Sep 25, 2013

வேலைதான் உலகமா?

முன்பு ஒரு டீமில் வேலை செய்து கொண்டிருந்தேன். முன்பு என்றால் இதற்கு முந்தைய நிறுவனத்தில். கடும் உழைப்பாளிகளால் நிரம்பிய டீம் அது. அவர்களின் கணக்குப்படி திங்கட்கிழமை காலையில் அலுவலகம் வந்து செவ்வாய்க்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பினால் அது ‘நார்மல்’ டைம். அதுவே புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை வரைக்கும் இழுத்தால் ‘ஓவர்’டைம். இந்த டீமில் கொஞ்ச நாட்கள்தான் வேலையில் இருந்தேன். அவ்வளவு நாட்கள்தான் இருக்க முடியும். பிறகு அலர்ஜியாகத் தொடங்கிவிட்டது. 

அப்பொழுது அலுவலகம் ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸில். மாலை நேரத்தில் வெளியே வந்து நின்றால் இரண்டு கண்கள் போதாது. அப்போதைக்கு எவனாவது தனது கண்களை இரவலாகக் கொடுத்தால் கூட தேவலாம் என்றிருக்கும். அத்தனை சிட்டுக்கள்.  ஆனால் திருந்தாத ஜென்மங்கள் - டீமில் இருந்தவர்கள்- அவர்களும் வெளியே வரமாட்டார்கள் என்னையும் விடமாட்டார்கள். எத்தனை காலம்தான் பொறுத்துக் கொள்வது? எப்படியாவது இந்த டீமை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று சமயம் பார்க்கத் தொடங்கியிருந்தது மனம். வேறு ப்ராஜக்ட் கொடுங்கள் என்று நச்சரிக்கத் துவங்கியிருந்தேன். இரண்டு மாதம் பொறுத்துக் கொள், மூன்று மாதம் பொறுத்துக் கொள் என்று இழுத்தடித்துக் கொண்டிருந்தார்கள். அழுந்தி கடித்துக் கொண்ட பற்களுக்கடியில் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. நாட்கள்தான் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தனவே தவிர முடி தாறுமாறாகக் கொட்டத் தொடங்கியிருந்தது. தலைக்கு மேல் அத்தனை அழுத்தம்.

அந்த டீமின் மேனேஜரே அப்படித்தான். கல்லூரி முடித்தவுடன் நேரடியாக அந்த நிறுவனத்தில்தான் வேலைக்குச் சேர்ந்திருந்தார். புதுசுக்கு வண்ணான் கடுசுக்கு வெளுத்த கதையாக நாயாக பேயாக வேலை செய்யத் துவங்கியவர் பன்னிரெண்டு வருடங்களாக அப்படியே தொடர்ந்து கொண்டிருந்தார். ஒரே நிறுவனம். பன்னிரெண்டு வருட உழைப்பு. மடமடவென மேலே வந்துவிட்டார். மேலாளரும் ஆக்கிவிட்டார்கள். மேலே வந்துவிட்ட தலைக்கனம் எதுவும் இருக்காது. நல்ல மனிதர்தான். அடுத்தவனுக்கு எந்தத் தொந்தரவும் கொடுக்க மாட்டார். டீமில் யாராவது ஏமாற்றினால் கூட தானே இழுத்துப் போட்டு வேலை செய்யும் இனாவானாவாகவும் இருந்தார்.

இப்பேர்ப்பட்ட ஆளிடம் நான்கைந்து Freshers ஐ நிறுவனம் கொடுத்திருந்தது. தானும் கெட்டதுமில்லாமல் அவர்களையும் கெடுத்துவிட்டார். இருபத்தி நான்கு மணிநேரமும் ஆபிஸில் தவம் கிடப்பதே தாங்கள் செய்த முன்ஜென்ம புண்ணியம் என்ற நினைப்புக்கு வந்துவிட்டார்கள் அந்தப் பொடியன்கள். இந்த அக்கப்போரான படைக்குள்தான் நான் வந்து சிக்கிக் கொண்டேன். ஆப்பசைத்த குரங்கு தனது வாலைத்தான் சந்துக்குள் சிக்க வைத்தது- ஆனால் எனக்கு ஏதேதோ சிக்கிக் கிடந்தது. வெளியே வர முடியவில்லை.

ஆறு மாதத்திற்கு பிறகு ‘ஒன்று டீம் மாற்றுங்கள்; இல்லையென்றால் நான் கம்பெனியை மாற்றுகிறேன்’ என்று சொன்ன பிறகுதான் மெதுவாக தலையை அசைக்கத் துவங்கினார்கள். ஆனால் அதற்குள் ஒரு வழியாகியிருந்தேன். அலுவலகத்திலேயே தூங்கிக் கொள்வது, நாற்றம் பிடித்த ஷூக்காலுடனேயே இரவு முழுவதும் அலைவது, பல் விளக்காமல் அடுத்த நாளைத் தொடர்வது போன்ற சூட்சமங்களைக் கற்கத் துவங்கிய பருவம் அது. இரவு தங்க வேண்டிய அளவுக்கு வேலை இல்லாவிட்டாலும் கூட மற்றவர்களுக்காகத் தங்க வேண்டியிருந்தது. கூட இருப்பவன் பல் கூட துலக்காமல் அலுவலகத்தில் இருக்கும் போது நாம் மட்டும் வீட்டிற்கு போய் தினமும் குளித்துவிட்டு வருவது குற்றவுணர்ச்சியைத் தரத் தொடங்கிவிட்டது. அதுவும் இல்லாமல் அவர்களுக்கு மட்டும் ப்ரோமோஷனும், சம்பள உயர்வும் வந்துவிட்டால் என்ற வயிற்றெரிச்சல் வேறு. அலுவலகத்தில் பலியாகக் கிடந்து கொண்டிருந்தோம்.

இத்தனைக்கும் அப்பொழுது எனக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. எனக்காக யாரும் காத்திருக்கமாட்டார்கள்தான் ஆனாலும் அலுவலகத்திலேயே தங்கிக் கொள்வது மன உளைச்சலை உருவாக்கத் துவங்கியிருந்தது. மாலை நேர வெயிலைப் பார்த்தே பல மாதங்கள் ஆகிவிட்டது என்பதை நினைத்த போது டார்ச்சராக இருந்தது.

ஆனால் அவர்களுக்கு இதெல்லாம் பெரிய பிரச்சினையாகவே தெரியவில்லையோ என்று தோன்றும். அவ்வளவு ஒன்றிக் கிடந்தார்கள். நடுச்சாமத்தில் சிப்ஸ் கொறிப்பார்கள், திடீரென்று நினைத்த நேரத்தில் பீட்ஸா ஆர்டர் செய்வார்கள். உட்கார்ந்த இடத்திலேயே தின்றுவிட்டு அப்படியே வேலையைத் தொடர்வார்கள். இடையிடையே சிகரெட் பிடிக்கப் போவார்கள். டீயைக் குடித்துக் கொண்டே சிகரெட்டை உறிஞ்சுவார்கள். தூக்கம் வரும் போது டேபிளில் தலை வைத்து தூங்கி எழுவார்கள். தலை கூட வாராத இந்த ஸ்டைல்தான் வாழ்க்கை முறை என்றாகியிருந்தது.

மேனேஜரின் மனைவியையும் குழந்தையையும் நினைத்தால் பாவமாக இருக்கும். அவர்கள் இவரை மறந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வார் என்று தோன்றும். ஆனால் அது அவருக்கு ஒன்றும் பெரிய பிரச்சினையாக இருக்காது. உண்மையில் அலுவலகம்தான் அவரது மனைவி. அதனால் இன்னும் வசதியாகப் போய்விடும். மொத்தமாக இங்கேயே கூடத் தங்கிக் கொள்வார்.

workholic என்பதை முழுமையாக உணரத் துவங்கியிருந்தேன். நல்ல சோறு கிடையாது, மனிதனின் வழக்கமான அன்றாட நடவடிக்கைகள் கிடையாது, வெளியுலகம் கிடையாது, வேறு எந்த நினைப்பும் கிடையாது, -  வேலை, வேலை, கம்ப்யூட்டர். அது மட்டும்தான். ஆனால் அதைத்தான் பெருமையாக நினைத்தார்கள். மேலிடத்திலிருந்து ஒற்றைவரி மின்னஞ்சல் வந்தால் கூட பெரிய கவுரவமாகக் கருதினார்கள். அலுவலகத்தில் வெல்வதுதான் வாழ்க்கையை வெல்வது என்பதான கருத்தாக்கம் அவர்களுடையது.

அந்த டீமில் மொத்தமாக ஏழெட்டு மாதங்கள்தான் இருந்தேன். அதுவும் பெரிய ஒட்டுதலில்லாமலேயே இருந்ததால் அந்த டீமில் நான் வேலை செய்த உணர்வே கிடையாது. அதனால்தான் அவர்களைப் பற்றி இதுவரைக்கும் யோசித்ததே இல்லை. இப்பொழுது நினைக்க வேண்டியதாகிவிட்டது. 

இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் தனசேகர் அழைத்திருந்தார். தமிழர். அவர் இன்னும் அதே நிறுவனத்தில்தான் இன்னும் இருக்கிறார். ஆனால் வேறு ப்ராஜக்டில் இருக்கிறார். பேச்சுவாக்கில் என் பழைய மேனேஜர் இறந்துவிட்டதாகச் சொன்னார். சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் முழு விவரம் கேட்பதற்கு மனம் விரும்பியது. 

அவர்களுக்கு கடந்த வார இறுதியில் ஏதோ ப்ராஜக்ட் deployment இருந்திருக்கிறது. வழக்கம் போல தூக்கம் கெட்ட இரவுகள். நேரம் கெட்ட நேரத்தில் உணவுகள். deploymentக்கு பிறகாக வந்த சில Production issues, எஸ்கலேஷன். வெறித்தனமாக தூக்கம் கெட்டு மூன்று நாட்களுக்கு பிறகு வீட்டிற்கு போய் படுத்திருக்கிறார். படுத்தவர்தான். எழுந்திருக்கவேயில்லையாம். ஹார்ட் அட்டாக். வயது நாற்பதைத் தொடுவதற்கு முன்பாகவே வாழ்க்கை வாரிக் கொண்டுவிட்டது. அலுவலக நண்பர்கள் மலர்மாலையோடு போயிருந்த போது தலைமேட்டில் குழந்தையும் மனைவியும் அழுது கொண்டிருந்தார்களாம். 

தகவலைக் கேட்ட பிறகு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அந்த மனிதன் தன் வாழ்வில் அனுபவித்தது என்னவாக இருக்கும் என்று யோசித்தால் வெறும் பூச்சியம்தான் தெரிந்தது. ஆனால் அவருக்காக நம்மால் செய்ய முடிந்தது ஒன்றும் இல்லை. மற்றபடி என்னளவில் ஒன்றைச் செய்யலாம் என நினைக்கிறேன். நாளையிலிருந்து சூரியன் அடங்குவதற்கு முன்பாக வீடு திரும்பி விட வேண்டும். அவ்வளவுதான்.