Nov 1, 2013

ஏப்பி டிவாலி

இருபது வருடங்களுக்கு முன்பாக வந்த தீபாவளியை ஞாபகமிருக்கிறதா உங்களுக்கு? துல்லியமாகச் சொன்னால் கேபிள் டிவி வராத காலத்திற்கு முன்பு வந்த தீபாவளிகளை. இன்றைய பட்டாசு புகையை சற்று விலக்கிவிட்டு பார்த்தால் ஞாபகங்களுக்குள் மங்கலாகக் கிடக்கின்றன அந்தத் தீபாவளிகள்.

அப்பொழுதெல்லாம் அப்பாவின் பொருளாதார நிலையை அனுசரித்து புதுத்துணி கிடைக்கும். உறுதியாகக் கிடைத்துவிடும் என்று கடைசி நேரம் வரைக்கும் தெரியாது. தீபாவளிக்கு முந்தின இரவில் வீடு சேர்ந்த புதுத்துணிகள் இன்னமும் ஞாபகத்திலிருக்கின்றன. ஒருவேளை புதுத்துணி கிடைக்காத பட்சத்தில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. கைவசம் இருப்பதிலேயே நல்ல துணி ஒன்றை எடுத்து துவைத்து, தேய்த்து வைத்திருப்பார்கள். குளித்துவிட்டு அணியும் போது சற்று வருத்தமாகத்தான் இருக்கும். ஆனால் நமக்காக காத்திருக்கும் பட்டாசுகள் துணி பற்றிய கவலையை மறக்கச் செய்துவிடும்.

அநேகமாக நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்கித் தருவார்கள். ஊரிலேயே பெரிய பணக்காரர்கள் மட்டும்தான் ஐந்நூறு ரூபாய்க்கு பட்டாசு வாங்குவார்கள். மற்றவர்களுக்கு எல்லாம் நூறு அல்லது இருநூறுக்குத்தான். விவரமான பையன்கள் காலையில் கொஞ்ச நேரம் வெடித்துவிட்டு மிச்ச பட்டாசுகளை பத்திரப்படுத்திவிட்டு விளையாடுவதற்கு வந்துவிடுவார்கள். ஊர் அடங்கிய மாலை நேரத்தில் அவர்கள் மட்டும் வெடித்துக் கொண்டிருப்பார்கள். விவரமான பையன்கள் இப்படியென்றால் ‘பயங்கர விவரமுடைய பையன்கள்’ என்ற இன்னொரு வகையறா உண்டு. அவர்கள்  இன்னும் ஒரு படி மேலே போய் கார்த்திகை தீபத்துக்கும் சேர்த்து மிச்சம் பிடிக்கத் தெரிந்தவர்கள். கார்த்திகை தீபத்தின் போது தாங்கள் மட்டும் பட்டாசு வெடித்து மற்ற பையன்களின் வயிற்றில் கடுப்பை உருவாக்கிவிடுவார்கள்.

இந்த களோபரங்களுக்கிடையில் காலை பதினோரு மணியளவிலேயே ஊர் அமைதியாகிவிடும். சிறுவர்கள் தங்களுக்குக் கிடைத்த விடுமுறை தினத்தை உருப்படியாக பயன்படுத்திக் கொள்ளும் படியாக விளையாடச் சென்றுவிடுவார்கள். அப்பா சற்று நேரம் ஓய்வெடுப்பார். அம்மா மதிய உணவுக்காக படு மும்முரமாக தயாராகிக் கொண்டிருப்பார்.

உறவினர்கள் கூடும் ஸ்பெஷல் தீபாவளிகளின் போது க்ளோப்ஜாமூன் அல்லது லட்டு செய்வார்கள். மற்ற தீபாவளிகளிலும் குறை எதுவும் இருக்காது குறைந்தபட்சமாக முறுக்கு சுடுவார்கள். அந்த முறுக்கு சுடும் அலப்பறை இருக்கிறதே- அமத்தாவையோ, பக்கத்துவீட்டு அக்காக்களையோ கூட சேர்த்துக் கொண்டு ஊர் நியாயம் உலக நியாயம் எல்லாம் பேசிக் கொண்டே சுடுவார்கள். அதை அருகில் அமர்ந்து கேட்பதற்கு அத்தனை சுவாரசியமானதாக இருக்கும். ஆனால் அஜால் குஜால் விவகாரங்கள் ஏதாவது தலைப்படும் போது நமக்கென்றே சில வேலைகளை வைத்திருப்பார்கள். அந்த வேலையை நமக்கு ஏவி அந்த இடத்தைவிட்டு துரத்திவிடுவார்கள்.

முறுக்கு தவிர்த்து மதிய நேரத்தில் நல்லதொரு சாப்பாடும் உண்டு. பெரும்பாலும் வடையும் பாயாசமுமாகத்தான் இருக்கும். வீட்டில் எவ்வளவுதான் வசதிக் குறைவாக இருந்தாலும் வீட்டில் இருக்கும் அத்தனை பேரையும் அமர வைத்து பரிமாறினார்கள். அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. 

இரவு கவியும் நேரத்தில் சங்குச்சக்கரமோ, புஸ்வானமோ மீண்டும் ஓரிரு மணி நேரங்கள் களை கட்டும். அதோடு தீபாவளி முடியும். அடுத்த வருட தீபாவளிக்கான கனவுகளுடன் சந்தோஷமாக தூங்கச் செல்வோம். அவ்வளவுதான்.

மற்றபடி, டிவி கிடையாது, தாறுமாறான வெடிகள் கிடையாது, இத்தனை புகை கிடையாது, கடைகளில் இவ்வளவு நெருக்கடி இல்லை, சாலைகளில் இவ்வளவு போக்குவரத்து கிடையாது. இத்தனை ஸ்பெஷல் பேருந்துகளோ, இவ்வளவு ஸ்பெஷல் ரெயில்களோ இல்லையென்றாலும் ஊருக்கு போய் வர முடிந்தது. 

இருபது வருடங்களில் ஏன் அத்தனையையும் புரட்டி போட்டுவிட்டோம் என்று தெரியவில்லை. தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச் சாவடிகளில் மணிக்கணக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது. கார்கள் சீறிப்பாய்கின்றன.  ரெயில்களிலும், பேருந்துகளிலும் கால் வைக்க இடம் கிடையாது. இன்னொருத்தன் தலை மீது இன்னொருத்தன் என்கிற அளவில் கூட்டம் பிதுங்குகிறது. கிடைக்கிற இடத்தை தக்கவைத்துக் கொண்டு நின்று கொண்டே பயணிக்க வேண்டியிருக்கிறது. இரவு முழுவதும் தூங்காமல் பயணித்து சொந்த ஊரில் கால் வைக்கும் போது வெடியும் புகையும்தான் வரவேற்கின்றன.

அடையார் ஆனந்தபவனிலோ அல்லது கண்ணன் டிபார்மெண்டல் ஸ்டோரிலோ அழகிய அட்டைப்பெட்டியில் ஐந்தாறு வகை இனிப்புகளை அடைத்து ஐந்நூறு ரூபாய்க்கு குறைவில்லாமல் விற்கிறார்கள். வீட்டில் முறுக்கு சுடுவதற்கு நேரமும் இல்லை. பொறுமையும் இல்லை. அப்படியே நேரமும் பொறுமையும் கிடைத்தாலும் பக்கத்து வீட்டு அக்காக்கள் உதவிக்கு வருவார்கள் என்றெல்லாம் சொல்ல முடியாது.

ஆயிரக்கணக்கான ரூபாய்களில் பட்டாசு வாங்கினால் பேண்ட் பாக்கெட்களில் நிரப்பிக் கொள்ளும் அளவிற்கு கிள்ளித் தருகிறார்கள். என்னதான் டெசிபல் கணக்கை அரசாங்கம் அறிவித்தாலும் வெடிகள் காதைப் பிளக்கின்றன. வான வேடிக்கை காட்டுவது பெருமையான விஷயமாக மாறியிருக்கிறது. ஆயிரக்கணக்கான ரூபாய்கள் வெடிகளில் கருகிக் கொண்டிருக்க ‘உலகத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக’ ஏதாவது நமக்காக காத்திருக்கிறது. 

ஒரு நாள் முழுவதையும் புகைக்குள்ளாகவும், வெறும் சப்தத்திற்குள்ளாகவும், தொலைக்காட்சியின் திரைக்குள்ளாவும் தீர்த்துக் கொள்வதைத்தான் தீபாவளி என்று இருபதாண்டுகளில் வரையறுத்திருக்கிறோம். ஒவ்வொரு தீபாவளியின் போதும் ‘நாம் கொண்டாடுவது தீபாவளியே இல்லை’ என்பதை நமக்கு நாமே சப்தமாக அறிவித்துக் கொள்கிறோம். ஆனாலும் அடுத்த முறை இன்னும் சற்று கூடுதலாக அந்தப் பண்டிகையைச் சிதைக்கிறோம். 

ஒவ்வொரு வருடமும் முந்தைய வருடத்தைக் காட்டிலும் இன்னும் கொஞ்சம் புகையைக் கூட்டுகிறோம்; இன்னும் கொஞ்சம் நெருக்கடியையும் அவசரத்தையும் உருவாக்கிக் கொள்கிறோம்; இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக நம்மை டிவிக்குள் திணித்துக் கொள்கிறோம். எல்லாவற்றிற்கும் மேலாக மறக்காமல் நமக்குள் சொல்லிக் கொள்கிறோம்  ‘ஏப்பி டிவாலி’.