Oct 5, 2013

Transitional Phase

அன்புள்ள மணிகண்டன்,

வெள்ளிக்கிழமை என்று நினைக்கிறேன், இணையத்தில் அந்த செய்தியை படித்தேன். கொடுமையாக இருந்தது.

நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் மனைவியை வெட்டிக்கொன்றுவிட்டு, தூக்கில் தொங்க முயன்று, தீக்குளிக்க முயன்று இரண்டிலும் தோற்று பின்னர் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள வேண்டுமெனில் ... (பேசாமல் விவாகரத்து செய்து தொலைத்திருக்க வேண்டியதுதானே, என்று கூவ தோன்றியது)

குரூரம்தான், வன்மம்தான், ஒப்புக்கொள்கிறேன். அதை அவர் மனதில் விதைத்தது எதுவாக இருக்கும் என்று நான் யோசிக்கிறேன். எந்த கணவனும் இப்படி ஒரு செயலை செய்யவேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்க மாட்டான்தானே ?

இன்னொரு பிரச்சினை : நேற்று சன் டி.வி பட்டிமன்றம் ஒன்று - தற்போதைய சமூக மாற்றங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது இளையோரா, முதியோரா ? - பார்த்தேன். அதில் ஒரு பெண்மணி சொன்னார். கணவனுக்கு ஆங்கிலம் பேச தெரியாமையால் விவாகரத்துக்கு விண்ணப்பித்தாராம் ஒரு "மனைவி". கேட்கவே அருவருப்பாக இருந்தது.

ஒரு முக்கியமான மற்றும் சவாலான transitional phase-ஐ கடந்துகொண்டிருக்கும் பையன்கள் சற்று சபிக்கப்பட்டவர்கள் போல தோன்றுகிறது.

வேதனையுடன்
பொன்.முத்துக்குமார்.
  
                                                      ***

அன்புள்ள முத்துக்குமார்,

நலமா?

அந்தக் கொலைக்கு போலீஸ் வேறொரு தியரியைச் சொல்கிறது. மனைவியை விட சம்பளம் குறைவாக வாங்குகிறார் என்பதால் உருவான தாழ்வுணர்ச்சி, தனது புற்றுநோயால் உண்டான மன உளைச்சல்கள் போன்றவற்றால் இந்தக் கொலையை அவர் செய்திருக்கலாம் என சில காரணங்களைச் சொல்லியிருக்கிறது போலீஸ். இந்த மாதிரியான செய்திகள் இயல்பாகிவிட்டன என்பதால் இதுபற்றி பெரிதாக யோசிக்கவில்லை. 

ஆனால் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். சில நேரங்களில் பக்கத்து வீட்டுப் பெண்மணி எங்கள் வீட்டில் அமர்ந்து தினந்தந்தி வாசிப்பார். இந்தச் செய்தி வெளிவந்த நாளிலும் வந்திருந்தார். கொலையைக் குறிப்பிட்டு என் அம்மாவிடம்  ‘அதெல்லாம் வேற பிரச்சினையா இருக்கும்’ என்று சர்வசாதாரணமாக தாண்டிப் போனார். அவர் குறிப்பிட்ட ‘வேற’ பிரச்சினை என்பதை எளிதில் யூகித்துவிட முடியும். போலீஸூக்கு எப்படியொரு தியரியோ அப்படி இன்னொரு தியரி இந்தப் பெண்மணிக்கு. இதையெல்லாம் சகஜம் என்று எடுத்துக் கொள்ளும் மனநிலையை நெருங்கிக் கொண்டிருப்பதை  Transitional Phase என்று புரிந்து கொள்ளலாம். இந்த புரிதல் மட்டும்தான் Transitional phase என்று சுருக்கிவிட முடியாது என்றாலும் இது ஒரு அம்சம்.

Liberalization, Globalization, Privatization ஆகிய மூன்று சேஷன்களும் இந்தியாவுக்குள் வந்துவிட்ட தொண்ணூறுகளுக்குப் பிறகாக ஒட்டுமொத்தமாக எல்லோருமே இந்த மாறுதல்களின் வழியாக பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று நம்புகிறேன். பெருகிக் கொண்டிருக்கும் நடுத்தரவர்க்க குடும்பங்களின் எண்ணிக்கையும், அவர்களின் கனவுகளும் மொத்தமாக வாழ்க்கை முறையை புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

இப்பொழுதெல்லாம் பணம் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என நம்புகிறோம். மிகப் பெரிய டிவித் திரைகள் வரவேற்பறையை நிரப்புகின்றன. ஒவ்வொரு வீட்டிலும் நிச்சயம் ஒரு பைக்காவது இருக்கிறது. ஏழாயிரம் ரூபாய் கொடுத்து செல்போன் வாங்குவது மிகச் சாதாரணமான காரியமாகிவிட்டது. ஏதோவொரு காரணத்தைச் சொல்லி எப்படியும் வீட்டில் கொஞ்சம் தங்கத்தைச் சேர்த்துவிடுகிறோம். சினிமாவுக்காக ஐந்நூறு ரூபாய் செலவு செய்வதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. வருடத்திற்கு மூன்று அல்லது நான்கு ஆடைகள் சேர்ந்துவிடுகின்றன. வீடு பொருட்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் மனம் சிக்கல்களால் நிரம்பிக் கொண்டிருக்கிறது.

இரண்டொரு நாட்களுக்கு முன்பாக இன்னொரு செய்தியை நீங்கள் வாசித்திருக்கக் கூடும். கவிதா ஆறுமுகம் என்ற பெண் அமெரிக்காவில் வசிக்கிறார். இன்னமும் திருமணம் ஆகவில்லை போலிருக்கிறது. சமீபத்தில் விடுமுறைக்காக பெங்களூர் வந்திருக்கிறார். வந்தவர் இரண்டு நாட்கள் முன்பாக ஒரு பார்ட்டியில் கலந்து கொண்டாராம். நள்ளிரவு பார்ட்டியில் பாதாமும் பிஸ்தாவும் மட்டுமா கொறிப்பார்கள்? சரக்கும்தான். முடித்துவிட்டு தனது ஆண் நண்பரின் வீட்டில் உறங்குவதற்காக வந்திருக்கிறார். நண்பரும் அவர்களது இன்னொரு தோழியும் படுக்கையறையை சரி செய்து கொண்டிருந்தார்களாம். கவிதா வரவேற்பறையின் பால்கனியில் நின்றிருக்கிறார். வரவேற்பறையின் பால்கனிக்கும் படுக்கையறையின் பால்கனிக்கும் இடையில் மூன்றரை அடி தூரம்தான். இந்த பால்கனியிலிருந்து அந்த பால்கனிக்கு எட்டிக் குதித்தார் என்று சொல்கிறார்கள். நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை. சம்பவம் நிகழ்ந்தது பதினோராவது மாடியில். கால்தவறி கீழே விழுந்த கணத்திலேயே உயிர் சிதைந்துவிட்டது.

அவர்கள் சொல்வதை நாம் நம்பிக் கொள்கிறோம். இன்னொரு செய்திக்காக காத்திருக்கிறோம். அவ்வளவுதான்.