Oct 7, 2013

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் Mr.பாலகுமாரன்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா திரைப்படம் பார்த்தாயிற்று. ஒரு ப்ரஷர்தான். தியேட்டருக்கு சென்றே தீர வேண்டும் என்ற ப்ரஷர். இந்த ப்ரஷர் உள்ளுக்குள் இருந்து பொங்கி பிரவாகம் எடுத்து வந்ததாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. புற அழுத்தம். ‘படம் பார்க்க அழைத்துச் சென்றே ஆக வேண்டும்’ என்று வீட்டில் உருவாகிய அழுத்தம். திருமணம் ஆன ஐந்து வருடங்களில் மனைவியோடு தியேட்டரில் பார்த்த படங்களின் எண்ணிக்கை இரண்டைத் தொடுகிறது. இதில் பெருமை எதுவும் இல்லை. படத்திற்குச் சென்றால் ஐந்நூறு ரூபாய்க்கு மேல் செலவாகிறது. கஞ்சத்தனம்தான். திருமணமான புதிதில் ஹைதராபாத்தில் ஒரு தெலுங்குப் படம் பார்த்தோம். ரவிதேஜா கதாநாயகன். அவரை எனக்கு மிகப் பிடிக்கும் என்றாலும் அது ஒரு அறுவையான படம். அதோடு சரி. தியேட்டர் பக்கமே தலை வைக்கவில்லை.

ஆனால் இப்படி இருப்பதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. வீட்டிற்கு ஒரு சொந்தக்காரர்/பந்தக்காரர் வர முடிவதில்லை. அப்படியே யார் வந்தாலும் ‘உங்க மாப்பிள்ளை ஒரு படத்திற்கு கூட்டிட்டு போறாரா?’ என்றுதான் புகார் வாசிக்கப்படுகிறது. தர்மசங்கடமாகத்தான் இருக்கும். புகாரைக் கேட்பவரும் நம்மைப் பார்த்து வழிய வேண்டியிருக்கும்; நாமும் அவரைப் பார்த்து வழிய வேண்டியிருக்கும். இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்றும் முடிவெடுத்ததில் இந்தப் படம். ராஜா ராணி பார்க்கலாம் என்றுதான் நினைத்தோம். ஆனால் நஸ்ரியாவை பாதியிலேயே சாகடித்துவிடுகிறார்கள் என்று கேள்விப்பட்டவுடன் முடிவு மாறிவிட்டது. தனது தொப்புளுக்கு டூப் போட்ட நடிகை தமிழ் திரைப்பட வரலாற்றிலேயே- அவ்வளவு ஏன் உலகத் திரைப்பட வரலாற்றிலேயே நஸ்ரியாவாகத்தான் இருக்கும். அப்பேற்பட்ட அழகு தேவதையை, குடும்ப குத்துவிளக்கை கொல்லும் படம் எல்லாம் படமா?  ஹீரோ அடி வாங்கினாலே கூட கண்ணீர் சிந்திவிடுவேன். கதாநாயகி செத்தால் அவ்வளவுதான். அதனால் தேர்ந்தெடுத்த படம்தான் ‘இ.ஆ.பா’. 

படத்தைப் பற்றி எழுதுவதற்கு குறைந்தபட்ச சினிமா அறிவாவது தேவை. அதற்கெல்லாம் ஏகப்பட்ட பேர் இங்கே இருக்கிறார்கள். ஹீரோ அறிமுக ஸீனில் கேமராவை இடது பக்கத்திலிருந்து ரோலிங் செய்யவிட்டு வலது பக்கத்திற்கு நகர்த்தியிருக்க வேண்டும்; பின்னணி இசை சுமார் ரகம்- பதினேழாவது ஸீனில் ஒரு பியானோ இசையை சொருகியிருந்தால் ஒரு படி தூக்கலாக இருந்திருக்கும்; ஒளிப்பதிவு இருட்டிலேயே இருக்கிறது- பதினெட்டு வாட்ஸ் லைட் ஒன்றை கூடுதலாக தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று எழுதும் அளவிற்கு வித்தகர்கள் இருக்கும் ஏரியாவில் விமர்சனம் எழுதுகிறேன் என்ற பெயரில் கோதாவில் இறங்கினால் நூறு வாட்ஸ் பல்ப் வாங்க வேண்டியதாகிவிடும்.

படம் எனக்கு மிகப் பிடித்திருந்தது. அர்த்தம் இருக்கிறதோ இல்லையோ, லாஜிக் இருக்கிறதோ இல்லையோ ‘கெக்கபிக்கே’ என்று சிரிக்க வைத்தார்கள். புரோட்டா சூரியும் அவரது அண்ணன் மனைவியாக வரும் இரண்டு பாத்திரங்கள் மட்டும் கொஞ்சம் இழுவையாகத் தெரிந்தார்கள். அவ்வளவுதான். படம் என்றால் ஒன்று சிரிக்க வைக்க வேண்டும் அல்லது கதாநாயகன் வில்லன்களை அடித்து துவம்சம் செய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒன்று இருந்தாலும் என்னைப் பொறுத்தவரைக்கும் நல்ல படம். அதனால் ‘இ.ஆ.பா’ நல்ல படம்.

டிக்கெட் விலைதான் அநியாயம். ஆளுக்கு இருநூற்றைம்பது ரூபாய். ஒரு பழுப்பு நிற காந்தி நோட்டை நீட்ட வேண்டியிருந்தது. டிக்கெட் வாங்கினால் போதுமா? ஐஸ்கிரீம்? நூறு ரூபாய்க்கு குறைவாக ஐஸ்க்ரீமே கிடையாது. அதற்கு தனியாக வரி வேறு போடுகிறார்கள். பாப்கார்ன் வாங்கினால் நூறு ரூபாய், கோகோ-கோலா வாங்கினால் நூற்றைம்பது. நூறுக்கும் குறைவாக எதுவும் இல்லை. இதெல்லாம் ‘டெம்ப்ளேட்’ புலம்பல்கள்தான். எல்லோருக்குமே தெரிந்த விஷயங்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள் என்பதால் மட்டும் முட்டையில் படைத்த நம் குணம் மாறி தயாள மனம் ஆகிவிடுமா? கட்டைக்கு போகும் வரைக்கும் நம் கூடவேதான் இருக்கும். முகத்தைச் சுளித்துக் கொண்டேதான் ஒவ்வொரு இடத்திலும் பணத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.

இந்த மாதிரி இடங்களில் பணத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் செலவு செய்யும் ஆட்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். படத்திற்கு போகிறோம் என்றால் இரண்டாயிரம் ரூபாயை எடுத்து வந்து கேட்ட இடங்களில் எல்லாம் ரூபாய்த்தாள்களை பறக்கவிடும் மனிதர்கள் அவர்கள். ‘எப்பவாவது படத்துக்கு வர்றோம். செலவுக்கு ஏன் கணக்கு பார்க்கணும்?’ என்று justify செய்துவிடுகிறார்கள். அவர்கள் அளவில் அது சரியான வாதம்தான். 

சில நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார்கள். அப்பா வரவேற்பறையில்தான் படுத்திருப்பார் என்பதால் அவர் எழுந்துவிடுவார். யாராவது இரவில் கதவைத் தட்டினால் பெரும்பாலும் எங்களை அழைத்துக் கொண்டுதான் கதவைத் திறப்பார். அன்றைக்கு ஜன்னலின் வழியாக வெளியே பார்த்த போது ஷானுவின் அப்பா நின்றிருக்கிறார். அவர் பக்கத்து கட்டடத்தில் மேஸ்திரி.  அவரை அப்பாவுக்கு நன்றாகவே தெரியும் என்பதால் கதவைத் திறந்திருக்கிறார். ஷானுவுக்கு கடும் ஜூரம். அவனுக்கு மூன்று வயது இருக்கும். மருத்துவமனைக்கு போவதற்கு காசு கேட்டிருக்கிறார்.  இருநூறு ரூபாய் கொடுத்தாராம். காலையில் எழுந்த போது அப்பா இதைச் சொன்னார். ‘ஐந்நூறு கொடுத்திருக்கலாங்களப்பா’ என்று தம்பி இயல்பாகத்தான் கேட்டான். அவருக்கு சுள்ளென்று கோபம் வந்துவிட்டது. ‘இவன் எல்லாம் அட்வைஸ் பண்ணுறான்’ என்று நினைத்திருக்கக் கூடும்.

பிறகு அம்மாவிடம் சத்தம் போட்டாராம். ‘ஆஸ்துமா வந்து கையில் காசு இல்லாமல் வெறும் இருபது ரூபாய் கடன் வாங்கினோம். அப்போ இவன் பொறந்துட்டான்ல. இப்போ பாரு ஐந்நூறு ரூபாயை சும்மா கொடுக்கச் சொல்கிறான். சம்பாதிச்சா மட்டும் பத்தாது. காசோட அருமை தெரியோணும்’ என்று சொன்னதாக அம்மா சொன்னார். அவர் அளவில் அது சரியான வாதம்தான்.

இ.ஆ.பா படம் முழுவதும் டாஸ்மாக்தான். அது மட்டும்தான் படத்தில் சற்று நெருடலாக இருந்தது. நம்மோடு இருக்கும் சரக்கடிக்கும் சக நண்பர்களிடம் வினவினால் கடும் வேலை, குடும்பத்தில் பிரச்சினை, வாழ்க்கையின் சிக்கல்கள் ‘ஒரு ஆஃப்தானே’. ‘பணத்தைச் சேர்த்து வைத்து எதைச் சாதிக்கப் போகிறோம்?’ என்கிறார்கள். அவர்கள் அளவில் சரியான Justification தான்.

படம் முடிந்து திரும்பி வீட்டுக்கு வரும் போது மனைவி ‘உர்’ரென்று வந்தார். ‘எப்பவோ ஒரு நாள் அதிசயமா படத்துக்கு வர்றோம். எதுக்கு எடுத்தாலும் சிக்கனம் பார்த்தால் எப்படி?’ என்றார். அவர் அளவில் இது சரியான கேள்விதான்.

இப்படி எல்லோரிடமும் ஒரு Justification இருக்கிறது. ஆனால் இதில் எதைச் சரி என்பது, எதைத் தவறு என்பது என்றுதான் தெரியவில்லை.