அன்புள்ள மணிகண்டன்,
அசோகமித்திரன் எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை. படித்த ஒரே நாவல் ஒற்றன் மட்டுமே. அதுவும் ஒரு பயணக்கட்டுரை போன்று இருந்ததாகத்தான் எனக்கு தோன்றியது. நான் வாசகனில்லை, படிப்பவன் மட்டுமே என்பதால் விளைந்த கோளாறு என்று நினைக்கிறேன். பின்னொரு நாள் ராயர் காபி க்ளப்பில் உறுப்பினனாக இருந்த காலத்தில் (இரா.மு, பா.ரா, மரபுக்கவிஞர் ஹரிகிருஷ்ணன், மாலன் போன்றோர் பட்டையைக்கிளப்பிக்கொண்டிருந்த குழு அது. ஒரு ஓரமாய் நாங்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம் அப்போது) பா.ரா அந்த நாவலை சிலாகித்து வேறு ஒரு கோணத்தில் அற்புதமாக எழுதி இருந்தார். அதில் முக்கியமாக, இன்னும் நினைவில் இருப்பது, பல்கலை ஒன்றின் அழைப்பிற்கிணங்க மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியவாதிகள் அமெரிக்க சென்று அங்கே கருத்தரங்கத்தில் பங்கு கொள்வது, அதன் அனுபவ பதிவு - உள்ளூர் இலக்கிய சிம்மங்கள் அமெரிக்கா போன்ற முதல் உலக நாட்டில் கார்டூன் போன்றாகிவிடுவது குறித்து.
அசோகமித்திரன் எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை. படித்த ஒரே நாவல் ஒற்றன் மட்டுமே. அதுவும் ஒரு பயணக்கட்டுரை போன்று இருந்ததாகத்தான் எனக்கு தோன்றியது. நான் வாசகனில்லை, படிப்பவன் மட்டுமே என்பதால் விளைந்த கோளாறு என்று நினைக்கிறேன். பின்னொரு நாள் ராயர் காபி க்ளப்பில் உறுப்பினனாக இருந்த காலத்தில் (இரா.மு, பா.ரா, மரபுக்கவிஞர் ஹரிகிருஷ்ணன், மாலன் போன்றோர் பட்டையைக்கிளப்பிக்கொண்டிருந்த குழு அது. ஒரு ஓரமாய் நாங்களும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம் அப்போது) பா.ரா அந்த நாவலை சிலாகித்து வேறு ஒரு கோணத்தில் அற்புதமாக எழுதி இருந்தார். அதில் முக்கியமாக, இன்னும் நினைவில் இருப்பது, பல்கலை ஒன்றின் அழைப்பிற்கிணங்க மூன்றாம் உலக நாடுகளின் இலக்கியவாதிகள் அமெரிக்க சென்று அங்கே கருத்தரங்கத்தில் பங்கு கொள்வது, அதன் அனுபவ பதிவு - உள்ளூர் இலக்கிய சிம்மங்கள் அமெரிக்கா போன்ற முதல் உலக நாட்டில் கார்டூன் போன்றாகிவிடுவது குறித்து.
நேற்று இணையத்தில் புலிக்கலைஞன் படித்தேன். மிக மிக எளிதான கதை. படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். திரை வாய்ப்பு கேட்டு வருபவனை 'நாளை பார்க்கலாம்' என்று திருப்பி அனுப்பும் குறுங்கதை. அதை இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
சுஜாதா சொன்னது போல, அவர் writer's writer-தான் போல.
இனி சாரு :
தனது தளத்தில் அதிகம் சமரசம் செய்துகொள்ளாமல் (எனக்குத்தெரிந்து) தீவிரமாக இயங்குவதாக நான் நினைப்பதால் ஒரு மரியாதை மட்டுமே அவர் மேல் இன்னும். மற்றபடி அவரது நூல்களை படித்துவிட்டே அவரைப்பற்றி கருத்து உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதால் அவரது 'ராஸ லீலா', அவர் மிக மிக சிலாகித்துக்கொள்ளும் 'கலகம் காதல் இசை' மற்றும் 'திசை அறியும் பறவைகள்' (அதன் கவித்துவமான தலைப்புக்காகவே வாங்கியது, மற்றபடி தலைப்பில் இருக்கும் அழகு உள்ளே இல்லை) இவற்றை படித்துவிட்டே பேசுகிறேன்.
அவரது நாவல் என்னைக் கவரவே இல்லை. அதிலிருந்து நான் என்ன பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் இன்று வரை தெரியவில்லை. என்னவோ கோட்பாடுகளெல்லாம் பேசுகிறார். சரி என்று கேட்டுக்கொள்ளவேண்டியதுதான் போல.
'கலகம் காதல் இசை' வெறும் தகவல் தொகுப்பு. இதற்கா இத்தனை பாடு என்றுதான் தோன்றுகிறது. இணையம் இல்லாத அந்தக்காலத்தில் எழுதியது என்றால், அந்த தகவல் சேகரிப்புக்கு வேண்டுமானால் மரியாதை செலுத்தலாம் அவ்வளவே.
இன்னொன்று, நமது இசை மரபைப்பற்றியோ அதன் ஆழம், வீச்சு பற்றியோ எதுவும் தெரியாமல், வெறுமனே மேல்நாட்டுக்காரனின் இசை பற்றி மட்டும் சிலாகித்துப்பேசுவது, அப்புறம் 'ஆஹா என்னைப்பார், அவனைப்பற்றியும் உங்கள் யாருக்கும் தெரியாத இவனைப்பற்றியும் அந்த இசை பற்றியும் இந்த இசை பற்றியும் - சொல்லப்போனால் அந்தந்த இசை பற்றி கொஞ்சமே கொஞ்சம்தான், வெறும் வரலாறுதான் - என்னென்னவெல்லாம் எழுதியிருக்கிறேன் பார்' என்று வீராப்பு பேசுவது என்னைப்பொறுத்தவரை அபத்தம் என்றே தோன்றுகிறது. வெறும் ஆங்கிலம் பேசத்தெரிந்ததால் "மட்டுமே" அறிவாளி போல அலட்டிக்கொண்டு ஆங்கிலம் தெரியாதவரை அலட்சியப்படுத்துவதற்கு இணையானது இது.
அ.மி. சொன்னது அவரது கருத்து மட்டுமே. 'நாங்களெல்லாம் என்ன புடுங்கிக்கொண்டிருந்தோமா' என்றால் 'நீங்கள் புடுங்கினதெல்லாம் என்னைக் கவரவில்லை, ஜெ.மோ புடுங்கினதே என்னைப்பொறுத்தவரை சிறந்த புடுங்கல்' என்பதே அதன் பொருள் என்பது கூட தெரியாமல் இவரென்ன எழுத்தாளர் ?
ஜெ.மோ தனது ஆசிரியத்துவத்தில் வந்த இதழில் அட்டைப்படத்தில் போட்டதாலும் அவர் சென்னை வரும்போதெல்லாம் வந்து பார்க்கிறார் என்பதாலுமே (சாருவின் வார்த்தைகளில் 'சொம்பு தூக்குவதால்') அவரைப்பற்றி அ.மி உயர்வாக சொல்கிறார் என்று சொல்வதன் மூலம் அ.மி.யை இடுப்புக்குக் கீழே தாக்குவது அருவருப்பாக இருக்கிறது.
'நாங்கள் எழுதுவதை பற்றி தெரியாமல் அ.மி அப்படி பேசுவது கயவாளித்தனம்' என்றால், அவர் என்ன படிக்கிறார் என்றோ, அவரது படிப்பின் ஆழ அகலம் பற்றியோ எதுவுமே தெரியாமல் அவருக்கு அது தெரியாது, இது தெரியாது என்று உளறுவது என்ன தனம் ?
சாருவுக்கே மின்னஞ்சல் அனுப்பலாம் என்றிருந்தேன். அப்புறம், 'ஆமா, போ' என்ற அலுப்பிலும் என்னை என்னென்ன வசை பாடுவாரோ என்ற பயத்திலும் (?!) விட்டுவிட்டேன்.
உச்சமாக, தன்னை மிகவும் நிதானமானவன், ஆன்மீகமானவன் என்றெல்லாம் தனது முதுகை தானே தட்டிக்கொண்டு (இதற்கு வேறு யாரோ அரசியல்வாதி இவரை வாடா போடா என்றெல்லாம் தொலைக்காட்சியில் வசைபாட இவர் கருணாமூர்த்தியாக அருள் வழியும் புன்னகையோடு கேட்டுக்கொண்டிருந்தது சாட்சியாகிவிட்டது) சுயபுகழ் பாடுபவர் இந்த கட்டுரைக்கு வைத்திருக்கும் தலைப்பு அவல நகைச்சுவை, வேறென்ன சொல்ல?
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.
***
அன்புள்ள முத்துக்குமார்,
வணக்கம்.
தங்களின் கடிதத்தை இரண்டு முறை வாசித்தேன். பதிவை வாசித்துவிட்டு உடனடியாக ஒரு நீண்ட கடிதத்தை எழுதியிருப்பதற்கு முதலில் நன்றி.
அசோகமித்திரன் மற்றும் சாரு நிவேதிதா பற்றி நீங்கள் நினைப்பதை பாசாங்கில்லாமல் எழுதியிருப்பது சந்தோஷமாக இருக்கிறது. அந்தச் சந்தோஷமே உடனடியாக தங்களுக்கு பதிலை எழுதிவிட வேண்டும் என உசுப்பேற்றியிருக்கிறது.
முதலில் அ.மி பற்றி-
அசோகமித்திரனின் ஒரு நாவலையும், சிறுகதையும் வைத்து Writer's writer என்று நீங்கள் அனுமானித்ததில் சற்று வேறுபடுகிறேன். கவனியுங்கள், வேறுபடுகிறேன் - ஜட்ஜ்மெண்ட் இல்லை. அசோகமித்திரனுக்கு இப்படியான கிரீடத்தைச் சூட்டுவது சரியா என்றும் சொல்ல முடியவில்லை. அது தேவையுமில்லை என்றுதான் நினைக்கிறேன். அசோகமித்திரனின் புனைவுகளுக்கு தமிழ் நவீன இலக்கியத்தில் மிக முக்கியமான இடம் உண்டு. ஆனால் அதை மட்டுமே வைத்து Writer's writer என்று சொல்லிவிட முடியாதல்லவா? அசோகமித்திரனின் பிற எழுத்துக்களை நீங்கள் வாசிக்க சந்தர்ப்பம் கிடைக்குமாயின் நிச்சயம் அது பற்றிய தங்களின் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அ.மிXசாரு பற்றிய இந்த பதிவுக்கு ஃபேஸ்புக்கில் ஜ்யோவ்ராம் சுந்தர் ஒரு பதில் சொல்லியிருந்தார். ‘அ.மியின் புனைவுகள் ஓகே; ஆனால் விமர்சனப்பார்வையை ஏற்றுக் கொள்ள முடியாது’ என்று. சுந்தர் சொல்லியிருப்பதை மறுக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. ஆனால் அவருடைய விமர்சனப்பார்வை ஏற்றுக்கொள்ளத்தக்கனவையாக இல்லை என்பதற்காக அவரை கிணற்றுத்தவளை என்கிற ரீதியில் அவமானப்படுத்துவது எந்தவிதத்தில் நியாயம்? அதைத்தான் சாரு செய்து புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்.
இனி சாரு பற்றி-
‘சமரசம் செய்து கொள்ளாத சாரு’ என்பதை எதனடிப்படையில் சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. சாரு சமரசம் செய்து கொள்பவர்தான். சுஜாதாதான் என் குருநாதர் என்பதில் ஆரம்பித்து, பதிப்பாளருடனான தனது பிரச்சினைகள், நித்தி சமாச்சாரம் வரைக்கும் என ஏகப்பட்ட பல்டிகள் உண்டு.
ஆனால் எழுத்தைப் பொறுத்தவரையில் சாருவின் Frankness எனக்கு பிடித்தமான அம்சம். மழுப்பல் இல்லாத, ‘வழவழா கொழகொழா’ இல்லாத வாள் வீசும் எழுத்து சாருவினுடையது. இந்தச் சமூகம், கலாச்சாரம் என்ற கட்டமைப்புகளின் மீது எந்தப் பெரிய மரியாதையுமில்லாமல் சர்வசாதாரணமாக சிறுநீர் கழித்துவிட்டுப் போகும் ‘கெத்து’வுக்காகவே சாருவின் எழுத்து மீதான அத்தனை விமர்சனங்களையும் ஓரங்கட்டிவிட்டு பின் தொடரலாம். எழுத்தில் அவர் உருவாக்கும் சுவாரசியத்தன்மை முக்கியமானது.
அவரது குறிப்பிட்ட கட்டுரை பற்றி நீங்களே நிறைய எழுதிவிட்டீர்கள்.
மிக்க அன்புடன்,
மணிகண்டன்
*******
அன்புள்ள மணிகண்டன்,
வணக்கம். உடனடி பதிலுக்கு மிகவும் நன்றி.
அடடா, நான் அ.மி writer's writer என்று சொல்லவில்லை. எனக்கு அவரது எழுத்துக்கள் மிக எளிமையாக தோன்றுவதையும், எழுத்தாளர்கள் அனைவரும் அவரது எழுத்துக்களை கொண்டாடுவதையும் பார்க்கும்போது, நான் வெறும் படிப்பவன் மட்டுமே என்பதால் அவர் writer's writer தானோ என்று தோன்றுவதாக சொன்னேன்.
சுந்தர் சொல்வதையேதான் நானும் சொல்கிறேன். அசோகமித்திரன் சொன்னதை அவரது அபிப்ராயம் / கருத்து என்றே எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதே நான் கருதுவது. அவரது கருத்து எல்லோருக்கும் உவப்பானதாக இருக்கவேண்டியதில்லையே ! பிடிக்காத பட்சத்தில் புறக்கணிக்கலாம். தனிநபர் தாக்குதலிலா இறங்குவது ?
சாரு அதிகம் சமரசம் செய்துகொள்ளாதவர் என்பதை அவரது தளத்தில் அவரே எழுதி வரும் - திரை வாய்ப்புகளை மறுப்பது - கட்டுரைகள் மூலமும், வாசகர்களையே நிதி உதவி சொல்லி கேட்பதுமே அப்படி எண்ண வைத்தது. நித்தி விஷயத்தில் நீயா நானா-வில் தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்ட நேர்மையும் பிடித்திருந்தது. (ஆனால் பிறகு, தான் குழந்தை போன்றவர் என்றும், கோபிநாத் விடாமல் தன்னை துரத்தித் துரத்தி அப்படி 'தவறுக்குப் பொறுப்பேற்றுக்கொள்ள வைத்துவிட்டார்' என்பது போல ஒரு பதில் சொல்லி இருந்தார்). மறுபரிசீலனை செய்யவேண்டியதுதான்
மற்றபடி அவரது எழுத்தின் கெத்து மற்றும் சுவாரஸ்யத்தன்மை பற்றி நீங்கள் சொல்வதை அப்படியே ஒப்புக்கொள்கிறேன். அதனால்தான் அவரை பெரிதாக பிடிக்காவிட்டாலும் புதிய பதிவு எது வந்தாலும் படித்துவிடுகிறேன்.
அன்புடன்
பொன்.முத்துக்குமார்.