Aug 6, 2013

அதைக் கொஞ்சம் பூட்டுறீங்களா சார்?

ஒரு மின்னஞ்சல் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கக் கூடும்? அது நமக்கு நல்ல நேரமா அல்லது கெட்ட நேரமா என்பதைப் பொறுத்தது. சில வருடங்களுக்கு முன்பு எனது பழைய அலுவலகத்தில் ஒரு காமெடி நிகழ்ந்தது. அதைக் காமெடி என்றும் சொல்ல முடியாது. ட்ராஜடி கலந்த காமெடி.

ஒரு சுபயோக சுபதினத்தில் HR இல் பணிபுரியும் ஒரு பெண் தனது கணினியை Lock செய்யாமல் எங்கேயோ போய்விட்டாள். எங்கேயோ என்றால் சினிமாவுக்கா போயிருப்பாள்? பக்கத்தில்தான். பாவம், தண்ணீர் குடிக்கவோ அல்லது சிறுநீர் கழிக்கவோ போயிருக்கக் கூடும்.

ஆண்களின் கணினி திறந்து கிடந்தாலே நோண்டிப்பார்க்கும் நம்மவர்கள் பெண்கள் விட்டுவைத்திருந்தால் சும்மா விடுவார்களா? கணினியைப் பார்த்த இரண்டு சல்லிப்பயல்களுக்கு கை அரித்திருக்கிறது. அவளை கலாய்ப்பதாக நினைத்து ஒரு சல்லிப்பயல் அவளது மின்னஞ்சலைத் திறந்து நான்கைந்து வரி டைப் செய்துவிட்டான். நான்கைந்து வரி என்று மேம்போக்காக சொன்னால் சுவாரசியமில்லை. மின்னஞ்சலின் உள்ளடக்கம்தான் முக்கியம். “எனது உயிரே ராஜ்...நீ இன்று அலுவலகத்திற்கு வராமல் வீட்டிலிருந்து வேலை செய்கிறாய் என்று தெரியும். ஆனால் உன்னை எதிர்பார்த்து இங்கு ஒருத்தி காத்திருப்பது தெரியாதா முட்டாப்பயலே? வேலை செய்வதாகச் சொல்லிவிட்டு வீட்டில் நீ என்ன செய்வாய் என்று எனக்கு தெரியும்..ஹஹஹா....ஷேம் ஷேம் பப்பி ஷேம்”- இதுதான் அவன் டைப் செய்து வைத்திருந்த வரிகள். தட்டச்சி முடித்தவுடன் பெறுநருக்கான இடத்தில் ராஜூவின் மின்னஞ்சலையும் போட்டுவிட்டு இன்னொரு சல்லிப்பயலை அழைத்துக் காட்டியிருக்கிறான். அவனை சிரிக்க வைப்பதற்காகத் தான் இவன் அழைத்திருப்பான் போலிருக்கிறது. ஆனால் இரண்டாவது சல்லிப்பயல் எதையுமே கவனிக்காமல் Send ஐ அழுத்திவிட்டான். குரங்கு கையில் பூமாலையைக் கொடுத்தால் நார்தானே மிஞ்சும்?

அடுத்த வினாடி ராஜூவின் இன்பாக்ஸில் இந்த மின்னஞ்சல் விழுந்திருக்கிறது. ஒரு சாதாரண ‘கலாய்ஃபிகேஷன்’ மின்னஞ்சல். இதில் என்ன இருக்கிறது என்கிறீர்களா? ஒன்றுமில்லைதான் - அந்தப் பெண்ணும் ராஜூம் ஒரே வயதை உடைய நண்பர்களாக இருந்திருந்தால். இங்கு அதுதான் மேட்டரே. இந்தப் பெண்ணுக்கு முப்பதைத் தொடக் கூடும். தொலையட்டும். ஆனால் ராஜூவுக்கு ஐம்பதைத் தாண்டியிருக்கும். ராஜூவின் வயது மட்டுமில்லை- அவரது பதவியும் ‘டேஞ்சர்’தான். அவர் எங்கள் நிறுவனத்தில் வைஸ் பிரசிடெண்ட். அதுவும் HR டிபார்ட்மெண்டில். சோலி சுத்தம்.

சில வினாடிகளுக்குப் பிறகுதான் தங்களது அக்கப்போர் பற்றி முதல் சல்லிப்பயலுக்கு உறைத்திருக்கிறது. ‘இப்படி செஞ்சுட்டானே பாவிப்பயல்’ என பதறிப்போய் செகண்ட் சல்லியிடம் விளக்கியிருக்கிறான். இரண்டாவது சல்லிப்பயலுக்கு மயக்கம் வராத குறைதான். அவுட்லுக்கில் மின்னஞ்சலைத் திரும்பப் பெறுவதற்கான வழி இருக்கிறது அல்லவா? அதை முயன்றிருக்கிறார்கள். Recall Failure என்று வந்திருக்கிறது. இப்பொழுது வெள்ளம் தலைக்கு மேலாக ஒரு ஜாணில் போய்க் கொண்டிருக்கிறது. அவசர அவசரமாக அந்தப் பெண்ணுக்கு ஃபோன் செய்து அழைத்திருக்கிறார்கள். விஷயத்தை தெரிந்து கொண்டவள் பாதம் தரையில் படாமல் ஓடி வந்திருக்கிறாள். இந்தத் தபாலை போஸ்ட்மேனா எடுத்துச் செல்கிறார்? நடுவழியில் அமுக்குவதற்கு. என்னதான் வேகமாக வந்தாலும் ஒரு பயனுமில்லை. 

வந்தவுடன் சல்லிகள் இரண்டு பேரையும் இங்கிலீஷ் கெட்டவார்த்தைகளால் திட்டுவதற்கு ஐந்து நிமிடங்களும் நிலத்தில் கால் படாமல் ஓடி வந்ததால் மூச்சு வாங்குவதற்கு ஒன்றரை நிமிடங்களும் அவளுக்கு தேவைப்பட்டிருக்கும் போலிருக்கிறது. ஆறரை நிமிடங்களுக்கு பிறகு மூன்று பேருமாகச் சேர்ந்து அடுத்து என்ன செய்வது என்று யோசிக்கத் துவங்கியிருக்கிறார்கள். ஆறரை நிமிடம் என்பது டூ லேட். ஜாண் போய்க் கொண்டிருந்த வெள்ளம் இப்பொழுது முழம் போட்டுக் கொண்டிருக்கிறது. ‘ராஜூவுக்கு நடந்ததை விளக்கி மன்னிப்புக் கடிதம் அனுப்பிவிடலாம்’ என்று முடிவு செய்து கணினிக்கு முன்பாக அவள் அமர்வதற்கு முன்பாகவே  ‘What the non-sense is going on? Start the enquiry immediately and action on it' என்று பெருந்தலை இந்த மின்னஞ்சலை HR ஆட்களுக்கு ஃபார்வேர்ட் செய்துவிட்டது. 

HR டிபார்ட்மெண்ட் VP க்கே அல்வா கொடுத்தால் சும்மாவிடுவார்களா? அந்த டிபார்ட்மெண்ட்காரர்கள் ஓய்வுபெற்ற நீதிபதிகள் மாதிரிதானே? வேறு வேலையே இருக்காது. விசாரணைக்கமிஷன் வைப்பதும், வாரம் பத்து பேரை குனிய வைத்துக் கழுத்தை வெட்டுவதை மட்டுமே கர்ம சிரத்தையாக செய்யும் க்ரூப் அல்லவா அது? படையைத் திரட்டிக் கொண்டு வந்துவிட்டார்கள். மூன்று பேருக்குமே பேதி ஆகும் நிலைமைதான்.

முதலில் அந்தப் பெண்ணைத்தான் அழைத்திருக்கிறார்கள். லெஃப்ட், ரைட், செண்டர் என்று இழுக்க இழுக்க அவள் அத்தனையையும் கொட்டிவிட்டாள். அடுத்து சல்லிகள் இரண்டு பேரையும் ஒரே சமயத்தில் அழைத்து கொஞ்சியிருக்கிறார்கள். இந்தப் பஞ்சாயத்துக்கு நாட்டாமையாக வந்தவர் ‘மூன்று பேருமே குற்றவாளிகள்’ என்று தீர்ப்பெழுதி சொம்பில் எச்சிலைத் துப்பி பஞ்சாயத்தை முடித்துவிட்டார்.

வெள்ளிக்கிழமை அவர்களுக்கு பிடித்த நாள். பெரும்பாலான கழுத்து வெட்டுக்கள் அப்பொழுதுதான் நடக்கும். அந்தப் பெண்ணை மட்டும் விட்டுவிட்டு மற்ற இரண்டு பேரின் கதையை முடித்துவிட்டார்கள்.  அவளை மட்டும் விட்டது எல்லோருக்குமே ஆச்சரியம்தான். ‘தன்னை மட்டும் எப்படி விட்டார்கள்’ என்று அவளும் புரியாமல்  அடுத்த இரண்டு நாட்களுக்கு தரையில் கால்படாமல் மீண்டும் ஓடிக் கொண்டிருந்தாள். வெள்ளிக்கிழமை மாலையிலேயே இந்த விவகாரத்தை விளக்கி மற்ற அனைவருக்கும் ஒரு மின்னஞ்சல் வந்தது. ‘கணினியை Lock செய்யாமல் விட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்’ என்று மிரட்டியிருந்தார்கள். 

அதன் பிறகு பல மாதங்களுக்கு வேலை செய்கிறார்களோ இல்லையோ கணினியை லாக் செய்வதுதான் கடமை என்பது போல திரிந்தார்கள். சில சின்சியர் சிகாமணிகளை பார்ப்பதற்கே பயமாக இருந்தது. வீட்டிலிருந்து பூட்டு கொண்டு வந்து பூட்டிவிடுவார்கள் போலிருந்தது. இது நடந்து ரொம்ப வருடங்களுக்கு பிறகு ‘லாக்’ செய்யாமல் நான் சிக்கிக் கொண்டேன். நேற்றுதான் அந்த சம்பவம் நடந்தது. வேலையெல்லாம் போகவில்லை. ஆனால் அதைவிடக் கொடூரம் நடந்துவிட்டது. சொல்கிறேன். வெய்ட்டீஸ்!