Sep 21, 2013

மோடிக்கு மாற்று - II

    (1)
நண்பருக்கு வணக்கம், 

உங்கள் நேரத்தை வீணடிக்க மனமில்லாமல் சுருக்கமாக எழுதவேண்டும் என்று நினைத்தேன் ஆனால் முடியவில்லை மன்னிக்கவும். நீங்கள் எழுதியதில் எனக்கு மிகவும் பிடித்தது "மோடிக்கு மாற்று" எனும் கட்டுரை தான். 

அறிவையும், சமுதாயம் பற்றிய விழிப்புணர்வையும்  வளர்த்துக்கொள்ளும் நோக்கோடு சில முற்போக்கு சிந்தனைவாதிகளையும் (மனுஷ்யபுத்திரன்,ஷானவாஸ், முத்துகிருஷ்ணன் இன்னும் பலர்)  அவர்களின் பேச்சு நடவடிக்கை களையும்  உற்று நோக்கினேன். அதன் விளைவு இனி இவர்கள் நல்லதையே சொன்னாலும் கேட்கக் கூடாது என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். நான் எந்த கட்சியையும், மதத்தையும் ஆதரிக்கிறவன்  இல்லை (ஐய்யா நல்லகண்ணு போன்ற மனிதர்கள் நாட்டை ஆளவேண்டும் என்ற எண்ணம் உடையவன்). இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் ஏதேனும் நல்லது நடக்காத என ஏங்கும்  ஒரு சாதாரண கிராம வாசி. உங்களுடைய இந்த கட்டுரை என்னுடைய மனதில் உள்ளவற்றை அப்படியே பிரதிபலித்திருக்கிறது. உங்களுடைய இந்த பதிவை புப்ளிசிட்டி தேடும் சில முற்போக்கு சிந்தனைவாதிகள் வேண்டுமானால் எதிர்க்கலாம் ஆனால் 100% உறுதியாக சொல்கிறேன் உங்கள் இந்த பதிவை சாதாரண மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர்.   நாட்டில் சிலர் ஏதேனும் நல்லது செய்து நல்ல பேர் வாங்கிவிட்டால் போதும் இந்த முற்போக்கு சிந்தனைவாதிகள் அப்பொழுதுதான் வெளியே வருவார்கள் அவர்களை பற்றி விமர்சித்து பேச. மற்றபடி கருணாநிதி, ஜெயலலிதா, மாயாவதி, முலாயம், மன்மோகன், சோனியா, ராபர்ட் வதேரா, நிதின் கட்கரி, கல்மாடி  இப்படி நாட்டையே கூறு போட்டு விற்பவர்களை பற்றி எதுவும் வாய் திறக்க மாட்டார்கள்.  

இதற்கு முன்பு அண்ணா ஹசாரே தாத்த வந்தார் ஊழல் பற்றிய விழிப்புணர்வை சாமான்ய  மக்கள் வரையிலும் எடுத்துசென்றார். ஆனால் அந்த மனிதரை விமர்சிக்க முத்துகிருஷ்ணன் போன்றோர் அவர் வாழும் கிராமத்திற்கே சென்று ஆய்வு நடத்தினாராம். அதில் அந்த கிராமத்தில் மாமிசம் உண்பவர்களை, மது, புகை பிடிப்போரை கட்டிவைத்து அடிப்பாராம். இதில் என்ன தவறு இருக்கிறது என்று தெரியவில்லை. நானும் கிராமத்தில் பிறந்தவன் தான் என்னுடைய கிராமத்தில் 12 வயது பிள்ளைகள் வரை குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும்பாலான ஆண்கள் கந்து வட்டிக்கு பணம் வாங்கி குடித்து அழித்துவிட்டு கடன் கொடுத்தவனின் தொல்லையால் கடனை அடைக்க கொலை கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். பெரும்பாலான கிராமக்குடும்பங்கள் அந்த வீட்டு பெண்களாலேயே உயிரோடு இருக்கின்றன. என்னுடைய கிராமத்தை ஒப்பிடும் போது ஹசாரே வாழும் கிராமத்தில் மக்களின் வாழ்க்கைதரம் ஆயிரம் மடங்கு மேம்பட்டதாகவே உள்ளது. இப்பொழுது மோடி என்னும் மனிதரை விமர்சிக்க ஆரம்பித்துள்ளார்கள். சரி  மோடி வேண்டாம், வேறு யார் வேண்டும் என்று அந்த முற்போக்கு சிந்தனைவாதிகளை கேட்டு பாருங்கள். அதை பற்றி அவர்கள் சிந்தித்து கூட இருக்கமாட்டார்கள். இந்த முற்போக்கு சிந்தனைவாதிகள் பற்றி புரிந்துகொள்ள சிறிய உதாரணம் சொல்கிறேன். இவர்கள் இதுவரை விமர்சித்து பேசியவர்கள் யார் என்று பாருங்கள் அதில் அன்ன அஜாரே, அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி, நரேந்தர மோடி போன்றோர் மட்டுமே அடங்குவர். மற்றபடி எந்த ஊழல்வதியையும் இவர்கள் விமர்சித்திருக்க மாட்டார்கள்.      உலகத்தில் 100% சரியான மனிதன் யார்? இந்த கேள்விக்கு இந்த சிந்தனைவாதிகள் பதில் சொல்லட்டும் இல்லையென்றால் வாயை மூடிக்கொண்டு இவர்கள் இருக்கவேண்டும். 

நண்பரே உங்கள் எழுத்து உணர்வு பூர்வமாக உள்ளது. மனதில் இருந்து வருகிறது. உண்மையாக உள்ளது. ஏற்றுக்கொள்ளும் படி உள்ளது. யாரைப்பற்றியும் கவலைபடாமல் உங்கள் பாணியிலேயே தொடர்ந்து எழுதுங்கள். 

உங்களுடைய எழுத்துக்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். 

நன்றி
அஜய் 

                                                      (2)
அண்ணனுக்கு, 

இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலமாக, நீங்கள் ராஜபக்சேவை நல்லவர் என்றோ, வல்லவர் என்றோ கூறுவீர்கள் என்றால், உங்களது கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியும். தெஹல்கா வெப்சைட்டிலும், யு டியூப் வீடியோக்களிலும் குஜராத் கலவரத்தின் கொடுமைகளை நீங்கள் காணவில்லை என்றே கருதுகின்றேன். 
மோடியை எதிர்ப்பதன் மூலம் முஸ்லீம்களை, தேசப்பற்று அற்றவர்களாகவும், இந்து விரோதிகளாகவும் பார்ப்பது தவறு. நாங்கள் எதிர்ப்பது மோடியைத்தானே அன்றி, இந்துக்களை அல்ல. அல்ல. அல்ல...

இப்படிக்கு,
யாஸிர்.

                                                          (3)

மோடிக்கு மாற்று பற்றிய உங்கள் கருத்துகள் கவலை தருகிறது..கலவரம்,கற்பழிப்பு ,படுகொலைகள் போலி encounters ..இவை பற்றிய உங்கள் பார்வை என்ன? அந்த விடியோ காட்சிகளை நீங்கள் பார்த்து இருக்கின்றீர்களா? 

இந்துவோ,முஸ்லிமோ அல்லது வேறு என்ன சாதி மதம் ஆனலும் சரியே மனித உயிர்கள் அவ்வளவு மலிவானது அல்ல! கலவரம் எல்லா மாநிலங்களிலும் நடந்து உள்ளது ..ஆனால் அரசு கண் மூடி கை கட்டி வேடிக்கை பார்த்தது இல்லை சகோதரா !!

குத்துபட்டவனுக்கு, காயம்பட்டவனுக்கு, மானபங்கம் செய்யப்பட்டவளுக்குத் தான் வலிக்கும் ..மனிதநேயம் ,மனிதாபிமானம் உள்ளவர்கள் இந்த கொடுஞ்செயல் புரிந்தவரை ஆதரிக்க முடியாது என்பது என் கருத்து .

ஆட்சியில் மாற்றம் வேண்டும் என்று எண்ணுவது தவறு இல்லை. ஆனால் மாற்று வழிகளை யோசிக்கவேண்டும் ..

தலை அரிக்கிறது என்பதற்காக கொள்ளிக்கட்டையை எடுத்து சொரிந்து கொள்ளுதல் அறிவுடைமை அல்ல ..

உங்கள் கட்டுரையில் ஆரம்பத்தில் குறிப்பிட்டு உள்ளதை போல இந்து வெறியன் என்று உங்களை நான் எண்ணவில்லை..பல விசயங்களை நீங்கள் எழுதி நான் ரசித்து இருக்கிறேன்..அது உங்களுக்கு நன்கு தெரியும்.

வருந்துகிறேன் இதை சொல்வதற்கு...

இந்த கட்டுரையை என்னால் ரசிக்க இயலவில்லை ..

மாறாத அன்புடன் 
ஹசன்கனி 
                                           ***

அன்புள்ள யாஸிர்/ஹசன்கனி,

வணக்கம்.

என்னால் இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியும் என்று தெரியவில்லை. மக்கள் தேர்ந்தெடுத்ததாலேயே மோடியை நல்லவன் என்று சொல்ல முடியும் என்றால் ராஜபக்‌ஷேவும் நல்லவனாகத்தானே இருக்க முடியும்? இந்த கேள்விக்கு எப்படி பதில் சொன்னாலும் அது என்னை justify செய்து கொள்ளச் செய்யும் சால்ஜாப்பாகவே இருக்கும் என நினைக்கிறேன். என்றாலும், மனதில் தோன்றுவதை எந்த முலாமும் பூசாமல் சொல்ல முயற்சிக்கிறேன். 

தொடக்கத்திலேயே ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன் - நீங்கள் மோடியை எதிர்ப்பது எப்படி இந்துக்களை எதிர்ப்பது இல்லையோ அதே போலத்தான் மோடியை ஆதரிப்பது என்பது இந்துத்துவாவை ஆதரிப்பதும் இல்லை, இஸ்லாமியர்களை எதிர்ப்பதும் இல்லை.

இங்கு மோடியை எதிர்ப்பது என்பதும் சரி, ஆதரிப்பது என்பதும் சரி - Paid Media வினால் உருவாக்கப்பட்ட மனநிலைதான். நீங்கள் எந்தக் காரணங்களுக்காக மோடியை எதிர்க்கிறீர்களோ அதைத் தவிர்த்த வேறு சில காரணங்களுக்காக நான் மோடியை ஆதரிக்கிறேன். இரண்டு தரப்புமே தங்களுக்கான தரவுகளை ஊடகத்தின் வாயிலாகவே உருவிக் கொள்கிறோம். மோடிதான் குஜராத் கலவரத்தின் சூத்திரதாரி என்று நம்புவதற்கான வாய்ப்புகள் இருப்பது போலவே மற்ற மதக் கலவரங்களைப் போலவே அதுவும் ஒரு கலவரம் என்று நம்புவதற்கான வாய்ப்புகளும் இருக்க முடியும் அல்லவா?

மோடி நல்லவன்xகெட்டவன் என்ற பஞ்சாயத்தை சில கணங்கள் ஒதுக்கி வைத்துவிட்டு அவரை அடுத்த பிரதமராக எதிர்பார்ப்பதற்கு என்னளவில் அடிப்படையான மூன்று காரணங்கள் இருக்கின்றன-

  • குஜராத் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி பற்றிய புள்ளிவிவரங்கள்தான் முதன்மைக் காரணம் - இன்னொரு முறை மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் பதவிக்கு வந்தால் இந்த தேசத்தை தட்டு எடுக்க வைத்துவிடுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில் இந்தத் தகவல் சற்று ஆறுதலாக இருந்தது.
  • தொடர்ச்சியாக மூன்று முறை மாநில மக்களின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்தது இரண்டாவது காரணம்- இதில் கணிசமான அளவில் இஸ்லாமியர் வாக்குகள் குறித்த புள்ளி விவரங்களும் இருக்கின்றன. ராஜபக்‌ஷேவை கணிசமான தமிழர்கள் ஆதரித்தார்கள் என்று எந்தச் செய்தியும் என் கண்ணில் பட்டதில்லை.
  • ராகுல் காந்தி, மன்மோகன் சிங், சோனியா காந்தி, ப.சிதம்பரம், முலாயம் சிங் யாதவ், மம்தா பானர்ஜி, மாயாவதியை விடவும் மோடி ஊழல் கறை இல்லாத, உறுதியான மனிதன் என நம்புவது மூன்றாவது.

அரசியல்வாதிகளுக்குரிய அநேக குறைகளுடனும், சில தனித்துவமான பலங்களுடனுமான இன்னொரு மனிதன்தான் மோடி. ஆனால் சிலர் அவரை படு தீவிரமாக எதிர்ப்பதற்கான காரணம்  ‘மோடி ஒரு மதவாதி’ என்பதையும் தாண்டி சில சைக்கலாஜிக்கலான விஷயங்களும் இருப்பதாகத் தோன்றுகிறது. அதில் ஒன்று அறிவுஜீவி(அல்லது) புரட்சியாளன் என்ற அடையாளம். நம் ஊரில் எப்பொழுதுமே பெரும்பான்மையை எதிர்ப்பவன்தான் அறிவுஜீவி என்ற பிம்பம் உண்டு. அந்த இடத்தை அடைவதற்காக உழைப்பவர்களில் பெரும்பாலானோர்கள் எழுத்தாளர்களாகவும், பத்திரிக்கையாளர்களாகவும் இருப்பது ஒருவிதத்தில் நம் துரதிர்ஷ்டம். 

சுதந்திரத்திற்கு பிறகாக இந்த நாட்டில் எத்தனையோ கலவரங்கள் நடந்திருக்கின்றன. குஜராத் உட்படவும்- கிட்டத்தட்ட நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஏதோவொரு கலவரம் நடந்திருக்கிறது. ஆயிரக்கணக்கான இஸ்லாமியச் சகோதரர்கள் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள். சொந்த நிலத்தைவிட்டு துரத்தடிக்கப்பட்டிருக்கிறார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் மட்டுமில்லை- சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள், தலித்துக்களுக்கு எதிரான வன்முறைகள், கிறிஸ்துவர்களுக்கு எதிரான கொடுமைகள் என சமூகத்தின் சகல பிரிவுகளுக்கும் எதிரான வன்முறைகள் கட்டவிழ்க்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கலவரங்களில் ஹிந்துக்களும் தப்பித்ததில்லை. 

இதே குஜராத்தில்தான் 1969 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் எழுநூறு பேர்கள் கொல்லப்பட்டார்கள்- இதில் நானூற்று சொச்சம் பேர் இஸ்லாமியர்கள். 1984 இல் நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களில் பல்லாயிரம் சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். 1989 ஆம் ஆண்டு பீஹார் மாநிலம் பாகல்பூரில் நடைபெற்ற கலவரம் ஆயிரத்திற்கும் அதிகமான இஸ்லாமியர்களை காவு வாங்கியது. 1992 ஆம் ஆண்டு மும்பை கலவரம் நமக்குத் தெரிந்ததுதானே? ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள், நூற்றுக்கணக்கான ஹிந்துக்கள் என்று பட்டியல் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.

இவை தவிர்த்து அஸாமில், திரிபுராவில் என நீட்டிக் கொண்டே போனால் ‘இரத்தம் நனைக்காத மண்’ இந்த நாட்டில் இல்லை என்று முடிவுக்கு வந்துவிடலாம். நிலைமை இப்படி இருக்க, இதில் எத்தனை கலவரங்களை நாம் நினைவில் வைத்திருக்கிறோம்? இந்தக் கலவரங்களின் காரணகர்த்தாக்கள் என்று யாரை எல்லாம் தண்டித்திருக்கிறோம்? 

யோசித்துப் பார்த்தால் எதுவுமே இல்லை. அத்தனை பிணங்களையும் அரசியல் காரணங்களுக்காகவே மூடி மறைத்திருக்கிறார்கள். ஊடகங்களும் வெகு இலாகவமாக மறந்துவிட்டு அடுத்த செய்திகளுக்கு போய்விட்டார்கள். என்ன காரணங்களுக்காக மற்ற கலவரங்களை மறக்கடித்தார்களோ அதே அரசியல் காரணங்களுக்காத்தான் குஜராத் கலவரத்தை மட்டுமே திரும்பத் திரும்ப நினைவூட்டுகிறார்கள் என்று நம்புகிறேன்.

இங்கு மோடியை எதிர்ப்பதில் சமூக அக்கறை என்பதைவிடவும், தனக்கான அறிவுஜீவி அடையாளம் மற்றும் அரசியல் காரணங்கள்தான் அதிகம். அவ்வளவுதான்.

இப்படித் திரும்பத் திரும்ப ஒரே மனிதனை வலுக்கட்டாயமாக நியாயப்படுத்தும் பணியைச் செய்யும் போது நாம் அந்த மனிதனுக்கு தீவிர ஆதரவாளராகிவிடுவோம். இப்போதைக்கு நான் மோடியை ஆதரிக்கிறேன். மற்ற போலி மதச் சார்பற்றவர்களைவிடவும், ஊழல் சிகாமணிகளை விடவும் மோடி ஒரு மடங்காவது மேல் என நம்புகிறேன். ஆனால் அதே சமயம் அவரைப் பற்றி மட்டுமே பேசி  ‘மோடி வெறியன்’ ஆகிவிடக் கூடாது என விரும்புவதாலும், இசுலாமிய நண்பர்களின் புரிதல் மாறும் வரை அவர்களை புண்படுத்த வேண்டியதில்லை என்பதாலும் தற்காலிகமாக மோடி பற்றி பேசுவதை நிறுத்தி வைக்கலாம் என்று தோன்றுகிறது.