Oct 8, 2013

வெற்றியா அல்லது வீரச்சாவா?

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் எங்கள் ஊர் வழியாக ஒரு நடைப்பயணம் நடைபெற்றது. தமிழ் வழிக் கல்வியை வலியுறுத்தி சில போராளிகள் பரப்புரை பயணம் மேற்கொண்டிருந்தார்கள். அது தாய்த்தமிழ் பள்ளி கட்டுவதற்கான நிதி வசூல் என்று நினைக்கிறேன். ‘வீட்டிற்கு ஒரு செங்கல்’ என்கிற கோஷத்துடன் தங்களின் பரப்புரையை மேற்கொண்டிருந்தார்கள்.  தமிழ் வழிக்கல்வியை ஆதரிக்கும் குடும்பங்கள் இந்தப் பள்ளி துவங்குவதற்காக ஆதரவளிக்க வேண்டும் என்பது அவர்களின் வேண்டுகோள்களில் ஒன்று.

தோழர் தியாகுதான் நடைப்பயணத்திற்கு தலைமை தாங்கினார். பிரச்சாரக் குழுவில் வந்தவர்களுக்கு அன்றைய தினத்தின் மதிய உணவு எங்கள் ஊரில்தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது நான் ட்ரவுசர் போட்டுத் திரிந்த அரை டிக்கெட். அரை டிக்கெட் என்றாலும் எங்கள் ஊரில் கோவிந்தராஜன் என்ற ஒரு அண்ணனுக்கு என்னை மிகப் பிடிக்கும். தியாகு வந்திருந்த தினத்தில் எனக்கு பள்ளி விடுமுறை. பள்ளி விடுமுறை என்றால் அவிழ்த்துவிட்ட கழுதைதான். அம்மாவும் அப்பாவும் அலுவலகத்திற்கு போய்விடுவார்கள். பகல் முழுவதும் கேட்க ஆளே இருக்காது. தியாகு வந்த தினமும் அப்படித்தான். தெருப்பொறுக்கிக் கொண்டிருந்த என்னை அவர் முன்னால் கொண்டு போய் நிறுத்தி ‘பையன் நம் உணர்வாளர்’ என்று கோவிந்தராஜண்ணன் அறிமுகப்படுத்தி வைத்தார். தியாகு என்னை அவரது அருகில் அமரவைத்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது தியாகு யாரென்றே எனக்குத் தெரியாது. ஆனாலும் புல்லரித்தது. நம்மையெல்லாம் மதித்து ஒரு பெரிய மனிதர் பேசுகிறாரே என்ற சந்தோஷம்தான். 

அவர் கிளம்பிப் போன பிறகுதான் அவரைப் பற்றிய விவரங்களைச் சொன்னார்கள். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அவர் மீது நக்சல் என்று முத்திரை குத்தப்பட்டது, போலீஸிடம் சிக்கிய பிறகான அவரது சிறைவாசம், சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்றது, நீதிமன்றத் தீர்ப்பில் அவருக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது போன்ற விவரங்களை எல்லாம் தெரிந்து கொள்ளத் தொடங்கிய போது தியாகு எனக்குள் ஹீரோவாகிக் கொண்டிருந்தார். பதின்ம வயதில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு புரட்சியாளனுமே நமக்கு ஹீரோதான். இந்தச் சமூகத்தின் பெரும்பான்மையினரில் இருந்து தனித்து தெரியும் ஒவ்வொரு மனிதனுமே நமக்கு ஆதர்சம்தான். தியாகுவும் எனக்கு அப்படித்தான். ஆனால் பதின்ம வயதில் நமக்குள் உருவாகும் ஹீரோக்கள் எப்பொழுதும் நமக்கு ஹீரோக்களாகவே இருப்பதில்லை. வாழ்க்கையின் பொருளாதாரம் சார்ந்த தேடல்களில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளத் துவங்கும் போது நமது ஹீரோக்கள் இருந்த இடத்தில் காந்தி நோட்டுக்களை அடுக்கத் துவங்கிவிடுகிறோம்.

நம் படிப்பு, நம் குடும்பம், நம் சம்பாத்தியம் என்ற நடுத்தர வாழ்க்கை முறையை வாழத் துவங்குவதற்கு தயாராகும் போது அதுவரையிலும் சேர்த்து வைத்திருந்த நமது லட்சியவாத சித்தாந்தங்கள் ஒவ்வொன்றாக விழுந்து நொறுங்குவதைக் காணலாம். அப்படித்தான் தியாகுவின் சித்தாந்தங்கள் எனது அன்றாட வாழ்க்கை முறையில் பின்பற்றுவதற்கு சாத்தியமில்லாதவை என உணரத் துவங்கிய பிறகு தியாகுவிடமிருந்து வெகுதூரம் விலகி வந்துவிட்டேன். அதன் பிறகு தியாகுவை சில செய்திகளிலும் நேர்காணலிலும் கவனிப்பதோடு சரி. கடைசியாக, தியாகு - தாமரை விவகாரம் செய்தித்தாள்களில் வெளியான போது சற்று சங்கடமாக இருந்தாலும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் இப்பொழுது தியாகு நடத்திக் கொண்டிருக்கும் பட்டினிப் போராட்டம் சற்று சலனப்படுத்தியிருக்கிறது. காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தை இலங்கையில் நடத்தக் கூடாது என்றும், அப்படி நடந்தால் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று அவர் உண்ணாவிரதத்தைத் துவக்கி எட்டு நாட்கள் முடிந்துவிட்டன. நேற்று வலுக்கட்டாயமாக அவரை மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். அவரது உடல் சமநிலையை இழந்துவிட்டதாக நண்பர்கள் சொன்னார்கள். 

தனது வாழ்நாள் முழுவதும் தமிழரை பற்றிய சிந்தனைகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர், எழுத்தாளர், சிந்தனையாளர்- அவர் எட்டுநாட்களாக பட்டினி கிடக்கிறார். இந்தியாவை விடுங்கள்- குறைந்தபட்சம் தமிழகத்தில் என்னவிதமான உரையாடலை உருவாக்கியிருக்கிறது? உண்மையில் ஒன்றுமில்லை.

வைகோவைத் தவிர வேறு அரசியல் கட்சிகள் திரும்பிக் கூட பார்க்கவில்லை போலிருக்கிறது. எந்த டிவியிலும் இது பற்றிய செய்தியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை. டீக்கடை செய்தித்தாளான தினத்தந்தியில் கூட போராட்டம் பற்றிய குறிப்பை காணவில்லை. லட்சக்கணக்கான தமிழர்கள் கணக்கு வைத்திருக்கும் முகநூலில் ‘வெற்றி அல்லது வீரச்சாவு’ என்ற பக்கத்தை வெறும் ஆயிரத்தி இருநூறு பேர் லைக் செய்து ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். சென்னையைத் தாண்டிய வெளியூர்களில் இப்படியொரு உண்ணாவிரதம் நடப்பது தெரியுமா என்றே தெரியவில்லை.

பிறகு எதற்கு தியாகு தனது உடல்நிலையைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்? குடியும், கிரிக்கெட்டும், டிவி சீரியலுமாக வாழ்க்கையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நம் தாய்த்தமிழ் மாநிலத்தில் இவரது பட்டினிப்போராட்டம் மிக மிகச் சிறிய அளவிலான சலனத்தையாவது உருவாக்குமா என்பதும் கூட சந்தேகமாகத்தான் இருக்கிறது.  தனிமனிதன் ஒருவனின் பட்டினியும் அவனது மரணமும் நமது மக்களின் மனதில் ஏதாவது மாற்றத்தை உருவாக்கும் என நினைத்தால் அது தவறான நம்பிக்கை. அப்படியே சிறு சலசலப்பை உருவாக்கினாலும் அதை எப்படி அடக்க வேண்டும் என்பது நமது ஆட்சியாளர்களுக்குத் தெரியும்.

முத்துக்குமாரின் மரணம் உருவாக்கிய வெப்பத்தை ஆட்சியாளர்கள் வெற்றிகரமாக அணைத்ததை பார்த்துக் கொண்டுதானே இருந்தோம்? செங்கொடியின் பெயரை இலாவகமாக நமது நினைவுகளிலிருந்து அகற்றியவர்கள்தானே இங்கே நிறைந்திருக்கிறார்கள்? மிகச் சமீபத்தில் உருவாகி வளர்ந்த மாணவர் போராட்டம் என்ன ஆனது? - இப்படி எல்லாவற்றையும் சில நாட்களில் மழுங்கடிக்கச் செய்துவிடுவார்கள். பிறகு நாமும் நம் வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவோம்.

காமன்வெல்த் என்பதே வெள்ளைக்காரனிடம் அடிமையாக இருந்த தேசங்களின் கூட்டமைப்புதானே? முன்பு அடிமையாக இருந்த இந்த அரசுகள் இப்பொழுது அடுத்தவனை அடிமையாக்க முயன்று கொண்டிருக்கின்றன. இன்னமும் இங்கிலாந்து ராணிதான் இந்தக் கூட்டமைப்புக்குத் தலைவி. இதற்கு சேர்மேனாகத்தான் ரத்தக்கறையாளன் ராஜபக்‌ஷேவை நியமிக்கவிருக்கிறார்கள். வயிறு எரிகிறதுதான். என்ன செய்ய முடியும்? 

ஒருவேளை ஒட்டுமொத்த இந்தியாவும் திரண்டால் அதிகபட்சமாக இந்தியா கலந்து கொள்ளாமல் தடுக்கலாம். வேறு எதுவும் சாத்தியமாகும் என்று தோன்றவில்லை. ஆனால் ஒட்டுமொத்த இந்தியாவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திரள்வார்கள் என்பதெல்லாம் பகல் கனவுதான். தமிழகத்தின் வடக்கில் சித்தூரைத் தாண்டிவிட்டால் ஈழத்தமிழர்களைப் பற்றி எதுவுமே தெரியாது. ‘மெட்ராஸ் கஃபே’யில் உண்மையைத்தானே சொல்லியிருக்கிறார்கள் என்று மலையாளத்தானின் மனநிலையை பிரதிபலிப்பவர்கள்தான் இந்தியா முழுவதுமே. ஆனானப்பட்ட முள்ளிவாய்க்கால் சம்பவத்திலேயே நம்மால் தமிழகத்தைத் தாண்டி ஒரு கோஷத்தைக் கூட உருவாக்க முடியவில்லை. இந்த காமன்வெல்த்துக்கெல்லாம் நம் பின்னால் யாராவது நிற்பார்களா என்ன?

தொலையட்டும்.

வல்லரசுக் கனவில் மிதக்கும் இந்தியாவிற்கும், தனது ரத்தக்கறையைத் துடைத்துக் கொள்ள முயலும் ராஜபக்சேவிற்கும் ஒரு சிந்தனையாளனின் உயிர் என்பது மயிருக்குச் சமானம். இந்தப் போராட்டத்தில் தியாகு வெற்றியடையை ஒரு போதும் விடமாட்டார்கள். மாறாக தியாகு வீரச்சாவு அடைந்தால் சடலத்தை தூக்கி வீசிவிட்டு பற்களில் இரத்தம் வழிய மாநாட்டில் கலந்து கொள்வார்கள். அவ்வளவுதான் நடக்கும். நாமும் சில ஊர்வலங்கள், மெழுவர்த்தி ஏந்தல்களை நிகழ்த்திவிட்டு அவரவர் வேலையைப் பார்க்க போய்விடுவோம்.

ஒரு மரணம் நிகழ்ந்தால் துளி மாறுதலாவது நடக்கும் என்றால் எத்தனை பட்டினிப் போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்தலாம். எத்தனை தீக்குளிப்புகள் வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் இங்கு ஒரு மரணம் இல்லை- ஆயிரம் மரணங்கள் நிகழ்ந்தாலும் ஆட்சியாளர்கள் சடலங்களை தமது புட்டங்களுக்கு அடியில் போட்டு அமுக்கப் போகிறார்கள். பிறகு எதற்கு நமது உயிரை நாமே மாய்த்துக் கொள்ள வேண்டும்?

தியாகு போன்ற எழுத்தாளர்களும் சிந்தனையாளர்களும் செய்வதற்கு நிறைய இருக்கின்றன. அவரது கோரிக்கைகளை முழுமையாக ஆதரித்தாலும் அவர் தனது பட்டினிப் போராட்டத்தை கைவிட வேண்டும் என மனதார விரும்புகிறேன்.