மருத்துவர்களை பற்றி நேற்று எழுதியதற்கு பயங்கர அடி. அத்தனை அடியையும் போட்டவர்கள் மருத்துவர்கள் என்பதுதான் சிறப்பம்சம். ஃபேஸ்புக்கில் மட்டுமில்லாது மின்னஞ்சல் வழியாகவும் குத்துக்களை இறக்கியிருந்தார்கள். நம் ஊரில் ஆட்டோக்காரர் மீது கை வைத்தால் அத்தனை ஆட்டோக்காரர்களும் சேர்ந்து கொள்கிறார்கள். மாநகரப் பேருந்தின் நடத்துனரோடு தகராறு செய்தால் அத்தனை பேருந்தையும் நிறுத்தி குறைந்தபட்சம் அரை நாளாவது ‘ஸ்ட்ரைக்’ செய்கிறார்கள். ஒரு வக்கீலுக்கு பிரச்சினை என்றால் மொத்த வக்கீலும் ஒன்று சேர்ந்து நீதிமன்ற புறக்கணிப்பில் கலந்து கொள்கிறார்கள். மருத்துவர்களும் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை போலிருக்கிறது.
தனது துறையைச் சார்ந்தவனுக்கு பிரச்சினை வரும் போது ஒதுங்கிப் போவது இரண்டு இடங்களில்தான் நடக்கும். ஒன்று எழுத்துத் துறை. ஒரு எழுத்தாளனுக்கு அடி விழுந்தால் கமுக்கமாக சிரித்த படியே கொண்டாடும் எழுத்தாளர்களால் நிரம்பியது நம் தமிழ் உலகம். ஒரு எழுத்தாளனைக் வெளியாள் ஒருவன் குதறும் போது ஓடிப் போய் இன்னும் கொஞ்சம் தகவல்களைக் கொடுத்து குதூகலிக்கும் சக எழுத்தாளர்களால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறோம். இன்னொரு துறை? அது ஐ.டி. அது பற்றி வேறொரு நாள் பேசலாம்.
நேற்று அடித்தவர்கள் ‘உன் Attitude சரியில்லை’ என்கிற ரீதியில் வாரியிருந்தார்கள். இருக்கலாம். அதை ஏற்றுக் கொள்வதில் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் யோசித்துப் பார்த்தால் என் attitude மட்டும்தானா சரியில்லை?
இங்கு எதைப் பற்றி நினைத்தாலும் பயமாக இருக்கிறது. எதைப் பார்த்தாலும் பதட்டமாக இருக்கிறது. விபத்துக்கள், நோய்கள் என நம்மைச் சுற்றி கண்ணாமூச்சி நடக்கின்றன. விளையாட்டுப் பருவத்திலிருந்து உடன் இருந்தவனை சர்வசாதாரணமாக காலன் அபகரித்துக் கொள்கிறான். இரண்டு நாட்கள் முன்பாக பேசிக் கொண்டிருந்தவன் தூங்கிக் கொண்டிருக்கும் போதே போய்ச் சேர்ந்துவிடுகிறான். கண் மூடி விழிக்கும் கணத்தில் அடையாளம் தெரியாத வாகனத்தின் சக்கரத்தில் நசுங்கிப் போய்விடுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம் நம்மிடையே மரணம் மிக எளிய விளையாட்டுப் பொருளாகிவிட்டது. ‘வாழ்க்கை முறை மாறிவிட்டது. வாகனங்கள் பெருகிவிட்டன. அதனால் விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன’ என்றோ ‘உடம்புக்குள்ள நெறைய கெமிக்கல் போகுது. அதனால ஏதேதோ நோய் வருது’என்றோ ஏதேனும் சமதானத்தை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். உண்மையில் பிரச்சினை நமக்கு வரும் வரை அதன் வலியை உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
முப்பத்தியேழு வயதில் இறந்து போனவனின் குடும்பத்தை சமீபத்தில் பார்க்க வேண்டியிருந்தது. ஹார்ட் அட்டாக்கில் இறந்து போனான். அவன் போனது கூட பிரச்சினையில்லை. அந்தக் குடும்பத்தை பார்ப்பதுதான் அத்தனை கொடுமையாக இருக்கிறது. ‘அப்பா இருக்கும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வெளியே சாப்பிட போவோம். இப்போ எல்லாம் எங்கேயும் போறது இல்லை அங்கிள்’ என்று இறந்தவனின் ஆறு வயதுக் குழந்தை சொல்லும் போது என்ன பதிலைச் சொல்வது?
நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கையைத் தொடங்குகிறோம். அவன் மட்டும் நினைத்திருப்பானா? முப்பத்தியேழு வயதிலேயே வாழ்வின் இறுதிச் சுவாசத்தைச் சந்திப்போம் என்று. எல்லோரையும் போலவே வீடு வாங்குவதும் வாகனங்கள் வாங்குவதும் என இ.எம்.ஐயோடு நகரும் வாழ்க்கையில் எதிர்பாராத நேரத்தில் ஒரு பெரும் பாறாங்கல் வந்து விழுந்துவிடுகிறது. அவனது மனைவி குழந்தையைப் படிக்க வைப்பாளா? இ.எம்.ஐ கட்டுவாளா? அடுத்த வேளை சோற்றுக்கான வழியைத் தேடுவாளா? குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது.
ஓரிரண்டு தலைமுறைகளுக்கு முன்னால் ஒருவன் இறந்து போவதால் இந்த அளவிற்கு இருந்திருக்கும் சிக்கல்கள் என நினைக்கவில்லை. விவசாயமோ, கூலி வேலையோ- எப்படியாவது பிழைத்துக் கொள்ளலாம். குறைந்தபட்சம் உறவினர்களின் ஆதரவாவது இருக்கும். இன்றைய தேதியில் அவனவன் பிழைப்பை பார்ப்பதற்கே சரியாக இருக்கிறது. அடுத்தவர்களை எங்கே கவனிப்பது? ‘பாவம் அவங்க தலையெழுத்த்து’ என்று கைகழுவி விடுகிறார்கள்.
விபத்துக்கள் மட்டுமில்லை கடும் மன அழுத்தம் காரணமாக வாழ்க்கைய முடித்துக் கொள்பவர்கள், பெயர் தெரியாத நோயினால் இறந்து போகிறவர்கள், நோயைத் தெரிந்தும் இலட்சக்கணக்கில் செலவு செய்ய இயலாமல் வாழ்வை முடித்துக் கொள்பவர்கள் என்று வாழ்க்கையின் நிலையாமையை எதிர்கொள்ளும் போதெல்லாம் விரல்கள் சில்லிடுகின்றன. ஏதோ முன்னோர்களின் புண்ணியத்தினால் இதுவரைக்குமாவது வாழ்க்கை நல்லபடியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை இன்னும் பத்து வருடங்களுக்காவது நீடித்துக் கொள்ள வேண்டும் என்ற பயம் மனதின் ஏதோ ஒரு மூலைக்குள் ஒளிந்துகிடக்கிறது.
எனக்கு மட்டுமில்லை. என்னையொத்த ஒவ்வொரு நடுத்தர வயதுக்காரனுக்கும் இருக்கும் பிரச்சினைதான் இது. ஐந்து வருடங்களுக்கு முன்பாக இருந்தால் எதைப் பற்றியும் கவலை இருந்திருக்காது. உடல் ரீதியாக எந்தப் பிரச்சினை என்றாலும் ‘தொலையட்டும்’ என்று விட்டுவிடும் மனநிலைதான் இருந்தது. இப்பொழுதெல்லாம் அப்படியில்லை. குடும்பம், குழந்தை என்று ஏகப்பட்ட commitments. இரண்டு முறை பைக்கில் இருந்து விழுந்த பிறகு வேகமானி முப்பது கிலோமீட்டரைத் தாண்டுவதில்லை. எவ்வளவுதான் அவசரம் என்றாலும் மெதுவாகத்தான் போகிறேன். உயிர் மீது அத்தனை பயம். கொஞ்சம் தலைசுற்றினால் கூட ஏதாவது பிரச்சினையாக இருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. நெஞ்சுக்குள் வாயுப்பிடிப்பு என்றாலும் கூட ஒரு இ.சி.ஜி எடுத்துப் பார்த்துவிட்டால் தப்பில்லையே என்று மனம் நினைக்கிறது. சரி போகட்டும்.
வாழ்க்கை நமக்கு அசால்ட்டாக பயத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தன்னிடம் சிகிச்சைக்காக வருபவனின் இந்த பயத்தில் ஒரு சதவீதத்தையாவது குறைக்க வேண்டியது ஒரு மருத்துவரின் அடிப்படையான எதிக்ஸ் இல்லையா? நான்கு கேள்வி கேட்டால் கூட ஒரு நோயாளியின் பிரச்சினையை ஓரளவு உணர முடியும். ஆனால் கேள்வியே கேட்காமல் ஒன்றரை நிமிடங்களில் முடிவெடுத்து ரத்தப் பரிசோதனைக்கு பரிந்துரை செய்வதுதான் மருத்துவரின் attitude ஆக இருக்குமா என்பதுதான் யோசிக்க வைக்கிறது. வாய்ப்புண்ணுக்கு ஒருவன் சிகிச்சை பெறச் சென்றால் ‘சாதாரண வாய்ப்புண்ணாகத்தான் இருக்கக் கூடும். எதுக்கும் டெஸ்ட் செய்துவிடலாம்’ என்று சொல்வதுதானே மருத்துவரின் attitude ஆக இருக்க வேண்டும்? ரிஸல்ட் வரும் வரைக்குமாவது மன உளைச்சல் இல்லாமல் இருக்கலாம். மாறாக ‘உனக்கு ஹெர்பெஸ்தான். ரத்தப் பரிசோதானையை முடித்துவிட்டு வா மருந்து கொடுக்கிறேன்’ என்பதுதான் சரியான முறையா என்று தெரியவில்லை.
உங்கள் அத்தனை பேரையும் நான் குறை சொல்லவில்லை. நேரடியாக அனுபவித்ததைத்தான் எழுதியிருக்கிறேன். மருத்துவர்களுக்கு வேண்டுமானால் நோயாளி என்பவன் இன்னொரு மெஷினைப் போல தெரியலாம். ஆனால் அவன் ரத்தமும் சதையுமான உயிர் அல்லவா? அவனுக்கு ஆயிரம் கவலைகளும் சொல்லொண்ணா பிரச்சினைகளும் இருக்கும் போது இன்னும் ஒரு இரண்டு நிமிடங்களை அவனுக்காக நீங்கள் ஒதுக்கலாம் அல்லவா? அடுத்த நோயாளி காத்திருக்கிறான் என்ற அவசரம் உங்களுக்கு. உயிரே போய்விடுமோ என்ற பயம் எங்களுக்கு. அவ்வளவுதான்!