Oct 14, 2013

முரட்டுக்காளை

சிறுவயதில் பார்த்த படங்களில் நீங்கள் இன்னமும் மறக்க முடியாதவை எவை? எந்த ஸீன்கள் உங்கள் மனதுக்குள் பதிந்து கிடக்கின்றன? அந்தக் காலத்தில் கேட்ட கதைகள் ஏதாவது ஞாபகமிருக்கிறதா?

பள்ளிக்காலத்தில் பார்த்தவைகளில் ரஜினி, விஜயகாந்த் மற்றும் அர்ஜூன் போன்றவர்களின் படங்கள் மட்டுமே எனக்கு ஞாபகத்தில் இருக்கின்றன. மனதுக்குள் பதிந்த ஸீன்கள் என்று பட்டியலிட்டால் தனது நெஞ்சில் ‘மாவீரன்’ என்று எழுதியிருப்பதை சட்டையை விலக்கிக் காட்டுவது போன்ற முரட்டுத்தனமான காட்சிகள்தான் நினைவில் வருகின்றன. கேட்ட கதைகளில் ‘முரடனைக் கொன்ற ராஜாக்கள்’தான் நீயுரான்களின் சந்துகளுக்குள்ளிலிருந்து வெளியே வருகிறார்கள். 

உங்களுக்கும் அப்படித்தான் என்றால் நாமெல்லாம் ஒரே கட்சி. ஹீரோக்களை விரும்பும் கட்சி. ஹீரோயிஸ பிரியர்கள்.

இதையெல்லாம் இப்பொழுது கிளறுவதற்குக் காரணம் சி.சு.செல்லப்பா. அவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக்காலத்தில் தனது சொத்தை எல்லாம் விற்று ‘எழுத்து’ என்ற பத்திரிக்கையை நடத்தினார் என்றுதான் அவரைத் தெரியும்.  ‘அந்த மனுஷன் தனது சொத்தை விற்று இலக்கியம் வளர்த்தான்’ என்று யாராவது சொன்னால் கேட்பதற்கு வேண்டுமானால் பெருமையாக இருக்கலாம். ஆனால் இலக்கியத்தை விடவும் குடும்பம் முக்கியம் இல்லையா? இது அவரின் தனிப்பட்ட விவகாரம்தான். என்றாலும் எழுத்தைக் காப்பதை விடவும் நம்மை நம்பி இருப்பவர்களை காப்பது அவசியம் அல்லவா? ஆனால் சி.சு.செல்லப்பா அப்படித்தான் இருந்திருக்கிறார். இவரை விமர்சிக்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லைதான். ஆனால் செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலையும் அவரது வாழ்க்கை குறிப்பையும் வாசிக்கும் போது ஏனோ அப்படி நினைக்கத் தோன்றியது. 

சி.சு.செல்லப்பா பற்றி நாம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம், அவரது ‘எழுத்து’ இதழின் இலக்கியப் பங்களிப்பு போன்றவை முக்கியமானவைதான். ஆனால் இவற்றையெல்லாம் தாண்டியும் அவரது படைப்புகள் முக்கியமானவை என்பது  வாடிவாசல் நாவலை வாசித்த பிறகுதான் தெரியும். அது குறுநாவல். மொத்தமாகவே ஐம்பத்தைந்து பக்கங்கள்தான். சற்றே நீண்ட சிறுகதை.  ‘எழுத்து’ என்ற சிறுபத்திரிக்கையை நடத்திக் கொண்டிருக்கும் போது அதன் சந்தாதாரர்கள் அனைவருக்கும் இந்த நூலின் பிரதி ஒன்றை செல்லப்பா அனுப்பி வைத்தாராம். இது நடந்தது 1959 வருடம். இடையில் இந்த நாவலின் வேறு பதிப்புகள் வந்ததாகத் தெரியவில்லை. அதன்பிறகு நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பிறகாக காலச்சுவடு பதிப்பகத்தில் 2003 ஆண்டு பதிப்பித்திருக்கிறார்கள். அப்பொழுதிலிருந்து 2012 வரைக்குமான பத்து வருடங்களில் பன்னிரெண்டு பதிப்புகள். பத்து வருடங்களில் அத்தனை பிரதிகள் விற்பனை ஆகியிருக்கின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

நாவல் மிக எளிமையானது. செல்லாயி அம்மன் கோவிலில் ஜல்லிக்கட்டு நடக்கிறது. அந்த ஜல்லிக்கட்டு வாசல்தான் மொத்த நாவலும். இரண்டு இளைஞர்கள், அவர்களின் பின்னால் நிற்கும் ஒரு கிழவன், அந்த ஊரின் ஜமீன்தார், சில காளை மாடுகள், ஒரு ஃபளாஷ்பேக். இவ்வளவுதான் மொத்த நாவலும். இதற்குள்ளேயே ஹீரோயிஸம், மனிதனின் பகைமை, மிருகத்தின் வெறி, வெற்றி மீதான வேட்கை என கலந்து கட்டி அடித்திருக்கிறார் செல்லப்பா. 

அதிகாரக் கட்டமைப்புகள், பழி வாங்கும் எண்ணம், காளை மாடுகளை அடக்கும் விதம் என நாவல் தொட்டுச் செல்லும் இடங்கள் எல்லாம் துல்லியமானவையாக இருக்கின்றன. காளையை அடக்குவதற்காகக் காத்திருக்கும் பிச்சி, அவன் அங்கு வந்திருப்பதற்கான காரணம், கிழவன் பேசும் ஜல்லிக்கட்டு புராணம் போன்றவை வரையில்தான் நாவல் இயல்பாக நகர்கிறது. இவையெல்லாம் முதல் முப்பது பக்கங்களில் முடிந்துவிடுகிறது. பிச்சி அடக்கப்போகும் காளையைப் பற்றிய காட்சிகள் வர ஆரம்பித்ததிலிருந்து நாவலின் க்ளைமேக்ஸ் வரை எல்லாமே சுவாரசியம்தான். முப்பத்தைந்து பக்கங்களை படித்த பிறகு இறுதியில் என்னவாகும் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. நேரடியாக ஐம்பத்தி மூன்றாவது பக்கத்தில் நாவலின் இறுதிப்பகுதியை படித்துவிட்டு மீண்டும் நடுவிலிருந்து வாசித்தேன். அத்தனை விறுவிறுப்பான நாவல் அது. 

நாவலின் நாயகனான பிச்சி ‘சரசர’வென ஹீரோவாக மாறும் காட்சி தமிழ் சினிமாவின் அட்டகாசமான நாயகன் உருவாகும் காட்சிக்கு எந்த விதத்திலும் சளைத்ததில்லை. சர்வசாதாரணமாக விசிலடிக்கத் தோன்றக் கூடிய விவரிப்பு அது. மனிதனுக்கு ‘மாடுபிடித்தல்’ ஒரு விளையாட்டு. ஆனால் மாடுகளுக்கு அது விளையாட்டு இல்லை. வெறியோடு திரியும் அதன் கொம்புகளுக்குத் தேவை குடல் மாலையும், ரத்த நனைத்தலும். இந்த மனநிலையை வாசகனுக்கு நாவல் கொண்டு வந்துவிடுகிறது. மனிதனும் மிருகமும் வெறி கொண்டு மோதுகிறார்கள். இது வெறும் மனிதனுக்கும் மிருகத்திற்குமான மோதல் மட்டும் இல்லை என்பதுதான் நாவலின் சூட்சமம் என்று நினைக்கிறேன்.

நல்ல நாவல் என்பது தனது கதையை மட்டும் நமக்குள் பதியச் செய்வதில்லை. அதிலிருந்து கிளைக்கதைகளை வாசகனுக்குள் உருவாக்க வேண்டும்.  ‘வாடிவாசல்’ நாவல் மிகச் சிறியது. ஆனால் அது உருவாக்கும் கிளைக்கதைகள் தூள் டக்கர்.

முதல் பத்தியில் சொன்ன ரஜினியையும், விஜயகாந்தையும், அர்ஜூனையும் திரையில் பார்க்கும் போது நம்மை அவர்களாகவே கற்பனை செய்து கொள்வோம் அல்லவா? கேப்டன் பிரபாகரனில் வீரபத்திரனை விஜயகாந்த் அடித்து இழுத்து வரும் போது நானே இழுத்து வருவது போல கற்பனை செய்து கொண்டதுண்டு. மன்சூரலிகானின் மினியேச்சர் சைஸ் மனிதன் யாரையாவது நேரில் பார்த்திருந்தால் இழுத்து வருவதற்கான முஸ்தீபுகளில் ஒறங்கியிருக்கக் கூடும். அப்படியான ஒரு ஹீரோயிசத்தை இந்த நாவல் எந்தவித துருத்தலும் இல்லாமல் உருவாக்குகிறது. நாவலை வாசித்த ஒன்றரை மணி நேரம் அதன் பிறகு இரண்டு மூன்று மணி நேரங்களும் பிச்சியாகத்தான் திரிந்தேன். ஆனால் காளை எதையும் பிடிக்கவில்லை.