மழை ஓய்ந்திருக்கிறது. கூடவே சச்சின் பற்றிய செய்திகளும் ட்விட்டர், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களும் சற்றே ஓய்ந்திருக்கின்றன.
இந்திய கிரிக்கெட்டில் இருபத்தைந்து ஆண்டு காலம் தனக்கான இடத்தை பிடித்து வைத்திருந்த சச்சின் அதை காலி செய்துவிட்டுப் போகிறார். இனி அந்த இடத்தை அடைவதற்காக சச்சினின் மகன் உட்பட ஏகப்பட்ட பேர் போட்டியிடுவார்கள். அந்த நாற்காலியில் யாராவது அமருவதற்கு இன்னும் பல ஆண்டுகள் தேவைப்படலாம் அல்லது இனி அது வரலாற்றில் சாத்தியமே இல்லாமல் போகக் கூடும்.
கிரிக்கெட்டின் பெரும்பாலான துறைகளில் அவ்வளவு சீக்கிரத்தில் தொட்டுவிட முடியாத சாதனைகளை சச்சின் செய்துவிட்டு போயிருக்கிறார். இருபத்தியிரண்டு யார்டுகளுக்கு இடைப்பட்ட தூரத்தில் ஓடும் வெறும் ஓட்டங்கள் மட்டுமே சச்சினை இந்த உயரத்திற்கு ஏற்றி வைத்திருக்கும் என்று சொல்ல முடியவில்லை.தனது ஆட்டத்தை தவிர்த்து இத்தனை ஆண்டுகளும் கோடிக்கணக்கானவர்களுக்கு தன்னை ஒரு ஆதர்சமான பெர்சனாலிட்டியாக வடிவமைப்பதில் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருக்கிறார், சச்சின். சர்வசாதாரணமாக ஒருவரை கடவுள் என்று சொல்லிவிடுவார்களா என்ன? ஆனால் சச்சினைச் சொல்கிறார்கள். இதில் மீடியாக்களின் உதவியும் மிகப் பெரியது. சச்சினை எளிமையானவராக, பணிவானவராக, புகழ்ச்சியை தவிர்ப்பவராக, அர்பணிப்பு உடையவராக என இன்னும் பல ப்ளஸ்களாக காட்டியதில் ஊடகத்தின் பங்கு தவிர்க்கவே முடியாதது. சச்சினிடம் இந்த ப்ளஸ்கள் இல்லையென்று சொல்லவில்லை. அவை சரியான நேரத்தில் சரியான முறையில் வெளிப்படுவது முக்கியம். அது சச்சினுக்கு நிகழ்ந்திருக்கிறது.
தனது திறமை, உழைப்பு ஆகியவற்றால் மட்டுமே ஒருவன் உச்சியை அடைந்துவிட முடியும் என்று தோன்றவில்லை. சச்சினின் திறமை, உழைப்பு தவிர்த்து அவரது அரசியல் செல்வாக்கு, மராத்திய பிண்ணனி, சரத்பவாரின் முழு ஆசி, பவாருக்கு இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் அசைக்க முடியாத ஆதிக்கம் என எல்லாவற்றையும் இந்த உச்சியோடு இணைத்துப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.
நூல் விலை உயரும் போதெல்லாம் திருப்பூர்க்காரர்களிடம் பேசிப் பாருங்கள். ஐந்து பேரில் நான்கு பேர்களாவது சச்சினை சபிப்பார்கள். உண்மையோ அல்லது பொய்யோ என்று தெரியாது. ஆனால் சச்சினும், சரத்பவாரும் தங்களிடம் மிகப்பெரிய அளவில் பஞ்சை பதுக்கி வைத்து விலையை செயற்கையாக ஏற்றுகிறார்கள் என்பார்கள். இது அவருக்கு ஆகாதவர்களால் கசியவிடப்பட்ட கட்டுக்கதை என்று கூட சொல்லலாம். இந்தச் செய்தியை எப்படி முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதோ அதேபோலத்தான் மறுப்பதற்கும் இல்லை. போகட்டும்.
சினிமா பற்றிய ஆர்வம் இல்லாதது போலவே கிரிக்கெட் பற்றியும் எனக்கு அதிகம் ஆர்வம் இருந்ததில்லை. ஆனால் என்னதான் சினிமாவில் ஆர்வம் இல்லையென்றாலும் ரஜினி அல்லது கமலை ரசிப்பது போலவே என்னதான் கிரிக்கெட்டில் ஈர்ப்பு இல்லையென்றாலும் சச்சின் அல்லது கங்குலி என்ற ஆளுமைகளை ரசிப்பவனாகவே எனது வயதையொத்த ஒவ்வொருவரும் இருந்திருக்க முடியும். அப்படித்தான் நானும். சச்சினைப் பற்றி துளியாவது பேசி விட வேண்டும் என்று தோன்றுகிறது.
சச்சின் களத்தில் நிற்கும் போதெல்லாம் நண்பர்களோடு அமர்ந்து கிரிக்கெட் பார்ப்பது படு கொண்டாட்டமாகவே இருந்திருக்கிறது. அது ஒரு இன்ஸ்பிரேஷன். அவரது நேர்த்தி, பொறுமை, Professionalism என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள எனது தலைமுறைக்கு எத்தனையோ இருந்தது. கிரிக்கெட் தாண்டி அவரது அரசியல் தொடர்புகள், அவரது பிஸினஸ் என்று எத்தனையோ விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் கிரிக்கெட் ரசிகர்களிடம் அவர் அடைந்திருக்கும் புகழை நிச்சயம் மரியாதை செய்ய வேண்டும். சச்சினின் ஆட்டத்திற்காக ப்ளஸ்டூ தேர்வுக்கு முன்பாக கிரிக்கெட் பார்த்த லட்சக்கணக்கான் இந்தியர்கள் இந்த நாட்டில் உண்டு. சச்சின் விளையாடுகிறார் என்பதற்காக தனது வாழ்வின் மிக முக்கியமான தருணங்களை ‘மிஸ்’ செய்தவர்களை சர்வசாதாரணமாக பார்க்க முடியும். சச்சினைத் தவறாக பேசிவிட்டான் என்பதற்காக நண்பர்களை பகைத்துக் கொண்டவர்கள் உண்டு. சச்சின் என்ற பெயருக்காக வெறியெடுத்துத் திரிந்தவர்கள் இருக்கிறார். இவையெல்லாம் அத்தனை விளையாட்டு வீரனுக்கும் சாத்தியமில்லை. கடவுளுக்கு மட்டுமே சாத்தியம். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை சச்சின்தான் கடவுள்.
சச்சினின் அம்மா இதுவரை விளையாட்டு மைதானத்திற்கு வந்து கிரிக்கெட் பார்த்ததேயில்லையாம். சச்சினின் கடைசி ஆட்டத்தைப் பார்க்க முந்தாநாள் வந்திருக்கிறார். ஆட்டம் முடிந்து தனது சக்கர நாற்காலியில் அவர் திரும்பிச் செல்லும் போது கவனித்தீர்களா? மொத்த அரங்கமும் எழுந்து நின்று வழிவிட்டது. அவருக்கு வழிவிட வேண்டும் என்று கூட்டத்திற்கு எந்த அவசியமும் இல்லை. ஆனால் ஒதுங்கி நின்றார்கள். அதுதான் மரியாதை. ஒவ்வொரு ரசிகனின் மனதில் இருந்தும் வெளிப்படும் மரியாதை. அந்த அம்மையாருக்கு அந்த கணத்தில் எவ்வளவு பெருமிதமாக இருந்திருக்கும்? சில வினாடிகள் எனக்கு உடல் சிலிர்த்து அடங்கியது.
ஒருவன் புகழ் அடைவது அத்தனை சுலபம் இல்லை. அதே புகழோடு கால் நூற்றாண்டு காலம் கலக்குவதும் எளிதில்லை. இத்தனை புகழோடும் மரியாதையோடும் தனது இடத்தை விட்டு விலகுவதும் சுலபமில்லை என்பது போலவே தனது புகழை ரிடையர்ட்மெண்டுக்கு பிறகும் சிதையாமல் பாதுகாப்பதும் எளிதில்லை. சச்சினுக்கு அந்த வித்தை தெரிந்திருக்கும் என நம்புவோம்.