டாஸ்மாக்புரம், குடிகாரன்பேட்டை என்றெல்லாம் மனதுக்குள் கொஞ்ச காலத்திற்கு முன்பே தோன்றியிருந்தாலும் குடிகாரர்களைப் பார்த்து எரிச்சல் வந்ததில்லை. அவனவன் சம்பாதிக்கிறான்; செலவு செய்கிறான் - எப்படியோ நாசமாகப் போகட்டும் என்றுதான் தோன்றும். ஆனால் முந்தாநாள் அத்தனை எரிச்சல் வந்தது.
ஒரு திருமணத்திற்காக இந்த வாரம் ஊருக்கு வர வேண்டியிருந்தது. நான் மட்டும்தான் வருவதாக முடிவு செய்து வைத்திருந்தேன். இப்படித் தனியாக பயணிக்கும் போதெல்லாம் அரசுப் பேருந்துதான் ‘சாய்ஸ்’ ஆக இருக்கிறது. ஏனோ ரிசர்வ் பேருந்துகளில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் சகபயணியைப் பார்த்து பங்காளியைப் முறைப்பது போலவே தோன்றும்.அரசுப் பேருந்துகளில் அப்படியில்லை. சந்தைக்கடையைப் போலவோ அல்லது பள்ளிக்கூட க்ரவுண்டைப் போலவோ ஒருவிதமான இயல்புத் தன்மை விரவிக் கிடக்கும்.
மேலும் இந்தப் பேருந்துகள் சல்லிசாக இருக்கின்றன என்பது ஒரு காரணமாக இருந்தாலும் பேருந்தில் இருப்பவர்களின் பேச்சையும் செயலையும் சற்று கவனித்தால் இரண்டு மூன்று கதைகளைப் பிடித்துவிடலாம் என்பதுதான் முக்கியமான காரணம். இந்த முறையும் நான்கைந்து கதைகளோடு வீடு திரும்புவதாக திட்டமிருந்தது.
நினைப்பதெல்லாம் நடந்துவிடாமல் தடுப்பதற்கென தெய்வம் இருப்பதால் கடைசி நேரத்தில் திட்டத்தில் மாறுதல் செய்ய வேண்டியிருந்தது. அம்மாவும் உடன் வருவதாகச் சொல்லிவிட்டார். அவரை அழைத்துச் செல்வதற்கு தயக்கமாகத்தான் இருந்தது. மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வரும் நாட்களில் அரசுப் பேருந்துகளில் அவ்வளவு எளிதாக போய்விட முடிவதில்லை. அதுவும் அம்மாவுக்கு அறுபது வயதாகிவிட்டது. உடலில் சர்க்கரை வேறு- சீக்கிரம் சோர்ந்து போய்விடுகிறார்.
ஆனால் வேறு வழியில்லை. முன்பதிவு டிக்கெட்கள் தீர்ந்திருந்தன. கிடைத்த பேருந்தில் ஏறியாகிவிட்டது. சேலம் வரும் வரையிலும் பெரிய சிரமம் இல்லை. சமாளித்துவிட்டோம்.
அதுவும் சேலத்திலிருந்து ஈரோடு வரைக்கும் பிரைவேட் பேருந்து. DTSஇல் புதிய பாடல்களை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். பிந்துமாதவி ஸ்கீரினில் வந்த போதெல்லாம் ‘எங்க காலேஜ் ஜூனியரைப் பாருங்க’ என்று அம்மாவிடம் பெருமை பேசிக் கொண்டிருந்தேன்.
இப்படியே ஈரோடு வந்த போது சற்று ஆசுவாசமாக இருந்தது. இன்னும் முப்பத்தைந்து கிலோமீட்டர்கள்தான். ஊரை அடைந்துவிடலாம் என்று நினைத்திருந்த சமயத்தில் அது அத்தனை சுலபம் இல்லை என்று தோன்றியது. ஈரோடு பேருந்து நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பாகவே மிகப்பெரிய கூட்டம் திமுதிமுவென ஓடி வந்தது. இந்தப் பேருந்து உடனடியாக சேலத்திற்கு திரும்புவதால் ஸீட் பிடிப்பதற்கான திமுதிமு அது. உள்ளே இருப்பவர்களுக்கு சுனாமியைப் பார்த்தது போல வியர்த்திருக்கக் கூடும். மற்றவர்களுக்கு எப்படியோ தெரியவில்லை- எனக்கு மூன்றே முக்கால் துளிகள் அதிகமாகவே வியர்த்துப் போனது. இந்த பெருங்கூட்டத்திலிருந்து அம்மாவை காப்பாற்றிவிட வேண்டும் என முடிவு செய்து அவரை பின்புறமாக நிறுத்திக் கொண்டேன். பேருந்துக்குள் சில பெண்கள் கைக்குழந்தைகளை வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னைவிடவும் கூட சற்று தைரியமாக இருப்பதாக நினைப்பதற்குள்ளாகவே ஜன்னல் வழியாக பையை வீசி ஒருவன் முதல் வரிசையில் இடம் பிடித்துவிட்டான்.
அடுத்த சில வினாடிகளில் பெரும் பிரவாகம் ஒன்று பேருந்துக்குள் நுழைந்துவிட்டது. ‘இறங்க கொஞ்சம் வழிவிடுங்க’ என்ற குரல்களை மிதித்தபடி இடத்திற்கான பெருவேட்டை தொடங்கியாகிவிட்டது. அது மிகக் குரூரமான வேட்டையாக இருந்தது. உள்ளே நுழைந்தவர்கள் கருணையே இல்லாமல் இடங்களை வீழ்த்தி தங்களின் புட்டத்திற்கு அடியில் அழுத்திக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு இடமாக வீழ்ந்து கொண்டிருந்தது.
இன்னமும் வெளியேற இயலாமல் பேருந்துக்குள் சிக்கிக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கையில் எந்த குறைவும் இல்லாமல் இருந்தது. அப்பொழுது ஐந்து தண்டுவன்கள் வெறித்தனமாக பேருந்துக்குள் முன்னேறினார்கள். அதை முன்னேறுதல் என்று எப்படிச் சொல்ல முடியும்? எதிர்ப்படும் ஒவ்வொருவரையும் வீழ்த்திவிட்டு ஸீட் பிடிக்கும் வெறி அது. சோமநாதர் கோயிலை அழித்த முகலாயர்களின் முரட்டுத்தனத்திற்கு சிறிதும் குறைவில்லாத முரட்டுத்தனம் அது.
இந்த தண்டுவர்களின் அழித்தொழிப்பு ஆரம்பாகும் போதே பேருந்துக்குள் இருந்த குழந்தைகள் வீறிடத் துவங்கின. பெரியவர்களின் இரைச்சலும், குழந்தைகளின் கதறலும் பேருந்தை போர்க்களமாக்கிக் கொண்டிருந்தன. இந்த நெருக்குதலில் இருந்து லாவகமாக தப்பித்திருந்த கண்டக்டர் கீழே இறங்கி ‘சேலம் மட்டும் ஏறிக்க. வழியில எங்கயும் நிக்காது. சேலம் மட்டும் ஏறிக்க’ என்று தன் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்தார். அந்த கண்டக்டரின் சுண்டுவிரலில் ‘ரோடு ரோலர்’ ஏறட்டும் என்று அந்தக் கணம் சபித்துத் தொலைத்து விட்டேன். பாவம் பிள்ளைகுட்டிக்காரனாக இருக்கக் கூடும்- எனது பத்தினி சாபம் பலிக்காமல் இருக்கக் கடவது.
கதறிக் கொண்டிருந்த குழந்தைகளில் ஒன்று பச்சைக் குழந்தை. ஒரு துணியால் போர்த்தி நெஞ்சோடு அணைத்து ‘வழிவிடுங்க’ என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள் அந்தக் குழந்தையின் அம்மா. யாரும் செவிமடுப்பதாகத் தெரியவில்லை. அந்தப் பெண் எனக்கும் அம்மாவுக்கும் பின்பாக நின்று கொண்டிருந்தாள். தண்டுவன்கள் என்னைத் தாண்டும் போது போதை நெடி மூக்கு முடியை கருக்கியது. மிக அதிக அளவில் குடித்திருந்தார்கள். விடுமுறைக் கொண்டாட்டத்தை துவக்கியிருந்த அவர்கள் யாரைப் பற்றியும் யோசிப்பதாகத் தெரியவில்லை. மூன்று பேர் கையில் பை வைத்திருந்தார்கள். அவர்கள் பேருந்துக்குள் முன்னேறிக் கொண்டிருந்த போது போது முகத்தை மூன்று இஞ்ச் பின்புறமாக நகர்த்தி இடம் கொடுத்தவர்கள் தப்பித்துவிட்டார்கள். மற்றவர்கள் அவர்களின் பையை முகத்தோடு உரசிக் கொண்டு பிறகு வலி பொறுக்காமல் தேய்த்துக் கொண்டார்கள்.
மூன்றாவதாகச் சென்ற ஒரு தண்டுவன் அந்த பெண்மணியின் அத்தனை கட்டுக்காவலையும் மீறி அந்தக் குழந்தையின் தலையில் உரசிவிட்டான். அந்தக் குழந்தையோடு சேர்த்து பெண்ணும் கதறினாள். அவளது கதறல் அத்தனை அவலமாக இருந்தது. என்னவோ நடந்துவிட்டது என்று யூகிக்க பெரிய சிரமப்படத் தேவையிருக்கவில்லை. குழந்தையை போர்த்தியிருந்த துணியில் ஒரு சிவப்புக் கோடு துளிர்த்திருந்தது. அடுத்த சில வினாடிகளில் பேருந்து பரபரப்பாகிவிட்டது. ஆளாளுக்கு உள்ளே ஏற முயன்றவர்களை எட்டித் தள்ளி அந்தப் பெண் கீழே இறங்குவதற்கு வழி கொடுத்தார்கள். அந்தப் பெண்ணின் கணவனும் கூட்டத்தில்தான் இருந்திருக்கிறான். குழந்தையின் குருதியைப் பார்த்தவன் பதறினான். அந்தப் பெண் குழந்தையுடன் இறங்கிய அடுத்த வினாடி குழந்தையை வாங்கி நெஞ்சோடு அணைத்தபடி ஆட்டோவுக்கு ஓடினான். குழந்தையின் பால்புட்டியோடு அந்தப் பெண்ணும் பின்புறமாகவே ஓடினாள். அவர்களுக்கு சண்டைப் போடுவதற்கெல்லாம் நேரம் இல்லை. அவர்களது ஆட்டோ சில கணங்களில் பேருந்து நிலையத்தில் இருந்து மறைந்து போனது. ஆட்டோ கண்களில் இருந்து மறைவதற்கும் பேருந்தை விட்டு மற்றவர்கள் கீழே வருவதற்கும் சரியாக இருந்தது.
துளி நேரப் பரபரப்பிற்கு பிறகு பேருந்து இயல்பு நிலையை அடைந்திருந்தது. தண்டுவன்கள் ஜன்னல் ஓரத்தில் இடம் பிடித்திருந்தார்கள். அவர்களிடம் அந்தக் குழந்தையின் சார்பில் பேசுவதற்கு அந்த இடத்தில் யாரும் இல்லை. குழந்தையை உரசிய மூன்றாவது தண்டுவனின் காதில் இப்பொழுது ஹெட்போன் இருந்தது. கண்கள் போதையில் தொங்கிக் கொண்டிருந்தன. கீழே இறங்கி ஜன்னல் வழியாக அவனைப் பார்த்தேன். குழந்தை பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் பாட்டுக் கேட்க ஆரம்பித்திருக்கிறான். வெறி உச்சந்தலைக்கு ஏறியது. அவர்களை என்னால் செய்ய முடியும்? அந்தக் காதும் தலையும் நசுங்கிப் போகும்படி லாரி ஏறட்டும் என்று சபித்தேன். அவனுக்கு பிள்ளை இருந்தாலும் சரி, குடும்பம் இருந்தாலும் சரி- இந்தச் சாபம் பலித்துவிட வேண்டும் என்றுதான் எல்லை காத்த அய்யனாரிடமும் வேண்டிக் கொண்டேன்.