நாக்கில் சிறு புண் வந்திருந்தது. இது அவ்வப்போது வரும். குறிப்பாக டென்ஷன் ஆகும் போது. பதினேழு வயதிலிருந்தே வாதித்துக் கொண்டுதான் இருக்கிறது. பன்னிரெண்டாம் வகுப்பின் தேர்வு சமயங்களில் ஆப்பு வாங்கிவிடக் கூடும் என்று பயப்பட்ட போதெல்லாம் பொத்தல் விழுந்துவிடும். அப்படியே விட்டுவிட்டால் மூன்று அல்லது நாட்களில் ஆறிவிடும். ஆனால் அதற்குள் ஆளை ஒரு வழியாக்கிவிடும். சோறு உண்பதிலிருந்து யாரிடமாவது பேசுவது வரை எல்லாமே சிரமம்தான்.
இப்பொழுதெல்லாம் அலுவலகத்தில் தாறுமாறான வேலை. பிழிந்து எடுக்கிறார்கள். அது போக எழுத்து, வாசிப்பு, தூக்கமின்மை என்று நானாக டென்ஷனைத் தேடிக் கொள்கிறேன் என்பதால் அவ்வப்போது வாயில் தாண்டவம் நடக்கிறது. வீட்டில் இருப்பவர்களுக்கு கவலையாகிவிட்டது. கேன்சர் ஏதாவது வாங்கிக் கொள்வானோ என்று பயப்பட்டிருப்பார்கள் போலிருக்கிறது, வெளிப்படையாக என்னிடம் சொல்லாவிட்டாலும் மருத்துவரிடம் பார்த்தாக வேண்டும் என்று அரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இங்கு மருத்துவரிடம் சென்றாலே தாளித்துவிடுகிறார்கள்- முந்நூறு ரூபாய்க்கு குறைவில்லாமல் தொடக்க தண்டம் வைக்கிறார்கள்.
அலுவலகத்திற்கு பக்கத்தில் ஒரு மருத்துவமனை இருக்கிறது. கொஞ்சம் பரவாயில்லை. இருநூறுதான் கேட்பார்கள். காட்டிவிடலாம் என்று போயிருந்தேன். விசாரித்த மருத்துவர் எதற்கும் ஒரு சிறுநீர் பரிசோதனை செய்துவிடலாம் என்றார். வாய்க்கும் சிறுநீருக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை. ஆனால் எழுபது ரூபாய்தான். சரி என்றாகிவிட்டது. மாலையில் ரிப்போர்ட் கொடுத்தார்கள். பத்து பதினைந்து கணக்கு எடுத்தால் ஒன்றிரண்டு தவறாக இருப்பது சகஜம்தானே? ஏதோ ஒன்று வித்தியாசமாக இருக்கிறது என்பதால் ‘கல்ச்சர்’ பார்த்துவிடலாம் என்றார்கள். இப்பொழுது வேட்டை ஆரம்பமாகிறது. இந்த ‘கல்ச்சர்’ டெஸ்ட்டுக்கு அறுநூறு ரூபாய் அழ வேண்டும். போய்த் தொலையட்டும் என்று கொடுத்துவிட்டேன்.
அந்த ரிப்போர்ட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தன்னால் பிரச்சினையை முழுமையாக கண்டறிய முடியவில்லை என்றும் ஒரு தோல் சிறப்பு நிபுணரை பார்ப்பதுதான் உசிதம் என்றார். ‘நீங்களே ஒரு நல்ல டாக்டராக சொல்லுங்கள்’ என்றேன். பெயரைச் சொன்னார். அந்த டாக்டரும் பக்கத்தில்தான் இருக்கிறார். நல்லவேளையாக, அவரும் இருநூறு ரூபாய் மருத்துவர்தான். அப்படியே ஒவ்வொரு செலவாக கூட்டிக் கொள்ளுங்கள். கணக்கு பார்த்தால் இந்நேரம் செலவு ஆயிரம் ரூபாயை தாண்டியிருக்கும் பாருங்கள்.
அந்த தோல் டாக்டர் நிறைய கேள்விகளை எல்லாம் கேட்கவில்லை.
‘அவ்வப்போது வருமா’ என்றார்.
‘ஆமாம் டாக்டர்’ என்றேன்.
‘எப்பவாச்சும் ஜிண்டில் வந்திருக்கா?’- ஜிண்டு என்றால் என்னவென்று கேட்கக் கூடாது.
‘ஒரு தடவ வந்திருக்குங்க’ இப்பொழுது முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டேன்.
‘வெளிநாடு போயிருக்கீங்களா?’ இது டாக்டரின் கேள்வி.
‘ஓ...ஏகப்பட்ட தடவை’ சொல்லிவிட்டு முகத்தை பெருமை பொங்க வைத்திருந்தேன்.
‘ஏதாச்சும் தப்புத்தண்டா....’ அவரைக் கேள்வியை முடிக்கவே விடவில்லை ‘நிர்வாணக் கடற்கரைக்கு போயிருக்கேன்..மத்தபடி பிஞ்சு......நெஞ்சு சார்’ அவரும் முடிக்கவே விடவில்லை.
‘ஹெர்பெஸா இருக்கும்ன்னு சந்தேகப்படுகிறேன்’ என்றார்.
‘அதென்ன சார் ஹெர்பெஸ்?’
‘பால்வினை நோய். இரண்டு வகை இருக்கிறது. அநேகமாக இது முதல் வகை. அல்ரெடி infected. பயப்பட வேண்டாம். இந்த டெஸ்ட் எல்லாம் செய்துடுங்க. குறிப்பா வீட்டில் தனியா இருங்க. எச்சில் மூலமாகவும் பரவும்’ என்று அவர் முடித்த போது வியர்த்துப் போனது. பீச்சுக்கு போனால் கூட பால்வினை நோய் பரவும் என்பது தூக்கிவாரிப்போட்டது. அதுவும் இந்த கடற்கரை புனித யாத்திரை எல்லாம் நடந்து இரண்டு மூன்று வருடங்கள் இருக்கும்.
அவர் எழுதிக் கொடுத்த டெஸ்ட்களுக்கு மொத்தமாக மூவாயிரத்து ஐந்நூறு ரூபாய் ஆனது. இப்பொழுது பணம் பெரியதாகத் தெரியவில்லை. என்ன நோய் என்றே தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன். ரத்தம் எடுப்பதற்காக டெஸ்ட் ஊசியை குத்தும் போதிலிருந்தே ஏகப்பட்ட சாமிகளிடம் வேண்டிக் கொண்டேன். ஒரு சாமியிடம் தேங்காய் உடைப்பதாகவும், இன்னொரு சாமியிடம் மொட்டை அடிப்பதாகவும், இன்னொரு சாமியிடம் கோவிலுக்கு வருவதாகவும் எக்ஸெட்ரா, எக்ஸெட்ரா.
ஹெர்பெஸில் இரண்டு வகை இருக்கிறது. முதல் வகை எச்சில் மூலமாகவோ அல்லது தோல் மூலமாகவோ பரவும்- பால்வினை நோய்தான் - ஆனால் ‘மேட்டர்’ நடக்க வேண்டும் என்றெல்லாம் அவசியமில்லை. அமெரிக்காவில் ஐந்தில் ஒருவருக்கும் இருக்கிறதாம். கூகிள் புள்ளிவிவரம் அப்படித்தான் சொல்கிறது. குழந்தைக்கு கூட முத்தம் கொடுக்கக் கூடாதாம். நாம் சாப்பிட்ட தட்டு, காபி குடித்த டம்ளர் என எதன் மூலமாகவும் பரவிவிடும். இதுதான் எனக்கு வந்திருப்பதாகச் சொன்னார்.
இரண்டாம் வகை ஹெர்பெஸ் உடலுறவின் மூலம் பரவுகிறது. எதற்கும் அதையும் டெஸ்ட் செய்துவிடலாம் என்று எழுதிக் கொடுத்திருந்தார்.
ஹெர்பெஸ் வந்தால் ஆளைக் கொன்றுவிடாது. ஆனால் இதற்கு வைத்தியமே கிடையாது. ஆனால் ஒன்று- இந்த வைரஸை நம் உடலை விட்டு எந்தக் காலத்திலும் துரத்தவே முடியாது. நம் நரம்புக்குள் போய் தங்கிக் கொள்ளும். அதற்கு Mood வரும் பொழுதெல்லாம் வாயில் புண் ஆக்கிவிடும். எப்பவாவது ஜிண்டு, கைவிரல்கள் என்றெல்லாம் கூட புண் ஆக்கிவிடும். அதே சமயம் மற்றவர்களுக்கும் பரவிவிடும் என்பதால் நம் வாழ்க்கை முறையையே மாற்ற வேண்டியிருக்கும். தனி தட்டு, தனி சோப்பு, தனி டம்ளர் என்று நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொள்வதுதான் நல்லது. கிட்டத்தட்ட வாழ்க்கையே சிறைச்சாலை மாதிரிதான்.
பரிசோதனைக்காக ரத்தத்தைக் கொடுத்துவிட்டு வந்ததிலிருந்து இதைப் பற்றித்தான் இணையத்தில் படித்துக் கொண்டிருந்தேன். இனிமேல் என்ன செய்ய வேண்டும், மற்றவர்களுக்கு எப்படிச் சொல்லி புரியவைப்பது என்ற கேள்விகளுக்கான விடை தேடுவது மிகச் சிரமமாக இருந்தது. எல்லாவற்றையும் விடக் கொடுமை மகனை எப்படி விலகச் சொல்வது என்று யோசித்த போது அழுகை வந்துவிட்டது.
தற்கொலை செய்து கொள்வதும் கூட ஒரு விதத்தில் நல்லதுதான். தெரிந்தோ தெரியாமலோ என் மூலமாக மற்றவர்களுக்கு பரவாமலாவது தடுக்கலாம். ஆனால் குடும்பத்தை நிராதரவாக விட்டுப் போவதைவிடவும் அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியாது. அதனால் என்ன முடிவெடுப்பதாக இருந்தாலும் ரிஸல்ட் வந்த பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றிருந்தது. ஆனால் பதட்டம் தாறுமாறாக எகியிருந்தது.
ஒவ்வொரு மணிக்கும் ஒரு முறை ஆய்வகத்திற்கு என்னையும் அறியாமல் ஃபோன் செய்திருந்தேன். மதியம் ஒரு மணிக்கு அழைத்த போது மாலை ஆறு மணிக்குத்தான் ரிசல்ட் கொடுக்க முடியும் என்றார்கள். வேலை எதுவும் செய்யப்பிடிக்கவில்லை. அலுவலகத்திற்கு வெளியிலிருக்கும் புல்வெளியிலேயே அமர்ந்திருந்தேன். நான்கரை மணி ஆகியிருந்தது. மருத்துவமனையிலிருந்து அழைப்பு. ரிஸல்ட் வந்துவிட்டது. ‘ரிப்போர்ட்டில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?’ என்று கேட்ட போது ‘அதை டாக்டர்தான் சொல்ல முடியும்’ என்று சொல்லிவிட்டார்கள். அடுத்த ஐந்து நிமிடத்தில் மருத்துவமனையில் இருந்தேன். மருத்துவர் வேறு யாருக்கோ வைத்தியம் செய்து கொண்டிருந்தார். காத்திருந்த ஒவ்வொரு நிமிடமும் கடும் மன உளைச்சலைத் தந்து கொண்டிருந்தது.
சில நிமிடங்களுக்கு பிறகு உள்ளே அழைத்தார்கள். மருத்துவர் சில நிமிடங்கள் ரிப்போர்ட்டைத் திருப்பித் திருப்பி படித்துக் கொண்டிருந்தார். ஏதோ பிரச்சினை இருக்கும் போலிருக்கிறது என நம்பத் தொடங்கிவிட்டேன். பொறுமையாக கண் கண்ணாடியை சரி செய்தவர் ‘ரிப்போர்ட் நார்மல்’ என்றார். அப்பாடா! உயிர் திரும்ப வந்து ஒட்டிக் கொண்டது. ‘எனக்கு ஏற்கனவே தெரியும் சார்’ என்றேன். அவர் சிரித்தார்.
‘இது டென்ஷன் காரணமாக வரும் வாய்ப்புண். பி காம்ப்ளக்ஸ் மாத்திரை பதினைந்து நாட்களுக்குத் தருகிறேன்’ என்றார். இப்பொழுது எனது அத்தனை டென்ஷனும் குறைந்து கோபம் மம்மானையாக வந்தது. டென்ஷன் காரணமாக வருகிறது என்பது எனக்கு பதின்மூன்று வருடங்களுக்கு முன்பாகவே தெரியும். பி காம்ப்ளக்ஸ் எடுத்துக் கொண்டால் நிவாரணம் கிடைக்காது என்பதும் எனக்குத் தெரியும். மெளனமாக அமர்ந்திருந்தேன்.
பிரிஸ்கிரிப்ஷன் எழுதத் துவங்கினார். மனம் செலவுக் கணக்கை ஆரம்பித்திருந்தது. ரிப்போர்ட் செலவு, மருத்துவருக்கான ஃபீஸ் எல்லாம் சேர்த்து ஐந்தாயிரத்தை தொடும் என்ற போது ஆத்திரமாக வந்தது. பிரிஸ்கிரிப்ஷனில் பி காம்ப்ளக்ஸ் பதினைந்து எழுதிக் கொடுத்துவிட்டு சிரித்தார். வெளியே வந்து கிழித்து வீசிவிட்டு வந்தேன்.
உண்மையிலேயே பரிசோதனை செய்து பார்க்க வேண்டிய அவசியம் இருந்திருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் செய்ய வைத்துவிட்டார்கள். என் மூலமாக குழந்தைக்கும் பரவும் என்று பயமுறுத்தினார்கள். அதனால்தான் பரிசோதனைகளுக்கே சம்மதித்தேன். கடைசியில் ஒன்றுமில்லை. ‘ஒன்றுமில்லை’ என்பதைச் சொல்ல ஐந்தாயிரம் ரூபாய் செலவு. இத்தனை செலவு செய்து பிக்காஸூல்ஸ் வாங்கிச் செல்லும் இனாவானா நானாகத்தான் இருக்கும். செலவு கூட தொலைகிறது என்று விட்டுவிடலாம். இரண்டு நாள் அவர்கள் ஏற்றிய டென்ஷன் இருக்கிறது பாருங்கள். இந்த டென்ஷன் காரணமாகவே புதிய புண் இன்னும் இரண்டு நாட்களில் உருவாகிவிடும். ஆனால் வாயில் மட்டும் வந்தால் பரவாயில்லை. எகிறிய பி.பிக்கு எல்லா இடங்களிலும் வரும்.