Oct 13, 2013

எதற்கும் மனநல மருத்துவமனையில் பார்த்துடுங்க

இரண்டு மூன்று நாட்களாக எழுதவில்லை. எழுதக் கூடாது என்றெல்லாம் எதுவும் இல்லை. சிக்கிக் கொண்டேன். நானாக சிக்கிக் கொண்டதுதான்- பைக்கில் இருந்து விழுந்துவிட்டேன். பைக்கில் இருந்து விழுவது ஒன்றும் புதிதில்லை. ஏகப்பட்ட முறை விழுந்திருக்கிறேன். பெரும்பாலும் வேகமானி முப்பதைத் தாண்டாமல்தான் பைக் ஓட்டுவதால் அடி எதுவும் பலமாக விழாது. 

விழுவேன். யாரும் வந்து தூக்கிவிடுவதற்குள்ளாக எழுந்துவிடுவேன். கொஞ்சம் சிராய்ப்புகள் இருக்கும். முட்டிகளில் மண் அப்பியிருக்கும். தட்டி விட்டு வந்துவிடுவேன். அவ்வளவுதான்.

சில நாட்களுக்கு முன்பாக சாத்தப்பன் அழைத்திருந்தார். அவரும் கரிகாலன், அய்யப்ப மாதவன் ஆகியோர் சேர்ந்துதான் யாவரும்.காம் தளத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். முடிந்த போதெல்லாம் சென்னையில் சில கூட்டங்களையும் நடத்துகிறார்கள். அந்த சாத்தப்பன் தான்.  ‘என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி’க்கு சென்னையில் ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தலாமா? என்றார். இதற்கெல்லாம் என்னிடம் ஏன் கேட்கிறார் என்று தெரியவில்லை. வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன்? தொகுப்பு வந்து ஒரு வருடம் ஆகப் போகிறது. இதுவரை தொகுப்பை வாசித்துவிட்டதாக மொத்தமாக மூன்று பேர்தான் சொல்லியிருக்கிறார்கள்.  அதற்கே புளகாங்கிதம் அடைந்தவன் நான். இப்பொழுது விமர்சனக் கூட்டம். அதுவும் அந்தக் கூட்டம் நடத்தப்படுவதே இந்தக் கவிதைத் தொகுப்பிற்காக மட்டும்தானாம். கேட்கவா வேண்டும்? ‘எகிறிக் குதித்தேன் வானம் இடித்தது’ கதைதான். உச்சந்தலையை கொஞ்சம் தேய்த்துவிட்டுக் கொண்டிருந்தபோதே அவர் நிறுத்தியிருக்கலாம். ம்ஹூம். தொடர்ந்தார்- ஒரே ஒரு தொகுப்புக்குத்தானே கூட்டம் ஏற்பாடு செய்கிறோம், நேரம் நிறையக் கிடைக்கும் அப்படியே ‘நிசப்தம்’ பற்றியும் யாரையாவது பேச வைக்கலாம் என்றார். இதெல்லாம் நல்லதுக்கா அல்லது கெட்டதுக்கா என்றே தெரியாத ஒரு மயக்கம் அல்லது குயப்பம். இந்த இடத்தில் ஸீனைக் கட் செய்யுங்கள். இன்னொரு விவகாரத்தைச் சொல்லிவிட்டு இந்த ஸீனைத் தொடரலாம்.

பைக்கில் இருந்து கீழே விழும் ஒவ்வொரு முறையுமே முன்சக்கரத்தின் பிரேக்கை அழுத்தித்தான் விழுந்திருக்கிறேன். வண்டியில் சென்று கொண்டிருக்கும் போது முன்சக்கரத்தை மட்டும் இருந்திருந்தபடிக்கு நிறுத்தினால் அதுதானே நடக்கும்? விழுந்த அடுத்த சில நாட்களுக்கு ‘இனிமேல் உயிரே போனாலும் முன்சக்கர பிரேக்கை அழுத்தக் கூடாது’ என நினைத்துக் கொள்வேன். ஆனால் ஜாதகத்தின் பன்னிரெண்டு கட்டத்திலும் சனி வந்து அமரும் போது என்னையும் அறியாமல் பிடிக்கத் துவங்கியிருப்பேன்.

சாத்தப்பனுடன் பேசி முடித்துவிட்டு ஃபோனை பாக்கெட்டில் வைத்தவுடன் மழை தூறத் துவங்கியிருந்தது. வாழ்த்துச் சொல்லத்தான் மழை பெய்கிறது என நினைத்துக் கொண்டேன். நினைப்புதானே பொழைப்பைக் கெடுக்கும்? என்னை விழச் செய்வதற்கென்றே மழை பெய்திருக்கிறது. சனி பகவான் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்ததை ட்ராபிக் சப்தத்தில் கேட்கத் தவறிவிட்டேன். மழை வேறு ஹெல்மெட்டின் கண்ணாடியை மறைக்கிறது. எதிரில் வரும் கார்க்கார புண்ணியவான் ஒருவர் வெளிச்சத்தை மட்டுப்படுத்தாமல் வருகிறார். சுத்தமாக கண் தெரியவில்லை. கார் என்னைத் தாண்டியதும் எதிரில் ஒரு குழி இருப்பது தெரிகிறது. ஆனால் பைக்குக்கும் அந்தக் குழிக்கும் வெறும் மூன்றடி தூரம்தான் இருக்கும். வழக்கம் போலவே  முன்சக்கரத்தின் பிரேக்கை அழுத்த- குழிக்குள்ளேயே அபிஷேகம்.

விழுந்த போது உடலின் மொத்த எடையையும் வலது முட்டியில் தாங்கியிருப்பேன் போலிருக்கிறது. முட்டியிலிருந்து மூளையின் முப்பத்தியிரண்டாவது நரம்பு வரைக்கும் ‘சுளீர்ர்ர்ர்’ வலி. இந்த சுளீரில் எத்தனை ‘ர்’ சேர்க்க முடியுமோ அத்தனை சேர்த்துக் கொள்ளலாம். ஏனென்றால் வீடு போய்ச் சேர்ந்த பிறகும் கூட ‘ர்ர்ர்ர்ர்’தான். வெளியில் புண் எதுவும் இல்லை. ஆனால் வலி இருந்து கொண்டேயிருந்தது. இரவில் காலை அசைக்க முடியவில்லை. விடிந்தவுடன் பக்கத்தில் இருக்கும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். பார்த்துவிட்டு ‘வீக்கம் எதுவும் இல்லை’ எதற்கும் நிமான்ஸ் போய் பார்த்துவிடுங்கள் என்றார். அவர் சொன்னது மனநோய் மற்றும் நரம்பியல் மருத்துவமனை. கீழே விழுந்ததற்கெல்லாம் மனநோயாளி ஆகிவிடுவோமோ என்று பயமாக இருந்தது. அன்றே அலுவகலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு நிமான்ஸ் சென்றுவிட்டேன்.

மருத்துவமனை நிகழ்ச்சிகளைத் தனியாகவே எழுதலாம்- 

மூன்று நாட்களாக காலை மடக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார்கள். கணினியில் தொடர்ந்து தட்டச்சு செய்வது சிரமமாக இருந்தது. அதனால் வேறு வழியில்லாமல் எழுதவில்லை.  இப்பொழுது கட்டுரையின் முதல்வரிக்கான காரணம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். 

இப்பொழுதெல்லாம் நிசப்தத்தில் எழுதவில்லை என்றால் குற்றவுணர்ச்சி வந்துவிடுகிறது. addicted ஆகிவிட்டேன் போலிருக்கிறது. வழக்கமாக சாமி கும்பிடும் போது ‘மாமன் ஊருக்கு மழை பெய்ய வேண்டும்; அமெரிக்காவின் பொருளாதாரம் தப்பித்துவிட வேண்டும்; கம்பெனியின் ஃபயரிங் லிஸ்ட்டில் என் பெயரை தவிர்த்து விட வேண்டும்’ என்பதோடு ஒரு நாளைக்கு ஐந்நூறு வார்த்தைகளாவது எழுதிவிட வேண்டும் என்று சேர்த்துக் கொள்கிறேன். பார்க்கலாம்.