Aug 28, 2013

மிருகங்கள் சூழ் உலகு

பெங்களூரில் என் தம்பிக்கு பெரிய நண்பர் குழாம் இல்லை. இங்கு மட்டுமில்லை எங்குமே அவனுக்கு அப்படித்தான். கல்லூரியில் எப்படி இருந்தான் என்று தெரியவில்லை. அவன் நண்பர்கள் என்று சொல்லிக் கொண்டு யாருமே எங்கள் வீட்டுக்கு வந்ததில்லை.  அப்படியானவன் இங்கு அலுவலகத்தில் ஒரு நண்பரைப் பிடித்துவிட்டான். ராகுல். உத்தரப்பிரதேசத்துக்காரர். அவ்வப்போது வீட்டுக்கும் வந்திருக்கிறார். ராகுல் இங்கு வந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. இங்கு என்றால் பெங்களூரைச் சொல்கிறேன். வந்த இடத்திலேயே ஒரு கன்னடப் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். யாரும் அரிவாள் எடுத்துத் துரத்தவில்லை போலிருக்கிறது. மாறாக பெண் வீட்டார் ஒரு வீடு வாங்கிக் கொடுத்து சந்தோஷமாக இருக்கச் சொல்லிவிட்டார்கள். இதெல்லாம் நடந்து நான்கைந்து வருடங்கள் ஓடியாகிவிட்டது. 

நான்கைந்து வருடங்கள் சந்தோஷமாக ஓடினால் மூன்று வயதிலாவது ஒரு குழந்தை இருக்கக் கூடும் அல்லவா? ராகுலுக்கும் அப்படித்தான். மூன்றரை வயதில் குழந்தை. பையன். உத்தரப்பிரதேசமும், கர்நாடகமும் நல்ல காம்பினேஷன் என்பதற்கு அந்தக் குழந்தைதான் அத்தாட்சி. ஒரு முறை எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தார்கள். அட்டகாசம் செய்துவிட்டான். ஒரு பென்சிலை எடுத்துக் கொண்டு வீட்டு ஹாலில் ஒரு படம் வரைந்தே தீருவேன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டிருந்தான். நமது குழந்தையாக இருந்தால் நான்கு சாத்து சாத்தலாம். அந்தப் பையனை என்ன செய்வது? வரைந்துவிடுவானோ என்று பல்லைக் கடித்துக் கொண்டே பம்மிக் கொண்டிருந்தேன். பையனின் லோலாயத்தைத் தாங்க முடியாமலே இருபது நிமிடத்தில் கிளம்பிவிட்டார்கள்.

இந்த விவகாரம் நடந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. சமீபத்தில் ராகுலைப் பார்த்தேன். அடுத்த வருடம் பையனை எந்தப் பள்ளியில் சேர்க்கலாம் என்பதை விசாரிப்பதற்காக கொஞ்ச நாட்களுக்கு முன்பாக ராகுல் வந்திருந்தார். எங்கள் வீட்டிற்கு அருகிலேயே ஒரு பள்ளி இருக்கிறது. கொஞ்சம் காஸ்ட்லி. ஆனால் ராகுல் விண்ணப்பத்தை வாங்கிக் கொண்டார். அவரே தினமும் காலையில் பையனை பள்ளியில் விட்டுவிடுவதாகவும், மாலையில் மனைவி வந்து மகனை பள்ளியிலிருந்து அழைத்துக் கொள்ள திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். ‘பையன் எப்படியிருக்கிறான்?’என்று கேட்ட போது சிரித்தார். அந்த சிரிப்பை ‘தூள் கிளப்புகிறான்’என்று அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். அப்படியானதொரு மந்தகாச சிரிப்பு.

இந்த காஸ்ட்லி பள்ளியின் செலவு ராகுலுக்கு கட்டுபடியாகும் என்பதை விடவும் பையனுக்காக என்ன செய்யவும் தயாராக இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ராகுலின் வீட்டில் இரட்டைச் சம்பளம் இல்லை. ஒரு மாட்டு வண்டிதான். ஆனாலும் பையனுக்காக கணவனும் மனைவியும் உருகுகிறார்கள். பெற்ற பிள்ளை மீது யாருக்குத்தான் பாசம் இருக்காது? சிலருக்கு அதை வெளிக்காட்டத் தெரிகிறது. சிலருக்குத் தெரிவதில்லை. அவ்வளவுதான் வித்தியாசம். 

ஞாயிற்றுக்கிழமை பெங்களூர் வந்திருந்த ஜெயமோகனை பார்த்துவிட்டு- பார்த்துவிட்டு என்பதுதான் சரியான பதம்-பேசவெல்லாம் இல்லை- வீட்டில் தம்பி இல்லை. அந்த நேரத்தில் அவன் வெளியே போவதில்லை. என்னவென்று விசாரித்தால் ராகுல் வீட்டிற்கு சென்றிருப்பதாகச் சொன்னார்கள். வீட்டில் சற்று அமைதி நிலவியது. வீட்டிற்குள் நுழைந்தவுடன் கெட்ட செய்திகளைச் சொல்ல மாட்டார்கள் அல்லவா? அன்றும் அப்படித்தான். சிறிது நேரத்திற்கு பிறகாகச் சொன்னார்கள். ‘காலையிலிருந்து ராகுலின் மகனைக் காணவில்லை’. இதுதான் அந்தக் கெட்ட செய்தி. அதிர்ச்சியாக இருந்தது. அவ்வளவு எளிதில் கிரகித்துக் கொள்ள முடியவில்லை.

விவகாரம் பெங்களூரில் நடக்கவில்லை. ராகுலின் மாமியார் தனது பேரனுடன் சம்பந்தி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். சம்பந்தி வீட்டார் உத்தரபிரதேசம் என்றாலும் இப்பொழுது போபாலில் இருக்கிறார்கள். காலை நேரத்தில் பக்கத்தில் இருக்கும் கடைக்கு தனது பாட்டிகளுடன் சென்றிருக்கிறான். சாக்லெட் ஒன்றை வாங்கிக் கொடுத்துவிட்டு பாட்டிகள் காய்கறி பொறுக்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். சில நிமிடங்கள்தான். திரும்பிப் பார்த்த போது கடை வாசலில் நின்று கொண்டிருந்த சிறுவன் மாயமாகிவிட்டான்.  

காலையிலிருந்து சல்லடை போட்டுத் தேடியும் தடயம் எதுவும் கிடைக்கவில்லை. சாக்கடைகள், குழிகள் என ஒவோரு இடமாக பார்த்திருக்கிறார்கள். ஒரு கட்டத்திற்கு மேல் தாங்களாகவே தேடுவதில் பயன் இல்லை என்பதால் மதியத்தில் காவல் நிலையத்திற்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் தேடியும் பையனைப் பற்றிய தகவல் இல்லை. ராகுலின் மனைவியிடம் மதியத்தில் தகவலைச் சொல்லியிருக்கிறார்கள். எந்த அம்மாவினால்தான் தாங்கிக் கொள்ள முடியும். சுருண்டு விழுந்து நினைவிழந்துவிட்டார். 

ராகுலின் நிலைமை அதைவிடக் கொடுமை. மயக்கமாகிக் கிடந்த மனைவியை பார்ப்பதா குழந்தையைப் பற்றி விசாரிப்பதா எனத் தெரியாமல் கதறியிருக்கிறார். அன்றைய தினம் கருப்பு தினமாகிவிடும் என்று நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள் கணவனும், மனைவியும். அடுத்த சில மணி நேரத்தில் தகவல் தெரிந்து நண்பர்கள் குவியத் தொடங்கிவிட்டார்கள். எந்த நண்பர்தான் வந்து என்ன செய்ய முடியும்? ராகுலின் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். போபால் கிளம்புவதற்கான ஆயத்தங்களை செய்யத் துவங்கியிருக்கிறார்கள். அவர்கள் கிளம்பிக் கொண்டிருந்த போதுதான் தம்பி அங்கே போயிருக்கிறான். அவசர அவசரமாக உணவை முடித்துவிட்டு நான் சென்ற போது ‘கால் டாக்ஸி’ அவர்களை அழைத்துச் சென்றிருந்தது. நண்பர்கள் கூட்டம் மெதுவாக கலைந்து கொண்டிருந்தது. ராகுலுக்கும் அவரது மனைவிக்கும் ஆறுதல் சொல்லவாவது ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் குழந்தையை நினைத்தால்தான் கொடுமை. துக்கத்தை அடக்க முடியவில்லை. 

எவ்வளவு அழுதிருக்கும்? அந்த அழுகையை அடக்க என்னவெல்லாம் செய்து கொண்டிருப்பார்கள் கடத்திப் போன சில்லரைகள்? ஏதோ ஒரு பொறுக்கியிடம் அந்தப் பிஞ்சுக் குழந்தை அனுபவிக்கும் கொடுமையை யோசிக்கக் கூட முடியவில்லை. அந்த ஞாயிற்றுக்கிழமையின் இரவை எப்படி கழிப்பது என்றே தெரியவில்லை. பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டை பார்த்துவிட்டு பைக்கை கிளப்பினேன். வீட்டுக்கு முன்பாக அந்தக் குழந்தையின் ஒரு சோடி செருப்பு இறைந்து கிடந்தது. 

இன்று காலை வரை குழந்தை கிடைக்கவில்லையாம். மூன்றாவது நாள் இன்று. இனி அந்தக் குழந்தை கிடைக்குமா என்பது சந்தேகமாக இருக்கிறது. இரண்டு நாட்களாக வேறு எதுவும் யோசிக்க முடியவில்லை. இனி அந்தக் குழந்தை வந்தால் வீடு முழுக்க கிறுக்கினாலும் கூட கவலைப் படக் கூடாது என்று ஒரு கணம் தோன்றியது. ஏன் என்று தெரியவில்லை.