Nov 15, 2013

செத்து என்ன ஆகப் போகிறது? இருந்து தொலையலாம்

நாய்க்குட்டி ஒன்று வீட்டுப்பக்கமாக சுற்றிக் கொண்டிருந்தது. இந்த ஊரில் தெரு நாய்களுக்கு பஞ்சமே இல்லை. வருடத்தில் முக்கால்வாசி மாதங்கள் குளிராகவே இருக்கிறது. குளிரடிக்கும் மாதங்கள் எல்லாம் மார்கழி என்று நினைத்துக் கொள்கின்றன போலிருக்கிறது. வதவதவென பெருகிக் கிடக்கின்றன. இப்படி பெருகிக் கிடந்தாலும் பெங்களூர் கார்பொரேஷன்காரர்கள் கருணை மிகுந்தவர்கள். அலேக்காகத் தூக்கிக் கொண்டு போய் திரும்பக் கொண்டு வரும் போது காது நுனியை கத்தரித்துவிட்டிருப்பார்கள். அப்படியென்றால் ‘சோலி’யை முடித்துவிட்டார்கள் என்று அர்த்தம். ஆனால் சோலி முடிக்கும் விகிதத்தை ஒப்பிடும் போது நாய்களின் பர்த் ரேட் பல மடங்கு அதிகம் போலிருக்கிறது. அதனால்தான் இத்தனை குட்டிகள். இரவு பத்து மணிக்கு ஆரம்பித்து சூரியன் எட்டிப்பார்க்கும் வரை தெருக்களில் அவைகளின் ராஜ்ஜியம்தான். ஒருத்தன் நடந்து போக முடியாது.

எங்கள் வீட்டுப்பக்கமாகச் சுற்றும் இந்தக் குட்டி நாயும் அப்படி காது நுனி கத்தரிக்கப்பட்ட வகையறாதான். ஆரம்பத்தில் வத்தலும் தொத்தலுமாகத் திரிந்தது. எங்கப்பாவுக்கு அதன் மேல் தனிப் பிரியம். வீட்டிலிருந்து எதையாவது எடுத்து அதற்கு போடுவார். சில சமயம் தயிரையும் பாலையும் அதிகமாக ஊற்றிவிடுவதாக அம்மா அங்கலாய்த்திருக்கிறார். ‘ரோட்டுல சுத்துற நாய்க்கு பட்டுக்குஞ்சம் விரிக்கிறாரு உங்கப்பா’ என்று நக்கலடிப்பார். அப்பா அந்த வசவுகளைக் கண்டு கொள்ளவில்லை என்பதை நாய்க்குட்டியைப் பார்த்தாலே அனுமானித்துவிடலாம். ஓரிரு வாரங்களில் நாய்க்குட்டி சதைப்பிடிப்பாகிவிட்டது. கூடவே இரண்டு மூன்று குட்டிகளைச் சேர்த்துக் கொண்டு தாறுமாறான அட்டகாசம் வேறு. 

இந்த ஃப்ரெண்ட்ஷிப் எல்லாம் சோற்றுத் தட்டு வரைக்கும்தான். தட்டில் சோறு விழுந்தால் அவ்வளவுதான். மற்றவற்றை துரத்திவிட்டு வந்து தான் மட்டும் கொட்டிக் கொள்ளும். ஒரு பருக்கை மிச்சம் விடாமல் நாக்கைச் சுழற்றி முடித்துவிட்டு மீண்டும் நண்பர்களைத் தேடிப் போய்விடும். இரவு நேரத்தில் வீட்டு முன்னால் வந்து படுத்துக் கொள்ளத் துவங்கிய போது அப்பாவுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி. ‘நன்றியுள்ளதுன்னு காமிச்சுடுச்சு பாரு’ என்று பெருமையடிக்கத் துவங்கியிருந்தார். அதுவும் அப்படியொன்றும் சளைத்த நாயாகத் தெரியவில்லை. துளி சப்தம் கேட்டாலும் குரைத்து ஊரை எழுப்பத் துவங்கியிருந்தது. 

வயதான நாய்கள் இரவில் விழித்திருந்துவிட்டு பகலில் தூங்கிக் கொள்ளும். ஆனால் இந்த பொடியன் பகலிலும் கெட்ட ஆட்டம்- சாலையைத் தாண்டுவதும் மணலில் எட்டிக் குதிப்பதுமாகவும் துள்ளிக் கொண்டிருந்தது.

எங்கள் லே-அவுட்டில் தார் ரோடு போடும் வரை வாகனப் போக்குவரத்து மிகக் குறைவாக இருந்தது. தார் ரோடு போட்டாலும் போட்டார்கள், ஏரோப்ளேன் ஓட்டுவது போலவே கார் ஓட்டுகிறார்கள். அவர்களின் வேகத்தில் மனிதர்கள் தப்பிப்பதே பெரும்பாடு. நாய்க்குட்டிகள் எத்தனை நாளைக்குத்தான் தப்பிக்கும்? அதுவும் இது துள்ளலான நாய்க்குட்டி வேறு. இரண்டு நாட்களுக்கு முன்பாக சக்கரத்தில் சிக்கிக் கொண்டது. சாகவில்லை. ஆனால் பின்னங்கால் முறிந்து நிறைய ரத்தம் போய்விட்டது. அலுவலகம் முடிந்து வந்த போது அப்பாதான் சோகமான முகத்தோடு இதைச் சொன்னார். சென்று பார்த்த போது பக்கத்து கட்டடத்தின் மணல் மீது படுத்திருந்தது. படுத்தபடியே வாலை மட்டும் மிகச் சிரமப்பட்டு அசைத்தது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்த இடத்தை விட்டு அசையவே இல்லை. உணவையும் வாயில் வைக்கவில்லை. பால், தயிர் போக நெய், எலும்புத் துண்டு என்று எதைக் கொடுத்தாலும் திரும்பிப் பார்க்கவில்லை. இரண்டு நாட்களுக்கும் தனது புண்ணை நாவால் தடவிக் கொடுத்தபடியே இருந்தது. தப்பித்துவிடுமா என்று தெரியவில்லை.

‘சாப்பிட்டா பொழைச்சுக்கும். ஆனால் மோந்து கூட பார்க்க மாட்டேங்குது’ என்று அப்பா அவநம்பிக்கையோடு சொன்னார். தெருநாய்தானே. போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம்தான். ஆனால் பார்க்க பரிதாபமாக இருந்தது. கடந்த சில வாரங்களாக வீட்டை விட்டு கிளம்பும் போது வழியனுப்பும் ஜீவனாக அதுதான் இருந்தது. திரும்பி வரும் போது அதன் முகத்தைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போக முடியும். கேட் திறக்கும் சப்தம் கேட்டால் வாலை சுழற்றிக் கொண்டு வந்துவிடும். அந்த நாய்க்குட்டிதான் அடிபட்டுக் கிடக்கிறது என்பது வருத்தமாகத்தான் இருந்தது.

நேற்று காலையில் பார்க்கும் போது கொஞ்சம் தெளிவாக இருந்தது. அதன் சோம்பல் சற்று காணாமல் போயிருந்தது. இருந்தாலும் புண்ணை நாக்கால் தடவிக் கொண்டேயிருந்தது. இன்னமும் உண்ணாவிரதம்தான். ஒருவேளை புண்ணை முழுமையாக ஆற்றிவிட்டுத்தான் தின்னுமோ என்று தெரியவில்லை. அப்பாவுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருந்தது ‘கெலுத்தி ஆயிருச்சு. தப்பிச்சுரும்’ என்றார். Healthy என்பதைத்தான் கெலுத்தி என்கிறார்.

அவர் நம்பிக்கை பொய்க்கவில்லை. இன்று காலை தனது இடத்தை விட்டு எழுந்துவிட்டது. மற்ற நாய்கள் அதன் அருகில் வந்துவிட்டன. விளையாட முயற்சிக்கிறது. ஆனால் முடியவில்லை. தில் படத்தில் அடிபட்டதிலிருந்து விக்ரம் மீண்டும் எழுந்து வருவார் அல்லவா? நண்பர்கள்  ‘ஓ நண்பனே!’ உற்சாகமாக ஆடுவார்கள். விக்ரம் வலியோடு சிரிப்பார். அந்தக் காட்சி சில வினாடிகள் மனதுக்குள் வந்து போனது.

இரண்டு நாட்களாக தனது வாழ்க்கையைச் சுற்றிய கசடுகளை நீக்கிக் கொண்டேயிருந்திருக்கிறது இந்த நாய்க்குட்டி.  குளத்தின் மேற்பரப்பில் இருக்கும் கசடுகளை நீக்கினால் உள்ளே கிடக்கும் கண்ணாடித் துண்டு அல்லது வெண்மையான கல் ஒன்றின் மீது சூரிய ஒளி பட்டுத் தெறிப்பது போலத்தானே வாழ்க்கை? எத்தனை சிக்கல்கள் வந்தாலும் அந்த நம்பிக்கையின் ஒளியை பார்த்துவிட்டால் தப்பித்துவிடலாம். இந்த நாய்க்குட்டியும் அப்படித்தான். உணவும் இல்லை, தண்ணீரும் இல்லை- இரண்டு நாட்களாக அசையாமல் கிடந்த போதும் எப்படியாவது பிழைத்துவிடுவோம் என்ற நம்பிக்கையை மட்டும் பிடித்திருக்கிறது. இப்பொழுது தப்பித்துவிட்டது.

இனிமேல் அதன் முறிந்த காலின் எலும்பு சேராமலே போனாலும் கூட அது ஒன்றும் ஓய்ந்துவிடப் போவதில்லை. அதன் துள்ளலும், ஓட்டமும் திரும்ப வந்து ஒட்டிக் கொள்ளும். அதன் வேகம் குறைந்திருக்கலாம். ஆனால் மற்ற நாய்களை விட தான் ஒரு படி உசத்திதான் என்று அது இனி நம்பக் கூடும். அவ்வளவுதான்! நான் தான் நினைத்துக் கொண்டேன். வெறும் நாய்க்குட்டிதானே என்று. ஆனால் அது வைத்திருக்கிறது ஆயிரம் சங்கதிகளை- நமக்கு சொல்லித் தருவதற்கு.

கல்யாண்ஜியின் கவிதை ஒன்று:

இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்

செத்து என்ன ஆகப் போகிறது
இருந்து தொலையலாம்