அன்புள்ள மணிகண்டன்,
சாருவை பற்றிய உங்களின் கருத்துக்கள் மிகச் சரியானவை.
ஆமாம், அவர் Eminently Readable. குறிப்பாக தமிழ் பத்தி எழுத்துகளில் சுஜாதாவுக்கு பிறகு அவர்தான் வருவார்.
நாம் சாருவை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் அவர் மீது மண்ணை வாரி வீச வேண்டியதிதில்லை. தமிழ் எழுத்தாளர்களைப் பற்றி விவாதிக்கும் போது நிச்சயம் சாருவை புறக்கணிக்க முடியாது.
நான் எழுத விரும்புவதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்.
ரகு.
அன்புள்ள ரகு,
வணக்கம்.
நமக்கு ஒரு மனநிலை உண்டு. ஒன்று முழுமையாக பாராட்ட வேண்டும் அல்லது கீழே போட்டு மிதித்துவிட வேண்டும். கலவையாகச் சொன்னால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உண்மையை எழுத வேண்டுமானால் அது நிச்சயம் கலவையாகத்தான் இருக்கும். ஒரு மனிதன் எப்படி முழுமையாக நல்லவனாகவோ அல்லது முழுமையான கெட்டவனாகவோ இருக்க முடியும்?
இந்தப் பிரச்சினையின் காரணமாக முடிந்தவரை தனிமனிதர்களைப் பற்றி பேசுவதையோ அல்லது எழுதுவதையோ தவிர்த்துவிடுவதுதான் நல்லது. மீறிச் செய்தால் பகைமையைச் சம்பாதிப்பதுதான் கண்ட பலனாக இருக்கும். இந்தக் கட்டுரையைச் சாரு எப்படி எடுத்துக் கொள்வார் என நினைக்கிறீர்கள்? ஒருவேளை வாசித்திருந்தால் அவரது பாணியில் It is a Shit என்றுதான் சொல்வார்.
அன்புடன்,
மணிகண்டன்
(2)
மணிகண்டனுக்கு,
மணிகண்டனுக்கு,
இப்போது உணர்ச்சி வசப்பட்ட வாசகர்கள் என்ற அடையாளத்துடன் சில தவறான வழிகாட்டல் மூலம் சில கருத்துக்களை நிராகரிக்க அலைவது ஒரு கலாச்சாரம் என்று கூட ஆகிவிட்டது .ஓஷோவை போல சாருவும் இன்னும் சில காலத்திற்கு பிறகு மதிக்கப்படலாம் .
என்றென்றும்அன்புடன்
*கிருஷ்ணமூர்த்தி*
(3)
அன்பின் மணி,
சாருவை நிராகரிக்க கூடாது என்று சொல்ல உங்களுக்கு உரிமை உள்ளது போல எனக்கு சாருவை நிராகரிக்க சொல்ல உரிமை இருக்கின்றது. நியாயப்படுத்தல்கள் நபர்களுகிடையில் வேறுபடலாம்.
நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள் நாங்கள் எங்கள் பாதையில் செல்லுங்கள்.
(நீங்கள் உங்கள் கருத்தை நியாயப்படுத்த சும்மா ஒரு கிசுகிசு வை அடித்துவிட்டிருக்கின்றீர்கள். கிசு கிசுவை நம்பி நீங்க உங்க நியாயப்படுத்தல்களை தொடங்கியிருக்கின்றீர்கள் என்பதை நினைக்க பாவமாக இருக்கின்றது )
ஹாரிஸ் டேவிட்.
அன்புள்ள ஹாரிஸ்,
வணக்கம்.
உங்களின் உரிமையை நான் மறுக்கவில்லை. சாருவை நிராகரிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை ஆனால் சாருவின் எழுத்துக்களை நிராகரிப்பதைத்தான் வேண்டாம் என நினைக்கிறேன்.
நீங்கள் எனக்கு எழுதியிருப்பது போல நமது பாதையை நம்மால் நிர்ணயம் செய்துவிட முடியுமா என்ன? நமது தொண்ணூற்றைந்து சதவீதம் பாதைகள் தானாகவேதான் அமைகின்றன. பயணிப்போம். ஏதாவது ஒரு புள்ளியில் நிச்சயம் சந்திப்போம் என நம்புகிறேன்.
மற்றபடி, கிசுகிசு என்பது தமிழர்களின் வஸ்துதானே? அதை ஏன் முழுமையாக நிராகரிக்க வேண்டும்? இதில் பாவப்பட என்ன இருக்கிறது என்றுதான் தெரியவில்லை.
மிக்க அன்புடன்,
மணிகண்டன்