இந்தத் தலைமுறையில் எரோடிக்காக எழுதக் கூடிய தமிழ் எழுத்தாளர்கள் யார் இருக்கிறார்கள்? இந்தத் தலைமுறையில் மட்டுமில்லை- எந்தத் தலைமுறையிலுமே தமிழில் இல்லை என்றுதான் நினைக்கிறேன்- சாரு மட்டும் விதிவிலக்கு. மற்றபடி தி.ஜானகிராமன், ஜி.நாகராஜன் போன்றவர்கள் எழுதியவற்றை எரோடிக் என்றெல்லாம் சொல்ல முடியாது. Soft porn என்று வேண்டுமானால் சொல்லலாம்.
இப்படி குத்துமதிப்பாக தீர்ப்பு சொல்லிவிட்டு போனால் விடமாட்டார்கள். சட்டைக் காலரைப் பிடித்து இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று யாராவது கேட்டால்?
Softporn என்றால் துணியைக் கழற்றுவது வரைதான் இருக்கும் பிறகு ஜி.நாகராஜன் பாணியில் இருவரும் ‘ஜலசுத்தி’ செய்து கொண்டார்கள் என்று முடித்துவிடுவது. நடுவில் நடந்ததையெல்லாம் நாமாக யூகம் செய்து கொள்ள வேண்டியதுதான். எரோடிக் அப்படியில்லை- பச்சை பச்சையாக, மஞ்சள் மஞ்சளாக, சிவப்பு சிவப்பாக சொல்லிவிடுவார்கள். அப்படியானால் சரோஜாதேவி புத்தகமும் அதையேதானே சொல்கிறது? பதினைந்து ரூபாய் கொடுத்து அதை வாங்கிப் படித்துவிடலாமே? அங்குதான் இருக்கிறது சூட்சுமம்.
இந்த வித்தியாசத்தைத் தான் பெங்களூர் இலக்கிய விழாவில் தெளிவாக புரிய வைத்தார்கள். அதைச் சொல்வதற்கு முன்பாக-
நேற்று ‘ஏனோதானோ’ என்றுதான் நிகழ்விற்கு சென்றிருந்தேன். ஆனால் எதிர்பார்த்ததற்கு எந்த பங்கமுமில்லாமல் விதவிதமான ஆடைகளில் நவநாகரீக பெண்கள் சுற்றிக் கொண்டிருந்தார்கள். பெண்களுக்கு மட்டும்தான் அந்தக் கொடுப்பினை இருக்கிறது. கிழிந்த துணியை மேலே போர்த்திக் கொண்டு வந்தாலும் ஃபேஷன் என்று சொல்லிவிடுகிறார்கள். தொடைக்கு கீழே கிழித்துக் கொண்டாலும் ஃபேஷன் என்கிறார்கள். பெங்களூர் பெண்கள்- படித்த பெண்கள்- ஜீன்ஸ் பெண்கள்- புடவையே இதுவரை கட்டியதில்லையோ என நினைக்குமளவிற்கு அபாய கட்டத்தில் புடவை உடுத்தியவர்கள் என்று வகைவகையாக பார்த்ததில் மாலையில் வீடு திரும்பும் போது கண்கள் இரண்டும் செக்கச் செவே என்றாகிவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
எழுபத்தைந்து ரூபாய்க்கு மசால் தோசை, இத்தனை அட்டகாசமான பெண்கள் என்றெல்லாம் கவனச் சிதறல்கள் இருந்தாலும் நடுவில் கற்றுக் கொள்ள மிச்சம் மீதியும் இருந்தது. மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் கவிதை வாசித்தார். பத்திரிக்கையாளர் சுனில் சேத்தி பேசினார். த்ரில்லர் நாவல்களைப் பற்றிய விவாதம் இருந்தது. அதையெல்லாம் விடவும் ‘எரோட்டிகா’ பற்றி தனி அரங்கமே இருந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமையை முழுமையாகத் தொலைத்தாலும் பரவாயில்லை. ஜென்ம சாபல்யம் அடைந்தாயிற்று.
அரங்கு வழிந்தது என்பார்களே- அதை நேரடியாகப் பார்த்தேன். வெயிட்டீஸ்! கண்டதை எல்லாம் கற்பனை செய்யாதீர்கள். கூட்டம் நிரம்பி அரங்கம் வழிந்தது. கூட்டத்தில் ஷீபா கரீமும் இருந்தார். ஷீபா கரீமை நீங்கள் முன்பே கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இல்லையென்றால் அவரது வலைத்தளத்தை பார்த்துவிடுங்கள். இந்த அம்மிணிக்கு எத்தனை வயது இருக்கும் என்று தெரியவில்லை. எரோடிக் எழுத்தை தனது அடையாளமாக மாற்றி வைத்திருக்கிறார். மேடையில் ஒரு சிறுகதையை வாசித்துக் காட்டினார். அடேயப்பா! அவர் வாசிக்கும் போதே இதையெல்லாம் தமிழில் வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. முதல் வேலையாக அவரது ஒன்றிரண்டு சிறுகதைகளையாவது மொழியாக்கம் செய்ய வேண்டும்.
ம்ம்..மறந்துவிட்டோம் பாருங்கள்- எரோடிக் x ஃபோர்னோகிராபிக்கு என்ன வித்தியாசம்? வித்தியாசம் இருக்கிறது.
வெறுமனே இரு உடல்களின் அசைவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு எழுதியிருந்தால் அது ஃபோர்னோகிராபி. நடுநடுவே ம்ம், ஆஆஆ, ஸ்ஸ்ஸ் போன்ற ‘மானே தேனே’ மசலாக்கள் இடம் பெற்றிருந்தாலும் கூட அது ஃபோர்ன்தான். அதுவே கதாபாத்திரத்தின் சித்தரிப்பு, அந்த கதாபாத்திரத்தின் ஆழ்மன வேட்கைகள், இன்னொரு உடலை அடைவதில் இருக்கும் சிக்கல்கள், காமத்தின் வலி, அதன் இன்பம் போன்றவற்றையெல்லாம் இழுத்துக் கொண்டு உடல் அசைவுளைப் பற்றிய வர்ணிப்புகளையும் சேர்த்துக் கொண்டு பயணிப்பது எரோடிக். இவனுக்கு இத்தனை அறிவா என்று நீங்கள் ஆச்சரியப்படத் தேவையில்லை. இந்த வியாக்கியானத்தைக் கொடுத்தது நான் இல்லை- அம்மிணி ஷீபாதான்.
இந்த வியாக்கியானத்திற்காகவே ஷீபாவின் புத்தகங்களை உடனடியாக வாங்கிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். நிகழ்விலேயே புத்தகக் கண்காட்சி ஒன்றும் இருந்தது. ஆனால் கடைசி நாள் என்பதால் புத்தகங்களை மூட்டை கட்ட ஆரம்பித்திருந்தார்கள். ஷீபா Skunk girl என்றொரு நாவல் எழுதியிருக்கிறாராம். வயது வந்தவர்களுக்கான சரக்கு அது. அதைத்தான் தேடினேன். ஆனால் தேடிய அவசரத்திற்கு சிக்கவில்லை. அவசரத்தில் தேடினால் அண்டாவாகவே இருந்தாலும் அகப்பை உள்ளே போகாது என்று சும்மாவா சொல்லி வைத்திருக்கிறார்கள்.
கடைசியில் கைக்குச் சிக்கிய அவரது Alchemy என்ற புத்தகத்தை வாங்கி வந்திருந்தேன். சிறுகதைகளின் தொகுப்பு அது. ஆனால் அத்தனை கதைகளும் ஷீபாவால் எழுதப்பட்டதில்லை. தொகுப்பில் ஒரேயொரு கதை மட்டும் அவருடையது. மற்றபடி, புத்தகத்திற்கு அவர் தொகுப்பாசிரியர் மட்டும்தான். புத்தகத்திலிருக்கும் அத்தனை சிறுகதைகளுமே எரோடிக் வகையறா. மொத்தம் பதின்மூன்று கதைகள்- அதில் எட்டுக்கதைகள் பெண்களால் எழுதப்பட்டவை. தமிழிலும் இப்படியெல்லாம் எழுதினால் நன்றாகத்தான் இருக்கும். யார் எழுதி புண்ணியம் தேடிக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.
அதெல்லாம் இருக்கட்டும் புத்தகத்தை வாசித்தாகிவிட்டதா என்றுதானே கேட்கிறீர்கள்? இந்த வரியை தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இப்பொழுது நேரம் அதிகாலை 4.12. இனிமேல்தான் தூங்கப் போக வேண்டும்.