Nov 11, 2013

ரா தூக்கம் போச்சு

யாரையாவது இடைவெளி விட்டுப் பார்த்தால் ‘எப்படி இருக்கீங்க?’ என்கிறார்கள். அடுத்த கேள்வி ‘வேலை எப்படி போகிறது?’. சில சமயங்களில் இரண்டுக்கும் என்ன பதிலைச் சொல்வது என்று குழப்பம் வந்துவிடுகிறது. முதல் கேள்வியைக் கூட சமாளித்துவிடலாம். ‘அப்படியேதாங்க இருக்கேன்’ என்று நா பழகிக் கொண்டது- இந்த பதிலைச் சொன்னால் உள்ளே கடுப்பாகிறார்களோ என்னவோ வெளியே சிரித்துவிடுவார்கள். இரண்டாவது கேள்வி ரொம்பச் சிக்கலானது. 

இந்த சனி,ஞாயிறுகளில் வேலை இருந்தது. வேலை இருந்தது என்றால் ‘ஆன்லைனில்’ இருக்க வேண்டும். ஏதாவது பிரச்சினை என்றால் அழைப்பார்கள். கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிப் போக வேண்டும். சனிக்கிழமை காலையிருந்து ஞாயிறு அதிகாலை மூன்று மணி வரைக்கும் தொடர்ச்சியாக கணினித்திரையை வெறிக்க வேண்டியிருந்தது. ஆன்லைனில் இருந்தால் போதும் அவ்வளவுதானே. இந்த நேரத்தில் உருப்படியாக ஏதாவது செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. செய்தாகிவிட்டது. ஒன்றில்லை- மூன்று வேலைகள். 

ஷரன் ஸ்டோன் நடித்த Basic Instinct அதில் ஒன்று. இந்தப் படம் தொண்ணூற்றிரண்டாம் வருடமே வந்துவிட்டதாம். அப்பொழுது நான் முளைத்து மூன்று இலை கூட விடாததால் தவறி விட்டது போலிருக்கிறது. இந்தப் படத்தை பார்க்க மூன்று இலைகள் போதாது. குறைந்தபட்சம் பத்து பன்னிரெண்டு இலைகளாவது விட்டிருக்க வேண்டும். ஒரு கொலை- அதுவும் கலவியின் போது நடைபெறும் ஒரு கொலை, அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும் ஒரு துப்பறியும் அதிகாரி, அவருக்கும் கொலையாளியாக சந்தேகிக்கப்படும் பெண் எழுத்தாளருக்குமான விளையாட்டு- இதில் ‘எல்லாவகையான’ விளையாட்டும் அடங்குகிறது. இதுதான் கதை. அட்டகாசமான படம். படத்தைப் பற்றி கருந்தேள் ராஜேஷ் மாதிரியான சினிமா பிரியர்கள் யாராவது தமிழில் விலாவாரியாக எழுதியிருக்கக் கூடும். நான் சொல்ல வந்தது அது இல்லை. படம் முடியும் போது அதிகாலை மணி மூன்று. அதுவரைக்கும் ‘மானிட்டரிங்’கில் எந்தப் பிரச்சினையும் இல்லை.

கொஞ்ச நேரம் தூங்கிக் கொள்ளலாம் என்று கண்களை மூடினால் கனவு முழுவதும் ‘மொழு மொழு’வென்று ஷரோன் ஸ்டோனே வந்து கொண்டிருந்தார். விட்டால் என்னையும் கொன்றுவிடுவார் போலிருந்தது. நல்லவேளையாக அதற்குள் எழுப்பிவிட்டார்கள். நான்கரை மணிக்கு மேனேஜர் அழைத்திருந்தார். கண்களில் பயங்கர எரிச்சல். இன்னும் கொஞ்ச நேரம் மானிட்டர் செய்ய முடியுமா என்றார். மறுபடியும் முதலிலிருந்தே ஆரம்பிப்பது போலிருந்தது. ஒன்றரை மணிநேர இடைவெளியில் அதே படத்தின் இரண்டாம் பாகத்தை ஆரம்பித்துவிட்டேன். இரண்டாவது பாகம் 2006 இல் வெளிவரும் போது ஷரனுக்கு 45+ ஆகிவிட்டது. கைகளில் எல்லாம் ஏகப்பட்ட சுருக்கங்கள். படம் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் ஷரனைத்தான் பார்க்க சகிக்கவில்லை. நமக்கே பொறுக்கவில்லை. அமெரிக்ககாரனுக்கு பொறுக்குமா? அதனாலோ என்னவோ இரண்டாவது பாகம் படு தோல்வி.

படத்தை முடித்து விட்டு வா.மு.கோமுவின்  ‘57 ஸ்னேகிதிகள் ஸ்நேகித்த புதினம்’ வாசிக்கத் தொடங்கியிருந்தேன். பெங்களூரில் குளிர்காலம் தொடங்கிவிட்டது. அதிகாலையில் ஜன்னலைத் திறந்தால் மொத்தமாக விறைத்து விடும் போலிருக்கிறது- கை, கால்கள், பற்களைத்தான் சொல்கிறேன். இருந்தாலும் ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு புத்தகம் வாசிப்பதற்கு சுகமாக இருந்தது.

நமக்கு அரைகுறையாக எழுதத் தெரியும் என்று வையுங்கள். எப்பொழுதுமே எழுதுவதற்கான மனநிலை இருந்து கொண்டிருக்காது. சில சமயங்களில் நம் கற்பனை, உத்வேகம் அத்தனையும் வறண்டுவிட்டது போன்ற ஒரு மனநிலை வரும். எனக்குத் தெரிந்து இந்த வறட்சியைச் சமாளிக்க ஒரே வழிதான் இருக்கிறது. பிடித்த எழுத்தாளரின் ஏதாவது ஒரு புத்தகத்தை வாசித்தால் போதும். மீண்டும் வேகெமெடுத்துக் கொள்ளலாம். என்னளவில் வா.மு.கோமுவின் எழுத்துக்கள் அப்படியான எழுத்துக்கள்தான். நம்மை உற்சாகமாக வைத்துக் கொள்வதற்கான அத்தனை வஸ்துக்களையும் அவர் தனது எழுத்தில் வைத்திருப்பதாகத் தோன்றுகிறது.

இந்த நாவலும் அப்படித்தான். 

முளைத்து மூன்று இலை விடாத சிறுவர்களின் அலம்பல்களில் தொடங்குகிறது. அவர்கள் தம் அடிப்பதும், தியேட்டருக்கு போவதும், வாத்தியார்களை மிரட்டுவதுமாக நாவல் ஆரம்பிக்கிறது. பிறகு ஒரு சாராய வியாபாரி, அவனது வாழ்க்கை, அவனது காதல், அதே ஊரில் அவனுக்கு ஒரு பெண்ணோடு ஏற்படும் உறவு என்று வேறொரு ட்ராக்கில் மாறி மீண்டும் சிறுவர்களின் கதையோடு முடிகிறது. நேர்கோட்டு கதை. கொங்கு மொழி. எளிய மனிதர்கள். நாவல் முழுவதும் துள்ளல். ஒரு நல்ல புத்தகத்துக்கு வேறு என்ன வேண்டும்?

மாரிமுத்து, அவனது நாய் ராஜா, மாமன் மகள் பூங்காவனம், மாணிக்கம் அத்தை, சிறுவர்கள் பழனிச்சாமி, செந்தில்நாதன் என்று எல்லா கதாபாத்திரங்களுமே ஏதொவொருவகையில் மனதுக்குள் பதிந்துவிடுகிறார்கள்.  நாவலின் பெயர் குஜாலாக இருக்கிறது என்பதற்காக இதை குஜால் புத்தகம் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. மொத்த நாவலுக்கும் சேர்த்து ஒரே ஒரு ‘ஸீன்’ தான். ஆனால் அந்த ஸீன் போதும்- ஷரன் ஸ்டோன் தோற்றாள். 

கோமுவின் எழுத்து நடை, கதாபாத்திரங்களை விவரிக்கும் நேர்த்தி, கதையின் sequence எல்லாமே தூள் பறக்கிறது. பத்துப் பேர் ஒரு நாவலை நன்றாக இருப்பதாகச் சொன்னால் இரண்டு பேர் சரியில்லை என்பார்கள். அதுவும் வா.மு.கோமு மாதிரியான எழுத்தாளர்களைப் பற்றி பேசும் போது ‘அவர் செக்ஸ் நிறைய எழுதுவாரே’ என்பார்கள். இந்த விமர்சனங்களில் பெரும்பாலானவை குத்துமதிப்பாக உருவாக்கிக் கொண்டவை. உண்மையில் வா.மு.கோமுவின் எழுத்துக்கள் பேசும் வாழ்க்கையின் சிக்கல்கள் துக்ககரமானவை. திருப்பூரிலும், சென்னிமலையிலும், விஜயமங்கலத்திலுமாக வாழும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியலை இவ்வளவு கொண்டாட்டமாகவும், துல்லியமாகவும் வேறு எவராலும் பதிவு செய்ய முடியாது என நம்புகிறேன். வெள்ளந்தியான மக்களின் குரூரமான பிரச்சினைகளை இத்தனை உற்சாகத்தோடு எழுதும் வா.மு.கோமு கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர். 

முந்தின நாள் இரவு முழுவதும் ஷரன் ஸ்டோன், அடுத்த நாள் முழுவதும் வா.மு.கோமுவின் நாவல் என்று முடித்துவிட்டு அறையை விட்டு வெளியே போகும் போது ஞாயிறு மாலை ஏழு மணியாகியிருந்தது. இரண்டு நாட்கள் முடிந்திருக்கிறது. ஆனாலும் ஒருவிதத்தில் திருப்தியாகவே இருந்தது. கண்ணாடியில் முகம் பார்த்தபோது கண்கள் சிவந்து கிடந்தன. முதன் முதலாக கண்களுக்கு கீழாக கருவளையம் படிந்திருந்தது. ஷரன் ஸ்டோன் மற்றும் மாணிக்கம் அத்தையால் உருவாக்கப்பட்ட கருவளையம் இது.

(புத்தகத்தை ஆன்லைனில் வாங்கலாம்)