Nov 13, 2013

எழுத்தாளர் ஆவது எப்படி- செம ஐடியா

‘எழுத்தாளர் ஆவது எப்படி?’- இந்தக் கட்டுரையை இப்படி ஆரம்பிக்கலாம்தான். ஆனால் ‘இவன் எல்லாம் அறிவுரை சொல்லுமளவுக்கு ஆகிவிட்டான்’ என்று ஏகப்பட்ட பேர் எசகுபிசகாக நினைப்பதற்கு நாமாகவே வழி ஏற்படுத்தி விடக் கூடாது அல்லவா? ஏற்கனவே தத்துவம் சொல்கிறேன் பேர்வழி, அறிவுரை சொல்கிறேன் பேர்வழி, கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று திரும்பிய பக்கமெல்லாம் தமிழகம் நசநசத்துக் கிடக்கிறது. போதாதற்கு ஒன்றரை கவிதை எழுதியவன், மூன்றரை கதை எழுதியவன் எல்லாம் எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்கிறான் - இந்தக் கடைசி வரி கண்ணாடியைப் பார்த்து எனக்கு நானே சொல்லிக் கொண்டது.

இந்த நிலையில் ‘எழுத்தாளன் ஆவது எப்படியா?’

எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டில் சில கல்லூரி மாணவர்கள் குடியிருந்தார்கள். ஐந்து கல்லூரி மாணவர்கள் இருந்தால் அதில் நிச்சயம் ஒருவர் கவிஞராக இருக்க வேண்டும் என்பது ஒரு விதி. அப்படித்தான் பக்கத்துவீட்டிலும். அவர்களில் ஒருவர் மட்டும் கவிஞர். கல்லூரி ஆண்டு மலரில் எல்லாம் கவிதை எழுதியிருக்கிறார். அந்தச் சமயத்தில் நானும் கவிதை எழுத ஆரம்பித்திருந்தேன். “அன்பே ஆருயிரே உன் மச்சம் பார்த்து என் மிச்ச உயிரும் போச்சு” என்றெல்லாம் எழுதி வைத்திருந்தேன். இதையெல்லாம் கவிதை என்று அம்மாவிடமா காட்ட முடியும்? பக்கத்து வீட்டில் இருந்த அண்ணன்கள்தான் காணி. அவர்களிடம் காட்டிய போது அத்தனை பேரும் கைநீட்டியது கவிஞரை நோக்கித்தான்.

எழுதி வைத்திருந்த தாள்களை மிகுந்த படபடப்புடன் கொடுத்த போது அவற்றை வாங்கிக் கொள்ள அவருக்கு மூன்று விரல்கள் மட்டுமே தேவைப்பட்டன. அத்தனை சாவகாசம். அத்தனை தெனாவெட்டு. வாங்கிக் கொண்டவர் மேலே பார்த்தார்; கீழே பார்த்தார்; சைடிலும் பார்த்தார். பிறகு எனது முகத்தை அசால்ட்டாக பார்த்துவிட்டு பக்கங்களை புரட்டத் துவங்கினார். ஒவ்வொரு பக்கத்துக்கும் அதிகபட்சமாக மூன்றேகால் வினாடிகள்தான். அண்ணன் செம ஃபாஸ்ட் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். வாசித்து முடித்துவிட்டு தாள்களை திருப்பி எனது கையில் கொடுக்கும் போது தலையை ஒன்றரைக் கிடையாக வைத்துக் கொண்டு  “நாம ஈவ்னிங் மீட் பண்ணுவோம். உனக்கு கவிதை பத்தி ஒண்ணுமே தெரியலை” என்று அவர் சொன்ன போது பாதத்திற்கு கீழாக பூமி வழுக்கிக் கொண்டிருந்தது.

ஆனாலும் ஒரு நம்பிக்கை -‘அண்ணன் எப்படியும் கவிதையை சொல்லிக் கொடுத்துவிடுவார்’ என்று.

அப்படித்தான் நடந்தது.

இந்த இடத்தில் அண்ணனை மனக்கண்ணில் கொண்டு வந்துவிடுவது உசிதம் - சிவந்த நிறம்; சுருட்டை முடி; மீசை தாடியெல்லாம் முளைத்திருக்கவில்லை; குரல் ‘கீச்சு கீச்சு’ என்றிருக்கும்- சைக்கிள் சக்கரத்தில் சிக்கி அடிபட்ட குட்டிநாயின் குரலைப் போல.

மாலையில் என்னை அழைத்து ‘நீ என்ன பண்ணுறீன்னா...ராத்திரி சாப்பிட்டுட்டு ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துட்டு வந்துடு...இன்னைக்கு பெளர்ணமி....கவிதை பத்தி சொல்லிக் கொடுத்துடுறேன்’ என்றார். அவர் சொன்ன தொனியை நீங்கள் நேரில் பார்த்திருக்க வேண்டும். சட்டைப் பையிலிருந்து ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்துவிடுகிறேன் என்பது போல சொன்னார்.

பெளர்ணமிக்கும் கவிதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் அவன் எப்படி ஒரு கவிஞனாக முடியும்? அதனால் எந்தக் கேள்வியும் இல்லாமல் குருநாதரிடம் சரணடைந்திருந்தேன்.  ‘ஒரு நல்ல அடிமை சிக்கிட்டான்’ என்று அவர் அனேகமாக கொண்டாட்டமாக இருந்திருக்க வேண்டும். தெறிக்க வைத்துவிட்டார்.

“கணையாழி கேள்விப்பட்டிருக்கியா?” முதல் அடியே இப்படித்தான்.

ஏதோ கெட்டவார்த்தையாக இருக்கும் என நினைத்துக் கொண்டேன். காது விடைத்துக் கொண்டது.

“அது ஒரு சிற்றிதழ்”- எனக்கு ஒரு எழவும் புரியவில்லை.

“வைரமுத்து கருணாநிதி எல்லாம் அதுலதான் எழுதுவாங்க”

“அப்படீங்குளாண்ணா?” என்று திறந்த வாயை மூட வைக்கும் விதமாக “என் கவிதை கூட அதுல வந்துருக்கு” என்றார்.

என்ன ரியாக்‌ஷன் கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை.  “என் கவிதையைப் போடுவாங்களாண்ணா?” என்றேன்.

“இப்படியே அனுப்புனா குப்பைலதான் போடுவாங்க....அதுக்கெல்லாம் புரியாம எழுதோணும்”

“எதுக்குண்ணா புரியாம எழுதோணும்” 

இப்பொழுது அந்த அண்ணனுக்கு காது விடைத்துக் கொண்டது.

“சாமானியன், சாணக்கியன்னா தெரியுமா?” என்றார்.

திட்டுவதற்கென்றே அழைத்திருப்பான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். “தெரியாதுங்கண்ணா”

“சாமானியன்னா சாதாரண ஆளு. உங்க அப்பா அம்மா மாதிரி. சாணக்கியன்னா அறிவாளி. என்னை மாதிரி, கருணாநிதி மாதிரின்னு வெச்சுக்கலாம்”

“அடங்கொக்கமக்கா” அல்லது “அடங்கொண்ணியா” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன் - எந்த வார்த்தை என்று சரியாக நினைவில் இல்லை.

“நீ எழுதுற கவிதை சாமானியனுக்கு புரியவே கூடாது” இதைச் சொல்லிவிட்டு இதன் பிறகும் நிறையச் சொன்னார். ஆனால் அதெல்லாம் முக்கியம் இல்லை. இதுதான் மெயின் கான்செப்ட். நாம் எழுதுவது அடுத்தவனுக்கு புரியக் கூடாது.

அடுத்த இரண்டு நாட்களுக்கும் கடும் பிரயத்தனங்கள். அகராதிகளைப் புரட்டி புரட்டி புரியாத கவிதை ஒன்றை எழுதிவிட்டேன். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. அகராதியில் நமக்கு இதுவரை அறிமுக ஆகியிராத சொற்களை எல்லாம் பொறுக்கி இணைத்தால் ஒரு புரியாத கவிதை ரெடி ஆகிவிடும். அம்மாவிடம் காட்டினேன். அவருக்கு ஒன்றுமே புரியவில்லை. சாமானியனுக்கு புரியாத கவிதை எழுதியாகிவிட்டது. சக்ஸஸ்.

கவிஞரிடம் காட்டினேன். “பிரமாதம், கவித கவித” என்று குணா கமல் பாணியில் பாராட்டினார். குரல் மட்டும் அதே கீச்சு கீச்சு. அவருக்கும் புரிந்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் குருநாதருக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவதுதானே சிஷ்யனுக்கு அழகு? நம்பிக் கொண்டேன்.

“இதை அனுப்புனா கசையடில போடுவாங்களாண்ணா?”

“டேய்...அது கணையாழிடா”

“சரிண்ணா. அதுல போடுவாங்களா?”

“போடுவாங்க போடுவாங்க”- நோட் திஸ் ‘டபுள்’ போடுவாங்க.

“அதுக்கு முன்னாடி உனக்கு ஒரு நல்ல பேர் வைக்கணும்”

“பேரு வெக்கறீங்களா? எங்கம்மா அப்பா கொன்னே போடுவாங்கண்ணா”

“இதெல்லாம் புனைப் பெயருடா”- ஏதோ புஸ்ஸி கேட் என்று வைப்பார் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன். ஆனால் பூனைப்பெயர் இல்லையாம். இது புனைப் பெயர். ஏதோ ஒரு கருமம். மொத்தத்தில் என் பெயர் மாறப் போகிறது.

“ஊர் பேரு கரட்டடிபாளையம். அப்பா பேரு வாசுதேவன். க.வா இன்ஷியல்....ம்ம்ம்ம்” என்று மோட்டுவளையைப் பார்த்து யோசித்தவர் “இனிமே கனவான் மணிகண்டன்னு எழுதிக்க” என்றார்.

“கனவான்னா என்னண்ணா?” 

“அது பயில்வான் மாதிரிடா...எழுத்துல பயில்வான் மாதிரின்னு வெச்சுக்க”

‘ஒகே’ சொல்லிவிட்டு கலர் கலராக பேனாக்களை வாங்கி திரும்பத் திரும்ப எழுதிப் பார்த்தேன். ஒரு சமயத்தில் அந்தப் பெயர் மிகப் பிடித்துவிட்டது. அதன் பிறகு அவசர அவசரமாக எனது ’புரியாத கவிதையை’ வெள்ளைத் தாளில் எழுதி கடைசியில் கொட்டை எழுத்தில் ‘கனவான் மணிகண்டன்’ என்று மறக்காமல் எழுதி கணையாழிக்கு அனுப்பி வைத்திருந்தேன். இருபது வருடங்கள் ஆகப் போகிறது. ஒரு தகவலையும் காணவில்லை. அந்தப் பத்திரிக்கை அலுவலகம் பக்கமாக யாராவது போனால் கொஞ்சம் விசாரித்துச் சொல்லுங்கள். உங்களுக்கு புண்ணியமாகப் போகும்.