Sep 8, 2013

குடிகாரன் பேட்டை

நாம் ஒரு குடிகார சமூகத்தில்தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இதில் என்ன சந்தேகம்? பெங்களூர் நகரின் எல்லையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர்தான். அங்கிருந்து கிளம்பினால் பத்து நிமிடங்களில் தமிழ்நாட்டுக்குள் நுழைந்துவிடலாம். ஓசூர் வழியாக உள்ளே நுழையும் போதே குடலைப் புரட்டத் துவங்குகிறது ஆல்கஹாலின் நெடி. அதுவும் பேருந்தில் பயணித்தால் கேட்கவே தேவையில்லை. அதிகாலையோ, நள்ளிரவோ- குறைந்தபட்சம் ஏழெட்டு பேராவது போதையேறிய கண்களுடனும், குழறும் நாவுடனும், மூக்கைத் துளைக்கு நாசியுடனும் நம்மை கடந்து போகிறார்கள்.

தமிழ்நாட்டில் மட்டும்தான் குடிக்கிறார்களா?பெங்களூரிலும் மற்ற மாநிலங்களிலும் குடிகாரர்களே இல்லையா என்று கேட்காதீர்கள். இருக்கிறார்கள். ஆனால் அவிழ்த்துவிட்ட கழுதையைப் போலவோ அல்லது காணாத நாய் கருவாட்டைக் கண்டது போலவோ தறிகெட்டு குடிப்பவர்கள் இங்குதான் அதிகம். குடித்துவிட்டு ரகளை செய்பவர்களும் இங்குதான் அதிகம். 

வேலைக்குச் செல்பவர்கள், கல்லூரி மாணவர்கள், வெட்டியாகத் திரிபவர்கள் என்று எந்தப் பிரிவையும் விட்டுவைக்காமல் குடிக்க வைத்து பழக்கிக் கொண்டிருக்கிறோம். அரசாங்கம்தான் வெறும் பணத்துக்காக புத்திகெட்டுத் திரிகிறது என்றால் காட்சி ஊடகங்களும் போதையை தங்களின் கச்சாப் பொருளாக்கி காசு பார்க்கின்றன. பாட்டிலையும் பிராந்திக்கடையையும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட பாடல் காட்சியோ, துக்கக் காட்சியோ இல்லாத படங்களே இப்பொழுது வருவதில்லை போலிருக்கிறது. Rain song இருக்கிறதோ இல்லையோ Bar song ஐ கட்டாயம் ஆக்கிவிட்டார்கள். கதாநாயகன் குடிப்பவனாக, குடித்துவிட்டு அடுத்தவனிடம் லோலாயம் செய்பவனாகக் காட்டுவதை பெருமையாக்கி வைத்திருக்கிறார்கள். அதையே அச்சுபிசகாமல் சில சில்வண்டுகள் பேருந்து நிலையத்திலும், பூங்காக்களிலும் முயற்சித்துப் பார்க்கின்றன. இந்தவாரத்தில் அப்படியொரு கொடுமையை பார்க்க நேர்ந்தது. தனியாகவே அதைப் பற்றி எழுதலாம்.

இப்பொழுதெல்லாம் ‘சரக்கடித்துவிட்டு’ மற்றவர்களுடன் புழங்குவது என்பது ஒரு சாதாரண விஷயமாக இருக்கிறது. சாதாரண விஷயம் என்பதைவிடவும் கெத்தான விஷயமாக இருக்கிறது என்பது பொருத்தமானதாக இருக்கும். முன்பெல்லாம் ‘குடிகாரனா?’ என்று முகத்தைச் சுளிப்பவர்கள் அதிகமாக இருந்தார்கள். இப்பொழுதெல்லாம் ‘குடிக்கறது சகஜம்’ என்று ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருக்கிறது. பயணங்களின் போது, திரையரங்கங்கள் போன்ற பொதுவிடங்களில் போதையுடன் சுற்றுபவர்களை சகித்துக் கொள்வது எப்படி என்பதை பழகிக் கொண்டுவிட்டோம். வேலைக்கும், கல்லூரிக்கும் போதையோடு வருகிறார்கள் என்பதை ஏற்றுக் கொண்டாலும் பள்ளிக்கு போதையோடு வருகிறார்கள் என்பதைத்தான் அவ்வளவு எளிதில் ஜீரணிக்க முடியவில்லை.

ஆனால் பழனிச்சாமி வாத்தியார் அப்படித்தான் சொன்னார். அவர் எங்கள் அப்பாவின் நண்பர். வரும் மே மாதத்தோடு ஓய்வு பெறப் போகிறார். நாங்கள் படித்த சமயத்தில் அவரைக் கண்டு பயப்படுவோம். வீட்டுப்பாடம் செய்யாமலிருந்தாலோ அல்லது குறும்பு செய்தாலோ முட்டியை மடக்கச் சொல்லி நொறுக்கிவிடுவார். அடித்ததனால் ஒன்றும் நட்டமில்லை. புள்ளிவிவரம் சரியாக இருக்குமானால் அவரது தொண்ணூறு சதவீத மாணவர்கள் ‘உருப்பட்டவர்கள்’தான். 

கடைசியாக அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது விளையாட்டாக ‘இப்பவும் அடிக்கறீங்களா சித்தப்பா?’ என்றதற்குத்தான் ‘குடிச்சுட்டு வர்றானுங்க’ என்று புலம்பினார். பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் போதையோடு அமர்ந்திருக்கிறார்களாம். இருந்தாலும் கூட அவ்வளவு சீக்கிரம் யாரையும் அடித்துவிடவும் திட்டிவிடவும் முடிவதில்லை. முன்பெல்லாம் வாத்தியார் அடித்தால் அதிகபட்சம் பெற்றோரைத்தான் பஞ்சாயத்துக்கு அழைத்து வருவார்கள். இப்பொழுதெல்லாம் ஜாதிச்சங்கங்களில் ஆரம்பித்து மதவாதக் கட்சிகள் வரைக்கும் யார் யாரையோ பள்ளிக்குள் அழைத்து வந்து பஞ்சாயத்து செய்கிறார்களாம். இந்தத் தறுதலைகளை திருத்த வேண்டும் என எதற்கு வாத்தியார்கள் மெனக்கெட வேண்டும்?

இந்தக் குடியும் போதையும் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளைப் போக்குகிறது என்று ஒரு அசடு எழுதியிருந்ததை வாசித்தேன். எவ்வளவு அபத்தம் இது? தமிழ்நாட்டில் எந்தக் கவுண்டன் சக்கிலியுடன் அமர்ந்து குடிக்கிறான்? எந்த வன்னியன் ஒரு பறையனுடன் சேர்ந்து சாராயம் அருந்துகிறான்? எந்தத் தேவன் ஒரு பள்ளனை தன்னோடு சேர்த்துக் கொண்டு மதுக்கடைக்கு போகிறான்? எதுவுமே நடப்பதில்லை. குடியை Justify செய்வதற்கான சில சாக்காடுகள் தேவைப்படுபவர்கள்தான் குடி என்பது மன ஆறுதல், தன்னிலை மறத்தலுக்கான வஸ்து என்று கதைகளை அடுக்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் குடி இந்தச் சமூகத்துக்கு செய்து கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான் - சீரழிவு.

குடிப்பது தவறு என்றோ அல்லது குடிக்கவே கூடாது என்றோ உபதேசம் செய்யவில்லை. குடிக்கு எதிராக இவன் பொங்குகிறான் என்று கூட நீங்கள் நினைக்க வேண்டாம். குடிக்கு நான் எதிரி இல்லை. எவனோ குடித்தால் குடித்துவிட்டு போகட்டும். ஆனால் எல்லாவற்றிலும் ஒரு அடிப்படையான நாகரிகம் இருக்கிறது அல்லவா? குறைந்தபட்ச வரைமுறை வேண்டாமா? 

அப்படியான எந்த நாகரிகமும் இல்லாமல், வரையறை இல்லாமல் குடித்துக் கொண்டிருக்கும் சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் அயற்சியாக இருக்கிறது. குடித்துவிட்டு அடுத்தவனை மிரட்டுகிறார்கள், தமது குடும்பத்தைச் சிதைக்கிறார்கள், குற்றங்களில் ஈடுபடுகிறார்கள், பொதுவான நியதிகளை எந்தக் கவலையும் இல்லாமல் மீறுகிறார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாத மனநிலையை இந்த போதை சமூகத்துக்கு துரித கதியில் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தின் எந்த நடவடிக்கைக்குமான பிரதிபலன் இருபத்தைந்து ஆண்டுகள் கழித்துத்தான் தெரியும். இட ஒதுக்கீடு, மொழிக் கொள்கை, மதிய உணவுத் திட்டம் என எல்லாவற்றின் நன்மை, தீமைகளும் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு பிறகே தெளிவாகத் தெரிந்திருக்கிறது. ஆனால் குடியின் சமூகப் பலன்களையும் விளைவுகளையும் பார்க்க இன்னும் இருபது ஆண்டுகளுக்கெல்லாம் காத்திருக்கத் தேவையில்லை. அதிகபட்சமாக பத்து ஆண்டுகள் போதும்.

சென்றவாரம் வாய்க்கால் ஓரமாக ‘வாக்கிங்’ சென்ற பழனிச்சாமி வாத்தியாரை ஒரு குரல் அழைத்திருக்கிறது. புதருக்குள் இருந்து வந்த அழைப்பை உதாசீனப்படுத்திவிட்டு நகர்ந்தவரிடம் வந்த மூன்று மாணவர்கள் ‘சும்மா சரக்கு சாப்பிடலாம்ன்னு வந்தோம் சார்’ என்றிருக்கிறார்கள். வாத்தியாரிடமே தங்களின் செயலைப் பற்றிச் சொல்லி கெத்து காட்டுகிறார்களாம். இவர்கள் என்ன படிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? எட்டாம் வகுப்பு மாணவர்கள். குடிகாரர்களிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் ‘மவராசனுகளா குடிங்க சாமி’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தாராம். அதைச் சொல்லும் போது அவரது சொற்களில் அத்தனை கசப்பு தெரிந்தது. அத்தனை வேதனை கொப்புளித்தது.

பார்த்துக் கொண்டே இருக்கிறோம்- படிப்பறிவில் கோட்டை விடப் போகும், உழைப்பில் சோடை போன, சுய அறிவை இழந்த, அடிப்படை ஒழுக்கம் இல்லாத, மடத்தனங்களால் நிரம்பிய ஒரு குரூரமான சமூகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அதன் மொத்தப் பெருமையும் கலைஞருக்கும், புரட்சித்தலைவிக்கும்தான் சேரும். 

வாழ்க தமிழகம்!