Nov 3, 2013

மருத்துவமனை துக்கங்கள்

நேற்று ஒரு தாத்தாவுக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டியிருந்தது. முடிந்தவரைக்கும் தீபாவளியன்று மருத்துவமனைக்குச் செல்லக் கூடாது. பெரும்பாலான மருத்துவர்கள் கொண்டாட்டத்தில் இருக்க மொத்த நகரத்துக்கும் சேர்த்து ஒன்றிரண்டு டாக்டர்கள்தான் பணியில் இருப்பார்கள். அதனால் மருத்துவமனையில் கூட்டம் நிரம்பி வழியும். அதைக் கூட பொறுத்துக் கொள்ளலாம். பட்டாசு வெடிப்பில் காயம் பட்டவர்கள், டாஸ்மாக் தீர்த்தத்தில் லாரிச் சக்கரத்தை முத்தமிட்டு மீண்டவர்கள் என்ற கொடூர காட்சிகளைப் பார்ப்பதற்கு நிறைய மனத் தைரியம் தேவை. அவற்றைப் பற்றி பிறகு பேசலாம்.

தாத்தாவுக்கு தொண்ணூறு வயதைத் தாண்டியிருக்கும். அவரை மொட்டைத் தாத்தா என்பார்கள். சொட்டைத் தாத்தா என்ற பெயர்தான் அவருக்கு பொருத்தமாக இருக்கும்- ஆனால் என்ன காரணத்தினாலோ எல்லோரும் அவரை மொட்டைத் தாத்தா என்றுதான் அழைக்கிறார்கள். மொ.தாத்தாவுக்கு கிட்டத்தட்ட துறவு வாழ்க்கைதான். காலையில் இட்லியோ தோசையோ அரை வயிறுக்குச் சாப்பிட்டுவிட்டு தோட்டத்திற்குச் சென்றுவிடுவார். தோட்டம் வீட்டிற்கு அருகிலேயேதான் இருக்கிறது. அங்கு ஒரு குடில் அமைத்து வைத்திருக்கிறார். ஓலைகளால் வேய்ந்த குடில் அது. மாலை வரைக்கும் அந்தக் குடில்தான் அவருக்கு. தாத்தாவின் ராஜ்ஜியம் அது. கிராமத்து தோட்டங்களில் ஒரு சுகம் உண்டு. தென்னங்காற்றும், மண்ணின் குளுமையும் யாராக இருந்தாலும் கண்களைச் சுழற்றச் செய்துவிடும். அப்படியொரு சூழல் அது. 

தாத்தா மதிய உணவு உண்பதில்லை. காலையில் அந்தக் குடிலில் படுத்தால் மாலையில்தான் எழுந்து வருவார். அதற்காக அவர் பகல் முழுவதும் உறங்குவதில்லை. தனது குடிலுக்குள் ஒரு ட்ரங்க் பெட்டி வைத்திருக்கிறார். தேவாரம், திருவாசகம், கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவுகள் போன்ற புத்தகங்களால் நிரம்பிய பெட்டி அது. நாயன்மார்களோடும், மாணிக்கவாசகரோடும், வாரியாரோடும் நேரத்தை ஓட்டிக் கொண்டிருப்பார். வயதுதான் தொண்ணூறு- ஆனால் இன்னமும் கண்ணாடியில்லாமல்தான் வாசித்துக் கொண்டிருக்கிறார். 

கண்கள் நன்றாகத் தெரிந்தாலும் தாத்தாவுக்கு காது சரியாகக் கேட்காது. சரியாக என்ன சரியாக- சுத்தமாகவே கேட்காது. நம்முடன் பேச வேண்டும் என்று அவர் நினைத்தால் நம் உதட்டு அசைவை வைத்து நாம் பேசுவதை அனுமானித்துவிடுவார். தொண்ணூறு சதவீதம் அவரது கணிப்பு சரியானதாகவே இருக்கும். மீதம் பத்து சதவீதம் நமது கேள்வியை தவறாக புரிந்து கொண்டு தவறான பதிலைக் கொடுப்பார். அவருடன் பேசும் போது முடிந்தவரை கேள்வி கேட்காமல் விட்டுவிட வேண்டும். அவராக பேசுவார். ‘திருவாசக்த்திற்கு உருகார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்ற ஒரு வாசகம் இருக்கிறது அல்லவா? அது அந்தத் தாத்தாவின் பேச்சில் நமக்கு புரியும். திருவாசகத்தைப் பற்றி பேசும் போது அவரது கண்கள் கலங்கிக் கிடக்கும். வாரியாரைப் பற்றி பேசும் போது குழந்தையைப் போல குதூகலிப்பார். தொண்ணூறு வயதில் எதைப் பற்றியும் கவலையில்லாமல் வாழ்க்கையை இப்படி அனுபவிக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது என்று தோன்றும். 

அந்தத் தாத்தாவுக்காகத்தான் மருத்துவமனை பயணம். 

அவரது வீட்டை ஒட்டி ஒரு கோவில் இருக்கிறது. ஆதிகாலத்து அம்மன் கோவில். மாலை நேரத்தில் ஒற்றை விளக்கு எரிந்து கொண்டிருக்கும். தினமும் அந்த விளக்கை ஏற்றி வைப்பது மொட்டைத் தாத்தாதான். நேற்றும் அதற்குத்தான் சென்றிருக்கிறார். விதி மரத்தின் மேல் அமர்ந்திருக்கிறது. நேற்று மாலையில் பெய்த மழையும், சுழன்றடித்த காற்றும் ஒரு மரத்தின் விழுதை உடைத்துவிட்டு போயிருக்கின்றன. அந்த விழுது கீழே விழுந்துவிடாமல் மரத்தின் கிளைகளுக்குள் சிக்கியிருக்கிறது. தாத்தா கோவிலுக்குச் சென்ற நேரமாக காற்றில் அசைந்த விழுது கீழே விழ, மெதுவாக எட்டு வைத்த தாத்தாவின் தலையை பதம் பார்த்துவிட்டது.

தலையில் இரண்டு இடங்களில் வெட்டுக்காயம். விழுந்த விழுதின் அழுத்தம் தாங்காமல் கால்களை மடக்கி கீழே விழுந்தால் பாதத்திலும் வலி. தாத்தா சுருண்டு விட்டார். பெருவெள்ளம் அடித்துச் சென்றதில் தப்பிய கோழிக்குஞ்சுவைப் போலக் கிடந்தார். டிவியில் ஓடிக் கொண்டிருந்த தீபாவளி சிறப்புத் திரைப்படங்களின் கூச்சலில் தாத்தாவின் கூச்சல் யாருக்கும் காதில் விழவில்லை. ஆனால் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் தாத்தாவை பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்களுக்குத் தகவல் கொடுக்க அவரை காரில் அள்ளிப் போட்டுக் கொண்டார்கள். தாத்தா எனக்கும் சொந்தம்தான். தாத்தாவுடன் சேர்த்து காரில் மூன்று பேர் இருந்தார்கள். காரில் ஒரு இடம் காலியிருந்தது. ஏறிக் கொண்டேன்.

காரில் செல்லும் போது தாத்தாவின் தலையில் ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. வெண்பஞ்சை வைத்து துடைத்து அதை செந்நிறமாக்கிக் கொண்டிருந்தோம். இந்த வயதில் வலியைத் தாங்கிக் கொள்வது அவ்வளவு எளிய காரியம் இல்லை. தாத்தாவின் கால் வீங்கத் துவங்கியிருந்தது. அவர் எதுவுமே பேசவில்லை. அவ்வப்போது ‘முருகா’ என்றார். வலி அவரை அமைதியாக்கியிருந்தது. திருப்பூரில் டாக்டரிடம் சென்ற போது மருத்துவமனை கூட்டத்தால் நிரம்பியிருந்தது. ஆனால் தாத்தாவின் நிலைமையைப் பார்த்தவர்கள் அவரை முதலில் உள்ளே அழைத்துச் செல்ல அனுமதியளித்தார்கள். மருத்துவர் இரண்டு இடங்களில் தையல் போட்டு ப்ளாஸ்திரி ஒட்டினார்கள். காலில் எக்ஸ்-ரே எடுத்தார்கள். காலில் சிறு எலும் முறிவு உண்டாகியிருந்தது. அந்தச் சமயத்தில் எலும்பு முறிவு மருத்துவர் அருகில் இல்லை. ‘அடுத்த நாள் வந்து கட்டுப் போட வேண்டும்’ என்றார்கள். அதுவரைக்கும் காலை அசைக்காமல் வைத்திருக்க அறிவுறுத்தினார்கள்.

எலும்பு முறிவினால் தனது நடமாட்டம் பாதிக்கப்படும் என்பது தாத்தாவுக்கு கவலையாக இருந்தது. அடுத்தவர்களுக்கு தன்னால் சிரமம் என்று வருத்தப்பட்டார். வலி சற்று அதிகமாகியிருப்பதாகச் சொன்னார். தாத்தாவை ரிஷப்ஷனில் அமர வைத்துவிட்டு மருந்து வாங்கிவர மற்ற இருவரும் சென்றார்கள். தாத்தாவுக்கு அருகிலேயே நின்றிருந்தேன். அப்பொழுது ஒரு குழந்தையைத் தூக்கிக் கொண்டு மிக அவசரமாக இரண்டு மூன்று பேர் ஓடி வந்தார்கள். குழந்தைக்கு நான்கு வயது இருக்கக் கூடும். யாரோ தீபாவளி ராக்கெட் விட்டபோது அருகில் நின்றிருக்கிறது அந்தக் குழந்தை. ராக்கெட் விடுபவன் அதைச் செருகி வைத்திருந்த பாட்டிலை தெரியாத்தனமாக கீழே தட்டிவிட்டிருக்கிறான். மேலே கிளம்பாத ராக்கெட் பக்கவாட்டில் சுழன்று வந்து குழந்தையின் கண்களில் குத்திவிட்டது. முகத்தின் பாதியை மறைக்கும் அளவிற்கு கண்களின் இமைகள் வீங்கியிருந்தன. ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. இமைகள் கருநீல நிறத்தை அடைந்திருந்தன. சில வினாடிகளுக்கு மேல் அந்தக் குழந்தையைப் பார்க்க முடியவில்லை. அது அத்தனை துக்ககரமானதாக இருந்தது. குழந்தை வீறிட்டுக் கொண்டிருந்தது. மருத்துவரைப் பார்க்க அறைக்குள் எடுத்துச் சென்றார்கள். அறைக்குள்ளிருந்தும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. 

காரில் ஏறிய போது டிரைவர் ஸீட்டில் அமர்ந்திருந்தவர் ‘புண்ணு வலி பரவாயில்லீங்களா?’ என்று தாத்தாவிடம் கேட்டார். தாத்தா எதுவும் பேசவில்லை. தாத்தாவுக்கு காது கேட்டிருக்காது என்று நினைத்துக் கொண்டு அமைதியாகிவிட்டார். அந்தக் குழந்தையைப் பற்றி காரில் உடன் வந்த மற்ற இருவர்களிடம் சொன்னேன். ஆளாளுக்கு ‘ப்ச்ச்’ போட்டுக் கொண்டார்கள். சில வினாடிகள் காருக்குள் அமைதியாக இருந்தது. திடீரென்று தாத்தா இரண்டு கைகளையும் குவித்து ‘முருகா! அந்த பச்ச மண்ணு பாவம்..வேணும்ன்னா அந்தக் கொழந்தையோட வலியும் சேர்த்து என் புண்ணுல எறக்கிக்க...அந்த புள்ளைய காப்பாத்துய்யா’ என்றார். யாருக்கும் எதுவும் பேசத் தோன்றவில்லை. ஆனால் சில வினாடிகளில் டிரைவர் ஸீட்டில் அமர்ந்திருந்தவரின் கண்களில் நீர் உருண்டோடுவதை பார்த்தேன்.