சுஜாதா, சாருவுக்கு பிறகு அந்த வரிசையில் விறுவிறுப்பாகவும், சுவாரசியமாகவும் எழுதுவதற்கு இந்தத் தலைமுறையில் யாராவது இருக்கிறார்களா? எல்லோரும் ஏதோ கொஞ்சம் பயந்து பயந்து எழுதுவது போலவே தெரிகிறது. நக்கல், நையாண்டி, கொண்டாட்டம், விமர்சனம், இலக்கியம் என கலந்து கட்டி அடிக்க ஒரு ஆள் இல்லாதது ஒரு குறையாகவே இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
நான் என்ன நினைப்பது செந்தில்குமார்?
திருவள்ளுவரைப் போல நறுக்குத் தெரித்தாற்போல எழுதக் கூடிய ஒரு எழுத்தாளரைக் கூட இரண்டாயிரம் வருடங்களாக பார்க்க முடியவில்லை என நினைக்கிறேன். சீவகசிந்தாமணியை எழுதிய திருத்தக்க தேவரைப் போல இலக்கியச் சுவையுடன் காமத்தை எழுத ஒருத்தரும் இல்லையே என நினைக்கிறேன் என்று சொல்லிக் கொண்டேதான் போகலாம்.
அது இருக்கட்டும். உங்கள் கேள்விக்கே வருவோம்.
இந்தத் தலைமுறை என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள்? இருபத்தைந்திலிருந்து முப்பத்தைந்து அல்லது நாற்பது வயதுக்குள்ளான எழுத்தாளர்களையா? இந்த வயதில் இருப்பவர்கள் அதிகபட்சமாக எத்தனை வருடங்களாக எழுதிக் கொண்டிருப்பார்கள்? பத்து வருடங்கள்? சுஜாதாவின் இடத்தையும், சாருவின் இடத்தையும் அடைவதற்கு பத்து வருட உழைப்பு போதுமானது என்று நினைக்கிறீர்களா?
ரொம்பக் கஷ்டம்.
சுஜாதா தனது இடத்தை அவ்வளவு சாதாரணமாக அடைந்து விடவில்லை. அந்த மனிதர் தன் வாழ்நாளின் இறுதிவரை எழுதிக் கொண்டிருந்தார். அதுவும் வெறித்தனமாக. ஒரே சமயத்தில் ஏழு வார இதழ்களில் ஏழு தொடர்கதைகளை எழுதிக் கொண்டிருந்தார் என கேள்விப்பட்டிருக்கிறேன். நினைத்துப் பார்த்தாலே கண்ணைக் கட்டுகிறது. அப்படியிருந்தும் கூட ‘சுஜாதா நல்ல சிறுகதைகள் என்று தோன்றக்கூடிய சில சிறுகதைகளை எழுதியிருக்கிறார்’ என்று அவருக்கான அஞ்சலிக் குறிப்பில் வாரியிருந்தார் குவளைக் கண்ணன்.
எழுத்து என்பது தொடர்ச்சியான பயிற்சி என்பதுதான் என் எண்ணம். எழுதுவதற்கான ‘கரு’வை யார் வேண்டுமானாலும் கற்பனை செய்துவிட முடியும். ஆனால் அதை எழுத்தில் கொண்டு வருவதற்கு பயிற்சி அவசியம். அப்படியே எழுதினாலும் கூட நீங்கள் குறிப்பிடும் சுவாரசியத்தன்மை என்பது அவ்வளவு எளிதாக வந்துவிடுவதில்லை என்று நினைக்கிறேன். தொடர்ச்சியாக வாசிப்பதும் இடைவிடாத எழுத்துப் பயிற்சியுமே அதை சாத்தியமாக்குகிறது. அதுவும் கூட உடனடியாக நிகழ்வதில்லை- பல நூறு பக்கங்களை எழுதி முடித்த பிறகு. அப்பொழுதும் கூட அந்த சுவாரசியத்தை உச்சம் என்று சொல்ல முடியும் என்று தோன்றவில்லை. நம் எழுத்து subconscious Mind இல் தொடர்ச்சியாக Tune ஆகிக் கொண்டேதான் இருக்கிறது.
சுஜாதாவும், சாருவும் அல்லது நாம் கொண்டாடும் வேறு எந்த எழுத்தாளரும் இந்த சூட்சமங்களின் வழியாகவே அவர்களுக்கான இடத்தை அடைந்திருக்கிறார்கள் என நம்புகிறேன். இன்றைய தலைமுறை எழுத்தாளர்கள் என்று நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு யாரைக் கற்பனை செய்தாலும் இப்பொழுதுதான் எழுதவே ஆரம்பித்திருப்பார்கள். (இப்பொழுது என்பது பத்து அல்லது பதினைந்து வருட காலம் என்று வைத்துக் கொள்ளலாம்). அதற்குள் அவரின் இடத்தை பிடிக்கிறேன், இவரின் இடத்தை பிடிக்கிறேன் என Claim செய்வது கண்ணைக் கட்டி கொண்டு கிணற்றுக்குள் குதிப்பது போலத்தான் - அதுவும் காய்ந்து போன வெற்றுக் கிணற்றுக்குள் குதிப்பது.
முதலில் நிறைய வாசிக்க வேண்டியிருக்கிறது. Committed ஆக எழுத வேண்டியிருக்கிறது. நீண்டகாலம் இயங்க வேண்டியிருக்கிறது, தலைக்கனம் இல்லாமல் இருக்க வேண்டியிருக்கிறது. இன்னும் என்னென்னவோ ‘வேண்டியிருக்கிறது’.
இன்னும் இருபது வருடங்களாவது போகட்டும். என்ன நடக்குமென்று யாருக்குத் தெரியும்? வாசகர்கள் மாறியிருக்கக் கூடும், மொழி மாறியிருக்கக் கூடும், எழுத்து நடை மாறியிருக்கக் கூடும், இன்று எழுதுபவர்கள் ஒருவர் கூட ஸீனில் இல்லாமல் போயிருக்கக் கூடும் அல்லது வேறு என்ன வேண்டுமானாலும் நடந்திருக்கக் கூடும். அப்பொழுது பார்த்துக் கொள்ளலாம்.