Nov 9, 2013

தொட்டுவிடும் தூரத்தில்தான் வானம்

ஆறாவது வகுப்பிற்காக உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்திருந்தோம். புதுப் பள்ளி, பெரிய விளையாட்டு மைதானம், புதிய ஆசிரியர்கள் என்று உற்சாகம் பீறிட்டுக் கொண்டிருந்தது. அடுத்த சில நாட்களிலேயே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியிருந்த மாணவர்களுக்கு மதிப்பெண்  வந்திருந்தது. எங்கள் பள்ளி ஏதோ சாதனைகள் செய்திருப்பதாக பாதி நாள் விடுமுறையளித்துவிட்டார்கள். மதியம் ஒரு மணிக்கு பள்ளி விட்டால் உற்சாகம்தானே? புத்தக மூட்டையை வகுப்பறையிலேயே போட்டுவிட்டு மைதானத்திற்கு ஓடிவிட்டோம். மூன்று மணிக்கு மேல் மைதானம் நிரம்பி வழிய வாட்ச்மேன் வந்து அத்தனை பேரையும் துரத்திவிட்டார். அப்பொழுதுதான் அந்தப் பெயரைச் சொன்னார்கள் ‘வெங்கடாசலபதி’.

‘அந்தண்ணன்தான்டா ஃபர்ஸ்ட் மார்க்கு. உங்க ஊர்க்காரர்தான். உனக்குத் தெரியுமா?’ என்று கமாலுதீன் கேட்டபோது ‘தெரியும்’ என்று பந்தாவுக்காகச் சொல்லி வைத்திருந்தேன். ஆனால் முன்ன பின்ன அவரை பார்த்ததில்லை. பெயரைக் கூட கேள்விப்பட்டதில்லை. ஆனாலும் வெற்றியாளர்கள் நம் ஊர்க்காரர் என்று தெரிந்தால் பெருமையாக இருக்குமல்லவா? அந்தப் பெருமை சிதைந்துவிடாமல் இருப்பதற்காகச் சொன்ன பொய் அது.

அந்தச் சமயத்தில் அப்பாவின் அலுவலகம் பள்ளிக்கு பக்கத்திலேயேதான் இருந்தது. பள்ளி முடிந்ததும் அங்கு போனால் பக்கத்துக் கடையில் பஜ்ஜியும் வடையும் வாங்கித் தந்து டிவிஎஸ் 50 யில் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவார். அப்பொழுது மணி நான்கு கூட ஆகியிருக்கவில்லை. போனவுடன் ‘நம் ஊர்ல வெங்கடாசலபதி யாருங்கப்பா?’ என்ற போது அவருக்கும் தெரியவில்லை. ‘அந்தண்ணன் தான் ஃபர்ஸ்ட் மார்க்காம்’ என்று சொன்ன பிறகு அவருக்கும் ஒரு ஆர்வம். ஆனால் என்னதான் யோசித்தும் அவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

வீட்டிற்குச் சென்ற போது உள்ளூர் பையன் தான் முதல் மதிப்பெண் என்ற விவரம் பரவியிருந்தது. அப்பாவுக்கும் யாரோ பையனைப் பற்றிய விவரத்தைச் சொல்லிவிட்டார்கள். என்னிடம் வந்து ‘சரோஜா பையனாம்’ என்றார். அவரையும் எனக்குத் தெரியவில்லை. ‘வயல் வேலைக்கு போகுமுல்ல நீ பார்த்ததில்லையா?’ என்று கேட்டுவிட்டு அடையாளம் சொன்னார். ம்ஹூம். சரோஜா அக்கா கூலி வேலைக்குத் தான் போகிறாராம். கடும் உழைப்பாளி. உழைப்பாளி மட்டுமில்லை- அத்தனை பேரிடமும் நன்றாக பழகுவாராம். ‘கூட்டத்தில் சரோஜா இருந்தால் நேரம் போவதே தெரியாது’ என்று அம்மா தன் பங்குக்குச் சொன்னார். ‘சும்மா பேசிட்டே இருக்கும். பேசுற பேச்சுல ஒவ்வொரு லைனுலயும் ஒரு நக்கல் இருக்கும்’ என்று அம்மா சேர்த்துக் கொண்டார்.

அன்றிலிருந்தே வெங்கடாசலபதியை எனக்கான இஸ்பிரேஷனாக மாற்றத் தொடங்கவிட்டார்கள். ‘அந்தண்ணன் மாதிரி படிக்கோணும்’ என்று முதன் முதலாகச் சொல்ல ஆரம்பித்தார்கள். இந்த டயலாக் அடுத்த ஆறு ஆண்டுகளுக்கும் எங்கள் வீட்டில் கோலோச்சிக் கொண்டிருந்தது. 

இரண்டு நாட்கள் கடந்திருக்கும். யோகம் டீஸ்டாலில் அமர்ந்திருந்தேன். அந்த டீக்கடை எங்கள் ஊரில் பிரசித்தமாக இருந்தது. பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியலோடு ஒரு பையன் தினத்தந்தி படித்துக் கொண்டிருந்தான். அந்தப் பையன்தான் இந்த பத்தியின் நாயகன் என்று தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. அவரேதான். 

“எத்தனை மார்க்குண்ணா?” என்றேன்.

அவர் மார்க்கைச் சொல்லவில்லை. கையில் இருந்த மதிப்பெண் பட்டியலைக் காட்டினார். இரண்டு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ‘வெங்கடாசலபதி’.

“நீங்கதான் வெங்கடாசலபதியா?”

“ம்ம்ம்”

“நீங்கதான் ஃபர்ஸ்ட் மார்க்கா?”

“ம்ம்ம்”

இந்த நம்பிக்கையில்லாத கேள்விகளுக்கு காரணமிருக்கிறது. முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்கள் கண்ணாடி அணிந்து, செவச் செவ என்றிருப்பார்கள் என்று ஒரு பிம்பத்தை வைத்திருந்தேன். ஆனால் வெங்கிடு அண்ணன் இந்த பிம்பத்திற்கு சம்பந்தமேயில்லாமல் இருந்தார். கறுப்பாக, ஒல்லியாக, குள்ளமாக- பக்கத்துவீட்டு பையன் மாதிரி.

அதன் பிறகு நண்பர்களாகிவிட்டோம். 

ஊருக்குள் ‘சரோஜா பையனுக்கு’ மரியாதை கூடியிருந்தது. கூலிக்காரர்களின் மகன்களை இளக்காரமாக பார்க்கும் ஊரின் வழக்கமான பார்வையை வெங்கிடு அண்ணன் மாற்றியிருந்தார். கோவில் திருவிழாவிலோ அல்லது கூட்டத்திலோ அவரோடு நின்றிருப்பது நமக்கும் கூடுதல் கவனத்தை பெற்றுத் தரத் துவங்கியிருந்தது. அவர் படிப்பை பற்றி பேசிப் பார்த்ததேயில்லை. எப்பொழுது படிக்கிறார், எப்பொழுது எழுதுகிறார் என்றே தெரியாது. 

என்னதான் உருட்டினாலும் அவரளவுக்கு மதிப்பெண் வாங்க முடியாது என்று நம்பத் துவங்கியிருந்தேன். ஆனால் அவர் ‘மதிப்பெண்கள் பெரிய விஷயமே இல்லை. புரிஞ்சு எழுது, மார்க் வாங்கிடலாம்’ என்று சொல்லிவிட்டு கடவுள் இல்லை, பெரியார், கிரிக்கெட் என்றெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்.  

ப்ளஸ் டூ முடித்துவிட்டு கோவை மருத்துவக் கல்லூரியில் அவர் சேர்ந்த போது ஊருக்குள் தனக்கான மரியாதையை பன்மடங்கு பெருக்கிக் கொண்டார்.  ‘சரோஜாவின் பையன் டாக்டராகிறான்’ என்ற செய்தி பல மாதங்களுக்கு ஹாட் டாபிக் ஆகியிருந்தது. அப்பொழுதும் நான் பத்தாம் வகுப்பு வந்திருக்கவில்லை. ஆனால் இப்பொழுது அவரை ‘மட்டுமே’ இன்ஸ்பிரேஷனாக மாற்றியிருந்தார்கள். நானும் அப்படித்தான் கருதத் துவங்கியிருந்தேன். அவ்வப்பொழுது அவரைச் சந்திக்கும் போது அறிவுரை கேட்டுக் கொள்வதுண்டு.

‘படிப்பு மார்க் எல்லாம் ரெண்டாம்பட்சம். அதைத் தவிர நாம தெரிஞ்சுக்க நிறைய இருக்கு. நமக்கு நிறையத் தெரியும் என்ற கான்பிடன்ஸ் வந்தாலே மார்க் வாங்கிடலாம்’என்பதைத்தான் அவர் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்தச் சமயத்தில் சரோஜாக்காவுக்கு ஏகப்பட்ட பெருமை. பெருமை என்பதைவிடவும் திருப்தி. தான் கூலி வேலை செய்தாலும் தனது ஒரே மகன் மருத்துவராகப் போகிறான் என்ற சந்தோஷம். அவரது பேச்சு, சிரிப்பு என எல்லாவற்றிலும் அந்தத் திருப்தி வெளிப்படத் துவங்கியிருந்தது. ‘அவன் டாக்டரான்னாலும் செரி, உடம்புல தெம்பு இருக்கிற வரைக்கும் நான் வேலைக்கு போவேன் கண்ணு’ என்று அம்மாவிடம் ஒரு முறை சொன்னாராம்.

வெங்கிடு அண்ணன் மருத்துவர் ஆகும் தறுவாயில் நான் கல்லூரியில் சேர்ந்தாகிவிட்டது. ஆனால் பொறியியல் கல்லூரிதான். ஒரு நீண்ட விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தேன். வெங்கிடு அண்ணன் விரைவில் படிப்பை முடித்துவிடுவார் என்று முந்தின நாள் பேசிக் கொண்டிருந்தோம். அதற்கு அடுத்த நாள் காலையில் அந்த அதிர்ச்சிச் செய்தி வந்தது. ‘சரோஜாக்கா இறந்து போனார்’. ஏன் இறந்தார் எப்படி இறந்தார் என்றெல்லாம் தெரியவில்லை. அரசு மருத்துவமனையில் பிரேதம் வைக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். அவசர அவசரமாக ஓடிய போது மார்ச்சுவரிக்கு முன்பாக ஊர்க்காரர்கள் திரண்டிருந்தார்கள். வெங்கிடு அண்ணன் ஓரமாக அழுது கொண்டிருந்தார். பிரேதப் பரிசோதனை ஆரம்பமாகிய சில நிமிடங்களில் ‘டொப் டொப்’ என்ற சத்தம் வந்தது. ‘மண்டை ஓட்டைத் தட்டுகிறார்கள்’ என்று யாரோ கிசுகிசுத்தார்கள். வெங்கிடு அண்ணனின் முகத்தைப் பார்த்தேன். அவர் அப்பொழுது அழுகையைக் கூட்டியிருந்தார். அவர் அருகில் நின்று கொண்டேன். என்ன பேசுவதென்று தெரியவில்லை. ‘இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தா டிகிரி சர்டிபிகேட்டை அம்மாகிட்ட கொடுத்திருப்பேன்’ என்று சொன்ன போது அவர் கிட்டத்தட்ட முழுமையாக உடைந்திருந்தார்.

அங்கிருந்த யாராலும் வெங்கிடு அண்ணனைத் தேற்ற முடியும் என்று தெரியவில்லை. சரோஜக்காவின் வாழ்நாள் கனவு அது. தனது மகனை மருத்துவர் ஆக்குவதற்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். தனது அத்தனை தேவைகளையும் நிராகரித்துவிட்டு ஒரு மருத்துவரை உருவாக்கிக் கொண்டிருந்தார். இன்னும் சில மாதங்கள்தான். அவரது கனவு நனவாகுவதைப் பார்த்திருக்கலாம். ஆனால் காலன் அழைத்துக் கொண்டான்.

விதி எந்த விதத்திலும் வெங்கிடு அண்ணனை முடக்கிப் போட்டதாகத் தெரியவில்லை. எதிர்பார்த்தபடியே மருத்துவர் ஆனார். சில வருடங்கள் இந்தியாவில் இருந்தார். மனநோயாளிகள் பிரிவில் நிபுணத்துவம் பெறுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றார். அடுத்த சில ஆண்டுகளில் இங்கிலாந்து பறந்தார். இப்பொழுது அங்குதான் இருக்கிறார். இன்னும் சில வருடங்கள் அங்கு இருப்பார் போலிருக்கிறது.

‘எப்போண்ணா இந்தியா வர்றீங்க?’ என்றால் ‘வரணும் மணி. அங்கதானே நம்ம வேர் இருக்கு. கொஞ்ச நாள் சம்பாதிச்சுட்டு வந்துடுறேன்’ என்கிறார். ஊருக்குள் ஓரிரு இடங்களை வாங்கியிருக்கிறார். அத்தனையும் அடுத்தவர்கள் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கான மதிப்புடையவை. அனேகமாக அவை மருத்துவமனை கட்டுவதற்கான இடங்களாக இருக்கக் கூடும்.

பெற்றவர்கள் கூலி வேலைதான். குடும்பத்தில் கடுமையான கஷ்டங்கள். புதிய புதிய சிக்கல்கள். எதிர்பாராத இழப்புகள்- பேரிழப்பும் கூட. ஆனால் எந்தவிதத்திலும் அவை எதுவுமே வெங்கிடு அண்ணனின் பாதையை மறித்துவிடவில்லை. ஒவ்வொரு தடையையும் தாண்டினார். ஒவ்வொரு வெற்றி மாலையாக கழுத்தில் ஏந்திக் கொண்டவர் இப்பொழுது உச்சாணியில் அமர்ந்திருக்கிறார். என்னைப் பொறுத்தவரைக்கு அது வாழ்க்கையின் உச்சாணி.