வினவு தளத்தில் நேற்று சாரு நிவேதிதா, ஜெயமோகன் மற்றும் வண்ணதாசனை வாரியிருக்கிறார்கள். அவர்கள் யாரைத்தான் வாராமல் இருந்திருக்கிறார்கள்? இவர்கள் தப்பிப்பதற்கு.
சிலர் எல்லாவற்றையும் பாஸிட்டிவாகவே பார்ப்பார்கள். சிலர் எல்லாவற்றிலும் இருக்கும் நெகடிவ்வை மட்டுமே தோலுரிப்பார்கள். தோழர்கள் இரண்டாவது வகை. இங்கு யார்தான் 100% பெர்ஃபெக்ட்? அதனால் அவர்களிடம் எல்லோருமே ஏதாவது ஒருவிதத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
சாரு தனது கட்டுரையில் ‘மோடியை ஆதரிக்கிறேன்’ என்ற சொன்னதற்காக வினவில் மாட்டிக் கொண்டார். தரகன் என்றெல்லாம் அசிங்கப்படுத்தி எழுதியிருக்கிறார்கள். ஜெயமோகனை அவர்களுக்கு எப்பொழுதுமே பிடிக்காது அதனால் அவருக்கும் ஒரு குத்து. அதே கட்டுரையில் போகிற போக்கில் பத்ரி சேஷாத்ரியையும் ஒரு தட்டு தட்டியிருக்கிறார்கள். அவரும் மோடியை ஆதரிக்கிறாராம். ஆனால் கட்டுரையின் உச்சபட்ச வன்மம் வண்ணதாசனைக் கையைப் பிடித்து உள்ளே இழுத்திருப்பதுதான். அவர் வைகுண்டராஜனையும், மோடியையும் எதிர்க்கவில்லையாம். அதனால் அவரின் சாதி வரைக்கும் கை நீட்டியிருக்கிறார்கள்.
இவர்களைப் பொறுத்த வரையில் மோடியை ஆதரிக்கவும் கூடாது அமைதியாகவும் இருக்கக் கூடாது. யாராக இருந்தாலும் மோடியின் மூக்கு மீது குத்த வேண்டும். அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அப்படியே குத்தினாலும் பாராட்டிவிடுவார்களா என்றால் அதுவும் செய்ய மாட்டார்கள். ‘பாட்னாவில் ஏன் மோடியின் ஆட்களே குண்டு வைத்திருக்கக் கூடாது’ என்று conspiracy theory ஐ கஷ்டப்பட்டு உருவாக்கி மோடியை எதிர்க்கும் ஞாநியை பாராட்டியிருக்கிறார்களா? அதுவும் இல்லை. இவர்கள்தான் நெடிவ்வை மட்டும்தானே பார்ப்பார்கள்.
அமார்த்தியா சென் எதிர்க்கிறார் அதனால் நீங்களும் மோடியை எதிர்க்க வேண்டும்; யு.ஆர்.அனந்தமூர்த்தி எதிக்கிறார் அதனால் நீங்களும் மோடியை எதிர்க்க வேண்டும் என்று பரப்புரை செய்து கொண்டிருக்கிறார்கள். மோடியை எதிர்க்கும் மூன்று அறிவுஜீவிகளை இவர்கள் காட்டுவது போல மோடியை ஆதரிக்கும் வேறு சில அறிவாளிகளைக் காட்ட முடியும். இவர்கள் எல்லாரும் மோடியை ஆதரிக்கிறார்கள் அதனால் நீங்கள் மோடியை ஆதரிக்க வேண்டும் என்று சொன்னால் இந்தத் தோழர்கள் மோடியை ஆதரிப்பார்களா என்று தெரியவில்லை.
மோடியை ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை அது அவர்களுக்கான உரிமை. ஆனால் எதற்காக வண்ணதாசனை உள்ளே இழுக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. வண்ணதாசன் எப்பொழுது தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார் இன்று மட்டும் அவரை அரசியல் பேசச் சொல்வதற்கு? தன் வாழ்நாள் முழுவதும் வாழ்வின் அழகியலையும் அதன் நுட்பங்களையும் மட்டுமே தனக்கான தனித்த மொழியில் பேசிக் கொண்டிருப்பவர் வண்ணதாசன். தன்னைச் சுற்றிலும், தனது எழுத்திலும் எந்தக் காலத்திலும் ‘பாஸிடிவ் வைப்ரேஷனை’ மட்டுமே உருவாக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனை தெருவுக்கு இழுத்து சாணியைக் கரைத்து கையில் கொடுப்பது அபத்தம் தோழர்களே!
இதைச் சொன்னால் அடுத்த கேள்வி என்ன வரும் என்று தெரியும்.
அதிகாரத்தின் சுரண்டல்களை, ஆட்சியாளர்களின் வன்முறைகளை, முதலாளிகளின் அக்கிரமங்களை, ஏழைகளின் கண்ணீரை எல்லாம் இலக்கியவாதிகள் பேச வேண்டியதில்லையா?
‘பேச வேண்டியதில்லை’ என்று எப்படிச் சொல்ல முடியாதோ அதே போலத்தான் ‘பேச வேண்டும்’ என்று சொல்ல முடியாது. தனிமனிதனின் சிக்கல்கள், அவனது அவஸ்தைகள், வாழ்வின் அழகியல்கள் என்பதை மட்டுமே தனது எழுத்து முழுவதுமாக நிரப்பிய பல இலக்கிய கர்த்தாக்களை உலகம் முழுவதும் காட்ட முடியும். வண்ணதாசன் அப்படியான ஒரு எழுத்தாளர். அரசியல் பரபரப்பு எந்தவிதத்திலும் தீண்டாத தேவதச்சன், வண்ணதாசன், தேவதேவன் போன்ற படைப்பாளிகளிடம் தத்தமது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தச் சொல்வது அவசியமில்லாதது.
தன்னை சமூகத்தை ரட்சிக்க வந்தவராகவோ, புரட்சியாளனாகவோ எந்தவிதத்திலும் வெளிப்படுத்திக் கொள்ளாத கவிஞனாகவே வண்ணதாசன் இருந்திருக்கிறார். தனது கவிதைகளிலும் படைப்புகளிலும் சமூகத்தின் அவலங்களையும் அபத்தங்களையும் சாமானிய தனிமனிதனின் பார்வையில் பதிவு செய்து கொண்டிருப்பவரிடம் ‘நீ இதையெல்லாம் எழுதுவதை நிறுத்திவிட்டு நாங்கள் கைகாட்டுபவரை எதிர்க்கத் தொடங்கு’ என்பதில் என்ன நியாயம் இருக்கிறது? தன் குடும்பம், தன் வாழ்க்கை என நகர்ந்து கொண்டிருக்கும் சாமானியனிடம் துப்பாக்கியை ஏந்தச் சொல்வது எப்படி அபத்தமோ அதே போன்றதொரு அபத்தம்தான் வண்ணதாசன் போன்ற பூக்களின் கவிஞனை போராடத் துவங்கச் சொல்வது.
சமூகத்தோடு இணைத்துக் கொண்டு, ஒரு புரட்சி மனோநிலையில் எதிர்படும் ஒவ்வொருவரையும் எதிர்த்து சுற்றுப்புறத்தில் ‘நெகடிவ் வைப்ரேஷனை’ உருவாக்குவது என்பது எப்படி உங்களைப் போன்றவர்களுக்கு உகந்த மனநிலையோ அதற்கு முற்றும் மாறாக சமூகத்தோடு துண்டித்துக் கொண்டு, ஒரு மோனநிலையில், எதிர்படும் ஒவ்வொரு விஷயத்திலும் பாஸிடிவ்வான விஷயங்களை மட்டுமே சிலாகித்து ‘பாஸிடிவ் வைப்ரேஷனை’ உருவாக்குவதும் ஏற்றுக் கொள்ள வேண்டிய மனநிலைதான்.
கல்யாண்ஜியை புரட்சியாளராக பார்ப்பதைவிடவும் ஒரு கவிஞனாகவே பார்க்க விரும்புகிறேன். வண்ணதாசனை அரசியல் பேசும் பரப்பரப்பான மனிதனாக நெருங்குவதை விடவும் கணபதி அண்ணனைப் பற்றியும் காந்தி டீச்சரைப் பற்றியும் எழுதும் ப்ரியத்திற்குரிய சகமனிதனாகவே அணுக விரும்புகிறேன்.
ஒரு எழுத்தாளனோ அல்லது படைப்பாளியோ ஏன் கத்த வேண்டும் அல்லது கத்தியைத் தூக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? தனது பேனாவின் நுனியால் சமூகத்தைக் குத்திக் கிழிப்பதும் அல்லது பூ செருகி வைக்கும் ஸ்டேண்டாக பயன்படுத்துவதும் எழுத்தாளனைப் பொறுத்த விஷயம். ‘இதற்கெல்லாம் நீ குரல் கொடுக்க வேண்டும்; இதையெல்லாம் நீ எதிர்க்க வேண்டும்’என்று அவனை நோக்கி உத்தரவிடுவது என்னைப் பொறுத்தவரையில் சர்வாதிகாரம்.
நீங்கள் சமூகத்திற்காக போராடுங்கள்- வாழ்த்துக்கள்! ஆனால் வண்ணதாசனையும், தேவதச்சனையும், சுகுமாரனையும், சாம்ராஜையும் விட்டுவிடுங்கள். அவர்கள் கவிஞர்களாக மட்டும் வாழட்டும்!
கல்யாண்ஜி (எ) வண்ணதாசனின் இரண்டு கவிதைகள்
(1)
இந்தக் கவிதை எழுதுகிறவன்
எத்தனை சொற்கள்
மனதாரப் பேசுகிறான்
அவன் மனைவியிடம் பிள்ளைகளிடம்.
அடுத்த, பக்கத்து வீட்டுக்காரனுடைய
மூக்கும் முழியும்
அடையாளம் சொல்ல முடியுமா
நெஞ்சில் கைவைத்து
இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறைகளில்
பிளாஸ்டிக் குவளைகளில்
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா
ஒரே ஒரு செடி
வேரடி மண்ணில்.
இந்தக் கவிதை எழுதுகிறவன்
முண்டியடித்து ஏறி
அமர்ந்த பேருந்தில்
எப்போதாவது
எழுந்து இடம் கொடுத்திருக்கிறானா
இன்னொரு தள்ளாதவருக்கு.
குதிகால் நரம்பு தென்னிய
சைக்கிள் ரிக்ஷாக்காரனிடம்
கூலிபேரம் பேசாமல்
இருக்கமுடிகிறதா இவனால்
எப்போதாவது எப்போதாவது
பாடைக்கு வீசிய பூவை
கூச்சமற்றுக்
குனிந்து எடுத்துக்
கையில் வைத்துக்
கசிந்தது உண்டா?
இவனைப் போலத்தானே
இருக்கும்
இவனுடைய கவிதையும்
(2)
பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொரமொரவென
மரங்கள் எங்கோ சரிய.