Sep 23, 2013

அவ்வளவு அவசரம் என்ன?

பெங்களூர் ஜே.பி.நகரில் ஒரு வேலை இருந்தது. ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே வீட்டிற்கு வந்துவிடுவதாகச் சொல்லியிருந்தேன். நல்ல ஏரியா அது. பணக்கார ஏரியாவும் கூட. ஒரு சதுர அடி எட்டாயிரம் ரூபாய்க்கும் மேலாக விற்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு கோடி ரூபாய் இருந்தால் மூன்றரை செண்ட் நிலத்தை நினைத்துப் பார்க்கலாம். அதுவும் கூட நினைத்துத்தான் பார்க்க முடியும். வாங்கிவிடலாம் என்றெல்லாம் சொல்ல முடியாது. 

ஆறு மணிக்கு குளித்தாகிவிட்டது. விடுமுறை தினமும் அதுவுமாக விடியற்காலையில் அடுத்தவர்கள் வீட்டுக்கதவைத் தட்டுவது நியாயமில்லைதான். ஆனால் வேறு வழியில்லை. ஆறு மணிக்கு கிளம்பினால் இருபது நிமிடங்களில் போய்விடலாம். பெங்களூரின் அதிகாலைக் குளிரில் அரை மணி நேரம் பைக் ஓட்டினால் போதும் குறைந்தபட்சம் இரண்டு நாட்களுக்கான எனெர்ஜியைக் கொடுக்கும். அவ்வளவு அட்டகாசமான க்ளைமேட். தயக்கத்துடன் ஆறரை மணிக்கு கதவைத் தட்டினால் அவர் குளித்து பூஜையெல்லாம் முடித்துவிட்டு கனஜோராக இருந்தார். நாம்தான் சுற்று வட்டாரத்திலேயே சுறுசுறுப்பு என்று நினைத்துக் கொண்டால் நம்மைவிட ஒரு சுறுசுறுப்பாளி எப்பொழுதும் நமக்கு முன்னால் ஓடிக் கொண்டே இருக்கிறான். 

வந்த சோலி அரை மணி நேரம்தான். டாக்குமெண்ட்டை வாங்கிக் கொண்டு கிளம்பும் போது ‘நேத்து ஒரு பெரிய காரியம் நடந்துச்சே அது அந்த அபார்ட்மெண்ட்தான்’என்றார். பெரிய காரியம் என்பது மரணத்தைக் குறிப்பது. அந்தப் பெரிய காரியம் பற்றிய அது பற்றிய எந்த விவரமும் எனக்குத் தெரியவில்லை. அரசல்புரலசாகச் சொன்னார். காலையிலேயே எதற்கு விலாவாரியாக பேச வேண்டும் என்று நினைத்திருக்கக் கூடும். எதற்கும் எட்டிப்பார்த்துவிட்டு வந்துவிடலாம் என்று அந்த அபார்ட்மெண்டை பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்தால் பெங்களூர் பதிப்பு நாளிதழ்களில் அரைப்பக்கமாவது அந்தச் செய்திக்காக ஒதுக்கியிருந்தார்கள். செய்தியைப் படித்த பிறகு மறுபடியும் அந்த அபார்ட்மெண்ட்டை பார்க்க வேண்டும் என்று தோன்றியது. காலை உணவை முடித்துவிட்டு மீண்டும் கிளம்பிய போது ஏறு வெயில் முகத்தில் அடிக்க ஆரம்பித்திருந்தது.

ரூபா ஒரு ஐ.டி நிறுவனத்தில் ஹெச்.ஆராக பணிபுரிகிறார். கிட்டத்தட்ட மாதம் இரண்டு லட்சம் ரூபாய் வாங்குவார் போலிருக்கிறது. கணவர் மதுசூதன் சீமன்ஸ் நிறுவனத்தில் இருக்கிறார். அவருக்கு மனைவியைவிட சம்பளம் குறைவென்றாலும் பெரிய சம்பளம்தான். மாதம் ஒரு லட்சம். அவர்களுக்கு ஆறு வயதில் குழந்தை இருக்கிறது. பெண் குழந்தை. இந்த வருடத் திருமண நாளைக் கொண்டாடுவதற்காக இப்பொழுது குடியிருக்கும் ஃபளாட்டை பிப்ரவரியில் வாங்கியிருக்கிறார்கள். ஷோபா பில்டர்ஸின் அபார்ட்மெண்ட் அது. ப்ரெஸ்டீஜ், ஷோபா போன்ற பில்டர்களிடம் எல்லோராலும் ஃப்ளாட் வாங்கிவிட முடியாது. ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவில்லாமல் விலை இருக்கும் என நினைக்கிறேன்.

ரூபாவுக்கு, மதுசூதனுக்கும் நல்ல வேலை, நல்ல சம்பளம், ஒரே குழந்தை, சொந்த வீடு. வேறு என்ன வேண்டும்?

ஆனால் ஏதோ ஒரு குறை இருந்திருக்கிறது. முந்தாநாள் கணவன் மனைவிக்கு இடையில் ஏதோ லடாய். பிரச்சினை விஸ்வரூபமெடுக்க மனைவியை வெட்டிக் கொன்றுவிட்டு தானும் வீட்டு மாடியிலிருந்து குதித்து இறந்துவிட்டார் மதுசூதன். வெட்டு என்றால் கோபத்தில் வீசும் ஒரே வெட்டு இல்லை. ரூபாவின் உடலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டியிருக்கிறார். நெற்றி, மார்பு, பிறப்புறுப்பு என எந்த இடமும் பாக்கியில்லை. தன்னோடு ஐந்தாறு ஆண்டுகள் வாழ்ந்த ஒருத்தியை இத்தனை கொடூரமாகக் கொல்ல வேண்டுமானால் எத்தனை குரூரமும், வன்மமும் அந்த மனிதனுக்குள் இருந்திருக்க வேண்டும்? 

அவளைக் கொன்றதோடு நில்லாமல் தூக்கில் தொங்க முயன்றிருக்கிறான். ஏதோ காரணத்தினால் அதில் வெற்றியடைய முடியவில்லை. பிறகு தனது உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு கொளுத்திக் கொள்ள பார்த்திருக்கிறான். தீப்பெட்டி கிடைக்கவில்லை போலிருக்கிறது. அதே வேகத்தில் பதின்மூன்றாவது மாடியிலிருந்து குதித்துவிட்டான். கதை முடிந்துவிட்டது.

பெங்களூரில் ஐ.டிக்காரர்கள் தற்கொலை செய்து கொள்வது, கொலை செய்யப்படுவது போன்ற செய்திகள் ஒன்றும் புதிதில்லைதான். இந்த ஊருக்கு வந்ததிலிருந்தே மாதம் ஒரு ‘பெரிய காரிய’ச் செய்தியாவது கேள்விப்பட வேண்டியிருக்கிறது. 

இப்படித்தான் சில வருடங்களுக்கு முன்பு ஒரு ஐ.டி நிறுவனத்தின் மாடியிலிருந்து ஒருவன் எட்டிக்குதித்துவிட்டான். குதித்தவன் வடநாட்டுப் பையன். என்ன பிரச்சினை என்றெல்லாம் தெரியவில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றிய நண்பர் ஒருவரை சாக்காக வைத்துக் கொண்டு அந்த நிறுவனத்திற்கு போன போது ஒருவன் இறந்து போனதற்காக எந்தச் சுவடும் இல்லாமல் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பையன் விழுந்த இடத்தின் மீதாக ஒரு மேட்டை விரித்து வைத்திருந்தார்கள். அருகில் ஒரு க்ளாஸில் தண்ணீர் இருந்தது. அவனுக்கு கொடுப்பதற்காக எடுத்துவரப்பட்ட கடைசித் தண்ணீராக இருக்கக் கூடும். 

செக்யூரிட்டிகளில் ஒருவர் தமிழர் இருந்தார். பேச்சுவாக்கில் விசாரித்த போது ‘தொப்’ என்று சத்தம் கேட்டது. ஓடிப்பார்த்த போது கண்கள் திறந்திருந்தன, காது வழியாக ரத்தம் வந்தது. தண்ணீர் கொடுப்பதற்குள் உயிர் போய்விட்டது என்றார். அவன் குதித்த இடத்தில் நான்கடி உயரத்தில் ஒரு கைபிடிச் சுவர் இருந்தது. அந்தச் சுவரின் மீது அமர்வதற்கும் வாய்ப்பில்லை. அவனாக குதிக்க வேண்டும் என்று முடிவு செய்தால் மட்டுமே அந்த இடத்தில் கீழே விழுவதற்கு சாத்தியம். ஆனால் அடுத்த நாள் பெங்களூர் பதிப்பு தினகரனில் ‘கால் தவறி விழுந்து இறந்து போனதாக’ எழுதியிருந்தார்கள். பணம் பாதாளம் வரைக்கும் பாய்ந்து கேஸை முடித்துவிட்டது. 

இதே போல இன்னொரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பாக தெலுங்குப் பெண் ஒருத்தி இதே போல ஒரு ஐ.டி நிறுவனத்தின் பார்க்கிங் கட்டடத்திலிருந்து எட்டிக் குதித்துவிட்டாள். அவளுக்குத் திருமணமாகி குழந்தை இருக்கிறது. திருமணத்திற்கு பிறகு கொஞ்ச நாட்கள் அமெரிக்காவில் தனியாக இருந்திருக்கிறாள். அந்தச் சமயத்தில் மும்பையில் இருந்த இன்னொரு தெலுங்குப்பையனுடன் காதல் உருவாகியிருக்கிறது. அவன் அவளுக்காக மும்பையிலிருந்து அமெரிக்கா போய்விட்டு வந்தானாம். கணவனுக்கு இந்த விவகாரம் தெரியாது. பூனைக்குட்டியை எத்தனை நாளைக்குத்தான் மூடி வைக்க முடியும்? அவள் அமெரிக்காவில் இருந்து திரும்பியவுடன் பிரச்சினை ஆரம்பமாகியிருக்கிறது. குதித்துவிட்டாள். இன்னொரு கதை முடிந்துவிட்டது.

உயரத்திலிருந்து குதிப்பதை நினைத்துப் பார்த்தால் திகிலாக இருக்கிறது. இவர்கள் எப்படி சர்வசாதாரணமாக குதிக்கிறார்கள்? எப்பொழுதுமே உயரம் நமக்கு பயமூட்டக் கூடியது. எந்தக் வயதிலும் உயரம் பற்றிய நமது பயம் அவ்வளவு சீக்கிரம் விலகுவதில்லை. வெறும் இருபது அடி உயரத்திலிருந்து பிடிமானம் இல்லாமல் கீழே பார்க்கும் போது கால் நடுங்கத் துவங்குகிறது.

ஆனால் ஐம்பது அடி உயரத்தில் நின்று கொண்டு காலை உந்துவதற்கு இவர்களை எது தூண்டுகிறது? குழந்தைப் பருவத்திலிருந்து நம்மோடு ஒட்டிக் கிடக்கும் உயரம் பற்றிய அத்தனை பயங்களையும் மீறிக் குதிக்க வேண்டுமென்றால் எவ்வளவு பெரிய சிக்கல் ஒன்று மனதுக்குள் சம்மணம் போட்டு அமர்ந்திருக்க வேண்டும். மேனேஜர் கொடுக்கும் அழுத்தமோ, அடுத்தவளுடனான காதலோ, கணவனுடனான பிரச்சினையோ என ஏதோ ஒன்று காலை உந்த வைத்துவிடுகிறது. 

இந்தப் பெருநகரம் நிறைந்த பணத்தை கொடுக்கிறது. விதவிதமான லைஃப் ஸ்டைலைக் காட்டுகிறது. ஆடையும், காரும், பங்களாவும், காதலர்களும்- குறிப்பாக கள்ளக்காதலர்களும் கிடைப்பதில் கூட பெரிய சிரமம் இல்லை. வசதிகள் நிறைந்த மருத்துவமனைகள், லட்சக்கணக்கில் பணம் வாங்கினாலும் தரமான கல்வியைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகள் என வசதிகளுக்கு எந்தக் குறைவும் இல்லை. என்னதான் வசதிகள் கிடைத்தாலும் வாழ்க்கையின் பிரச்சினைகள்தான் பூதாகரமாகிக் கொண்டிருக்கின்றன. 

அலுவலகத்தில் ஆக்டோபஸ் போல விரியும் சிக்கல்கள் ஒருவனை தனது மொத்தக் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொள்கிறது. முதலில் குடும்ப உறவுகளை பதம் பார்க்கிறது. மனதுக்குள் ஆயிரம் Complexity களை உருவாக்குகிறது. இந்த ஆக்டோபஸ் பிரச்சினைகளிலிருந்து விடுபட மனம் ஏதாவதொரு பற்றுக் கோலைத் தேடத் துவங்குகிறது. இந்தப் பற்றுக் கோல் ஆணோ, பெண்ணே- ஏதோ ஒரு வடிவில் நெருங்கி வந்து கூடிய சீக்கிரம் பாசக்கயிறாக உருமாறுகிறது.

பணம் இருக்கிறது, வசதிகள் இருக்கின்றன ஆனால் இவற்றை அடைய உதவிய இந்த வாழ்க்கை முறை உருவாக்கும் அழுத்தங்களுக்கும், அதன் வழியாக உருவாகும் பிரச்சினைகளுக்கும் பதில்களைக் கண்டுபிடிக்கும் அளவிற்கு இந்தத் தலைமுறையில் பக்குவம் இல்லை போலிருக்கிறது. வெறும் பணமும், பகட்டான வாழ்க்கை முறை மட்டுமே போதுமானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அம்மாவும் அப்பாவும் ஓடாய்த் தேய்ந்தும் வாழ்க்கையின் இறுதி வரை பார்க்க முடியாத வசதிகளை முப்பத்தைந்து வயதில் அடைந்துவிடுகிறோம். அதன் பிறகு? 

இந்த பிரச்சினைகளும் அழுத்தங்களும் மற்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இல்லையா என்று கேட்கலாம். இருக்கிறதுதான் ஆனால் இந்தத் துறையில் இதன் வீரியம் அதிகம். எட்டுக்கால் பாய்ச்சலில் நகர்கிறது என்பதுதான் உண்மை. முப்பதுகளிலும் நாற்பதுகளிலும் முடித்துக் கொள்ள வாழ்க்கை ஒன்றும் சுய இன்பம் இல்லை. தொண்ணூறு வயது தாண்டி வாழ்ந்தாலும் கூட அனுபவிப்பதற்கு என்று ஏதாவது மிச்சம் மீதி இருந்து கொண்டேதான் இருக்கும். விட்டுப்பிடித்துத்தான் பார்க்க வேண்டும்.