Aug 30, 2013

தங்கமீன்கள்- காமம் இல்லாத காதல்

ஒரு லவ் ஸ்டோரி. அதுவும் பத்தாம் வகுப்புக் காதல். துள்ளுவதோ இளமை மாதிரியான அரசல்புரசல் எதுவும் இல்லாத புனிதக் காதல்- நேரடியாகக் கதைக்கு வந்துவிடுகிறேன்.

தனசேகர் வகுப்புத் தோழன். ஒரே பென்ச்தான். அவனுடைய அப்பா ஏதோ ஒரு வங்கியில் அலுவலராக இருந்தார். தனாவுக்கு கூடப் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. ஒரே பையன் என்பதால் வீட்டில் செல்வாக்காக வைத்திருந்தார்கள். நல்ல சட்டை, வாட்ச் என்று வகுப்பில் சற்று வித்தியாசமாக இருப்பான். அவனுக்குத்தான் காதல். காதல் என்றால் காதல் அவ்வளவு ஆழமான காதல். அழகான காதலும் கூட.

அதற்கு முன்னாடி ஒன்றைச் சொல்லிவிட வேண்டும். எங்கள் பள்ளி இருக்கிறது பாருங்கள்- வறட்டு பாலைவனம். மருந்துக்கு கூட பெண்வாசம் இல்லாத பள்ளி. இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் படித்தோம். அத்தனை பேரும் கழுமுண்டராயன்ஸ். பழங் காலத்தில் எங்கள் பள்ளியில் பெண்களும் படித்தார்களாம். இடையில் ஏதோ ஒரு ஒழுக்க சிகாமணிக்கு வயிறு எரிந்திருக்கும் போலிருக்கிறது. பெண்களுக்கென எங்கள் ஊரில் தனியாக ஒரு பள்ளிக் கூடத்தை கட்டிவைத்துவிட்டார்கள். அப்பா காலத்தில் நடந்த இந்தக் கொடுமை எங்கள் காலம் தாண்டியும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பெண்வாசமே இல்லாமல்  ‘டென்ஷன்’ ஏறிக்கிடந்த கிடாய்கள் பாத்ரூம் சுவரில் ஒவ்வொரு டீச்சரையும் பற்றி எழுதி வைத்ததுதான் கண்டபலன். மற்றபடி ஆண்களுக்கான தனிப்பள்ளி கட்டி வைத்தால் ஒழுக்கம் கொழுந்துவிட்டு வளரும் என்பதெல்லாம் நம் கற்பனைதான்.

அப்படிப்பட்ட பள்ளியில் படித்த தனசேகர்தான் பத்தாம் வகுப்பிலேயே ஒரு பெண்ணை பிக்கப் செய்துவிட்டான். அந்தப் பெண் அவனுக்கு பக்கத்துவீடுதான். கல்பனா- இந்தக் கதையின் நாயகி. இந்தக் கதையை அவன் சொல்ல ஆரம்பிக்கும் போது நான் கேட்ட முதல் கேள்வியே ‘அழகா இருப்பாளாடா?’. அந்த அழகை வர்ணிக்கவே அவனுக்கு நான்கைந்து நாட்கள் தேவைப்பட்டது. கம்பராமாயாணம் தோற்குமளவுக்கு கல்பனாயனம் எழுதினான். முகத்தில் எனக்கு ஈயாடவில்லை. வயிறுதான் பற்றியெரிந்தது. இப்படிப்பட்ட அழகியை எப்படி பிடித்தான் என்று தெரியாமல் தாறுமாறாக டென்ஷன் ஏறிக் கொண்டிருந்தது. நான்கைந்து நாட்கள் கல்பனாயனம் முடிந்த பிறகு பிக்கப் படலத்தை ஆரம்பித்தான்.

அந்த விவகாரமே அலாதியானது.  நாங்கள் எல்லாம் சைட் அடிக்கக் கூட வழியில்லாமல் காய்ந்து கிடந்த போது அவன் ஐந்து ரூபாய் கொடுத்து ‘கோல்டு ஃபிஷ்’ வாங்கிக் கொடுத்துதான் இந்தப் புனிதக் காதலுக்கு பொட்டு வைத்திருக்கிறான். பக்கத்து வீடுதானே என்று அவளைப் பெற்றவர்களும் அசால்ட்டாக இருந்திருக்கிறார்கள். இந்தக் கட்டுரைக்கு தங்கமீன்கள் என்று டைட்டில் வைக்க இதுதான் காரணம். டைமிங்காக இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். மற்றபடி படத்துக்கான விமர்சனமாக இருக்கும் என உள்ளே வந்திருந்தால் ஸாரி பாஸ்.

நாம் லவ் ஸ்டோரியைத் தொடரலாம். இந்த தங்கமீன்கள் வளரத் துவங்கும் போதே தனா-கல்ப்ஸ் காதல் பற்றி எரியத் துவங்குகிறது. முந்தின நாள் என்ன நடந்தது என்பதை அடுத்த நாளே என்னிடம் சொல்லிவிடுவான். அவன் சொல்லும் காதலில் எந்த இடத்திலும் காமமே இருக்காது. காமம் இல்லையோ அல்லது சென்சார் செய்துவிட்டானோ தெரியாது ஆனால் அது அற்புதமான ரொமான்ஸாக தொடர்ந்து கொண்டிருந்தது. தனா அளவுக்கு காதலை வர்ணிக்கும் திறமை இல்லை என்பதால் இந்த இடத்தில் ஒரு கலக்கலான ரொமாண்டிக் லவ் ஸ்டோரியை நமக்குத் தகுந்த விதத்தில் கற்பனை செய்து கொள்ளலாம்.

யாருமே இல்லாத மாலை நேரத்தில் இரண்டு பேரும் கைகளை பிடித்துக் கொண்டு நடப்பது, அவள் மொட்டை மாடிச் சுவரில் அமர்ந்து கொண்டிருக்க இவன் நின்று கொண்டே மணிக்கணக்கில் பேசியது, சிவப்பு நிற தாவணியில் தேவதையைப் போல அவள் வயல்வெளிகளில் நடந்தது என அவன் சொன்னவை எல்லாம் க்ளிஷேவாக இருந்தாலும் தனசேகர் சுவாரஸியத்தை கூட்டிக் கொண்டே போகப் போக ஒரு பெண்ணையாவது காதலித்தே தீர வேண்டும் என வெறியெடுத்துத் திரிந்தேன்.

வேலைக்கு அல்லது பள்ளிக் கூடத்திற்கு தினமும் கிளம்பிப் போவதற்கு சலிப்பாக இருந்தால் அந்த சலிப்பை போக்க ஒரே வழிதான் இருக்கிறது. நம்முடன் வேலை செய்யும் அல்லது படிக்கும் பெண்ணை காதலிக்கத் தொடங்கிவிட வேண்டும். அவளை தினமும் பார்க்க போகும் உற்சாகமே நமக்கான டானிக்காக அமைந்துவிடும்.  காதலிக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் இன்னொரு காதல் கதையையாவது பின் தொடர வேண்டும். அப்படித்தான் வயசுக்கு வந்த பருவமான பத்தாவது படிக்கும் போது பாலைவனத்தில் சிக்கியிருந்தாலும் தனாவின் காதல் கதையைக் கேட்பதற்காகவே தினமும் பள்ளிக்கு போவது என உற்சாகமாகியிருக்கத் துவங்கிய காலகட்டம் அது. 

பத்தாம் வகுப்பு தேர்வு தொடங்கும் வரைக்கும் எனது ஒவ்வொரு நாளையும் தனது காதலினால் அதியற்புதமானவையாக மாற்றியிருந்தான். தேர்வுகள் தொடங்கிய பிறகு ஆளாளுக்கு பிஸியாக இருந்தோம். தனாவிடம் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. தேர்வுகள் முடிந்த பிறகு ‘சம்பளம் அதிகமாகக் கொடு, விடைத்தாள் திருத்தத்திற்கு காசு அதிகமாகக் கொடு’ என்று ஆசிரியர்கள் அரசாங்கத்தின் கழுத்தில் கத்தியை வைத்தார்கள். விடைத்தாள்களை திருத்தாமல் புறக்கணிப்பு செய்தனர். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாக போய்விட்டது. ஐந்து மாதம் விடுமுறை கிடைத்தது. 

ஐந்து மாதம் கழித்து பள்ளிக்குச் செல்லத் துவங்கினோம். நானும், தனாவும் வெவ்வேறு வகுப்பாகியிருந்தோம். தனாவின் காதல் கதையைக் கேட்டுவிட வேண்டும் என்று அவனைத் தேடிப் போனேன். அவன் பேசுவதைத் தவிர்க்க விரும்பினான். ‘என்னாச்சுடா?’ என்றதற்கு ‘எல்லாம் முடிஞ்சு போச்சு’ என்று நா தழுதழுக்கச் சொன்னான். பதறினேன். ஐந்து மாத இடைவெளியில் கல்பனா இறந்து விட்டாளாம். இரத்தப் புற்று நோய். ஆரம்பத்திலேயே கண்டறியாமல் சில மாதங்களுக்கு முன்பாக தெரிந்து கொள்வதற்குள் நோய் முற்றி மருத்துவர்கள் கைவிட்டுவிட்டார்கள். கடைசி நாட்களில் இருவரது பெற்றோருமே இவர்களின் காதலை ஏற்றுக் கொண்டார்களாம். அவள் இறப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பாக இவனது மடி மீது தலையை வைத்து ரத்தவாந்தி எடுத்திருக்கிறாள். அடுத்த ஜென்மத்திலும் நான் உனக்கு காதலியாக பிறக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவள் மூச்சு நின்றுவிட்டது. இதற்கு மேல் அவனால் பேச முடியவில்லை. அவனது கரங்களை அழுத்தமாக பிடித்துக் கொண்டேன்.

மனம் இப்பொழுது சற்று பாரமாகியிருக்கக் கூடும். இன்னும் சில வினாடிகள் ‘லேசாகவே’ வைத்திருங்கள். கதையை முடித்துவிடுகிறேன். பிறகு ஃபீல் செய்து கொள்ளலாம்.

கல்பனா படித்த பழனியம்மாள் பெண்கள் பள்ளியின் ஆசிரியை ஒருவர் எங்கள் வீதியில் குடியிருந்தார். அவரிடம் ‘கல்பனான்னு ஒரு புள்ள உங்க ஸ்கூலில் படிச்சுச்சே தெரியுமா? இந்த லீவுல அவ செத்துட்டாளாம்’ என்றேன். அவர் மூக்கு கண்ணாடியை மேலே ஏற்றிக் கொண்டு யோசித்துவிட்டு ‘அப்படியா?’ என்றார். மொத்தக் கதையையும் சொல்லி துக்கத்தை காட்டினேன். அடுத்த நாள் டீச்சர் வீட்டுக்கே வந்துவிட்டார். ‘கல்பனான்னு ஒரு பொண்ணும் படிக்கல..ரெஜிஸ்டரிலேயே தேடிட்டேன்...படிச்ச புள்ளைக அத்தனை பேரும் வந்து மார்க் ஷீட் வாங்கியாச்சு. யாரும் சாகல’ என்றார். பயங்கரக் குழப்பமாக இருந்தது. பள்ளிக்குச் சென்ற பிறகு முதல் வேலையாக தனாவைத் தேடினேன். விசாரித்த போது அசால்ட்டாகச் சொன்னான் ‘ஆமாண்டா...சும்மா உன்னை ஏமாத்தினேன்’. அவனிடம் வேறு என்ன பேசுவது? கண்ணாடியில் என் முகத்தை பார்த்தேன். ‘இனாவானா’ என்று எதுவும் எழுதி ஒட்டியிருக்கவில்லைதான். ஆனால் எதற்கு அப்படி டபாய்த்தான் என்று தான் தெரியவில்லை. அதன் பிறகு அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இன்றைக்கு வரைக்கும்.