Sep 22, 2013

பிராமணனின் பிணம்

அக்ரஹாரத்தில் ஒரு பிராமணனின் பிணம் கிடக்கிறது. அது நாரணப்பனின் பிணம். அவனுக்கு குடும்பம் என்றெல்லாம் எதுவும் இல்லை. அவன் பிராமணனாக பிறந்திருந்தாலும் சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடிக்காதவன். மாமிசம் தின்றவன். குடிப் பழக்கம் உண்டு. கூத்தியா வைத்துக் கொண்டு கும்மாளமும் போட்டவன். 

இப்பொழுது அக்ரஹாரத்து பிராமணர்களுக்கு அவனை அடக்கம் செய்வதில் ஒரு குழப்பம் வந்துவிடுகிறது. அவன் உயிரோடு இருந்த போதே அவனை பிராமணீயத்திலிருந்து பகிஷ்கரித்திருந்தால் இத்தனை பிரச்சினை வந்திருக்காது. பிராமணனாக இல்லாதவனை யார் வேண்டுமானாலும் அடக்கம் செய்திருக்கலாம். ஆனால் இப்பொழுது அவன் பிராமணன். பிராமணர்கள்தான் அடக்கம் செய்ய வேண்டும். பிராமணீயத்தை அவன் கைவிட்டிருந்தாலும் பிராமணீயம் அவனைக் கைவிடவில்லை.

நாரணப்பாவை பிராமணன் என்று கருதி அடக்கம் செய்தால் தோஷம் வந்து சேர்ந்துவிடக் கூடும். அதே சமயம் சவத்தை அடக்கம் செய்யாமல் அக்ரஹாரத்தில் இருப்பவர்கள் அன்னம் தண்ணீர் தொட முடியாது. அக்ரஹாரத்து பிராணேஸாச்சார்யார்தான் இது பற்றிய முடிவெடுக்க வேண்டும் என்று அவர் தலையில் பொறுப்பை ஏற்றிவிட்டார்கள். ஆச்சார்யார் தனக்குத் தெரிந்த சாஸ்திரங்களை எல்லாம் தேடிக் கொண்டிருக்கிறார். ஒரு முடிவும் கிடைக்கவில்லை. பிணம் அழுகிக் கொண்டிருக்கிறது. அக்ரஹாரத்து பிராமணர்கள் பசியால் கண் சொருகிக் கிடக்கிறார்கள்.

நாரணப்பா உயிரோடு இருந்த போது பிராணேஸரார் அவ்வளவு எளிதாக அவனை பகிஷ்கரிப்புசெய்து விட முடியவில்லை. அந்த அக்ரஹாரத்திலே மிகப் படித்த, தேஜஸான பிராணேஸாசார்யார்தான் அந்தக் காரியத்தை செய்ய வேண்டும். ஆனால் அவரையே நாரணப்பா மிரட்டினான். ‘அப்படி எதாச்சும் எக்குத்தப்பா செஞ்சீங்கன்னா முசல்மானாக மாறி இந்த அக்ரஹாரத்திலேயே தங்கியிருப்பேன். நீங்க எல்லாம் இந்த அக்ரஹாரத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும்’ என்று ப்ளாக்மெயில் செய்தான். ஒருவேளை அவன் சொன்னதுபடியே இஸ்லாமியனாக மாறிவிட்டால் அவனை அக்ரஹாரத்தை விட்டு வெளியேற்றுவதற்கு சட்டத்தில் எந்த வழியுமில்லை.  ஆச்சார்யார் ‘சரி பகிஷ்கரிப்பு இல்லாமலேயே அவனைத் திருத்திவிடலாம்’ என்று பின் வாங்கிவிட்டார். ஆனால் அவனை திருத்த முடியவில்லை. போய்ச் சேர்ந்துவிட்டான்.

இப்பொழுது பிரச்சினை வந்து சேர்ந்துவிட்டது. பெருங்குழப்பம். பிராணேஸரால் முடிவெடுக்க முடியவில்லை. சாஸ்திரமும் கை கொடுக்கவில்லை.

நாரணப்பனின் தொடுப்பான சந்திரி தான் அணிந்திருந்த நகைகளை எல்லாம் கழட்டிக் கொடுத்து அடக்கம் செய்யும் பிராமணனுக்கு தனது நகைகளை கொடுத்துவிடுவதாகச் சொல்கிறாள்.இந்த நகைகள் இரண்டு பிராமணர்களின் கண்களில் குறுகுறுக்கிறது. ஆனாலும் ஆச்சார்யார் முடிவு சொல்ல இயலாமல் திணறிக் கொண்டிருக்கிறார்.

இந்தச் சமயத்தில் அக்ரஹாரத்தில் எலிகள் செத்துச் செத்துச் விழுகின்றன. நாரணப்பனும் வயிற்றில் கட்டி வந்துதான் இறந்திருக்கிறான். ஆனால் பிராமணர்களுக்கு அது ப்ளேக் நோய் என்று தெரியவில்லை. இன்னமும் பிணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் பசியோடு மருவிக் கிடக்கிறார்கள். ஆச்சார்யாருக்கும் ஒரு வழியும் கிடைக்கவில்லை. கடைசி முயற்சியாக ஆற்றுக்கு அந்தப் பக்கம் இருக்கும் மாருதியின் கோவிலுக்குச் சென்று மாருதியிடமே கேட்டுவிடலாம் என்று ஆச்சார்யார் முடிவு செய்கிறார். மாருதிக்கு அலங்காரம் செய்து மந்திர உச்சாடனம் செய்கிறார். மாருதியின் வலப்பக்கத்திலிருந்து பிரசாதம் விழுந்தால் அடக்கம் செய்துவிடலாம் என்றும் இடப்பக்கத்திலிருந்து விழுந்தால் அடக்கம் செய்வதில்லை என்றும் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறார். ஆனால் மாருதியும் பதில் சொல்லவில்லை. மனம் தளர்ந்து வீடு திரும்புகிறார்.

வனத்துக்குள் சந்திரி அமர்ந்திருந்து ஆச்சார்யாரின் காலைக் கட்டிக் கொள்கிறாள். அவளது மார்புகள் அவரது கால்களில் படுகிறது. ஆச்சார்யரோ பல ஆண்டுகளாகவே நோயாளி மனைவியுடன் வாழ்ந்து பெண் இன்பத்தையே அறிந்திராதவர். இப்பொழுது தடுமாறுகிறார். அவளது சுடுமூச்சு ஆச்சார்யாரின் தொடைகளில் படுகிறது. ஆச்சார்யருக்கு முன்பாக எழுந்து நிற்கும் சந்திரி அவரின் கைகளை எடுத்து தனது குளிர்ந்த முலைகளின் மீது வைக்கிறாள். இப்பொழுது அவருக்கு கண்கள் இருண்டு போகின்றன. தன்னிலை மறக்கிறார். அந்த வனத்தில் புல்வெளியிலேயே அவளோடு கலவி செய்கிறார்.

ஒரு வைதீக பிராமணன் தடுமாறி தனது அத்தனை கட்டுப்பாடுகளையும் காமத்தின் கீழாக போட்டு மிதிக்கும் இந்த இடத்தில் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் சம்ஸ்காரா நாவலின் ஒரு பகுதி முடிகிறது.

அடுத்த பகுதியில் பிராணேஸர் அக்ரஹாரத்துக்குத் திரும்பி நாரணப்பாவின் பிணம் குறித்து தன்னால் முடிவெடுக்க முடியாததை பிராமணர்களிடம் தெரிவித்துவிடுகிறார். மாருதியும் பதில் சொல்லவில்லை என்கிறார்.

வேறுவழி இல்லாத பிராமணர்கள் தங்களின் குருமடத்திலேயே கேட்டு முடிவு செய்துவிடலாம் என்று கிளம்புகிறார்கள். அதற்கு முன்பாக தங்களின் மனைவி, பிள்ளைகளை தத்தமது மாமியார் வீடுகளில் விட்டுவிடுகிறார்கள். பிராணேஸர் தனது நோயாளி மனைவியை விட்டு வரமுடியாது என்று அக்ரஹாரத்திலேயே இருந்துவிடுகிறார். அவரையும் அவரது மனைவியையும் தவிர்த்து அக்ரஹாரத்தில் வேறு யாருமே இல்லை. போகிற வழியில் ஒவ்வொரு பிரமணனாக நோய்வாய்ப்படுகிறான். இறந்தும் போகிறார்கள். பிராமணர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அத்தனையும் ப்ளேக்கின் மரண விளையாட்டு.

இந்த நிலையில் சந்திரி ஒரு இசுலாமியனை அழைத்து வந்து நாரணப்பனின் பிணத்தை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்துவிட்டு அந்த ஊரைவிட்டு கிளம்பிவிடுகிறாள். ஆனால் பிராமணர்கள் யாருக்கும் இந்த விஷயம் தெரிவதில்லை. அவர்கள் பிணத்துக்கான ‘தீர்வை’ தேடிக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது ஆச்சார்யாரின் மனைவியும் இறந்து போகிறாள். அவளுக்கு ப்ளேக்தான். அவளை அடக்கம் செய்துவிட்டு கால் போன போக்கில் நடக்கத் துவங்குகிறார் பிராணேஸாச்சார்யார்.

அவர் போகுமிடத்தில் புட்டா என்ற ஓதுவார் ஒட்டிக் கொள்கிறார். ஆச்சார்யார் நடக்கும் பாதையில் எல்லாம் தானும் நடக்கிறார். பொய் சொல்வது, தீட்டுடன் கோவிலுக்குள் நுழைவது, பத்மாவதி என்ற பெண்ணைப் பார்த்து காமம் கொள்வது என வைதீகங்களை மீறத் துவங்குகிறார் பிராணேஸர். தனது வாழ்வில் நடைபெறும் இந்த மாற்றங்களைப் பற்றிய அவரின் உள்மன தர்க்க விவாதம் நாவலின் மறுபாதி முழுவதும் நீள்கிறது.

                                                       ******

கன்னடத்தில் வெளியான இந்த நாவலை தமிழில் டி.எஸ்.சதாசிவம் மொழி பெயர்த்திருக்கிறார். என்னளவில் இது மிகச் சிறந்த மொழிபெயர்ப்பு. அடையாளம் பதிப்பகத்தின் வெளியீடு இந்த நாவல்.

அக்ரஹாரத்தின் எளிய பிராமணர்கள், வறட்டுத்தனமான அவர்களது வைதீகம், பசி அவர்களோடு நிகழ்த்தும் விளையாட்டு, அவர்களை துணுக்குறச் செய்யும் சந்திரியின் நகைகள், நாரணப்பாவின் நண்பர்கள், அவனது பிணம், அவன் உயிரோடு இருக்கும் போது மீறிய செயல்கள், ஊருக்குள் பரவும் ஃப்ளேக் நோய், பெள்ளி என்ற புலைச்சி, அவளது மண் நிற முலைகள், அவளோடு உறவு கொண்ட இன்னொரு பிராமணன், சிறுவயதிலேயே காசியில் விலைமாதுவுக்காக தனது சாஸ்திர சம்பிரதாயங்களை விட்டுக் கொடுத்த பிராணேஸரின் நண்பன் என்று நாவலின் கதாபாத்திரங்களும் காட்சிகளும் இந்த நூற்று தொண்ணூறு பக்கங்களில் கச்சிதமாக அடங்கியிருக்கிறது.

இந்த நாவல் வாசிப்பதற்கு எந்தச் சிக்கலும் இல்லாதது. முழு நாவலுமே எளிமையாக நேர்கோட்டில் நகர்கிறது. நாவல் முழுவதும் தொடரும் கவித்துவங்களும், தர்க்கங்களும், மரபை மீறுதலும் இயல்பாக செவ்வியல் தன்மையாக மாற்றிவிடுகிறது எனத் தோன்றுகிறது. 

இந்த நாவலை வாசிக்கும் போது ஏதோ ஒருவிதத்தில் நம்மோடு ஒன்றிவிடுகிறது. ஒவ்வொரு சில பக்கங்களை புரட்டும் போதும் ஒரு உருவத்தை எடுத்துக் கொண்டு நம்மோடு பயணிக்கிறது அல்லது நம்மை அதோடு பயணிக்கச் செய்கிறது. அதுதானே classic தன்மை? 

மரபுகளை அதன் போக்கிலேயே விட்டு பின்னால் நின்று ஓங்கி அறையும் வித்தை இந்த நாவல் முழுவதும் விரவியிருக்கிறது. இந்த நாவலை எழுபதுகளில் படமாக எடுத்திருக்கிறார்கள். கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை முதலில் சென்சார் போர்ட் அனுமதிக்கவில்லையாம். பல சிரமங்களுக்கு பிறகான இந்தப் படம் பிறகு தேசிய விருது வாங்கியிருக்கிறது.

வாய்ப்பிருந்தால் வாசித்துவிடுங்கள். இந்த கலக்கலான க்ளாசிக் நாவலை ஆன்லைனிலும் வாங்கலாம்.