Oct 15, 2013

பைத்தியம்

தமிழகத்திற்கு கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை இருப்பது போல கர்நாடகத்திற்கு நிமான்ஸ். இது பழைய மருத்துவமனை- நூறு வருடங்களை தாண்டியே பல வருடங்கள் ஆகி விட்டது. அரசு மருத்துவமனைதான். ஆனால் நம் ஊர் அரசு மருத்துவமனைகளைப் போல நோயாளிகளை அவமானப்படுத்துவதில்லை. இலவச சிகிச்சைக்கு வந்திருக்கிறார்கள் என்பதற்காக எந்த அலட்சியமும் இல்லை. மருத்துவமனையில் நுழைந்தவுடன் பெருங்கூட்டம் இருக்கிறது. அரசு மருத்துவமனைகளுக்கேயுரிய கூட்டம்தான். ஆனால் வழக்கமான கூட்டம் இல்லை இது. சிலர் ஏதோ ஒரு திசையைப் பார்த்தபடி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிலர் தனக்குத்தானாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் அங்கஹீனத்துடன் இருக்கிறார்கள். வேறு சிலரை பார்த்தவுடன் வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாதவாறு மறைத்துக் கொள்கிறார்கள்- நம்மைப் போலவே.

இருபது ரூபாய் கட்டினால் முதலில் ஒரு மருத்துவரை பார்க்க அனுப்புகிறார்கள். அந்த மருத்துவர் நம்மிடம் சில கேள்விகளைக் கேட்டுவிட்டு நோயின் தன்மையைப் பொறுத்து ‘ஸ்பெஷலிஸ்டி’டம் அனுப்புவார். அந்த ஸ்பெஷலிஸ்ட் நியுரோசர்ஜனாக இருந்தாலும் சரி; சைக்யாட்ரிஸ்ட்டாக இருந்தாலும் சரி. மொத்த ஃபீஸூம் இருபது ரூபாய்தான். அத்தனை கூட்டமிருந்தாலும் அதிகபட்சம் ஒன்றரை மணிநேரத்தில் மருத்துவரை பார்த்துவிட முடிகிறது. அவ்வளவு நேர்த்தியாக கூட்டத்தை முறைப்படுத்துகிறார்கள்.

மருத்துவமனையில் நுழைந்தவுடன் ஒரு பெருங்கூட்டம் இருக்கிறது அல்லவா? அங்கு மட்டும்தான் சிறிது நேரம் பிடிக்கிறது. இருபது நிமிட நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது. கூட்டத்தில் இருப்பது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால் நோயாளிகளை பார்ப்பதற்கு திடமான மனம் வேண்டும். பிஞ்சுக் குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சினை என்று அமர்ந்திருக்கிறார்கள். முப்பது வயதுப் பெண்ணொருத்தி தன் காலோடு சிறுநீர் கழிக்கிறாள்- அவளுக்கு மூன்று வயது குழந்தையின் மூளை வளர்ச்சிதானாம். ஒரு வயதானவருக்கு முகம் கோணலாக இருக்கிறது- நரம்பு சார்ந்த ஏதோ ஒரு தொந்தரவு போலிருக்கிறது. இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் போது இனம்புரியாத பயம் வந்து ஒட்டிக் கொள்கிறது. 

ஏதோ ஒரு நல்ல நேரம்- இந்தப் பிரச்சினைகள் இல்லாமல் தப்பித்துக் கொண்டோம். அதையும் பெருமையாகவெல்லாம் நினைத்துக் கொள்ள முடியாது. எந்த நொடியில் எந்தக் கிரகம் நடைபெறும் என்று யாருக்குத் தெரியும்? இரண்டு வருடங்களுக்கு முன்பாக விபத்தில் தண்டுவடம் முறிந்து போனவரை அழைத்து வந்திருந்தார்கள். இப்பொழுது இடுப்புக் கீழே எந்த உணர்ச்சியும் இல்லை. கையில் ஒரு பாக்கெட்டோடு சுற்றுகிறார்கள். அதில்தான் சிறுநீர் சேகரமாகிறது. அவர் நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்தான்.

இன்று வரை நன்றாக இருக்கிறோம்- அவ்வளவுதான். 

நிமான்ஸ் வெறும் மனநல மருத்துவமனை மட்டுமில்லை. மனநலம் மற்றும் நரம்பு சார்ந்த பிரிவுகளுக்கான மருத்துவம் பார்க்கிறார்கள். National Institute of Mental Health and Neuroscience என்பதன் சுருக்கப்பட்ட வடிவம்தான் நிமான்ஸ். ஏற்கனவே நான் பைக்கில் இருந்து விழுந்த வரலாறு புவியியலை எல்லாம் கேட்ட மருத்துவர்தான் ‘எதற்கும் இந்த மருத்துவமனையில் காட்டிவிட’ சொல்லியிருந்தார். அது இருக்கட்டும்- இப்பொழுது அதுவா முக்கியம்?

அந்த மருத்துவமனைக்கு ஒரு அம்மாவும் மகளும் வந்திருந்தார்கள். பார்த்தவுடனே தெரிந்தது, தமிழர்கள் என்று. மகளுக்கு ஏழு வயதுக்கு மேலிருக்கும் ஆனால் பத்தைத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை என்பது போல இருந்தாள். மகளை இடுப்பில் சுமந்து கொண்டு வந்தார். அம்மாவின் இடுப்பில் இருந்து எப்பொழுதும் சிரித்துக் கொண்டேயிருந்தாள். வாயில் எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. இருபது ரூபாய் கட்ட வேண்டிய இடத்தில் பெயரும் முகவரியும் கொடுக்க வேண்டும். ஒரு நீல நிறத் தாளில் விவரங்களை எழுதித் தரச் சொல்கிறார்கள். அந்த அம்மாவால் மகளையும் வைத்துக் கொண்டு எழுத முடியும் என்று தெரியவில்லை. வெட்டியாகத்தான் அமர்ந்திருந்தேன். அருகில் சென்று ‘எழுதித் தரட்டுங்களா?’ என்றவுடன் சிரித்தார். 

பெண்ணின் பெயர் ஷகிரா பானு. பன்னிரெண்டு வயதாகிறது. வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்திருக்கிறார்கள்- இந்த விவரங்களை எழுதும் போது தெரிந்து கொண்டேன். பணத்தைக் கட்ட க்யூவில் நிற்கவேண்டும். அவரே நின்று கட்டிவிட்டு அருகில் வந்து அமர்ந்தார்கள். ஒவ்வொருவராக அழைத்துக் கொண்டிருந்தார்கள். எங்கள் முறை இன்னமும் வரவில்லை. ‘எவ்வளவு நேரம் ஆகும்?’ என்றார். எனக்கும் பதில் தெரியாது. ஆனால் ‘சீக்கிரம் கூப்பிட்டுவிடுவார்கள்’ என்றேன். 

அவரிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும் எனத் தோன்றியது. ஆனாலும் தயக்கமாக இருந்தது. மிகுந்த தயக்கத்திற்கு பிறகு ‘பொண்ணுக்கு என்ன பிரச்சினை’ என்றேன். அவர் பேச ஆரம்பிக்கும் போது மெதுவாகத்தான் ஆரம்பித்தார். ஆனால் பேசத் துவங்கியவுடன் எந்தத் தடையுமில்லை. அந்தப் பெண்ணுக்கு தந்தை இல்லை. இல்லை என்றால் மரணமில்லை- இவர்களை விட்டுவிட்டு போய்விட்டார். இப்பொழுது அம்மாவும் மகளும்தான். அந்த அம்மாவின் தம்பி வீட்டில் வசிக்கிறார்கள். அம்மா ஆம்பூரில் ஏதோ ஒரு தோல் தொழிற்சாலையில் வேலையில் இருக்கிறார். சொற்ப சம்பளத்தை தம்பியிடம் கொடுத்துவிட்டு இரண்டு பேரும் ஜீவனத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

இன்று அதிகாலையிலேயே கிளம்பிவிட்டார்களாம். அப்படிக் கிளம்பினால்தான் பெங்களூர் வந்து சேர முடியும். ரெஜிஸ்ட்ரேஷன் பதினொன்றரை மணி வரைக்கும்தான். பக்கத்திலேயே சில மருத்துவர்களிடம் பார்த்திருக்கிறார்கள். பில்லி சூனியத்திலிருந்து அலோபதி வரைக்கும் எல்லாமும் அடங்கும். தனது உடன் வேலை செய்யும் ஒருவர் பரிந்துரைத்ததால் இங்கே வந்திருக்கிறார்கள். இதைச் சொல்லி முடித்த பிறகு வேறு எதுவும் பேச வேண்டுமா என்று அவர் குழம்பியிருக்கக் கூடும். நானும் கேட்கவில்லை. மூவருக்குமிடையில் சில நிமிடங்கள் கரைந்து கொண்டிருந்தது. 

இடையில் அலுவலகத்திலிருந்து அழைத்திருந்தார்கள். நிமான்ஸில் அமர்ந்திருக்கிறேன் என்றதும் அவர்கள் அனேகமாக அதிர்ச்சியடைந்திருக்கக் கூடும். ஃபோனை பாக்கெட்டுக்குள் வைத்த போது ஷகிரா பானுவை கவனித்தேன். அவள் இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறாள். எச்சில் ஒழுகி அவளது சூம்பிய கைகளை நனைத்துக் கொண்டிருந்தது. அவளுக்கு இந்தச் சூழலே புரியவில்லை போலிருக்கிறது. தனது வீட்டின் மூலையில் ஒடுங்கிக் கிடந்தவளுக்கு இந்த இரைச்சலும், ஜனங்களின் அசைவுகளும், மனிதர்களின் அபத்தங்களும் ஆச்சரியமூட்டிக் கொண்டிருக்கக் கூடும். 

ஏனோ திடீரென்று மலையாளக் கவிஞர் சச்சிதானந்தனின் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வந்து போனது. பைத்தியங்களைப் பற்றிய கவிதை அது.  அக்கவிதையிலிருந்து ‘அவர்கள்  இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்காத தங்களின் கடவுளர்களை பார்க்கிறார்கள்’ ‘சில சமயங்களில் மரத்திலிருந்து ரத்தம் ஒழுகுவதை பார்க்கிறார்கள்’ ‘அவர்களால் மட்டுமே எறும்புகள் கோரஸாக பாடுவதைக் கேட்க முடிகிறது’ என்ற வரிகள் திரும்பத் திரும்ப நினைவில் வந்தன. ஒருவேளை ஷகிரா பானு தனது கடவுளை பார்த்திருக்கக் கூடும். எறும்புகள் பாடுவதை கேட்டிருக்கக் கூடும். இன்னும் என்னனவோ சாத்தியங்கள். சிரித்துக் கொண்டிருக்கிறாள்.

தனது மகளை நான் கவனிப்பதை உணர்ந்த அந்த அம்மா அவசர அவசரமாக ஷகிராவின் எச்சிலைத் துடைக்க எத்தனித்தார். பார்வையை வேறு திசையில் நகர்த்திக் கொண்டேன். அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. மீண்டும் ஃபோனை எடுத்து பழைய மெசேஜ்களை படித்துக் கொண்டிருந்தேன். அவை ஏற்கனவே படிக்கப்பட்டிருந்த மெசேஜ்கள்தான். ஆனால் வேறு எப்படி நேரத்தை நகர்த்துவது என்று தெரியவில்லை. அடுத்த பத்து நிமிடங்களில் என்னை அழைத்துவிட்டார்கள். அந்த அம்மாவின் முகத்தை நேருக்கு நேர் பார்த்த போது சிரித்தும் சிரிக்காமலும் அந்த இடத்திலிருந்து நகர்ந்தேன்.

நியுரோ சர்ஜனை பார்க்கச் சொல்லி என்னை அனுப்பி வைத்தார்கள். வெளியே வந்த சில வினாடிகளில் அவர்களும் வந்துவிட்டார்கள். ஷகிராவை வேறொரு செக்‌ஷனில் காட்டச் சொல்லியிருக்கிறார்கள். அந்த அம்மாவுக்கு அதை சொல்லத் தெரியவில்லை.  ‘இவளை கொஞ்ச நேரம் பார்த்திருக்கீங்களா சாப்பாடு வாங்கிவிட்டு வர்றேன்’ என்றார். கேண்டீன் பக்கத்தில்தான் இருந்தது. ஷகிராவை கண்காணிக்க வேண்டும் என்ற பொறுப்பு அது சங்கடமாக இருந்தது. அந்தப் பெண் ஏதாவது செய்தால் அதற்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என்று தெரியாது என்பதுதான் முதற்காரணம். ஆனால் எப்படி மறுப்பது என்று தெரியவில்லை. ‘சரிங்க’ என்று சொல்லிவிட்டேன். ‘அமைதியா உக்காந்திரு’ என்று ஷகிரா பானுவிடம் அவளது அம்மா சொல்லிவிட்டு சென்ற போது அவளுக்கு மீண்டும் அதே சிரிப்பு.

சில நிமிடங்கள் கடந்தன. சிரித்துக் கொண்டிருந்தவள் அழத் துவங்கினாள். அழுகையினூடாக என்னவோ சொன்னாள். ஆனால் என்ன சொல்கிறாள் என்று சரியாக புரியவில்லை. அம்மாவைத் தேடுகிறாள் என்று தோன்றியது. அவளால் அந்த இடத்தை விட்டு அசைய முடியாது. என்னிடமிருந்து அவளால் தப்பிக்கவெல்லாம் முடியாதுதான். ஆனால் அவளின் அழுகையை எப்படிக் கட்டுபடுத்துவது என்று தெரியவில்லை. அந்த அம்மாவை இருக்கச் சொல்லிவிட்டு நானே கேண்டீனில் ஏதாவது வாங்கி வந்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனால் இப்பொழுது என்ன தோன்றி என்ன பயன்? ஷகிரா சற்று சப்தத்துடன் அழத் துவங்கினாள். கிட்டத்தட்ட நடுங்கத் துவங்கியிருந்தேன். 

மருத்துவமனை ஊழியர் ஒருவரைக் குறுக்காட்டிய போது அவர் நிற்கக் கூட இல்லை. அந்த வழியைக் கடப்பவர்கள் பார்த்துவிட்டுச் செல்கிறார்களே தவிர யாரும் அருகிலேயே வரவில்லை. அவ்வளவு சிரித்துக் கொண்டிருந்த பெண் அழுவதை பார்க்க பரிதாபமாக இருந்தது. விரலை வாய் மீது வைத்து கண்களை உருட்டினேன். சற்று ஓய்ந்தாள். இந்த சைகைக்கு பயப்படுகிறாள் போலிருக்கிறது. அவளை ஏற்கனவே இப்படி யாராவது மிரட்டியிருக்கக் கூடும். 

இந்த நிலைமையில் இருக்கும் ஒரு பெண்ணை மிரட்டுவதைப் போன்ற அயோக்கியத்தனம் வேறு எதுவும் இருக்க முடியாது என்று நினைத்த போது பதற்றம் சற்று கூடியது. ஆபத்துக்கு பாவமில்லை என்று சமாதானப்படுத்திக் கொள்வதைத் தவிர வேறு உபாயமில்லை. அவள் அழத் துவங்கிய போதெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தேன். பத்து நிமிடங்கள் கடந்திருக்கும். இப்பொழுது என்னை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தாள்- அழவும் இல்லை; சிரிக்கவும் இல்லை. அவளையும் கேண்டீனுக்குச் செல்லும் வழியையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தேன். அவளது அம்மா தூரத்தில் வருவது தெரிந்தது. சற்று ஆசுவாசமாக இருந்தது. அவர் வந்ததும் கூச்சலிட்டு ஷகிரா பானு அழத் துவங்கினாள். அம்மாவுக்கும் தன் மகள் மீது இரக்கம் வந்திருக்கக் கூடும். ‘அழாத செல்லம்..என் தங்கம்’ என்று கட்டியணைத்துக் கொண்டார். அவர்கள் என்னைப் பார்ப்பதற்குள் அந்த இடத்தை விட்டு நகர வேண்டும் என விரும்பினேன். வேகமாக நகர்ந்து சற்று தூரத்திலிருந்து திரும்பிப் பார்த்தேன். ஷகிரா மீண்டும் சிரித்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது யாருக்கும் தெரியாமல் சில வினாடிகளாவது அழ வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனால் அழவில்லை.