Nov 2, 2013

ரிஸ்க் எடுப்பதும் ரஸ்க் சாப்பிடுவதும்

இது நடந்து எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. புத்தம் புதிதாகத் தொடங்கப்பட்ட நிறுவனத்திற்கு வேலைக்கு அழைத்தார்கள். சம்பளம் அதிகம் இல்லை. ஆனால் நிறுவனம் வளரும் போது உனக்கும் நல்ல வளர்ச்சி உறுதி என்றார்கள். மனம் அலை பாய்ந்தது. ஆனால் மனதுக்குள் சிறு பயம். அந்த பயத்தை ஊதிவிடும் படியாக ‘சின்ன கம்பெனியெல்லாம் வேண்டாம். பேசாமல் இதிலேயே இரு’ என்றார்கள். அவர்கள் சொல்வதும் சரியாகத்தான் தெரிந்தது. ஒருவேளை அந்த நிறுவனம் படுத்துக் கொண்டால் வெளியே வந்து வேலை தேட வேண்டுமே என்று யோசனையாக இருந்தது. அவர்கள் கொடுத்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். ஆனால் உண்மை வேறு மாதிரி இருந்தது. நிறுவனம் கிடுகிடுவென வளரத் துவங்கியிருந்தது. அந்தச் சமயத்தில் நிறுவனத்தில் சேர்ந்தவர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத உச்சத்தை அடைந்துவிட்டார்கள். 

எல்லோருக்குமே இப்படியொரு அனுபவம் இருக்கும். ‘அன்னைக்கு வாய்ப்பு வந்துச்சு. அதை மட்டும் செய்திருந்தால் இன்னைக்கு எங்கேயோ போயிருப்பேன்’ என்று சொல்வதற்கு ஒவ்வொருவரிடமும் கதை இருக்கும். யோசித்துப்பாருங்கள். இருக்கிறதுதானே? ஆனால் பெரும்பாலானோர் அந்தச் சமயத்தில் துணிந்திருக்க மாட்டோம்.  ‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று இருப்பதை வைத்து திருப்திப்பட்டுக் கொள்வோம். அதே போன்ற இன்னொரு வாய்ப்பு இப்பொழுது வருகிறது என்று வைத்துக் கொள்வோம்? துணிவீர்களா? கஷ்டம்தான். ‘என்னை நம்பி குடும்பம், குழந்தைகள் இருக்கு. எதுக்குங்க ரிஸ்க்?’ என்று சொல்லித் தப்பிப்பதுதானே மனித இயல்பு. 

ஆனால் எல்லோரும் இப்படி ஒதுங்கிக் கொள்வதில்லை. சிலர் துணிந்து பார்த்துவிடுகிறார்கள்.
                                       
ஒரு பறவை. சீகல் என்னும் கடற்பறவை அது. ஜோனதன் லிவிங்ஸ்டன் என்பதுதான் அதன் பெயர். சீகல் பறவைகளின் கூட்டத்தில் ஜோனதன் மட்டும் வித்தியாசமானது. அதன் கூட்டத்தில் இருக்கும் மற்ற பறவைகளுக்கு பெரிய இலட்சியம் எதுவும் இல்லை. ‘கடலுக்குச் சென்றோமோ மற்ற பறவைகள் கொத்தித் தின்றவற்றில் மிச்சமான துண்டுகள்; மீன் பிடி படகுகளில் சிதறிய மாமிசத் துண்டுகள் என்பனவற்றை பொறுக்கித் தின்றோமா’ என இயல்பான வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால் ஜோனதனுக்கு இந்த வாழ்க்கை பிடிப்பதில்லை. தனது கூட்டத்தின் இயல்புக்கு முற்றும் முரணான காரியங்களில் ஈடுபடுகிறது. தனது சக பறவைகள் பறந்திடாத உயரத்திற்கு பறந்து பார்க்கிறது, ஜோனதன்.

ஆரம்பத்தில் நூறு அடி உயரம், ஐந்நூறு அடி உயரம் என பறக்கத் துவங்குகிறது. தன்னந்தனியாக பறக்கிறது. இந்த உயரத்தை படிப்படியாக பல்லாயிரம் அடிகள் உயரத்திற்கு அதிகரிக்கிறது. மேலே சென்றாகிவிட்டது? கீழே எப்படி வருவது? இலாவகம் தெரியாமல் வந்து கடலுக்குள் மோதிச் சிதறுகிறது. இறகுகள் பிய்ந்து போகின்றன. ஆனாலும் ஓய்வதில்லை. மீண்டும் பயிற்சி. மீண்டும் உயரம்.

‘இவையெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்’ என்று பிற பறவைகள் சொல்கின்றன. ஆனால் ஜோனதன் கேட்பதாக இல்லை. கூட்டத்தின் கட்டுப்பாடுகளை மீறியதாக ஜோனதனை விலக்கி வைக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டுப்பாடுகள் ஜோனதனை பெரிதாக பாதிப்பதில்லை. மீண்டும் தனது பயிற்சியில் முழு உத்வேகத்துடன் ஈடுபடுகிறது. மற்ற சீகல் பறவைகளால் கிஞ்சித்தும் கற்பனை செய்ய முடியாத சாகசங்களை ஜோனதன் செய்கிறது. இந்தச் சாதனை உயரத்தோடு மட்டும் நிற்பதில்லை. கீழே திரும் போது பல நூறு மைல்கள் வேகத்தில் திரும்புகிறது. கொஞ்சம் ஏமாந்தாலும் சிதறிவிடக் கூடும். ஆனால் ஜோனதனுக்கு இறகுகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பழகிக் கொண்டது. இப்பொழுது ஜோனதனுக்கு உயரமும், வேகமும் ஒரு பொருட்டே இல்லை. ஆனாலும் ஓய்வதில்லை. வேறு பல சூட்சமங்களை நோக்கி பயிற்சியை தொடர்கிறது.

இதோடு கதை முடிவதில்லை. கதையின் அடுத்தடுத்த பகுதிகளில் வேறொரு உலகத்திற்கு ஜோனதன் பயணிக்கிறது, அது பெற்றுக் கொள்ளும் பயிற்சியாளர், தொடர்ந்த பயிற்சி, பயிற்சியின் மூலக் ஜோனதன் அதிகரித்துக் கொண்ட உயரம், பறத்தலில் அதன் இலாவகம், கீழே இறங்கும் போது உச்சபட்ச வேகம், கடலுக்குள் பாய்ந்து மீன்களை கொத்தி வரும் திறமை, ஜோனதனுக்கு கிடைக்கும் மாணவர்கள் என்று படுவேகமாகத் தொடர்கிறது. 

ஒரு ஹீரோவின் கதை இது. தோல்வியை புரட்டி வீசிவிட்டு உச்சத்தை அடையும் சுவாரசியமான நாயகனின் பவ்யம்.

இந்தப் புத்தகம் வெறும் முப்பத்தைந்து பக்கங்கள்தான். மிகச் சிறிய கதை. முப்பது நிமிடங்களில் வாசித்துவிட முடியும். ஆனால் இந்தப் புத்தகம்தான் பல கோடி பிரதிகள் விற்ற ‘ஜோனதன் லிவிங்கஸ்டன் சீகல்’ என்ற புத்தகம். 1972 ஆம் ஆண்டிலேயே ஆங்கிலத்தில் வெளியாகிவிட்டது. அந்த ஆண்டும் அடுத்த ஆண்டும் தொடர்ந்து முப்பத்தெட்டு வாரங்களுக்கு ‘நியுயார்க் டைம்ஸின்’ Best seller ஆக கோலோச்சியிருக்கிறது. 

இது ஒருவிதத்தில் சுய முன்னேற்ற புத்தகம்தான். ஆனால் அதை வெளிப்படையாகச் சொல்வதில்லை. ‘தம்பி நீதான் அடுத்த பிரதமர்’ என்று explicit சுய முன்னேற்ற புத்தகங்களை வாசிப்பதில் ஒருவித அயற்சி சேர்ந்துவிடும். இந்த வாழ்க்கையின் சூட்சமங்களை யாராலும் அவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியாது. ஆனால் பெரும்பாலான சுய முன்னேற்ற நூல்கள் அதைத்தான் செய்கின்றன. சட்டையை மாற்றுவதைப் போல வாழ்க்கையை மாற்றிவிடலாம் என்கிறார்கள். ஆனால் ரிச்சர்ட் பாக்கின் இந்தப் புத்தகம் வேறொரு பரிமாணம். ஜோனதன் என்ற பறவை தனது தடைகளைத் தகர்த்தெறியும் உத்வேகத்தை சித்தரிக்கிறார். வாழ்க்கை என்பதின் ‘த்ரில்’லே வழமைகளை விட்டு வெளியேறுதல் என்கிறார். இந்த புரிதலின் வழியாக  ‘குண்டுச்சட்டிகளை’ விட்டு வெளியேறும் வித்தையை கவித்துவமாக புரிய வைக்கிறார்.

இந்த நல்ல புத்தகத்தை அவைநாயகன் மொழிபெயர்த்திருக்கிறார். நேரில் சந்திக்கும் போது அவருக்கு ஒரு வாழ்த்தைச் சொல்லிவிட வேண்டும்.

வாசித்துவிட்டு யோசிப்பதற்கு இந்தப் புத்தகத்தில் ஏகப்பட்ட சரக்கு இருக்கிறது. யோசித்துப் பார்த்தால் வாழ்க்கையில் வென்றவர்களில் பெரும்பாலானோர்கள் வழக்கங்களை விட்டு சற்றேனும் தங்களின் கோணத்தை மாற்றியவர்கள்தான். ஏற்கனவே யாரோ நடந்த பாதையில் நடப்பதில் எதை அடைந்துவிடப் போகிறோம்? யாரோ உருவாக்கி வைத்திருக்கும் பாதையில் எந்த ‘ரிஸ்க்’கும் இல்லாமல் போய் வருவதில் என்ன சாதனை இருந்துவிடப் போகிறது? 

நகர்ந்து கொண்டிருக்கும் பாதையில் இருந்து சற்று விலகுவது அத்தனை சுலபம் இல்லை. மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருப்பவன் வேறு வேலை ஏதையாவது முயற்சிப்பது என்பதே அரிது. அப்படியே துணிந்து ‘புதிதாக பிஸினஸ் ஆரம்பிக்கலாம் என்றிருக்கிறேன்’ என்று சொல்லி முடிப்பதற்கு முன்பாகவே பற்பல தடைகள் வந்து விழும். ‘எதற்கு ரிஸ்க்? லைஃப் நல்லாத்தானே போய்ட்டு இருக்கு?’ என்று யாராவது முட்டுக்கட்டையைத் தூக்கிக் கொண்டு வருவார்கள். இந்த முட்டுக்கட்டைகளைத் தாண்டி வாழ்வின் சவால்களை சந்திப்பவர்கள் மிகச் சொற்பம். அப்படி சந்திப்பவர்கள் ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல் என்னும் ஞானப்பறவை ஆகிவிடுகிறார்கள். 

வாய்ப்பு கிடைத்தால் இந்த உலகப்பிரசித்தி பெற்ற புத்தகத்தை நிச்சயம் வாசித்துவிடுங்கள்.

புத்தகத்தை ஆன்லைனிலும் வாங்கலாம்.