Oct 6, 2013

குஜராத்தில் சிக்கிய அடிமை

அந்தக் காலத்தில் போருக்குச் செல்லும் மன்னர்கள் தாங்கள் வெல்லும் நாடுகளில் இருந்து அடிமைகளைப் பிடித்துச் செல்வார்கள் அல்லவா? பிடித்துச் சென்றால் கூட பரவாயில்லை- டெல்லி சுல்தான்களின் காலத்தில் இப்படி பிடிபடும் அடிமைகள் ஆண்களாக இருந்தால் தயவுதாட்சண்யமே இல்லாமல் ‘உறுப்பை’ கத்தரித்துவிடுவார்களாம். படுபாவிகள். டெல்லி சுல்தான்கள் மட்டுமில்லை பிற மன்னர்களும் இதையேதான் செய்திருக்க கூடும். ஆனால் எதிலும் படித்ததாக நினைவில் இல்லை. 

மாலிக் காபூர் அப்படியான ஒரு அடிமை. அலாவுதீன் கில்ஜி என்ற சுல்தானின் காலத்தில் சிக்கிய அடிமை. கில்ஜியின் படைகள் குஜராத்தை வெற்றி கொண்ட போது அந்த ராணுவத்தின் தளபதி ஆயிரம் தினார் பணம் கொடுத்துவிட்டு மாலிக் காபூரை அழைத்து வந்துவிடார். மற்ற அடிமைகளுக்கு செய்யும் வழமை போலவே மாலிக் காபூருக்கும் ‘கத்தரித்து’விட்டுவிட்டார்கள். கத்தரித்தால் என்ன? ‘அது’ போனால் போகட்டும் என்று நினைத்திருக்கக் கூடும். கூடிய சீக்கிரமே கில்ஜியின் ராணுவத் தளபதி ஆகிவிட்டார் என்றால் பாருங்கள். மாலிக் காபூரின் திறமைதான் இந்த உயர்வுக்கு காரணம் என்று சிலர் எழுதி வைத்திருக்கிறார்கள். வெறும் திறமை மட்டும் காரணமில்லை- அந்தப்புரத்தில் கில்ஜிக்கு காமப் பணிவிடை செய்துதான் மேலே வந்தார் என்று வேறு சிலர் எழுதி வைத்திருக்கிறார்கள். 

அவர் எப்படி வேண்டுமானாலும் தளபதி ஆகியிருக்கட்டும். ஆனால் அதன் பிறகுதான் வேட்டையே இருக்கிறது. இதெல்லாம் நடந்த கி.பி. 1300கள் வரைக்கும் வடகத்தியக் காரர்கள் தென்னிந்தியா பக்கமே வந்ததில்லையாம். ‘போய் பார்த்துவரட்டுமா?’ என்று கில்ஜியிடம் கேட்டிருக்கிறார். ‘ஆகட்டும்’ என்ற உத்தரவு கிடைத்தவுடன் படையைத் திரட்டிக் கொண்டு கிளம்பியிருக்கிறார் மாலிக் காபூர். இந்தப் பக்கம் கால் வைத்த முதல் ராணுவத் தளபதி மாலிக் காபூர்தான். 

புகுந்த ஒவ்வொரு நாட்டிலும் வெற்றிதான். எதிர்த்து நின்ற மன்னர்கள் சின்னாபின்னமாக்கப்பட்டிருக்கிறார்கள். கருணை என்பதெல்லாம் துளி கூட கிடையாது. சிக்கினால் சிதைய வேண்டியதுதான். இதையெல்லாம் பார்த்த சில மன்னர்கள் மாலிக் காபூரின் படை வருகிறது என்று தெரிந்தவுடனே எந்தப் பிரச்சினையும் செய்யாமல் ‘சரண்டர்’ஆகியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு ‘கெத்து’ காட்டியிருக்கிறார் மாலிக் காபூர். தேவகிரி, ஆந்திராவின் வாரங்கல், கர்நாடகத்தின் ஹலிபேடு என்று ஒவ்வொரு நாடாக வீழ்த்தும் போதும் கிடைத்த பொன்னும், வைரமும், வைடூரியமும் அவர்கள் எதிர்பாராதது. தென்னிந்தியாவில் இத்தனை வளங்கள் இருக்கும் என்று அதுவரையில் யாருமே நினைத்துக் கூட பார்த்திருக்கவில்லை. வாரங்கல்லிலிருந்துதான் உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தை அடித்துக் கொண்டு போனார்கள். மாலிக் காபூர் மதுரை வரை வந்திருக்கிறார்.

மாலிக் காபூர் பற்றி தேடிப்பார்க்கக் காரணம், அருண் ராமன். த்ரில் எழுத்தாளர். ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார். அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்தவர். பிஸினஸ் புள்ளி. அதே சமயம் சுவாரசியமான ஆளும் கூட. எண்பதுகளில் திஹார் சிறையில் இருந்திருக்கிறார். அவர் மனைவியும் ஒரு காலத்தில் திஹார் சிறைவாசிதான். ‘என்ன காரணத்திற்காக சிறைக்குச் சென்றீர்கள்?’ என்றால் ‘என் மேல் ஏகப்பட்ட வழக்குகள் இருந்தன’ என்கிறார். அவரது மனைவி மீதான கேஸ்தான் சுவாரசியம். ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான கேஸாம். ‘உங்களிடம் நிறைய பேச வேண்டியிருக்கு. அப்பாய்ண்ட்மெண்ட் கிடைக்குமா?’ என்று செய்தி அனுப்பியிருக்கிறேன். பார்க்கலாம்.

அருண் ராமனின் முதல் நாவலே Best seller. இப்பொழுது இரண்டாவது நாவலை எழுதியிருக்கிறார். இந்த நாவலை மாலிக் காபூரின் படையெடுப்பை மையமாக வைத்துத்தான் எழுதியிருக்கிறார். கி.பி. 1311 அல்லது 1312 ஆம் ஆண்டுவரை தான் கொள்ளையடித்தவற்றை மாலிக் காபூர் உடனடியாகத் தலைநகருக்கு எடுத்துச் செல்ல விரும்பவில்லை. தென்னிந்தியாவிலேயே ஏதோவொரு இடத்தில் பதுக்கி வைக்கிறார். பதுக்கி வைத்துவிட்டு அலாவுதீன் கில்ஜிக்கு ஒரு கடிதம் அனுப்புகிறார். கடிதம் அனுப்பிய சில வருடங்களில் கில்ஜி இறந்து போகிறார். அதே ஆண்டிலேயே மாலிக் காபூரும் இறந்து போகிறார். பிறகு அந்த நகைகள் என்னாயிற்று என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த நகைகளைத் தேடியலையும் த்ரில்லர்தான் இந்த இரண்டாவது நாவல். இந்த நாவல் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் அருண் ராமன் தனது நாவலுக்கான கருவைச் சொன்ன போதே வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. 

தற்போதைய தமிழ் நாவல்களில் இப்படியான knotகள் இருக்கின்றனவா? தனி மனிதன், அவனைப் பற்றிய விசாரணைகள், அவனது துக்கங்கள்/கொண்டாட்டங்கள், அவன் குடும்பம், அவன் சார்ந்த சமூகம் என்றுதான் பெரும்பாலான தமிழ் நாவல்கள் தனிமனிதனைச் சார்ந்துதான் வந்திருக்கின்றன அல்லது வந்து கொண்டிருக்கின்றன. ஒரு வகையில் இது குண்டுச்சட்டிக்குள் ஓட்டும் குதிரைதான். வெளிப்படையாகச் சொன்னால் மூக்கிலேயே குத்துவிடுவார்கள். எதற்கு வம்பு? அதனால் தமிழ் நாவல்களின் களங்கள் ஆகச் சிறந்தவை என்று சொல்லி முடித்துக் கொள்ளலாம்.

உண்மையில் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்கள் எடுக்கும் கதைக்களங்கள் பிரமிக்க வைக்கின்றன. out of box இல் விதவிதமாக யோசிக்கிறார்கள். விளையாடுகிறார்கள். அவர்களின் புத்தகங்களும் சர்வசாதாரணமாக இலட்சக்கணக்கான காப்பிகள் விற்கின்றன. 

நாம்தான் லைப்ரரி ஆர்டரை மட்டுமே நம்பி காலத்தை ஓட்டுகிறோம். ஆயிரம் பிரதிகளை நூலகம் வாங்கிக் கொண்டால் போதும் என நினைக்கிறோம். ஆனால் சற்று ஏமாந்தால் அந்த விவரத்தையும் தகவல் அறியும் சட்டத்தில் வெளிக்கொண்டுவந்து விளம்பரமாக்குகிறார்கள். அரசியல் விவகாரங்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தால் நூலக ஆர்டரில் லட்சக்கணக்கான ரூபாய்களை பதிப்பாளர் சம்பாதிக்கிறார் என்பது நல்ல விஷயம். தமிழில் மிகச் சிறந்த பதிப்பகங்கள் என்று பட்டியல் போட்டால் நான்கைந்துதான் தேறும். என்னைப் பொறுத்தவரையில் அந்தப் பட்டியலில் வரும் பதிப்பகங்கள் வருமானம் பார்ப்பதில் தவறே இல்லை. நூற்றுக்கணக்கான நல்ல புத்தகங்களை பதிப்பிடும் ஒரு பதிப்பகத்திற்கு ஐந்து வருடத்தில் கிடைக்கும் எண்பது இலட்ச ரூபாய் என்பது சொற்ப வருமானம். பதினைந்து வருட அனுபவம் உள்ள ஒரு மென்பொருள் மேலாளர் வருடம் இருபது லட்சத்திற்கும் குறைவில்லாமல் சம்பாதிக்கிறான். இந்த நிலையில் ஒரு பதிப்பகத்துக்கும் வருடம் இருபது லட்சம் ரூபாய்தான் வருமானம் என்பது பெரிய பொருட்டே இல்லை. பிரிண்டிங் செலவு, வேலை ஆட்கள், மார்க்கெட்டிங் என்று அவர்களுக்கு ஏகப்பட்ட செலவுகள் இருக்கின்றன. அதுவுமில்லாமல் நாற்பது ரூபாய் விலையுள்ள புத்தகத்தை இருபத்தைந்து ரூபாய்க்குத்தான் நூலகத்தில் வாங்குவார்கள் என நினைக்கிறேன். என்ன பெரிய இலாபம் வந்திருக்கும்? கையைக் கடித்திருக்காது. அவ்வளவுதான்.

எங்கேயோ ஆரம்பித்து எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். 

நேற்று ஒரு எழுத்தாளரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவரும் ஆங்கிலத்தில் எழுதுபவர்தான். பெங்களூர் வாசி. அருண் ராமனின் கதைக்களம் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ‘ரஷ்யாவின் ஏர்போர்ட்டில் 20 பில்லியன் டாலர் பணம் கிடக்கிறதாம். கேட்பாரில்லாத பணம். இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட நூற்றியிருபதாயிரம் கோடி ரூபாய். சதாம் உசேனின் பணம் என்கிறார்கள். ஆனால் அதுவும் உறுதியான தகவல் இல்லை. அதை வைத்து ஒரு நாவல் எழுத முடியுமான்னு பாரு’ என்றார். செம ஐடியாதான். ஆனால் இதையெல்லாம் நாவல் ஆக்குவதற்கு கடும் உழைப்பு தேவை. என் சட்டியில் இருப்பது போதாது. முதலில் சட்டியை நிரப்பலாம். பிறகு அகப்பையில் வருகிறதா என்று பார்க்கலாம்.