சனிக்கிழமையன்று நள்ளிரவு தாண்டிய நேரத்தில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டிருக்கிறது. பெங்களூரில் அது சாதாரண விஷயம்தான். தெருவெங்கும் ஏகப்பட்ட நாய்கள் சுற்றிக் கொண்டிருக்கும். கார்போரேஷன்காரர்கள் அவ்வப்போது பிடித்துக் கொண்டு போவார்கள். கொல்வது இல்லை- கத்தரித்துவிடுகிறார்கள். ஆனாலும் பெருகிக் கொண்டுதான் இருக்கின்றன.
பெயர்தான் தெருநாயே தவிர, இவை தங்களுக்குள் ஏரியா பிரித்துக் கொள்கின்றன. பழசோ/புதுசோ- தங்கள் ஏரியாவுக்குள் கிடைப்பனவற்றை அந்த ஏரியா நாய்கள் மட்டும்தான் தின்ன முடியும். கல்யாணம், காதுகுத்து, எழவு என எதையாவது சாக்காக வைத்து தங்களது ஏரியாவுக்குள் புதிதாக ஏதாவது நாய் தென்பட்டால் அவ்வளவுதான். பிடித்து குதறிவிடுகின்றன. இதெல்லாம் ஓகேதான். இரவு நேரத்தில் அலுவலகம் முடித்து வரும் போதோ அல்லது அதிகாலையில் ஊரிலிருந்து வரும் போதோ இவை செய்யும் அதிகாரம் இருக்கிறது பாருங்கள். சற்று பயந்தவனாக இருந்தால் கால்சட்டையை நனைக்க வேண்டியிருக்கும்.
கிராமப்புற நாய்களுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம். குனிந்து கல் எடுத்தால் ஓடி வந்து நம் மீது ஏறிவிடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் நகர்ப்புற நாய்கள் குரைத்தால் தைரியமாக குனிந்து கல் எடுப்பது போல பாவ்லா காட்டலாம். கல்லை எடுக்கவெல்லாம் தேவையில்லை. பாவ்லா போதும். சற்று தூரத்திற்கு ஓடிவிடும். அதெல்லாம் இருக்கட்டும். நாய்கள் தங்களுக்குள் எப்படி பாகம் பிரிக்கின்றன என்று தெரியுமா? எனக்குத் தெரியாது. சேகர் தத்தாத்ரியின் புலிகளைப் பற்றிய ஒரு குறும்படத்தில் புலிகளும் தங்களுக்குள் பாகம் பிரித்துக் கொள்கின்றன என்று பார்த்த ஞாபகம் இருக்கிறது. அவை தங்களின் எல்லையைக் குறிக்க மரத்தில் சிறுநீர் கழித்துவிட்டு போகும். ‘இந்த ஏரியாவைத் தாண்டி நானும் வர மாட்டேன், நீயும் வரக் கூடாது’ என்று அர்த்தமாம்.
நாயும், புலியும் இருக்கட்டும். சனிக்கிழமை நள்ளிரவில் நாய் குரைத்தது என்று ஆரம்பித்த இடத்திற்கே வந்துவிடலாம். இந்த குரைப்புச் சத்தம் எனக்கு கேட்கவில்லை. தூங்கிய பிறகு பேயறைந்தாலும் கூட எனக்கு கேட்பதில்லை. அம்மா அப்பாவுக்குத்தான் கேட்டிருக்கிறது. எழுந்து போய் கதவுகள் நன்றாக தாழிடப்பட்டிருக்கிறதா என பார்த்துவிட்டு வந்திருக்கிறார்கள். இதுவே ஊரில் இப்படி கேட்டிருந்தால் கதவைத் திறந்து போய் பார்த்து இருப்பார்கள். கதவைத் திறந்து கொண்டு வெளியே வருபவர்களுக்குத் துணையாக இன்னும் இரண்டு மூன்று வீட்டுக்காரர்கள் வந்து நின்றிருப்பார்கள்.
இங்கு அப்படியில்லை. பகலில் கூட வீட்டைப் பூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள். சேல்ஸ் ரெப்களின் தொந்தரவு ஒரு பக்கம் என்றால் அவர்கள் உண்மையிலேயே விற்பனைப் பிரதிநிதிகள்தானா என்ற குழப்பம் இன்னொரு பக்கம். பகலிலேயே இதுதான் நிலைமை என்றால் இரவில் மட்டும் வெளியே போக முடியுமா என்ன? அவசரப்பட்டு வெளியே சென்றால் நாம் மட்டும்தான் தனியாக நின்று கொண்டிருப்போம்.
ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்திருக்கிறார்கள். எதிர்வீட்டில் அதுவரை எரிந்து கொண்டிருந்த விளக்கும் அணைக்கப்பட்டிருக்கிறது. அவர்களுக்கும் அதே பயம்தான் போலிருக்கிறது. இவர்கள் இரண்டு பேரும் அமைதியாக இருந்திருக்கிறார்கள். அடுத்த சில நிமிடங்களில் வெளியில் கூச்சல் குழப்பமாக இருக்கவே, அப்பா வந்து என்னையும் தம்பியையும் எழுப்பினார். நாங்கள் அரைத் தூக்கத்திலேயே ஜன்னலில் பார்த்த போது வீட்டிற்கு முன்பாக ஓரிருவரின் நடமாட்டம் தெரிந்தது. பக்கத்து வீடுகளில் கதவு திறக்கப்படுவதை உறுதிப் படுத்திக் கொண்டு வெளியே போனால் ஒரே பரபரப்பு. எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளியிருக்கும் ஒரு வீட்டில் திருடன் புகுந்திருக்கிறான். எத்தனை பேர் நுழைந்தார்கள் என்று துல்லியமாகத் தெரியவில்லை. ஒருவன் மட்டும் சிக்கிக் கொண்டானாம்.
அந்த வீட்டு ஓனர் சற்று முரட்டுத்தனமான கன்னடக்காரர். வீட்டில் தனியாகத்தான் இருந்திருக்கிறார். டிவி பார்த்துக் கொண்டிருந்தாராம். ‘சத்தம் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்’ என்றார். அந்நேரத்தில் ஒலியைக் குறைத்து எதைப் பார்த்துக் கொண்டிருந்தாரோ! அது அவரது பர்செனல்.விட்டுவிடலாம். திருட வந்த பையன்கள் கோகோகோலோ பாட்டில் அளவில் கியாஸ் சிலிண்டருடன் வந்திருக்கிறார்கள். அதன் நுனியில் வெல்டிங் சமாச்சாரங்களை பொருத்தி கதவின் தாழ்பாளைச் சுற்றிலும் கருக்கியிருக்கிறார்கள். ஏதோ கருகிய வாசம் உள்ளே வருகிறது என்பதை மோப்பம் பிடித்த வீட்டு ஓனரின் குறுக்குப்புத்தி படு வேகமாக வேலை செய்திருக்கிறது. டிவி, எரிந்து கொண்டிருந்த விளக்கு என அத்தனையும் அணைத்துவிட்டு ஒரு பெரிய துண்டு ஒன்றை எடுத்து தனது முகம் முழுவதையும் மூடிக் கொண்டிருக்கிறார்.
அதே வேகத்தில் சமையலறையிலிருந்து மிளகாய்த் தூளை எடுத்துக் கொண்டு போய் கதவுக்கு அருகில் தயாராக நின்று விட்டாராம். சில நிமிடங்களுக்கு பிறகு கதவைத் திறந்து கொண்டு அவர்கள் உள்ளே வரவும் வெறித்தனமாக கத்தியபடியே பொடியைத் துல்லியமாக முகத்தில் அடித்திருக்கிறார். இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்தவர்கள் அவரது சத்தத்தினாலோ என்னவோ சிக்கிக் கொள்ளக் கூடும் என்று தலை தெறித்துவிட்டார்கள். முதலில் வீட்டிற்குள் காலடி வைத்தவன் மட்டும் மிளகாய் காரத்தின் நெடியால் நகர முடியாமல் விழுந்துவிட்டான். அவன் மீது போர்வை ஒன்றைப் போட்டு மேலே அழுத்தியபடியே அவர் கத்தவும் வீதியில் இருந்த மக்கள் சேர்ந்துவிட்டார்கள்.
நாங்கள் போகும் போது திருடனைச் சுற்றி இரண்டு மூன்று பேர் நின்று கொண்டிருந்தார்கள். சிக்கிக் கொண்டவனால் எதுவுமே செய்ய முடியவில்லை. யாரும் அவனை பிடிக்கவில்லை என்றாலும் அவனால் எழக் கூட முடியவில்லை. எரிச்சல் தாள முடியாமல் கதறிக் கொண்டிருந்தான். உடனடியாக போலீஸை அழைக்கலாம் என்றார் ஒருவர். நாமே முதலில் தண்டிக்க வேண்டும் என்றார் இன்னொருவர். மெஜாரிட்டி ஆதரவுடன் இரண்டாமவர் வென்றுவிட்டார். சிக்கியவனை சிதைப்பதற்காக வெளியே இழுத்துச் சென்று மின்கம்பத்தில் கட்டிவைத்து அடிக்கத் துவங்கினார்கள். இத்தனை அடியை ஒருவனால் தாங்க முடியும் என்பதை இப்பொழுதுதான் முதன் முறையாக பார்க்கிறேன். ஆளாளுக்கு அடித்தார்கள். மனைவியின் மீது, மேனேஜரின் மீது இருந்த கோபத்தையெல்லாம் இறக்கி வைக்க ஒருவன் வகையாகச் சிக்கிக் கொண்டான் என்ற ரீதியில் தாக்குதலில் இறங்கியிருந்தார்கள். ‘போதும் விட்டுவிடலாம்’ என்று யார் சொன்னாலும் அவர் மீது எரிந்து விழுந்தார்கள். ஒரு மணி நேரத்திற்கு மேலாக அடித்த பிறகு மணி நான்கைத் தாண்டியிருந்தது. பிறகு ‘போனால் போகட்டும்’ என்பது போல போலீஸூக்கு தகவல் கொடுத்தார்கள். அவர்கள் அடுத்த அரை மணிநேரத்திற்குள் வந்தார்கள். என்றாலும் அந்த அரை மணி நேரம் என்பது அவனுக்கு கிட்டத்தட்ட மரணவாசல்தான்.
போலீஸ் வருவதற்குள் எத்தனை அடிக்க முடியுமோ அடித்து விட வேண்டும் என்ற வெறியில் கும்மித் தள்ளிவிட்டார்கள். முகம் எல்லாம் பிய்ந்து தொங்கியது. ஒரு கட்டத்திற்கு மேல் அவனால் கத்தக் கூட முடியவில்லை.
போலீஸார் அவனை அடிக்கவில்லை. குடிக்கத் தண்ணீர் கொடுக்கச் சொன்னார்கள். பாத்ரூம் mug ஒன்றில் தண்ணீரை பிடித்து வந்து ஊற்றினார்கள். அவன் குடித்ததைவிடவும் அதிகமாக கீழே ஓடியது. ‘பத்து மணிக்கு இரண்டு மூன்று பேர் ஸ்டேஷனுக்கு வாங்க’என்று சொல்லிவிட்டு பைக் நடுவில் அவனை அமர வைத்து இரண்டு போலீஸாரும் அழைத்துச் சென்றார்கள். ‘இனிமே திருட மாட்டேன். விட்டுடுங்க’ என்று ஈனஸ்வரத்தில் சொல்லிக் கொண்டிருந்தான். எனக்கும் அவன் சொல்வதில் உண்மை இருப்பதாகத்தான் தோன்றியது.