Nov 14, 2013

ஒரு முட்டாள் நாடகம் பார்க்கிறான்

கடந்த வாரத்தில் ஒரு நாடகம் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. பெங்களூரில் நாடகப் பிரியர்கள் அதிகம். கிரிஷ் கர்னாட் மாதிரியான நாடகவாசிகளுக்கு மரியாதையும் அதிகம். மரியாதை என்றால் நிஜமான மரியாதை. உள்ளூர் மாரியம்மன் கோவிலில் பேனர் கட்டினாலும் கூட அதில் கர்நாடகத்தின் அறிவுஜீவிகளின் படங்கள் வரிசையாக இருக்கும். அந்த படங்களின் வரிசையில் நிச்சயம் கிரிஷ் கர்னாடின் படம் இருக்கும். தமிழ்நாட்டில் அறிவுஜீவிகளின் படங்களை பேனரில் போடுவதென்றால் யாருடைய படங்கள் எல்லாம் இடம் பெறும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். எனக்கு தலை கிறுகிறுக்கிறது.

தமிழ்நாடு இருக்கட்டும். கிரிஷ் கர்னாட் தெரியும் அல்லவா? மிக எளிதாகச் சொல்ல வேண்டுமானால் ரட்சகன் படத்தில் சுஷ்மிதா சென்னுக்கு அப்பாவாக நடித்தவர். ஞானபீட விருது கூட வாங்கியிருக்கிறார். ஆனால் அது சுஷ்மிதா சென்னைவிட முக்கியமில்லை என்பதால் இரண்டாவதாகச் சொல்கிறேன். அது போக பத்மஸ்ரீ, பத்ம பூஷண், சாகித்ய அகாடமி, சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது, சிறந்த திரைக்கதைக்கான தேசியவிருது என்று தாறுமாறாக வாங்கியிருக்கிறார். 

இத்தனை கலக்கலான ஒரு மனிதர் ஜோல்னா பையைத் தூக்கிக் கொண்டு டிக்கெட் வாங்குவதற்கு வரிசையில் நின்று கொண்டிருந்தார். எங்கு என்று சொல்லவில்லை பார்த்தீர்களா?. ரங்க ஷங்கராவில். ரங்க ஷங்கரா பெங்களூரில் இருக்கும் முக்கியமான நாடக அரங்கு. இதைப் பற்றி சொல்ல வேண்டுமானால் மறைந்த கன்னட நடிகர் ஷங்கர் நாக் பற்றி சொல்ல வேண்டும். படுவேகமாக வளர்ந்து வந்த நடிகர் அவர். ஒரு விபத்தில் இறந்துவிட்டார். அவர் இறந்து இருபத்தைந்து வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் இன்னமும் நாற்பது சதவீத ஆட்டோக்களில் அவரது படத்தை ஒட்டி வைத்திருப்பார்கள். கர்நாடகத்தின் ஐகான்.

அவரது நினைவாக கட்டிய நாடக அரங்குதான் ரங்க ஷங்கரா. அரசு ஒதுக்கிய இடத்தில் அவரது மனைவி கட்டிய அரங்கு இது. நாடகம் பார்ப்பதென்றால் இப்படியான ஒரு அரங்கில் பார்க்க வேண்டும். தூள் டக்கர்.

இப்படியே சொல்லிக் கொண்டு போனால் கிரிஷ் கர்னாட், சங்கர் நாக், அவரது மனைவி, ரங்க ஷங்கரா என்று வரிசையாகச் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இப்போதைக்கு ஒரு பிடிமானம் கிடைத்துவிட்டதல்லவா? அது போதும். இவர்களைப் பற்றியெல்லாம் தனித்தனியாக இன்னொரு நாள் பேசிக் கொள்ளலாம்.

முருக பூபதி பெங்களூர் வந்திருந்தார். அவரை முதன் முதலாக பார்த்த போது எழுத்தாளர் கோணங்கியின் சகோதரர் என்றுதான் பார்த்தேன். ஆனால் அவருக்கு அந்த அடையாளம் தேவையே இல்லை என்று பிறகு தோன்றியது. தமிழில் நவீன நாடகத்தின் சிற்பிகளில் ஒருவர் அவர். அவரது முந்தைய நாடகமான சூர்ப்பணங்கு நாடகத்தை பெங்களூரில் நடத்தினார்கள். நாடகத்தின் இசை முதற்கொண்டு அவரே அமைத்ததுதான். மனுஷனிடம் எந்த பந்தாவும் இருக்காது. மிக இயல்பாக இருக்கும் எளிய மனிதர் அவர்.

அவரது அடுத்த நாடகம் ‘குகைமர வாசிகள்’. ஏற்கனவே பல இடங்களில் மேடையேற்றிவிட்டார்கள். இப்பொழுது பெங்களூரில் இடம் பார்ப்பதற்காக வந்திருந்தார். கூடவே ஸ்ரீனியும். ஸ்ரீனி தீவிரமான வாசகர். நிறைய வாசித்திருக்கிறார். இத்தனை நாட்கள் பெங்களூரில்தான் இருந்தார். இப்பொழுது சேலத்தில் குடியேறிவிட்டார். தானும் முருகபூபதியும் ரங்க ஷங்கராவில் நாடகம் பார்க்க வந்திருப்பதாகவும், நாடகத்திற்கான ஒரு டிக்கெட் கூடுதலாக கைவசம் இருப்பதாகவும் சொன்னார். ஒட்டிக் கொண்டேன்.

நாடகத்தின் பெயர் ‘மாரிக்காடு’. காடு கதை சொல்வது போல அமைக்கப்பட்ட நாடகம் இது. நாடகத்தில் ராஜா உண்டு, தளபதி உண்டு, சூழ்ச்சி உண்டு, கொலைகள் உண்டு, கடைசியில் மனம் வெதும்புதல் உண்டு- கதை இதுதான். தொண்ணூறு நிமிடம் கட்டிப் போட்டுவிடுகிறார்கள். கட்டிப் போடுதலுக்கு இரண்டு காரணம் உண்டு. முதற்காரணம், ரங்க ஷங்கராவில் உள்ளே நுழைந்துவிட்டால் அசையக் கூட முடியாது. யாரும் அருகில் இருப்பவர்களிடம் பேசுவது கூட இல்லை. நாடகம் ஏழரை மணிக்குத் தொடங்குகிறது என்றால் 7.28க்கு செல்போனை அணைக்கச் சொல்லிவிட்டு விளக்கை அணைத்துவிடுகிறார்கள். கதவும் அடைக்கப்பட்டுவிடுகிறது. 

இரண்டாவது காரணம், நாடகம் படு சுவாரஸியமாக இருந்தது. எப்படி நாடகக் கலைஞர்களால் இவ்வளவு நேர்த்தியாக வசனம் பேசி நடிக்க முடிகிறது என்ற பிரமிப்பு தீருவதற்குள்ளாகவே நாடகத்தை முடித்துவிடுகிறார்கள்.

இந்த நாடகம் சந்திரசேகர் கம்பார் என்ற எழுத்தாளருடையது. அவரும் ஞானபீடம் வாங்கியவர்தான். ஷேக்ஸ்பியரின் மெக்பெத்தை தழுவி எழுதபட்டது என்று நாடகத்தில் நடித்த நவீன் சொன்னார். எனக்கு கம்பாரையும் தெரியாது; மெக்பத்தையும் தெரியாது என்பதால் அமைதியாக தலையை ஆட்டிக் கொண்டேன்.

ரங்க ஷங்கராவில் முந்நூற்றுச் சொச்சம் பார்வையாளர்கள் அமரலாம். அத்தனை இருக்கைகளும் நிரம்பியிருந்தன. அத்தனை அமைதி, அத்தனை ஒழுங்கு.

கன்னட நாடகம் பார்க்கப் போகிறேன் என்று சொன்னவுடன் வேணி கடுப்பாகியிருந்தாள். ‘நிம்து ஊட்டா ஆயித்தா? நம்து ஆயித்து’ என்று மட்டும்தான் எனக்கு கன்னடத்தில் பேசத் தெரியும். இந்த லட்சணத்தில் கன்னட நாடகம் பார்க்கப் போகிறேன் என்றால் கோபம் வரத்தானே செய்யும்?. ஆனால் நவீன நாடகத்திற்கு மொழி பிரதானமில்லை. கொஞ்சம் அறிவு இருந்தால் போதும். எனக்கு அது இல்லாததுதான் பிரச்சினையே. இத்தனைக்கும் சூர்ப்பணங்கு தமிழ் நாடகம்தான். ஆனால் பாதிக்கு மேல் புரியவில்லை.

பிறகு எதற்கு சென்றேன் என்கிறீர்களா? அறிவை வளர்த்துக்கொள்ளத்தான்! வளர்ந்துவிட்டதா என்று அடுத்த கேள்வி வரலாம். நான்கைந்து பத்திகளுக்கு முன்னால் பாருங்கள். நாடகத்தின் கதையைச் சொல்லியிருக்கிறேன். அப்படியானால் துளியூண்டு வளர்ந்துவிட்டது என்றுதானே அர்த்தம்?