இன்று காலையில் திடீரென்று தோன்றியது - மோடியின் கூட்டத்திற்கு போய் வரலாம் என்று. பாட்னாவில் குண்டு வெடிக்காமல் இருந்திருந்தால் பெரிய குழப்பம் எல்லாம் இருந்திருக்காது. தைரியமாக முடிவெடுத்து போயிருக்கலாம். ஆனால் அங்கு குண்டு வெடித்த பிறகு ஒரு பயம். பெங்களூரிலும் ஏதாவது எக்குத்தப்பாக நடந்து போய்ச் சேர்ந்துவிட்டால் மோடி வீட்டுக்கு வந்து ஐந்து லட்சம் தருவார்தான். ஆனால் அதற்காகவெல்லாம் உயிரைக் கொடுக்க முடியாது. யோசனை பலமாக இருந்தது.
ஆனால் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள். கொஞ்சம் கொஞ்சமாக போய்ப் பார்க்கலாம். எதுவும் ஆகாது என்று நம்பிக்கை வந்தால் கூட்டத்திற்கு போகலாம். ஏதாவது சகுனம் பார்த்தால் திரும்பிவிடலாம் என்றுதான் கிளம்பினேன். சகுனம் எதுவும் தென்படவில்லை. ஒன்றும் பிரச்சினை இருக்காது போலிருக்கிறது.
பேலஸ் க்ரவுண்டில்தான் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கப்பன் பூங்கா தாண்டும் வரைக்கும் பெரிய பதாகைகளோ விளம்பரத் தட்டிகளோ இல்லை. அங்கங்கு போஸ்டர் ஒட்டியிருந்தார்கள். அவ்வளவுதான். அத்வானியை பா.ஜ.கவினர் மொத்தமாக மறந்து விட்டார்கள் போலிருக்கிறது. வாஜ்பாய் மட்டும் தப்பித்திருக்கிறார். பிரதமர் வேட்பாளருக்கு இவ்வளவுதான் போஸ்டர்களா? நம் புரட்சித் தலைவி பெங்களூர் கோர்ட்டுக்கு- அதுவும் வழக்கு விசாரணைக்கு வந்த போது கூட இன்னும் சற்று அதிகமான தட்டிகளை கர்நாடக அ.தி.மு.க காரர்கள் வைத்திருந்ததாக ஞாபகம்.
மைதானத்திற்குள் நுழையும் வரைக்கும் ஊரில் பெரிய சலனம் இல்லை. பெங்களூர் வழக்கம் போல இயங்கிக் கொண்டிருந்தது- அதுவும் வழக்கமான ஞாயிற்றுக்கிழமை போல சோம்பலின் அடையாளத்தோடு. அவ்வப்போது கார்களும் பைக்குகளும் தாமரைக் கொடிகளுடன் தாண்டிப் போய்க் கொண்டிருந்தன. அது மட்டும்தான் மோடி வருகிறார் என்பதற்கான அடையாளம்.
பேலஸ் க்ரவுண்ட் ஒன்றும் சாதாரணமானதில்லை. நானூறு ஏக்கருக்கு மேலாக இருக்கும். நகரின் மையத்தில் பரந்து கிடக்கிறது. இப்பொழுதும் மைசூர் உடையார்களின் வசம்தான் இருக்கிறது. பெரிய கூட்டங்கள், கண்காட்சிகள் போன்றவற்றை இங்குதான் நடத்துகிறார்கள்.
அரண்மனைச் சாலை முழுவதும் போலீஸ்காரர்கள்தான். இருசக்கர வாகனங்களை எல்லாம் ஒரு கேட் வழியாக உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். குத்துமதிப்பாக வண்டியை ஒரு இடத்தில் நிறுத்த வேண்டும் போலிருக்கிறது. அங்கு நிறுத்திவிட்டு கூட்டம் நடக்கும் இடம் வரைக்கும் நடந்து போக வேண்டும். கேட்டுக்குள் நுழையும் போதுதான் உற்சாகத்தின் ஒரு துளியை காண முடிந்தது. ‘பாரத் மாதா கீ’ என்று அறைகூவல் விடுக்கத் துவங்கியிருந்தார்கள். வயிற்றுக்குள் லேசாக குண்டு உருளத் துவங்கியது. பயம்தான். தேவையில்லாத பயம்தான். இருந்தாலும் பயம் பயம்தானே.
வண்டியை நிறுத்துவதற்கு இடம் தேடிக் கொண்டிருந்த போது மிக வேகமாக ஒரு பைக் தாண்டிப் போனது. போலீஸ்காரர்களை அலட்சியம் செய்து கொண்டு பறந்து கொண்டிருந்த காவித் தலையர்கள் கண் மூடி திறப்பதற்குள் ஒரு குழிக்குள் விட்டு சாலையின் மீது கிடந்தார்கள். அதில் ஓட்டிக் கொண்டிருந்தவன் நிலைமை பரிதாபம். மண் சாலையில் விழுந்து முகத்தை தார்ச்சாலையில் உரசியிருந்தான். இருவரும் எழ முடியாமல் கிடந்தார்கள். என்ன அவசரமோ தெரியவில்லை. அவர்களை வேடிக்கை பார்ப்பதற்கு ஒவ்வொரு வண்டியாக நிற்க ஆரம்பிக்கும் போது ட்ராஃபிக் அதிகமாகத் துவங்கியது. சில போலீஸ்காரர்கள் வேடிக்கை பார்க்க நின்றவர்களை லத்தியைத் தூக்கிக் கொண்டு துரத்தினார்கள். அவசர அவசரமாக வண்டியை கொண்டு போய் வெகுதூரத்தில் நிறுத்திவிட்டு பக்கத்தில் இருந்தவரிடம் அந்த இடத்திற்கான அடையாளத்தைக் கேட்டுக் கொண்டேன். இடம் தெரியாவிட்டால் திரும்ப வரும் போது வண்டியைத் தேடுவது படு சிரமம் ஆகிவிடும். ‘டென்னிஸ் பெவிலியன்’ என்றார். மனது மனனம் செய்து கொண்டது.
நினைத்ததுதான் நடந்தது. மேடைக்கு அருகில் செல்வதற்கு வெகுதூரம் நடக்க வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட இரண்டரை கிலோ மீட்டர் இருக்கும். வரிசை வரிசையாக நடந்து கொண்டிருந்தார்கள். சில ஆயிரம் பேருந்துகளையும் பல நூறு தொடரூர்திகளையும் வாடகைக்கு எடுத்திருந்தார்கள். அது போக தனியார் வாகனங்கள், பைக்குகள் என்று மைதானம் நிரம்பிக் கிடந்தது. நடக்க முடியாத கிழம் கட்டைகள் பேருந்துக்குள்ளேயே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எண்ணிக்கை காட்டுவதற்காக அழைத்து வரப்பட்ட டிக்கெட்டுகளாக இருக்கக் கூடும் என்று தோன்றியது.
கூட்டத்தை அடைவதற்குள் மூன்று நான்கு இடங்களில் ‘செக்கப்’ செய்தார்கள். ஒவ்வொருவராக உள்ளே போகும் போதும் தடவித் தடவி தேடினார்கள். பீடி, சிகரெட், தீப்பெட்டி உட்பட எல்லாவற்றையும் வெளியே வீசிவிடச் சொன்னார்கள். அந்த இடத்தில் நிரம்பிய குவார்ட்டர் பாட்டில்களின் எண்ணிக்கையை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். இடுப்பில் செருகிக் கொண்டு வந்தது, பேண்ட் பாக்கெட்டில் நுழைத்துக் கொண்டு வந்தது என அத்தனையும் சிக்கிக் கொண்டது. இன்னொரு கேட்டிலும் இதே போலத் துழாவினார்கள். அடுத்த கேட்டில் ‘மெட்டல் டிடெக்டர்’.
இத்தனை பரிசோதனைகளைப் பார்த்த பிறகு எப்படியும் குண்டு வெடிக்காது என்ற நம்பிக்கை வந்துவிட்டது. உள்ளே நுழையும் போது ஜெகதீஷ் ஷெட்டர் பேசிக் கொண்டிருந்தார். முன்னாள் முதல்வர். பல்லாயிரக்கணக்கானவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பந்தலிலேயே உணவு வழங்கினார்கள். நான் இருந்த இடத்திலிருந்து மேடையே கண்ணுக்குத் தெரியவில்லை. மேடையிலிருந்து வெகுதூரத்தில் நின்று கொண்டிருப்பதாகத் தோன்றியது. பெரிய திரைகளில் தலைவர்கள் பேசுவதை பார்த்துக் கொண்டிருந்தேன். மழை பொத்துக் கொள்ளும் போலிருந்தது.
ஷெட்டருக்கு பிறகு ஓரிருவர் பேசி முடிக்கவும் ஹெலிக்காப்டர் பறப்பதை திரையில் காட்டினார்கள். மோடிதான். குஜராத்திலிருந்து பெங்களூரிலிருக்கும் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்து அங்கிருந்து விழா மேடைக்கு ஹெலிக்காப்டரில் வருகிறார். நான் வீட்டிலிருந்து பேலஸ் க்ரவுண்ட் கிளம்பும் போது அனேகமாக அவர் குஜராத்தில் தனது வீட்டிலிருந்து கிளம்பியிருக்கக் கூடும். ஹெலிக்காப்டர் தெரிந்தவுடன் மேடையில் பேசிக் கொண்டிருந்த பெண்மணி பதட்டமாகியிருந்தார். என்னவோ உளறிவிட்டு கடைசியில் ‘நரேந்திர மோடி ஜி’ என்றார். கூட்டம் ஆர்ப்பரித்தது. ஹெலிக்காப்டரிலிருந்து அவர் மேடை வரும் வரை அவரை திரையில் காட்டிக் கொண்டிருந்தார்கள். அவரோடு ராஜ்நாத் சிங்கும் வந்தார். மோடியை அவ்வப்போது ‘க்ளோஸ்-அப்’ ஷாட்டில் காட்டினார்கள்.
முதலில் ராஜ்நாத் சிங் பேசினார். ஏக் ஹே, தோ ஹே, காங்கிரஸ் ஹே, ராகுல் ஹே என்றார். எனக்கு ஹிந்தி அவ்வளவுதான் புரிந்தது. கூட்டம் அவ்வப்பொழுது விசிலடித்தது. நான் கூட்டத்தில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று கணக்கு போட்டுக் கொண்டிருந்தேன். மூன்று லட்சத்தைத் தாண்டும் என நினைக்கிறேன். சரியான கணிப்பு என்று சொல்ல முடியாது. என் கணிப்பு. அவ்வளவுதான்.
அடுத்தது மோடி பேசினார். அவரும் ஹை, ஹை என்று ஹிந்தியில்தான் பேசினார். பெங்களூர்வாசிகளுக்கு ஹிந்தி புரியும். பெல்லாரியிருந்தும், மைசூரிலிருந்தும் வந்தவர்கள் என்னைப் போலத்தானே இருப்பார்கள். அவர்களுக்கு ‘பெப்பெப்பே’தான். சாரி சாரியாக எழுந்து போனார்கள். ஆனால் அமர்ந்திருந்தவர்களை மோடி தனது பேச்சின் மூலமாக மெஸ்மெரிசம் செய்து கொண்டிருந்தார். மெதுவாக மேடைக்கு அருகில் செல்ல முடியுமா என்று முயற்சித்தேன். அது பெரிய ரிஸ்க்காகத் தெரிந்தது. கூட்டம் நம்மைச் சட்னியாக்கிவிடும் என்று தோன்றியது. நைஸாக வந்த வழியிலேயே திரும்பிவிட்டேன்.
எத்தனை பேர் வெளியேறுகிறார்களோ அதைவிட அதிகமாக உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். பேருந்துகள் இன்னமும் மைதானத்திற்குள் வந்து கொண்டிருந்தன. மோடியே பேசி முடிக்கப் போகிறார். இவர்கள் வந்து என்ன செய்யப் போகிறார்கள்? நமக்கு என்ன வந்தது? பிரியாணி சாப்பிடக் கூட வந்திருக்கக் கூடும்.
வெளியே வரும் போது எதிர்பார்த்தது போலவே வண்டியைத் தேடுவது அத்தனை சுலபமாக இல்லை. வரும் போது இருந்தததை விட பல நூறு பேருந்துகள் அதிகமாகி வழியை மறைத்திருந்தன. போலீஸ்காரர்களுக்கும் ‘டென்னிஸ் பெவிலியன்’ தெரியவில்லை. ஏற்கனவே கால் வலிக்கத் தொடங்கியிருந்தது. தடத்தை நிரவி நிரவி பைக் அருகில் வந்த போது ஃபோன் வந்தது. செல்லமுத்து குப்புசாமி அழைத்திருந்தார். அவரது ‘இரவல் காதலி’ என்ற நாவல் இந்த வருடம் உயிர்மையில் வருகிறது. ஒரு மாதிரியான குஜால் புத்தகம். நான் வாசித்துவிட்டேன். அது பற்றி இன்னொரு நாள் விரிவாக எழுதலாம்.
‘எங்க இருக்கே மணி?’ என்றார்.
‘மோடி மீட்டிங்குக்கு வந்தேண்ணா’
‘நாடகத்துக்கு போற, பொதுக்கூட்டத்துக்கு போற. வீட்ல தண்ணி தெளிச்சு உட்டுட்டாங்களா?’
ஹி ஹி என்று சிரித்துக் கொண்ட போது குப்புறடித்த பைக்காரர்களின் ஞாபகம் வந்தது. இப்பொழுது அந்த இடத்திற்கு போனால் யாரும் துரத்த மாட்டார்கள். போய்ப் பார்த்தேன். ரத்தம் தாறுமாறாக ஓடி இறுகிக் கிடந்தது. அருகில் இருந்த போலீஸ்காரரிடம் விசாரித்தேன். பெங்களூரின் பெரும்பாலான ஆட்டோக்காரர்களுக்கும், போலீஸ்காரர்களுக்கும் தமிழ் தெரியும். அதனால் அவர்களிடம் தமிழிலேயே பேசலாம். பைக்காரர்களில் ஒருவன் முடிந்தானாம். இன்னொருவன் தப்பித்துவிட்டான் என்றார். அனேகமாக ஓட்டிவந்தவன் தான் முடிந்திருக்க வேண்டும். குடித்திருந்தானோ என்னவோ. பரிதாபமாக இருந்தது.வண்டியைக் கிளப்பினேன். இன்னமும் பேருந்துகள் வந்து கொண்டிருந்தன. மனதுக்குள் என்னனென்னவோ நினைப்புகள் ஓடிக் கொண்டிருந்தன.