Sep 4, 2013

வெற்றிக்கு குறுக்கு வழி

படிப்போ, வேலையோ தற்போதைய நிலையை விடவும்  ஒரு ஸ்டெப் அதிகமாக வைக்க மாட்டோமா என்று நினைப்பதுதானே மனசு? இந்த முறை பத்தாவது ரேங்க் எடுத்தால் அடுத்த முறை ஐந்துக்குள் எடுக்க வேண்டும். ஒருவேளை ஐந்துக்குள் இருந்தால் அடுத்த முறை முதலிடம். முதலிடமாக இருந்தால் ஐநூறுக்கு ஐநூறு மதிப்பெண் பெற்றுவிட வேண்டும். சம்பளமும் அதே மாதிரிதானே? வாங்கிக் கொண்டிருப்பதைவிடவும் அடுத்த வருடம் ஐந்து சதவீதமாவது கூடுதலாக வந்தால் பரவாயில்லை. எல்லாவற்றிலும் ஒரு துரத்தல். இப்படியேதான் ஓடிக் கொண்டிருக்கிறோம்- எல்லாவற்றையும் துரத்திக் கொண்டு.

எதுக்கு இந்த ஃபிலாசபி? 

சில கேள்விகள் மேலோட்டமாக பார்த்தால் மொன்னையாகத் தெரியும். ஆனால் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் வெளிச்சத்தை கொடுத்துவிடும். அப்படித்தான் ஒரே மின்னஞ்சலில் மூன்று கேள்விகள். ஒரு புண்ணியவான் அனுப்பியிருந்தார். “இந்த வருடம் உங்களின் புத்தகம் ஏதாவது வருகிறதா? கடைசியாக எழுதிய கவிதை என்ன? வலைப்பதிவில் தொடர்ந்து எழுதுவதால் உங்களின் எந்த டார்கெட் பூர்த்தியாகிறது?”

வேதம் புதிது படத்தில் சிறுவனிடம் அறை வாங்கும் சத்யராஜ்தான் நினைவுக்கு வந்தார். உண்மையில் மூன்று கேள்விகளுக்குமே என்னிடம் எதிர்மறையான பதில்கள்தான் இருக்கின்றன. இந்த வருடம் எந்தப் புத்தகமும் வெளிவரப் போவதில்லை. கடைசியாக கவிதை எழுதி சில மாதங்கள் ஓடிவிட்டன. வலைப்பதிவில் எழுதுவது கால் போன போக்கில் நடப்பது போலத்தான். 
ஆக அடுத்த ஸ்டெப் என்று எதுவுமே இல்லை. என்னளவில் இது துக்கம்தான். வெளிப்படையாக பேசினால் சக்ஸஸூக்கு ஷார்ட் கட் எல்லாம் எதுவும் இல்லை. வெறித்தனமாக உழைத்தால் மட்டும் போதாது. திட்டமிட்டும் உழைக்க வேண்டும். வெறி இருக்கிறது- திட்டம்தான் இல்லை. 

ஒரு நிமிடம். உங்களை ஏன் டார்ச்சரிக்கிறேன்? ரிவர்ஸ் கியர் போடலாம்.

சக்ஸஸூக்கு ஷார்ட் கட் இல்லை என்பதே எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? இந்த உலகத்தில் எல்லாவற்றிற்குமே ஷார்ட்கட் உண்டு. ஆனானப்பட்ட குழந்தை பெறுதலிலேயே சோதனைக் குழாய், வாடகைத் தாய் என்று விதவிதமான பெயரில் குறுக்கு வழியைக் கண்டுபிடித்துவிட்டார்கள். பிறகு வேறு எதில்தான் குறுக்குவழியைக் கண்டுபிடிக்க முடியாது?

பாலாஜி என்று ஒரு பையன் இருந்தான். வொயிட் க்ராஸ். எட்டாம் வகுப்பு படிக்கும் போதே மந்திரங்கள் எல்லாம் அவனுக்கு அத்துப்படி. படிப்பு வருவதற்கு, ஞாபக சக்தி வளர்வதற்கு, வீட்டில் அடி வாங்காமல் இருப்பதற்கு என எல்லாவற்றிற்கும் அவனிடம் மந்திரங்கள் இருந்தன. ஆனால் அவற்றையெல்லாம் மனப்பாடம் செய்வதற்குள் எங்களுக்குத்தான் தாவு தீர்ந்தது. பாலாஜிதான் தொப்புளுக்கு கீழாக ட்ரவுசர் போட்டால் அறிவு எல்லாம் தொப்புள் வழியாக ஓடிவிடும் என்று எங்களுக்கு சொல்லித் தந்தான். அதன் பிறகு பல வருடங்களுக்கு நெஞ்சு வரைக்கும் ட்ரவுசர் போட்டு சுற்றிக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாக பாலாஜி சினிமாவுக்குள் வரவில்லை. அத்தனை நடிகைகளையும் அப்-ஹிப் ஆக்கியிருப்பான்.

மந்திரங்களையே அத்தனை சாவகாசமாக மனனம் செய்யும் பாலாஜிக்கு பாட புத்தகமெல்லாம் எம்மாத்திரம்?  எங்களோடுதான் ட்யுஷன் படித்தான். நாங்கள் துப்பார்க்குத் துப்பாயவிலேயே துப்பிக் கொண்டிருக்கும் போதே அவன் புற நானூறு, கலிங்கத்துப் பரணியெல்லாம் முடித்துவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிடுவான். பெரும்பாலும் அவன் முதல் ரேங்க்தான். ஒன்பதாம் வகுப்பில் ஈரோட்டு பள்ளிக்கு மாற்றிவிட்டார்கள். பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஈ முடித்து ஓரிரு வருடங்களிலேயே அமெரிக்காவும் போய்விட்டான்.

பாலாஜி பற்றி ஆரம்பித்ததே அவனது ஷார்ட்கட் டெக்னாலஜியை பற்றி பேசத்தான். அதைவிட்டு ஏதோ புராணம் பேசிக் கொண்டிருக்கிறேன். 

பாலாஜி எல்லாவற்றிலும் குறுக்கு வழி வைத்திருப்பான். கணிதத்தில் பகுதி (denominator) தொகுதி (Numerator) என்ற வார்த்தைகள் தாறு மாறாக குழப்பியடித்த காலம். எது கோட்டுக்கு மேலே வரும், எது கோட்டுக்கு கீழே வரும் என்று அடிக்கடி குழப்பம் வந்துவிடும். பாலாஜி ஒரு ஐடியா கொடுத்தான். கோட்டுக்கு மேலே இருப்பது தொகுதி- ‘தொப்பின்னு  ஞாபகம் வெச்சுக்க அது எப்பவும் மேலேதான் இருக்கும்’ அதே மாதிரிதான் கோட்டுக்கு கீழே இருப்பது பகுதி- ‘பன்னாவுக்கு பன்னா, பாதம்ன்னு ஞாபகம் வெச்சுக்கு பாதம் எப்பவும் கீழேதான் இருக்கும்’ என்று சொல்லிக் கொடுத்தான். இன்றைக்கு வரைக்கும் மறக்கவில்லை.

இப்படித்தான் Prefix, suffix குழப்பங்கள், கெமிஸ்டரி வாய்ப்பாட்டு எரிச்சல்கள் என பெரும்பாலானவற்றிற்கு பாலாஜியிடம் ஷார்ட்கட் இருந்தது. இந்த ஐடியாவெல்லாம் எங்கிருந்து பிடித்து வருகிறான் என்று தெரியாது. ஆனால் மிக உபயோகமானதாக இருக்கும்.

அப்படியிருந்த பாலாஜிதான் ஒன்பதாம் வகுப்பில் எங்களை விட்டுச் சென்று, கல்லூரி முடித்த பிறகு நாட்டை விட்டே சென்றுவிட்டான். இந்நேரம் ஏதாவது கம்பெனியில் பெரிய ஆளாக இருப்பான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லையாம். அமெரிக்காவில் புரோகிதர் ஆகிவிட்டான். சங்கர்தான் பாலாஜியைப் பற்றி விலாவரியாகச் சொன்னான். எங்கள் இருவருக்குமே சங்கர் பொதுவான நண்பன்.

பாலாஜிக்கு திருமணம் ஆகிவிட்டது. மனைவி ஐ.டியில் இருக்கிறாள். பாலாஜிதான் வருடம் முழுவதும் பிஸி. பெயர் வைப்பதில் ஆரம்பித்து பிண்டம் கொடுப்பது வரை எல்லாவற்றிற்கும் அவனை புக் செய்து கொள்கிறார்களாம். விமானத்தில் டிக்கெட் எடுத்துக் கொடுத்து டாலரில் பண முடிப்பை கொடுக்கிறார்கள் என்பதால் ஏதாவதொரு கம்பெனியில் எவனுக்கோ ஷூ துடைப்பதைவிட இது பல மடங்கு ஒஸ்தி என நினைத்திருப்பான் போலிருக்கிறது. 

இப்பொழுது பாலாஜி அமெரிக்காவின் பச்சை அட்டையை வாங்கிவிட்டானாம். சங்கர் அவனுடையை மெயில் ஐடியையும் கொடுத்திருந்தான். பாலாஜிக்கு விலாவரியாக ஒரு கடிதம் அனுப்பியிருந்தேன். அவன் எழுதியதில் பிடித்த மூன்று வரிகளை பதிவு செய்தாக வேண்டும். நான் எழுதிய கடிதமும் அவனது பதிலும் கீழே-

“.............. புரோகிதர் வேலை பிடித்திருக்கிறதா? படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லை என்று வருத்தம் இல்லையா?.................................”


“.............. வேலையைப் பற்றி கேட்டிருந்தாய், நீ செய்யும் வேலைக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தம் இருக்கிறதா? கண்டிப்பாக இருக்காது என நம்புகிறேன். இப்பொழுது உலகில் முக்கால்வாசிப் பேருக்கு இதுதான் நிலைமை. என்ன வேலை செய்கிறோம் என்பதை விடவும் எவ்வளவு திருப்தியாக சம்பாதிக்கிறோம் என்பது முக்கியம் என நினைக்கிறேன். இப்பொழுது நான் திருப்தியாக இருக்கிறேன். அதையெல்லாம் விட வாழ்க்கையில் சக்ஸஸ் முக்கியம். சக்ஸஸூக்கு ஷார்ட் கட் உண்டு. சில பேர் அந்த குறுக்கு வழிகளை முயற்சிக்கிறோம். பல பேர் முயற்சிப்பதில்லை. என்னைப் பொறுத்தவரையில் Short cut is my passion......."