Aug 20, 2013

சாருவை போகிற போக்கில் நிராகரிக்க முடியாது பாஸ்!

நேற்று சாருவை பற்றி எழுதியதற்கு ஒரு நண்பர் பொங்கியிருந்தார். இன்னொருவர் மின்னஞ்சலில் கருவியிருந்தார். விட்டால் ஆட்டோவில் நான்கைந்து தடியர்களை அனுப்பி அடிப்பார்கள் போலிருக்கிறது.

சாருவை துளி புகழ்வது அவ்வளவு பெரிய குற்றமா என்ன? இங்கு சாரு நிவேதிதாவை கிட்டத்தட்ட தீண்டக் கூடாத மனிதராக்கி பாடம் செய்து வைத்துவிட்டோம். சாருவை விமர்சிக்க பெரும்பாலானோருக்கு திரும்பத் திரும்ப ஒரு சில காரணங்கள்தான் கிடைக்கின்றன. பெண்ணிடம் ஆபாசமாக பேசினார், நித்யானந்தாவுக்கு காவடி தூக்கினார், பிறகு பல்டியடித்தார், தனக்குத்தானே பில்ட் அப் கொடுத்துக் கொள்கிறார் எக்ஸெட்ரா எக்ஸெட்ரா. சாருவின் மீதான இந்த அத்தனை விமர்சனங்களும் எனக்கும் உண்டு. கிடைக்கும் போதெல்லாம் ஒரு குத்துவிட்டு ஓடி வந்திருக்கிறேன். இப்பொழுதும் வாய்ப்பு கிடைத்தால் சாணத்தை ஒரு கை அள்ளி வீசிவிட்டு வருவேன். ஆனால் அவ்வளவுதானா சாரு நிவேதிதா?

சாருவின் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என அவரின் அத்தனை உழைப்பையும் இடது புறங்கையால் தள்ளிவிட்டு அவரை விமர்சித்துக் கொண்டிருக்கிறோம். தமிழின் முக்கியமான நாவல்களை வரிசைப்படுத்தும் போது சாருவின் எக்சிஸ்டென்சியலிசமும் ஃபேன்சி பனியனும் அல்லது ஸீரோ டிகிரியை தவிர்த்துவிட்டு பட்டியலை முடிக்க முடியுமா என்று தெரியவில்லை. கோணல்பக்கங்களை தவிர்த்து விட்டு பத்தி எழுத்துக்களை வரிசைப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை. பிறகு எப்படி சாரு நிவேதிதா என்கிற எழுத்தாளனை அவ்வளவு அலட்சியமாக நிராகரிக்க முடியும்?

உண்மையில் இங்கு சாருவை விமர்சிப்பது என்பது பொதுப்புத்தி மனநிலையாக மாறியிருக்கிறது. எல்லோரும் குத்துகிறார்கள்- நாமும் ஒரு குத்துவிடுவோம் என்பது மாதிரி. அவரது இணைய எழுத்துக்களை மட்டும் படித்துவிட்டு அவர் மீதான இணைய விமர்சனங்களை மட்டும் எடுத்துக் கொண்டு வெறுப்பை வளர்த்து வைத்திருப்பவர்கள்தான் அதிகம். உண்மையில் சாருவின் சிறுகதைகளையோ, நாவல்களையோ வாசித்துவிட்டு அதன் அடிப்படையில் எத்தனை பேர் விமர்சிக்கிறார்கள்? நிச்சயமாக பத்து சதவீதம் கூட இருக்காது.

சாருவின் அரசியல், அவரது தனிமனித செயல்பாடுகள் ஆகியவை மீதான அத்தனை விமர்சனங்களையும் தாண்டி அவரைக் கொண்டாடுவதற்கான காரணங்கள் இருக்கின்றன என நம்புகிறேன். நாம்தான் அவற்றையெல்லாம் வசதியாக மறந்துவிடுகிறோம். பழமையான சமூகம், கட்டமைக்கப்பட்ட கலாச்சாரம் போன்றவற்றை எதிர்த்து பேசவும் நமது மரத்துப் போன மனநிலையை அவ்வப்போது கலைத்துப் போடவும் சாரு போன்ற ஆட்கள் தேவை. இங்கு பெரும்பாலான எழுத்தாளர்களும் படைப்பாளிகளும் Orthodox ஆக இருப்பதுதான் தமக்கும் தமது எழுத்துக்கும் comfort என நினைக்கிறார்கள். பாலியல் பற்றியோ, நமது மூடத்தனமான நம்பிக்கைகள் பற்றியோ, நமது பொதுப்புத்தியின் மடத்தனத்தைப் பற்றியோ எல்லோரும் அமைதி காக்கும் போது முதல் கல்லை எறிபவராகத்தான் சாரு நிவேதிதாவை பார்க்க முடிகிறது. சமூகத்தில் இந்த சலனப்படுத்துதல் மிக அவசியம் எனத் தோன்றுகிறது. இந்தக் கலங்கலின் குறைந்தபட்ச பலனாக ஒரு liveliness ஆவது கிடைக்கிறது.

சாருவின் எழுத்தில் இன்னொரு விஷயம் readability. எந்த வகையான எழுத்திலும் வாசகனை கடைசி வார்த்தை வரைக்கும் இழுத்துச் சென்றுவிடும் வித்தை தெரிந்தவர் சாரு. என்னதான் சால்ஜாப்பு சொன்னாலும் சுவாரசியத்தை அளவுகோலாக வைத்து சுஜாதாதான் ‘டாப்’ என்று சொன்னால் அவருக்கு அடுத்து சாரு நிவேதிதாதான் என்பதை மறுக்க முடியாது. சுஜாதாவுக்கும், சாருவுக்குமான வித்தியாசம் மிக அதிகமானதாக இருக்கலாம். ஆனால் இவர்கள் இருவருக்கும் இடையில் ‘இந்த அளவுகோலில்’ வேறு யாரும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சுஜாதா தொட்ட பல இடங்களை சாரு தொடவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதே சமயம் சாருவின் பல ஏரியாக்களை சுஜாதா தொட்டதில்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் இருவரையும் ஒரே நேர்கோட்டில் வைப்பது ‘சுவாரசியம்’ என்பதன் அடிப்படையில் மட்டும்தான்.

எழுத்து சுவாரசியமாக இருந்தாலும், non-conventional ஆக இருந்தாலும் மட்டும் போதுமா? சாருவை விமர்சிக்க காரணங்கள் இல்லையா என்ன?

அதுதான் முதல் பத்தியில் பேசினோமோ! சாருவின் அரசியல், தனிமனித செயல்பாடுகள் என வைத்து பிரித்து மேயலாம். ஆனால் அதைச் செய்வதற்கு முன்பாக இங்கிருக்கும் ஒவ்வொரு எழுத்தாளனின் முகமூடியையும் சற்று கழட்டி பார்க்கலாமா? துரதிர்ஷ்டவசமாக இங்கு சாருவை Expose செய்யத்தான் ஆட்கள் இருக்கிறார்கள். மற்றபடி தங்களது காமத்தை மழைக்கவிதையிலும், வண்ணத்துப் பூச்சியின் ஓவியத்திலும் மறைத்துத் திரியும் படைப்பாளிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். தனது பேத்தி வயதுடைய பெண்ணுடன் மாதக்கணக்கில் தங்கியிருக்கும் பெரிய எழுத்தாளனை ஆதர்சமாக வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் கிசுகிசுவாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. இந்த அந்தரங்கங்கள் இலக்கிய உலகில் இருப்பவர்கள் பலருக்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால் யாரும் இதைப் பற்றி பேசுவதில்லை. அவரது ‘ட்ரவுசரை நாம் ஏன் கழட்ட வேண்டும்?’ என விட்டுவிடுகிறார்கள். ஆனால் சாருவை மட்டும் பிழிந்து விடுகிறார்கள். சாரு சாட்டிங்கில் வழிந்தால் கூட சிக்க வைத்து சீட்டியடிக்கிறார்கள். 

இதையெல்லாம் சாருவை புனிதமானவர் ஆக்குவதற்கோ அல்லது அவர் செய்வதையெல்லாம் நியாயப்படுத்துவதற்காகவோ சொல்லவில்லை. இப்பொழுதும் கூட சாருவின் செயல்பாடுகளை, காமெடிகளையெல்லாம் கலாய்ப்பதாக இருந்தால் படு குஷியாகவே செய்யலாம். ஆனால் போகிற போக்கில் ‘சாருவின் எழுத்துக்களை நிராகரிக்க வேண்டும்’ என்பதையோ அல்லது ‘அவர் மீது எப்பொழுதும் சாணம் அடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்’ என்பதையோ சொல்வதற்கு முன்பாக மிகச் சிறிய அளவிலாவது Justification கொடுக்க வேண்டும். அப்படியொரு Justification ஐ யாராலும் கொடுக்க முடியாது என்பதை மிக அழுத்தமாக நம்புகிறேன்.