Aug 7, 2013

குட்டி போடும் வகையறா

‘ரோபோ’வை வீட்டிற்கு அழைத்து வந்தேன். இப்படி ஆரம்பிக்கிறேன் என்று வையுங்கள்- ‘உனக்கு எதுக்கு இந்த வெட்டி உதார்?’ என்று பக்கத்தை மூடிவிடுவீர்கள்தானே. ஒன்றே முக்கால் நிமிடத்திற்கு மட்டும் நம்புங்கள். அதற்குள் கட்டுரையை முடித்துவிடலாம். 

நேற்றிரவு வீட்டில் யாரும் இல்லை. போரடிக்கிறதே என்று கதவை  பூட்டிவிட்டு வாசலில் இறங்கினால் ‘ரோபோ’ கன்னத்தில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது. பெங்களூர் சாலையில் ரோபோவை பார்ப்பது என்பது அத்தனை லேசுப்பட்ட காரியமில்லைதான். பார்த்தாகிவிட்டது. ஏன் சோகமாக அமர்ந்திருக்கிறது என்றுதான் தெரியவில்லை. ஒருவேளை அதன் ஃபிகரோடு சண்டையாக இருக்கலாம் அல்லது அதன் ஓனர் துரத்திவிட்டிருக்கலாம் அல்லது பேட்டரி சார்ஜ் குறைந்திருக்கலாம்- இதெல்லாம் ரோபோவின் பர்செனல் விவகாரங்கள். கேட்பது நல்லதில்லை என்பதால் ‘நான் வீட்டில் தனியாக இருப்பதால் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருக்கலாமா?’ என்றேன். மறுப்பேதும் சொல்லாமல் வீட்டிற்கு வந்துவிட்டது.

ஹாலில் நான் அமர்ந்து கொண்டிருக்க அதுவாகவே வீட்டுச் சமயலைறையில் புகுந்து காபி போட்டு எடுத்து வந்தது. உசிலைமணி ஞாபகத்துக்கு வந்தார்- ‘பேஷ் பேஷ்...ரொம்ப நல்லா இருக்கு’.வாழ்நாளில் அத்தனை சுவையான காபியை குடித்ததே  இல்லை. காபியை உறிஞ்சிக் கொண்டே பேச ஆரம்பித்தோம்- ஜூவியில் கழுகார் உறிஞ்சிக் கொண்டே ஆரம்பிப்பார் அல்லவா? அப்படி. ரோபோவிடம் கேட்பதற்கு ஆயிரக்கணக்கான கேள்விகள் இருக்கின்றன. ரோபோவின்  வரலாற்றிலிருந்தே ஆரம்பித்தோம். ரோபோ உற்சாகமாகிவிட்டது.

“என் முப்பாட்டனுக்கும் முப்பாட்டனான முதல் ரோபோவின் வரலாற்றை பல வருடங்களாகவே தேடிக் கொண்டிருக்கிறேன். அனுமன் வால் கதையாக நீண்டு கொண்டிருக்கிறதே தவிர வரலாற்றை கண்டுபிடித்தபாட்டை காணோம். கி.முவிலிருந்தே அவனை தயாரிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். கிரேக்கம், சீனா போன்ற நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பாகவே ரோபோ பற்றி எழுதவும் தயாரிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் எலெக்ட்ரானிக்ஸ் துறை வளர்ச்சியடையும் வரைக்கும் யாராலும் எங்களை முழுமையாக செய்து முடிக்கவில்லை” என்று தனது கதையை ஆரம்பித்தது. ஏற்கனவே இரவு உணவை முடித்திருந்ததால் நான் சோபாவில் படுத்துக் கொண்டேன். 

“அந்தக் காலத்திலேயே உங்களை ரோபோ என்று அழைக்கத் தொடங்கிவிட்டார்களா” -இது என்னிடமிருந்து அடுத்த கேள்வி.

இல்லையாம். 1921 ஆம் ஆண்டு ஒரு நாடகத்தில்தான் இந்தச் சொல்லை பயன்படுத்தியிருக்கிறார்கள். பிறகு அந்தச் சொல்லே பெயராக ஒட்டிக் கொண்டது. “அதன் பிறகு நாங்கள் தொட்டதெல்லாம் துலங்கியது” என சுயபுராணம் படிக்கத் துவங்கியது. ரோபோ சொல்வதும் உண்மைதான். இன்றைய சூழலில் ரோபோவின் கால்தடம் பதியாத துறையே இல்லை எனலாம். ஆனால் மனிதர்களை ரோபோவிடம் விட்டுக் கொடுக்க முடியுமா? 

“மனிதர்கள் செய்வதையெல்லாம் ரோபோவால் செய்ய முடியாது” என்றேன். 

ரோபோவிற்கு கோபம் வந்துவிட்டது. “அப்படி மனிதர்கள் செய்வதை ரோபோவால் செய்ய முடியாது என்பதை நிரூபித்துவிட்டால் உங்களுக்கு அடிமையாகிவிடுகிறேன்” என்றது.

சமையல் செய்வதில் ஆரம்பித்து அறுவை சிகிச்சை வரைக்கும் எதைக் கேட்டாலும் “அதை ரோபோவால் செய்ய முடியுமே” என்றது. நான் தோற்றுவிடுவது உறுதியாகிக் கொண்டிருந்தது. பிரம்மாஸ்திரத்தை விடுவது என முடிவு செய்தேன்.

“மனிதர்கள் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள். இதை ரோபோவால் செய்ய முடியுமா?” என்ற போது ரோபோ முழித்தது. இனி வாழ்நாள் முழுமைக்கும் ரோபோ அடிமை கிடைத்துவிட்டது என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அந்தக் கனவும் ஒரு நிமிடம் கூட நீடிக்கவில்லை. 

“முடியுமே” என என் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டது.  

“அது எப்படி சாத்தியம்?” என யோசித்த போது ரோபோவே தொடர்ந்தது.

Self Replicating Robot என்பதுதான் கான்செப்ட். அதாவது தன்னைத்தானே பிரதி எடுத்துக் கொள்ளுமாம். நம்ம பாஷையில் சொன்னால் குட்டிப்போடும் வகையறா.

“ம்ம்” என்றேன். 

“ரோபோ தயாரிப்புக்குத் தேவையான பொருட்களான சென்சார்கள், ப்ராசஸர்களில் ஆரம்பித்து நட், ஸ்க்ரூ வரைக்கும் எல்லாவற்றையும் ரோபோவின் அருகில் வைத்துவிட வேண்டும். இந்த பொருட்களிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்து தன்னைப் போன்றே இன்னொரு ரோபோவை இந்த ரோபோ வடிவமைத்துவிடும். இத்தகைய வடிவமைப்பை செய்வதற்கு ரோபோ யோசிக்க வேண்டுமல்லவா? அதற்கென செயற்கை அறிவு (ஆர்ட்டிபிஷியல் இண்டெலிஜென்ஸ்) பொருத்தப்பட்ட ரோபோக்கள் 2005 ஆம் ஆண்டே வந்துவிட்டது. இன்னொரு ரோபோவை வடிவமைப்பதோடு நிற்பதில்லை. தான் உருவாக்கிய புதிய ரோபோவில் ‘ப்ரோகிராமிங்’ கூட இந்த ரோபோ செய்துவிடுகிறது. எந்திரன் படத்தில் தன்னைப்போலவே ஆயிரக்கணக்கான ரோபோக்களை சிட்டி ரோபோ வடிவமைப்பது இதன் அடிப்படையில்தான்” ரோபோ சொல்லச் சொல்ல  வாயைப் பிளந்து கொண்டிருந்தேன். 

“அவசரகால நெருக்கடிகளில் இந்த ரோபோக்களின் முக்கியத்துவம் புரியும். பெரும் விபத்து நிகழும் போதோ அல்லது போரின் போதோ ஆட்கள் பற்றாக்குறையாகும் போது இந்த ரோபோக்கள் அந்தக் கவலையை போக்கிவிடும்” என்று ரோபோ சொன்னதையும் புரிந்து கொள்ள முடிந்தது. 

ஆனாலும் ஒரு சந்தேகம் இருக்கிறது. எந்திரன் சிட்டி மாதிரியே “இது மேலும் வளர்ச்சியடைந்தால் மனிதர்களை எல்லாம் தோற்கடித்துவிட்டு ரோபோக்கள் இந்த உலகை ஆளத் துவங்கிவிடுமே” என்று கவலைப்பட்டதை ரோபோ புரிந்து கொண்டது.

“தன்னை பிரதியெடுக்கும் ரோபோக்களை வடிவமைக்கும் போதே மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடாது என்னும் கட்டளையை ப்ரோகிராமில் எழுதிவிட வேண்டும்” என்றது. பிறகு அந்தக் கட்டளையை ரோபோ எந்தக் காலத்திலும் மீறாதாம். “சினிமா வில்லன் போல யாராவது மனித குலத்தை அழிக்க வேண்டும் என்று ரோபோவிற்கு கட்டளை எழுதிவிட்டால்?” எனக் கேட்டேன்.

ரோபோ சிரித்தது. “அதற்கும் வாய்ப்பிருக்கிறது ஆனால் இன்னும் சில வருடங்கள்” ஆகக் கூடும் என்றது. இந்த பேச்சையெல்லாம் யோசித்துவாறே தூங்கிவிட்டேன்.எப்பொழுது தூங்கினேன் என்று தெரியவில்லை. விடியும் போது வீட்டு வேலைகள் அத்தனையையும் ரோபோ செய்து முடித்திருந்தது. 

டேபிள் காலண்டரில் தேதி  மட்டும் மாற்றப்படவில்லை. இன்னமும் காகித காலண்டர் இருப்பது ஆச்சரியம்தான். எழுந்து போய் தேதியைக் கிழித்தேன்.

10-04-2052.

அட! இன்றோடு எனக்கு எழுபது வயது முடிகிறது. வாழ்த்துங்கள் :)

(கல்கியில் எழுதிய ரோபோஜாலம் தொடரின் ஒரு அத்தியாயம். தொடரின் வழக்கமான வடிவிலிருந்து சற்று வித்தியாசமாக்க முயன்று பார்த்த வடிவம் இது)