Sep 29, 2013

மேட்டுக்குடி இலக்கிய மீட்டிங்

பெங்களூரில் வெள்ளிக்கிழமையிலிருந்து ‘பெங்களூர் இலக்கியத் திருவிழா’ நடைபெற்று வருகிறது. எலெக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் வேளாங்கண்ணி பார்க்தான் இடம். சனிக்கிழமையன்று அசோகமித்திரன் கலந்து கொள்வதாக நிகழ்ச்சி நிரலில் இருந்தது. சென்றிருக்க வேண்டும். ஆனால் வேறொரு வேலையின் காரணமாக  ‘மிஸ்’ ஆகிவிட்டது. குறைந்தபட்சம் ஞாயிற்றுக்கிழமையாவது முழுமையாக மேய்ந்துவிட வேண்டும் என்றிருக்கிறேன்.

நம் ஊர் இலக்கியக் கூட்டங்களைப் போன்று இந்த பெங்களூர் திருவிழாக்கள் நடப்பதில்லை. சேலத்திலோ, மதுரையிலோ கூட்டம் நடந்தால் உள்ளே நுழைவதற்கு முன்பாகவே ‘வா மச்சி’ என்று கணேசகுமாரனோ, இசையோ வந்து கட்டிப்பிடிப்பார்கள். கூட்டத்தில் முக்கால்வாசிப் பேருக்கு டாஸ்மாக் தீர்த்தம் தெளித்துவிடப் பட்டிருக்கும். கவிதையும் சரி, கட்டுரையும் சரி சிகரெட் நெடியில்லாமல் ஒரு வரி கூட வளராது. ஆனால் இங்கு அதெல்லாம் நஹி. ‘குசுகுசு’ என்றுதான் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசிக் கொள்வார்கள். பல் தெரியாத அளவுக்கு மில்லிமீட்டர் அளவில் மட்டுமே சிரிப்பார்கள்- இதெல்லாம்தான் பந்தாவாம். பாப் கட் அடித்த பெண்கள், Frame இல்லாத மூக்குக் கண்ணாடி அணிந்த ஆண்கள் என்று ஏரியாவே சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும்.

கூட்டம் நடக்கும் போதும் அப்படித்தான் - நம் ஊரில் ‘ங்கோத்தா இது செமயான வரிடா’ என்று யாராவது சில குபீர் வார்த்தைகளைத் தெளிப்பார்கள். ஒரு படைப்பாளியை வாருவதும், வாரப்படுபவனை வேறொருவன் காப்பதுமாக ஒரு Liveliness இருக்கும். இந்த பெங்களூர் கூட்டத்தில் அதையெல்லாம் எதிர்பார்க்க முடியாது. நாகரீகமாக நடந்து கொள்வதாக நினைத்துக் கொண்டு முடிந்தவரை பற்களைக் கடித்துக் கொண்டே அமர்ந்திருப்பார்கள். கன்னத்தை கைகளால் தாங்கிப்பிடித்தோ அல்லது மோட்டுவளையைப் பார்த்துக் கொண்டோ அறிவுஜீவி பிம்பத்தை உருவாக்க படாதபாடு பட்டுக் கொண்டிருப்பார்கள்.

நீண்ட முடி வளர்த்து பின்னால் ரப்பர் பேண்ட் போட்டு முடிச்சு வைத்துக் கொண்ட யுவன்கள் கூட்டத்தினூடாக அதற்கும் இதற்குமாக அலைந்து கொண்டிருப்பார்கள். பார்ப்பதற்கு லட்சணமான அத்தனை இலக்கிய யுவதிகளும் அவர்களிடம் மட்டும்தான் பேசுவார்கள். ஒருவேளை அந்த இளைஞர்கள் இல்லையென்றால் நரைத்துப் போன பிரெஞ்ச் தாடி கிழவன்கள் யாரிடமாவது பேசிக் கொண்டிருப்பார்கள். நம்மையெல்லாம் துரும்பாகக் கூட மதிக்கமாட்டார்கள்.

Frame இல்லாத கண்ணாடி அணிந்த இலக்கியப் பெரும்புள்ளிகளின் கூட்டங்களில் கலந்து கொள்வதில் ஒரு சங்கடம் இருக்கிறது. பெங்களூரில் முன்பு இந்த மாதிரியான சில மேட்டுக்குடி நிகழ்வுகளுக்குச் சென்றிருக்கிறேன். இது போன்ற கூட்டங்களை தங்களை பிரஸ்தாபித்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறார்களோ என்று தோன்றும். எதிரில் நிற்பவனை ஒரு தூசு மாதிரிதான் பார்ப்பார்கள். ‘எனக்கு நீ பிஸ்கோத்து’ என்கிற மாதிரி. அவர்களைச் சொல்லியும் பிரச்சினை இல்லை. சமகால இந்திய இலக்கியத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்து வைத்திருந்தால் நாமும் ஏதாவது வாயை விடலாம். தற்கால தெலுங்குக் கவிஞர்கள், உருது சிறுகதையாளர்கள் என்று யாரைப் பற்றியுமே தகிடுதத்தம்தான். அப்படியே தெரிந்திருந்தாலும் கூட பேச வாயெடுத்தால் ஆங்கிலமே கூட கொங்குத் தமிழின் உச்சரிப்பில்தான் வந்து விழும். பிறகு எதைப் பேசுவது? ‘வேடிக்கை பார்க்க வந்தணுங்கண்ணா’ என்று சொல்லிவிட்டு ஓரமாக அமர்ந்து கொள்வதுதான் உசிதம்.

இந்த திருவிழாவிற்கு வந்திருப்பவர்கள் என்னதான் டகால்ட்டிகளாக அவர்கள் வந்திருந்தாலும், நமக்கு எவ்வளவுதான் தாழ்வுணர்ச்சி இருந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளவே கூடாது. யாரென்றே தெரியாத கல்யாண வீட்டில் நுழைந்து பந்தியில் அமரும் போது எந்த ரியாக்‌ஷனையும் முகத்தில் காட்டிவிடக் கூடாது அல்லவா? அதே கான்செப்ட் இந்த நிகழ்ச்சிக்கும் பொருந்தும். மார்க்வெஸ்ஸை கரைத்துக் குடித்தவனைப் போலவும், நெரூடாவுக்கு பக்கத்து வீட்டுக்காரனைப் போலவும் நம் மனதுக்குள் நம்பிக் கொண்டே திரிய வேண்டும்.

நாமும் அவ்வப்போது மேடையில் இருப்பவரின் கண்களையே உற்றுப் பார்த்துக் கொண்டு நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கலாம், அவ்வப்போது பேனாவைத் திறந்து குறிப்பெடுப்பது போல பாவ்லா காட்டிக் கொள்ளலாம், மோட்டுவளையத்தையும் பார்க்கலாம்- இத்தனை அழிச்சாட்டியம் எதற்கு? 

மலையாளத்திலும், பஞ்சாபியிலும், பெங்காலியிலும் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள இது போன்ற நிகழ்ச்சிகளை விட்டால் அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. அதற்காகத்தான்!

நான் செல்கிறேன். வாய்ப்பிருந்தால் ஒரு எட்டு வாருங்கள்.

மேலதிக விவரங்கள்-http://www.bangaloreliteraturefestival.org