Aug 3, 2013

வக்கற்றவன் வாத்தியாரு...போக்கற்றவன் ஃப்ரொபசரா?

சமீபத்தில் இஞ்சினியரிங் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டிருப்பவர்களை பற்றி ஒரு நண்பர் நக்கல் அடித்தார். அவர் எம்.சி.ஏ படித்தவர். அதனால் பி.ஈ படித்தவர்களைப் பார்த்தால் அவருக்கு அத்தனை இளக்காரம். அந்தக் காலத்தில் பி.ஈ படித்தவர்கள் எல்லாம் இஞ்சினியர்களாம். ஆனால் இந்தக் காலத்தில் பி.ஈ முடித்தவர்கள் எல்லாம் இஞ்சினியர்கள் இல்லையாம். இஞ்சி காய்ந்து  'சுக்கு'னியர்கள் ஆகிவிட்டார்கள் என்றார். 

‘நீங்களும் சுக்குனியர்தானே?’ என்றார். ஹிஹி என்று வழிவதைத் தவிர ஒன்றும் வழியில்லை. ஒரு செய்தியைக் கண்ணில் காட்டித்தான் இந்த டயலாக்கை அடித்தார். அந்தச் செய்தி சமீபத்தில்தான் வந்திருந்தது. இந்த வருடம் அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய பொறியியல் கவுன்சிலிங்கில் எழுபதுக்கும் மேலான பொறியியல் கல்லூரிகளில் ஒரு ஸீட் கூட நிரம்பவில்லையாம். அதாவது ஈ, காக்கா கூட எட்டிப்பார்க்காத எழுபது இஞ்சினியரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன.

வருடத்திற்கு ஒரு மாணவர் கூட சேரவில்லையென்றால் அந்தக் கல்லூரியை எப்படி நடத்துவார்கள்? வாத்தியார்களுக்கு சம்பளம் கொடுப்பதெல்லாம் இரண்டாம் பட்சம். கரண்ட் பில், குடிநீர் வரி கட்டுவதென்றாலும் கூட சேர்மேன் கைக்காசு போட்டுத்தானே கட்ட வேண்டியிருக்கும். சரி அப்படியே பில் கட்டினாலும் யாருக்கு பிரயோஜனம்? கட்டி வைத்த கட்டடத்தை என்ன செய்வார்கள்? யோசித்துப் பார்த்தால் கொஞ்சம் பழைய இரும்பை வாங்கிப் போட்டு வியாபாரம் செய்யலாம்தான். ஆனால் அதற்கும் வழியில்லாமல் ஊருக்கு ஒதுக்குப் புறமாகவும், நேஷனல் ஹைவேஸின் ஓரமாகவும், மொட்டைக் காட்டுகளுக்குள்ளும் கட்டி வைத்திருக்கிறார்கள். 

இந்த மாதிரியான கல்லூரிகளில் வாத்தியார்கள் இருக்கிறார்களே- அவர்களின் திறமைக்கும் தகுதிக்கும் நோபல் பரிசே கூட கொடுக்கலாம். எலெக்ட்ரிகல் விரிவுரையாளரை அழைத்து கரண்டுக்கும், வோல்டேஜூக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வியைக் கேட்டால் போதும். மொத்தக் கல்லூரியின் லட்சணமும் பல்லைக் காட்டிவிடும்.

பி.ஈ. படிக்கும் போது தாறுமாறாக அரியர்ஸ் வைத்தவர்கள், ஐந்தாறு வருடம் கூடி நாலு வருடப்படிப்பை முடித்தவர்களுக்கு எல்லாம் அடுத்த ஆப்ஷன் எம்.இ அல்லது எம்.டெக். அப்படியே முதுநிலைப் படிப்பை படித்தாலும் முடித்த பிறகு வேலை கிடைக்கவில்லையென்றால் இருக்கவே இருக்கிறது- வாத்தியார் வேலை. ஏதாவது ஒரு கல்லூரியில் சேர்த்துக் கொள்கிறார்கள். இப்பொழுதெல்லாம் எட்டாயிரம் அல்லது ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளத்திற்கு சல்லிசாக இஞ்சினியரிங் வாத்தியார்கள் கிடைக்கிறார்கள். கட்டடவேலை மேஸ்திரி இப்பொழுது ஒரு நாளைக்கு அறுநூறு ரூபாயை சர்வசாதாரணமாக கூலியாக வாங்குகிறார்கள். ஆனால் பதினான்கு வருடம் பள்ளியில் படித்து, நான்கு வருடம் இஞ்சினியரிங் முடித்து, அப்புறம் இரண்டு வருடம் எம்.ஈ படித்து  கடைசியில் ஒன்பதாயிரம் ரூபாய் சம்பளமாக வாங்குவதற்கு...எதற்கு இந்தப் பாடு? 

கல்லூரிக்கு ஃபீஸ், ஹாஸ்டலுக்கு பணம், புத்தகச் செலவு, ஊருக்கு போய்வர செலவு அதுபோக இடையில் ஐ.வி போவதற்கு காசு, ப்ராஜக்ட் செய்ய காசு, ரீ-வேல்யூசனுக்கு காசு, எக்ஸாம் ஃபீஸ் என்றெல்லாம் அப்பாவுக்கு சுமையை ஏற்றியதுதான் மிச்சம். 

இதையெல்லாம் யாரையும் குற்றஞ்சாட்டுவதற்காகச் சொல்லவில்லை- அப்படி குற்றஞ்சாட்டுவதாக இருந்தால் வதவதவென கல்லூரி திறக்க அனுமதி கொடுத்த பொறியியல் கவுன்சில், தமிழக அரசு, கல்வி வியாபாரிகள் என்று அத்தனை பேரையும் வரிசையாக நிறுத்தி சட்டையைக் கழட்ட வேண்டியிருக்கும். பக்கத்து வீட்டுக்காரன் படிக்கிறான் என்பதற்காக இஞ்சினியரிங் சேர்ந்தவர்கள், அக்கா பொண்ணு படிக்கிறாள் என்பதற்காக தன் மகனும் இஞ்சினியரிங் சேர வேண்டும் என நினைத்தவர்கள் அத்தனை பேரும் குற்றவாளிகள்தான். என்னதான் நாறினாலும் ஒவ்வொரு வருடமும் குட்டையில் விழுந்து கொண்டே இருக்கிறார்களே என்றுதான் இந்தப் புலம்பல்ஸ். 

மற்றபடி, ஆசிரியர் ஆவதுதான் லட்சியம் என்று எம்.இ முடித்து ஆசிரியர் ஆனவர்கள் மீது எப்பொழுதுமே மரியாதை உண்டு. எல்லோருடனும் சேர்த்து அவர்களையும் கலாய்ப்பதாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை.

ஒரு காலத்தில் வேறு வழியே இல்லாதவர்கள் பி.ஏ தமிழ் அல்லது பி.ஏ ஹிஸ்டரி சேர்ந்து அந்தப் படிப்புகளுக்கான மரியாதையையே தொலைத்தார்கள். இப்பொழுது வேறு வழி இல்லாதவர்கள் எம்.இ அல்லது எம்.டெக் சேர்ந்து இந்தப் படிப்புகளின் மரியாதையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

சில வருடங்களுக்கு முன்பாக எம்.ஈ, எம்.டெக் சேர்வதற்கும் கவுன்சிலிங் நடந்து கொண்டிருந்தது. பி.ஈ முடித்தவர்கள் பொதுவான நுழைவுத் தேர்வை எழுதினால் மதிப்பெண்ணின் அடிப்படையில் கவுன்சிலிங்கின் போது விருப்பமான கல்லூரியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இப்பொழுதும் முதுநிலைப் படிப்புக்கான கவுன்சிலிங் நடக்கிறதுதான். ஆனால் அந்த முறையில் பெரிய பாறாங்கல்லைத் தூக்கி போட்டுவிட்டார்கள். 

எப்படியும் பி.ஈ முடித்துவிட்டு வேலையில்லாமல் திரியும் ஆயிரக்கணக்கானவர்கள் எம்.ஈ படிக்கத்தான் வருவார்கள் என்று முடிவு செய்த கல்லூரிகள் ‘எம்.ஈ கவுன்சிலிங்கில் நாங்கள் பங்கேற்கவில்லை. நாங்களே எங்கள் ஸீட்டை நிரப்பிக் கொள்கிறோம்’ என்று அறிவித்திருக்கிறார்கள். கொங்கு, பண்ணாரியம்மன் போன்ற நல்ல கல்லூரிகள் கூட இந்த சில்லரைத் தனத்தை செய்கின்றன. நுழைவுத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கி கவுன்சிலிங்குக்கு சென்றால் ‘போனாம்போக்கி’ கல்லூரிகள்தான் இருக்கின்றன. கவுன்சிலிங்குக்கு வராத நல்ல கல்லூரிகளோ லட்சக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு எம்.ஈ சீட்களை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஊழல்தான் போலிருக்கிறது. இப்பொழுதெல்லாம் துணைவேந்தர் ஆவதற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கிறார்களாம். கொடுத்த பணத்தை பிடிக்க வழி வேண்டுமல்லவா? கல்லூரிகள் கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொண்டு கல்லூரிகளின் விருப்பத்திற்கு ஏற்ப வளைந்து போகிறார்கள். பல்கலைகழகத்தில் இருப்பவனும் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறான். கல்லூரி கட்டியவனும் சம்பாதிப்பதிலேயே வெறியாக இருக்கிறான். அப்படியானால் யார் இளிச்சவாயர்கள்?

பி.ஈ முடித்தும் வேலை இல்லை, நுழைவுத் தேர்வில் மதிப்பெண் வாங்கியும் நல்ல கல்லூரியில் சேர வழியில்லை, கிடைத்ததில் சேரலாம் என டப்பா கல்லூரியில் சேர்ந்தால் அங்கு வாத்தியார்கள் சரியில்லை, அப்படியே படித்து முடித்தாலும் வேலை கிடைப்பதில்லை. சரி என்னதான் செய்வது? கிடைக்கும் டப்பா கல்லூரியில் நாமும் வாத்தியார் ஆகிவிடுவோம் என்று தனது வாழ்க்கையையும் தொலைத்து இன்னொரு தலைமுறையும் ‘மல்டி லெவல் மார்கெடிங்’முறையில் தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லவா? அவர்கள்தான் பாவம்!