆனால் யாருடன் போகிறோம் என்று இருக்கிறது அல்லவா? அதுவும் அலுவலக நேரத்தில். அந்தப் பெண் அலுவலகத்துக்கு போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறாள். ஆனால் தியேட்டரில் இவர்களைப் பார்த்த யாரோ போட்டுக் கொடுத்துவிட்டார்கள். ரெட்டிகாரு முதலில் அந்தப் பெண்ணை அழைத்து விசாரித்திருக்கிறார். அவள் மழுப்பியிருக்கிறாள். ரெட்டிகளுக்கு இதெல்லாம் ஜூஜூபி மேட்டர். பெங்களூரின் மொத்தக் கட்டுப்பாடும் அவர்களிடம்தான் இருக்கிறது. ஒரு வீதியில் மிகப்பெரிய பங்களா இருந்தால்- அது எந்தத் தெருவாக இருந்தாலும்- கண்ணை மூடிக் கொண்டு ‘ரெட்டி பங்களா’ என்று சொல்லிவிடலாம். அவ்வளவு பணக்காரர்கள். அவ்வளவு செல்வாக்கு.

அவர்களிடம் செல்லுபடியாகுமா? இந்த சில்வண்டுகளை கண்டுபிடித்துவிட்டார்கள்.

உண்மையைச் சொல்லியிருந்தால் விட்டிருப்பார்களோ என்னவோ? முதலில் அவள் மழுப்ப, சித்தூர்க்காரனை அழைத்துக் கேட்க அவன் ஏதோ உளறி வைக்க பிறகு இவனை அழைத்துக் கேட்டிருக்கிறார்கள். இவனும் எதையோ சொல்லியிருக்கிறான். இரண்டு பேருக்கும் செமத்தியாக கொடுத்து துரத்திவிட்டார்கள். 

இதோடு க்ளைமேக்ஸ் முடியவில்லை. க்ளைமேக்ஸின் இரண்டாவது பகுதி இது-

இன்று அலுவலகம் வந்திருந்தேன். விடுமுறைதான். ஆனால் வேலை இருந்தது.

பார்க்கிங் ஏரியாவில் வேறு சில ஓட்டுனர்கள் இருந்தார்கள். சித்தூர்க்காரனும் இருந்தான். அவனுக்கும் காயம்தான். ஆனால் வாயே கொடுக்கவில்லை. என்னனவோ விசாரித்தாலும் கமுக்கமாக இருந்தான். வேறு என்ன பேசுவது என்று தெரியவில்லை. கிளம்பலாம் என்று நினைத்துக் கொண்டே போது ‘திருப்பத்தூர் ஜமீனைக் காணோம்? இன்னைக்கு லீவா?’ என்றேன்.

படு டென்ஷனாகிவிட்டான்.

‘அந்த தே...பத்தி மட்டும் பேசாதீங்க...அவனால்தான் இத்தனையும்’ என்றான். குமிழ் உடைந்துவிட்டது. பேசத் தொடங்கிவிட்டான். துக்கம் பெருக்கெடுக்க ‘அத்தனைக்கும் அவன் தான் காரணம்’ என்று பேசினான். ‘அவன் தான் அவ கூடச் சுத்தினான். இப்போ என்னை சாத்துறானுக’ என்றான்.

இவனை நம்புவதா? அவனை நம்புவதா என்று தெரியவில்லை. ஒவ்வொருவனுக்குள்ளும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத இன்னொரு ஆள் இருக்கிறான். எது பொய் எது உண்மை என்றே தெரியாத அளவுக்கு நடிக்கிறார்கள். என்னிடம் பொய் சொல்ல வேண்டும் என்ற எந்த அவசியமும் அவர்களுக்கு இல்லை. ஆனால் தங்களை Justify செய்து கொள்ள பொய் சொல்கிறார்கள். இவனுக்கும் ஆறுதல் சொல்லிவிட்டு வந்தேன்.

ஒரு சாதாரண ‘பிக்கப்’ மேட்டர். ஆனால் ஆளாளுக்கு விருமாண்டி ஸ்டைலில் கதை சொல்கிறார்கள். எப்படியோ! இரண்டுமே சுவாரஸியம்தான். கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுதானே நம்முடைய மூன்றாவது உலகம்.