Aug 9, 2013

இலக்கிய உலகின் அப்பாடக்கர்கள்- சாருவும் இன்னபிறரும்

ஒரு புத்தகம் வாங்க வேண்டியிருந்தது. என்ன புத்தகம்? இந்த இடத்தில் பெயர் தெரியாத ஆப்பிரிக்க எழுத்தாளரையோ, செக்கோஸ்லோவோக்கியா எழுத்தாளரையோ குறிப்பிட்டு ‘அவர் எழுதிய புத்தகத்தைத்தான் தேடினேன்’ என்று படம் ஓட்டலாம்தான். ஆனால் 'மொசப்புடிக்கிற நாயை மூஞ்சியை பார்த்தே' கண்டுபிடித்துவிடுவீர்கள் என்பதால் உண்மையைச் சொல்வதுதான் உசிதம். ஒரு புத்தகத்தை மொழிபெயர்க்கும் ஐடியா இருக்கிறது. மண்டைக்குள் பல்பு எரிந்து தானாக இந்த ஐடியா வரவில்லை. ஒரு பதிப்பகத்திலிருந்துதான் கேட்டார்கள். ஜாலியான நாவல் அது. இப்பொழுது இருக்கும் எனது மொழிநடை அந்த நாவலுக்கு பொருத்தமானதாக இருக்கும் என முடிவு செய்து கேட்டிருக்கிறார்கள். கொஞ்சம் விவரமாகவே சொல்லலாம்தான். ஆனால் அதில் ஒரு விவகாரம் இருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்பாக காலச்சுவடு பதிப்பதில் அசோகமித்திரனின் ‘18வது அட்சக்கோடு’ நாவலை செம்பதிப்பாக கொண்டு வர முடிவு செய்திருந்தார்கள்.  இந்த இடத்தில் அ.மி பற்றி சில வார்த்தைகள்-

இலக்கிய பவர்ஸ்டார் சாரு கலாய்த்துக் கொண்டிருப்பது போல அசோகமித்திரன் ஒன்றும் லேசுப்பட்ட ஆள் இல்லை. அ.மி யின் எழுத்துக்கள் அத்தனையையும் கூட வேண்டாம் முக்கியமான மூன்று நாவல்களை எடுத்து ஒரு தராசில் வைத்து இன்னொரு தட்டில் தனது அடிப்பொடிகள் அத்தனை பேரையும் சேர்த்துக் கொண்டு வந்து ஏறி அமர்ந்தாலும் சாருதான் தோற்றுப் போவார். சாருவின் எழுத்துக்களை மதிக்கிறேன் என்றாலும் கூட என்னைப் பொறுத்தவரைக்கும் சாருவுக்கும், அ.மிக்கும் அத்தனை வித்தியாசம் இருக்கிறது. 

‘நான் தான் அப்பாடக்கர், அந்த இசையைப் பற்றி எழுதியிருக்கிறேன், இந்த எழுத்தாளனைப் நான் தான் அறிமுகப்படுத்தினேன்’ என்பதெல்லாம் இருக்கட்டும். அவையெல்லாம் பொருட்படுத்தத் தக்கவைதானா என்பதை வாசகர்கள்தானே முடிவு செய்ய வேண்டும்? வாசகர்கள் என்ன அத்தனை முட்டாள்களா? உண்மையில் எழுதுபவர்களைக் காட்டிலும் அவர்களுக்கு பரந்த வாசிப்பு உண்டு. அவர்கள் மிக எளிதில் ‘யார் அப்பாடக்கர்’ என்பதை முடிவு செய்துவிடுவார்கள். எழுதிவிட்டார் என்பதற்காகவே கொண்டாட வேண்டும் என்றால் அப்படியான ஆட்கள் இங்கு ஏகப்பட்ட பேர் இருக்கிறார்கள். நாயும் கூடத்தான் வேளாவேளைக்கு சோறு கண்டுபிடித்து வயிறு வளர்க்கிறது. அதைக் கொண்டாடுகிறோமா என்ன? எழுதுவதோடு எழுத்தாளர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். அதைத் தாண்டி வட்டம் அமைப்பது, சதுரம் அமைப்பது என்றெல்லாம் பில்ட் அப் கொடுத்துக் கொள்வதையும் கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் என்னைவிட்டால் இங்கு எவனுமே எழுத்தாளன் இல்லை என்று சிலாகித்துக் கொள்ளுதல்தான் அலர்ஜியாக இருக்கிறது.  இது ஒரு வியாதி. நம்மைச் சுற்றிலும் ஏகப்பட்ட எழுத்தாளர்கள் இந்த வியாதியால் Infect ஆகிக் கிடக்கிறார்கள் என்பதுதான் நமது துக்கம்.

சாரு ஆன்லைனுக்கு ஹிட் வேண்டுமென்றால் அ.மியை ஏன் சொறிய வேண்டும் என்று தெரியவில்லை.

சரி போகட்டும். 18வது அட்சக்கோட்டிற்கே வந்துவிடுகிறேன். அந்த நாவலின் களம் ஹைதராபாத். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஹைதையை ஆண்ட நிஜாம் ‘இந்தியாவோடு சேரமாட்டேன்’ என்று லோலாயம் செய்து கொண்டிருந்த காலகட்டத்தில் அங்கு வசிக்கும் ஒரு தமிழ்க்குடும்பத்தின் கதைதான் நாவல். அட்டகாசமான ஃப்ளோவில் இருக்கும். காலச்சுவடு பதிப்பகத்தில் மூத்த தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளை ‘க்ளாஸிக்’வரிசையில் கொண்டு வரத் துவங்கியிருந்தார்கள். 

கொஞ்ச நாள் நான் ஹைதராபாத்தில் இருந்ததாலோ அல்லது வேறு என்ன காரணத்தினாலோ இந்த நாவலுக்கு முன்னுரை எழுதித் தரச் சொல்லியிருந்தார்கள். அதுக்கு முந்தின நாள் பெய்திருந்த மழையில்தான் நான் முளைத்திருந்தேன் என்பதால் எனக்கு உதறலாகத்தான் இருந்தது. ஆனால் ஒருவழியாக எழுதிக் கொடுத்த பிறகு முன்னுரை நல்லபடியாக வந்திருப்பதாக நிறையப் பேர் சொன்னார்கள். ஆனால் சில பெரிய மனிதர்களுக்குத்தான் பொறுக்கவில்லை.  ‘இவனை எல்லாம் முன்னுரை எழுத வைத்து அசோகமித்திரனை கேவலப்படுத்தலாமா? முன்பே தெரிந்திருந்தால் எப்படியாவது தடுத்திருப்பேன்’ என்ற ரீதியில் பேசியிருக்கிறார்கள். இங்கு பொடியன்கள் எப்பொழுதுமே பொடியன்களாகவே இருக்க வேண்டும் என நினைப்பவர்கள்தான் அதிகம். அவ்வளவு நல்ல எண்ணங்களினால் சூழப்பட்டது இந்த இலக்கிய உலகம். அவர்கள் என்னமோ பேசிவிட்டு போகட்டும். ஆனால் முன்னுரை எழுதியாகிவிட்டது. அவ்வளவுதான் மேட்டர்.

இத்தகைய நல்ல மனிதர்கள் இருப்பதனால் மொழிபெயர்ப்பு நாவலைப் பற்றிய விவரங்களை இப்பொழுதே பேசி ஏன் பிழைப்பை கெடுத்துக் கொள்ள வேண்டும்? முதலில் வெண்ணெய் திரண்டு வரட்டும். வேறு பாத்திரத்துக்கு மாற்றிக் கொள்ளலாம். அதன் பிறகு யார் தாழியை உடைத்தால் என்ன? நொறுக்கினால் என்ன?

அந்தக் கதை இந்தக் கதையை எல்லாம் பேசிவிட்டு சொல்ல வந்த கதையை மறந்துவிட்டேன். தேடிய புத்தகம் கிடைக்கவில்லை. Crossword, landmark, Sapna வில் எல்லாம் தேடியாகிவிட்டது. எல்லாக்கடைகளிலும் டேட்டாபேஸில் புத்தகத்தின் பெயரை வைத்திருக்கிறார்கள் ஆனால் கைவசம் பிரதி இல்லை என்று துரத்திவிட்டுவிட்டார்கள். பெங்களூரில் எந்தப் புத்தகக் கடைக்கு போனாலும் கூட்டமாக இருக்கிறது. குறைந்தபட்சம் இரண்டு மூன்று நவநாகரீக அழகுப் பெண்களாவது இருக்கிறார்கள். இனிமேல் வாரம் ஒரு முறையாவது புத்தக்கடையில் வேடிக்கை பார்க்கப் போக வேண்டும் என முடிவு செய்யுமளவுக்கு அழகு. நேற்று சப்னாவில் Erotica பிரிவிலிருந்து நான்கைந்து புத்தகங்களை அள்ளி வந்திருக்கிறேன். எப்படியும் ஓரிரு வாரங்களில் வாசித்துவிடுவேன். வேறு வழியில்லை-ஆங்கிலத்தில் வாசிப்பதற்கான ஆர்வத்தை இப்படித்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும்.