நரேந்திர மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருப்பதை ஆதரித்து பேசினாலும், எழுதினாலும் ரிஸ்க்தான். ‘இந்து வெறியன்’ என்ற முத்திரையை குத்திவிடுவார்கள். எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்துவிடலாம்தான். ஆனால் தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவருக்கும் ஒரு அரசியல் நிலைப்பாடு இருக்கும் அல்லவா? ஒவ்வொரு அரசியல் நிகழ்வின் போதும் மனம் ஒருபக்கமாக நகரும் அல்லவா? அதை வெளிப்படையாக பேசுவதில் தவறு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
மோடியின் எதிர்ப்பாளர்களும், விமர்சகர்களும் சொல்வது போல ‘மோடியிஸம் என்பது மீடியாக்களாலும் சமூக ஊடகங்களாலும் உருவாக்கப்பட்ட பிம்பம்’ என்பதை ஏற்றுக் கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை. காங்கிரஸ்காரர்கள் சொல்வதைப் போல மோடி தன்னைப் பிரகடனப்படுத்திக்(I, I, I & Me, Me, Me) கொள்கிறார் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இந்த பிரகடனங்களால் மட்டும் ஒருவன் தலைவனாக உருவாகிவிடுவதில்லை அல்லவா? எந்த நிர்வாகத் திறமையும் இல்லாமல் வெறும் பிரகடனங்களால் மட்டும் ஒருவன் பிரதமர் ஆகிவிட முடியும் என்றால் இந்நேரம் பவர்ஸ்டார் ஸ்ரீனிவாசன் இந்த தேசத்தின் பிரதமராக இருந்திருக்கக் கூடும்.
கேசுபாய் பட்டேலை ஓரங்கட்டிவிட்டு குஜராத் முதல்வர் ஆனார். இப்பொழுது அத்வானியை ஓரங்கட்டிவிட்டு பிரதமர் பதவிக்கு போட்டியிடுகிறார் என்று இன்னொரு விமர்சனம் இருக்கிறது. ஆனால் இதிலும் பெரிய தவறு இருப்பதாகத் தோன்றவில்லை. வாஜ்பாயி பிரதமராக இருக்கும் போது அத்வானி இதைத்தானே செய்தார்? ஒரே வித்தியாசம் அத்வானி தனது முயற்சியில் தோற்றுப் போனார். நரேந்திர மோடி வென்றுவிட்டார். அவ்வளவுதான்.
கருணாநிதியோ, ஜெயலலிதாவோ, மாயாவதியோ அல்லது இந்திராகாந்தியோ வேறு யாரையும் ஓரங்கட்டாமல்தான் தங்களின் பதவியை அடைந்திருக்கிறார்களா? ஓரங்கட்டுதல் என்பது அரசியலின் அடிப்படைச் சூத்திரம். அந்தச் சூத்திரத்தை பின்பற்றாமல் தற்கால அரசியலில் வென்றவன் என்று யாரையாவது சுட்டிக்காட்ட முடியும் என்று தோன்றவில்லை. ஒன்றியச் செயலாளர் அளவில் கூட இந்த ஓரங்கட்டுதல் உண்டு.
‘மீடியாக்களால் உருவாக்கப்பட்ட பிம்பம்’, ‘மற்றவர்களை ஓரங்கட்டி மேலே வந்தவன்’ போன்ற விமர்சனங்கள் எல்லாம் உண்மையில் அர்த்தமற்றவை. எப்படியாவது மோடியை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தேடிக் கண்டுபிடிக்கப்பட்ட காரணங்களாகத்தான் தெரிகிறது.
மற்றபடி மோடியை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் காரணங்களில் பொருட்படுத்தத் தக்கது என்றால் அது குஜராத் கலவரங்கள். ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை- குஜராத் கொலைகாரன் என்று ஊடகங்களும், முற்போக்காளர்களும் வர்ணிக்கும் மோடியை எதற்காக மூன்று முறை குஜராத் மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள்? ஒருவேளை இசுலாமியர்கள் ஒட்டுமொத்தமாக மோடிக்கு எதிராக இருப்பார்கள் என்று நினைத்தால் இருபத்தைந்து சதவீதத்திற்கும் அதிகமான இசுலாமியர்கள் பா.ஜ.கவுத்தான் வாக்களித்திருப்பதாக புள்ளி விவரங்கள் இருக்கின்றன. ஒருவேளை புள்ளிவிவரங்கள் தவறாகக் கூட இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும்.
ஆனால் மோடியின் மீது வைக்கப்படும் எந்த விமர்சனங்களுக்கும் அந்த மாநில மக்கள் பதில் அளித்திருக்கிறார்கள். தொடர்ந்து மூன்று முறை அவரை மாநில முதல்வராக நீடிக்க அனுமதித்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலான சமயங்களில் மத்தியில் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்படியிருந்தும் மோடி வென்றிருக்கிறார். அதுதான் புரியவில்லை - மோடி விஷயத்தில் இங்கே கதறும் முற்போக்காளர்களை நம்புவதா அல்லது குஜராத் மக்களை நம்புவதா என்று.
மற்றபடி மோடியை திமுக எதிர்க்கிறது, சமாஜ்வாதிக் கட்சி எதிர்க்கிறது என்பதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. தேர்தலுக்குப் பிறகு மோடி அரசு அமைப்பதாக இருந்தால் வெட்கமே இல்லாமல் வரிசை கட்டி நிற்பார்கள். காலங்காலமாக பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ், பா.ஜ.கவுக்கு மாற்று அணி என்று கங்கணம் கட்டுவார்கள். சரி ஏதேனும் மாறுதல் வரும் என்று ஆர்வமாக இருப்போம். தேர்தலுக்கு பிறகு ‘நாங்கள் மதவாத சக்திகளுக்கு எதிரானவர்கள்’ என்று காங்கிரஸின் காலைக் கட்டுவார்கள். அதன் பிறகு மத்திய அரசு கொள்ளையடித்தாலும் சரி; சுரண்டினாலும் சரி; பதுக்கினாலும் சரி- தங்களின் பிழைப்பு ஓடினால் போது என்று கண்களைக் கட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள் இந்த போலி மதவாத எதிர்ப்பாளர்கள்.
மோடியை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. முழுமையாக விமர்சிக்கலாம். ஆனால் மோடிக்கு மாற்று என்று யாரை முன்வைப்பது? சீரழிந்து கிடக்கும் இந்த தேசத்தின் பொருளாதாரத்தை ஓரளவுக்கேனும் நிர்வகிக்கக் கூடிய நிர்வாகியாக உங்களின் கண்களில் யார் படுகிறார்கள்? ஊழலற்ற ஆட்சியாளர் என்பது சாத்தியமே இல்லை- குறைந்தபட்ச ஊழலுடன் ஆட்சி நடத்தக் கூடிய மனிதராக யாரை முன் வைக்க முடியும்?
உத்தரபிரதேசத்தில் குடிசைகளில் கஞ்சி குடிக்கும் ராகுல் காந்தியா? பொருளாதார மேதை மன்மோகன்சிங்கா? சிவங்கங்கையில் நேர்மையாக வென்ற சிதம்பரமா? தமிழகத்தின் இரும்புப் பெண்மணியா? உத்தரப்பிரதேசத்தின் தங்கப் பெண்மணியா? உறங்காத விழிகளின் சொந்தக்காரர் தேவகெளடாவா அல்லது அஞ்சாநெஞ்சன் அழகிரியா? தகுதியான ஆளைக் காட்டினால் ‘சைலண்ட்’ ஆகிவிடுகிறேன்.
இன்றைய ட்ரெண்டுக்கு நம்மை முற்போக்காளராகவும், புரட்சியாளாரகவும் காட்டிக் கொள்ள வேண்டுமானால் ஒரே வழிதான் - மோடியை எதிர்க்க வேண்டும். ஆனால் நான் முற்போக்காளராகவும் இருக்க விரும்பவில்லை, புரட்சியாளன் ஆகவும் விரும்பவில்லை. நிதர்சனத்தின் பக்கம் நிற்கவே விரும்புகிறேன்.