Sep 15, 2013

தலைமுறை இடைவெளி

அன்புள்ள மணிகண்டன்,

நிசப்தம் தளத்தை தொடர்ந்து வாசித்தாலும் மருத்துவமனைகள் பற்றிய தங்களின் பதிவை படிக்கும் வரை மின்னஞ்சல் அனுப்பத் தோன்றியதில்லை. அந்தக் கட்டுரையோடு முழுமையாக ஒத்துப் போகிறேன். சில வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற விஷயங்களில் நமது முன்னோர்கள் வழிகாட்டினார்கள் அதே சமயம் அவர்களுக்கு பிரச்சினைக்கான காரணமும் தெரிந்திருந்தது. முக்கியமாக, நோய்வாய்ப்படும் சமயங்களில் நமக்கு தங்களின் தார்மீக ஆதரவைக் கொடுத்தார்கள். இப்பொழுதெல்லாம் நம்மைச்சுற்றிலும் பலவகையான நோய்களை பார்க்கும் போதும் நமக்கு அத்தகைய ஆதரவு கிடைப்பதில்லை. 

அன்புடன்,
ஸ்ரீராம்.


அன்புள்ள திரு. ஸ்ரீராம்,

வணக்கம்.

இரண்டு விஷயங்களைப் பற்றி பேசலாம் என்று தோன்றுகிறது-

- ஒன்று நாம் மாற்றிக் கொண்ட வாழ்க்கை முறை (life style)
- இன்னொன்று தலைமுறை இடைவெளி (Generational Gap)

வாழ்க்கை முறை மாறிவிட்டது என்பது கிட்டத்தட்ட நாம் எல்லோருமே உணர்ந்ததுதான். இதைத் திரும்பத் திரும்ப வெவ்வேறு குரல்களிலும் வெவ்வேறு தொனிகளிலும் பேசுகிறோம். ஆனால் மாறியது மாறியதுதான். ரிவர்ஸ் கியர் இல்லாத மாறுதல் இது. 

முந்தைய காலத்தில் மனிதனுக்கு இத்தனை அழுத்தம் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. இப்பொழுது இருப்பது போல அளவு கடந்த வேகமும் தேவைப்பட்டிருக்காது. வாழ்க்கையை நகர்த்துவதில் அவனுக்கு பெரிய புறச் சிக்கல்களோ அல்லது அகச்சிக்கல்களோ இருந்திருக்கவும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அப்பொழுதும் பணம் முக்கியமானதுதான் - ஆனால் அது மட்டுமே அத்தனையுமாக இருந்திருக்கவில்லை. அதனால் வாழ்க்கை மிக எளிமையானதாக இருந்தது. இந்த ஐம்பது வருடங்களில் அத்தனையும் மாறிப் போயிருக்கிறது.

பெருமாள் முருகனின் ‘கங்கணம்’ நாவலில் நிலத்தை மதிப்பிடும் முறையைப் பற்றி ஒரு இடம் வரும்- அந்தக் காலத்தில் நிலத்தை அதன் விளைச்சல் தன்மையை அடிப்படையாக வைத்து மதிப்பிட்டார்கள். நெல் விளையும் பூமி, களிமண் காடு, நல்ல செம்மண், மேட்டு நிலம்- இப்படி ஏதாவது ஒரு வகையில்தான் நிலத்திற்கான மதிப்பிருந்தது. யோசித்துப் பார்த்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இப்படித்தான் கணக்கிட்டார்கள். ஆனால் ஐம்பது வருடங்களில் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. சாலை ஓர நிலம், கமர்ஷியல் சைட் ஆகும், பக்கத்திலேயே மருத்துவமனை இருக்கிறது, பஸ் ஸ்டாப்புக்கு அதிக தூரம் இல்லை என்றெல்லாம் நிலத்தை மதிப்பிடத் துவங்குகையிலிருந்து நமது வாழ்க்கை முறை ஒட்டு மொத்தமாக புரட்டிப் போடப்பட்டிருக்கிறது.

ப்ளாஸ்டிக்கும், கெமிக்கலும் நம் உடலை குத்தகைக்கு எடுக்கத் துவங்கிய காலம் இது. விதவிதமான நோய்கள் எட்டிப்பார்க்க ஆரம்பித்ததும் இதே பருவம்தான். முன்பெல்லாம் இன்றைய காலத்தைப் போல மிகச் சிக்கலான நோய்கள் இருந்திருக்கும் என்று தோன்றவில்லை. காய்ச்சல், தலைவலி, சொரியோ, சிரங்கோ  அல்லது வயிற்றுப் போக்கு- அதிசயமாக கொத்துக் கொத்தாக அள்ளிச் செல்லும் கொள்ளை நோய்கள். இதில் எதுவாக இருந்தாலும் அமத்தாவுக்கோ, அப்பத்தாவுக்கோ வைத்தியம் தெரிந்திருந்தது. கை மீறிப் போன நோய்க்கு உள்ளூரில் வைத்தியர்கள் இருந்தார்கள். காடு மேடெல்லாம் சுற்றியலைந்து பச்சிலைச் சாறை வாயில் ஊற்றினார்கள். பத்தியம் சொன்னார்கள். நோயாளிகள் மீண்டெழுந்தார்கள். கெமிக்கல் புகுந்திராத அந்தக் காலத்தில் பச்சிலைச் சாறுகள் நோயை குணப்படுத்தின. இப்பொழுது கெமிக்கலால் நிரம்பியிருக்கும் நம் உடலை பச்சிலைச் சாறுகள் மட்டும் காப்பாற்றும் என்று சொல்ல முடியவில்லை.

இப்பொழுது பெயர் தெரியாத நோய்கள். விதவிதமான ரிப்போர்ட்கள். புதுப் புது அறிகுறிகள். வெவ்வேறு விதமான பரவும் முறைகள். கெமிக்கல் புகுந்த உடலில் இருந்து நோயை விரட்ட இன்னும் கொஞ்சம் கெமிக்கலை மருந்து என்ற பெயரில் உள்ளே விட்டுக் கொள்கிறோம். சில நாளில் உடலில் இன்னொரு பிரச்சினை வருகிறது. இப்பொழுது வேறொரு கெமிக்கலை உள்ளே விடுகிறோம். இப்படியே தொடர்கிறது. புலி வாலை பிடித்துக் கொண்ட கதைதான். பிடித்தாயிற்று இனிமேல் விட முடியாது.

இன்னொன்று Generational Gap - நமது தாத்தா தலைமுறையில் இருந்த மருத்துவ அறிவு தந்தையின் தலைமுறையில் இல்லை. மிகப் பெரிய வியாதிகளைக் கூட நாடி பிடித்து, விழிகளை கவனித்து, நாக்கை நீட்டச் சொல்லி கண்டுபிடித்துவிடும் மனிதர்கள் வாழ்ந்த தேசம்தானே இது? இரண்டு தலைமுறைக்கு முன்னால் இருந்தவர்களுக்கு இந்த வித்தை தெரிந்திருந்தது. இப்பொழுது இந்த முறையை கிட்டத்தட்ட தொலைத்துவிட்டோம். நகரமயமாக்கல் பரவலாகியதன் காரணமாகவோ என்னவோ இந்த வித்தைகள் நமக்கு முந்தைய தலைமுறைய வந்து சேரவில்லை. அம்மாவுக்கோ, அப்பாவுக்கோ அல்லது அவர்களது வயதையொத்தவர்களுக்கோ நோய்கள் பற்றிய பெரிய புரிதல்கள் இல்லை. இந்தத் தலைமுறைக்கு இது பெரிய இழப்புதான். இப்பொழுதெல்லாம் பெரியவர்கள் நம் கூடவே இருந்தாலும் ‘எதுக்கும் டாக்டர்கிட்ட போய்ட்டு வந்துடலாம்’ என்றுதான் சொல்கிறார்கள்.

நன்றி.