Aug 2, 2013

கும்புட்டுக்கிறேனுங்க சாமீ

உங்ககிட்ட சொல்றதுக்கு ஒண்ணு இருக்குதுங்க. ஒண்ணு என்னங்க ஒண்ணு? நாலஞ்சே இருக்குதுங். பில்ட் அப்பெல்லாம் எதுக்குங்க? நேரா விசியத்துக்குக்கே வர்றேன் இருங்க. வேறொண்ணுமில்லீங்- வெட்டி பஞ்சாயத்துதானுங். வேல வெட்டிக்காரருன்னா இதோட நிறுத்திக்கலாமுங்க. பொறவு பொழுது சாயறப்போ வந்து படீங்க. மத்தவிய இப்பவே படிச்சுட்டு ஒரு நாயஞ் சொன்னீங்கன்னா நல்லாருக்குமுங்க.

அஞ்சாறு மாசம் ஆவிப்போச்சுங்க. ஆடிக்கொருக்கா அமாவாசைக்கொருக்கா ‘அன்னாடம் எழுதறான்’ன்னு ஆராச்சும் லோலாயம் பேசுறாங்க. இதுதானுங்க என்ர பிராது. 

கெழவன் கோமணம் கட்டுனாப்டி பொங்கான் பொசுக்கான்னு நானெழுதிட்டு இருக்கிறது இவியளுக்கு பொறுக்கலீங்களா? இப்டி ஆராச்சும் பேசறது தெரிஞ்சோ தெரியாமலோ கண்ணுல பட்டுருதுங்க. நாந் தெனோம் எழுதறதுல இவியளுக்கு ஏதோ டிஸ்டபன்சு. சொறி வந்தவங் கை சும்மா இருக்குமுங்களா? எனக்கு சொறி புடிச்சுருச்சுன்னு சொன்னா பக்கத்தூட்டு குண்டுமுட்டி குப்புற உழுந்து உழுந்து சிரிக்கிறாப்டி. 

அவுரு சிரிக்கறத பாத்தா நீங்க கூடச் சிரிப்பீங்க. பொறவு சிரிச்சுக்கலாமிருங்க. மொதல்ல பஞ்சாயத்து முடியீட்டும்.

இவியள கைய புடிச்சு இழுத்துட்டு வந்தனுங்களா? படிச்சே தீரோணும்ன்னு கெஞ்சுனனுங்களா? புடிக்கலீன்னா ஏனுங்க படிக்கறாங்க? நீங்களே கேட்டுச் சொல்லுங்க. இவிய பேசறதயெல்லாம் காதுல வாங்காம போயிட்டு இருந்தா பிராது கொடுக்க வேண்டியிருக்காதுதானுங்க. ஆனா அப்டியிருக்க முடியுதுங்களா? 

பொழப்பு கெட்ட நாசுவன் பொண்டாட்டி தலய செரச்ச கணக்கா இப்டி அப்டின்னு ஊருக்குள்ள நாலு பேரு நாலு வெதமா பேசிட்டுத்தான் இருப்பாங்க.  இவிய பேசறதையெல்லாம் பாக்கப்புடாது கேக்கப்புடாதுன்னுதாங்க தோணுது. ஆனா எதுக்காச்சும் குசலம் வெசாரிக்க வர்றவிய ‘உன்னய பத்தி ட்விட்டர்ல சொல்லியிருக்காங்க பாரு, பேசுபுக்குல சொல்லியிருக்காங்க பாரு’ன்னு பத்த வெச்சாங்கன்னா மனசு கேக்கறதில்லீங். என்னதான் சொல்லியிருக்காங்கன்னு போயி பாத்தா இந்த எழவுதான். மூணு பேரு நல்லபடியா சொல்லியிருந்தாக் கூட ஒருத்துரு எடக்குமடக்கா சொல்லி வெச்சிருக்கிறாப்டி.

நல்லபடியா சொல்லியிருந்தாங்கன்னா கம்முனு வந்துருலாம். எகத்தாளம் பேசியிருந்தாங்கன்னாத்தான் பொசுக்குன்னு ஆகிப்போவுது. ‘பிலாக்குல ஏங் கமெண்ட் உடுறதில்லை’ன்னு ஆரம்பிச்சு ‘தெனதெனோம் எழுதுனா நடை இப்டித்தான் இருக்குமு’ங்கிற வரைக்கும் மாடல்மாடலா பேசுறாங்க. ஸ்டைலு ஸ்டைலா ஒளப்பிக்கிறாங்க. 

இவியளையெல்லாம் கூப்ட்டு வெச்சு ஒரு பழமயாச்சும் மூஞ்சிக்கு நேரா வெடுக்குன்னு கேக்கோணும்ன்னு இருக்குதுங்க.  தெரியாத்தனமா கேக்குறன்னே வெச்சுக்கலாங்க. இந்த பிலாக்குல எழுதுறதுக்கெல்லாம் ஆஸ்காரு தருவாங்களாங்க? இல்ல ஒன்னோரு கருமம் இருக்குதுங்குளே...ம்ம்ம்...நோபலு தருவாங்களா? ரெண்டுமில்லாட்டிக் கூட போச்சாதுங்க இந்த ஞானபீடமோ சாவித்திய அகடாமியோ தருவாங்களாங்க? 

நீங்க வேற! ஒன்றரையணா பிரயோசனமில்லீங். நட்டாத்துக்கு போனாலுமு நாய்க்குச் சலக்குத்தண்ணிதானுங்கிற கதைங்க நம்முளுது.

காசு காசுக்கு ஆவாதுன்னு தெரியுதுல்ல? அப்பொறம் என்னதுக்குங்க நெக்கரச்சுட்டு உக்காந்து வெடிய வெடிய எழுதோணும்? அதூம் தெனந்தெனம்? தலையெழுத்துங்களா எனக்கு?

உண்மியச் சொன்னா எழுதறதுல ஒரு சொவமிருக்குதுங்க. அதுதாஞ் சுப்பிக்கிட்ட இருக்குற சூட்சமம் பாத்துக்குங்க. பொடக்கு பொடக்கு சாமக்கோழி மாதிரி முழிச்சிருந்து ராத்திரி எழுதிட்டு படுத்தோம்ன்னு வைங்க வெடிஞ்சு எந்திரிச்சா அத்தன பாரத்தையுமு எறக்கி வெச்சா மாதிரி நல்லா வெடுக்குன்னு இருக்குதுங்க. 

காத்தால சோத்த குடிச்சுட்டு, மத்தியானத்துக்கு போசிய தூக்கிட்டு வேலை வெட்டிக்கு போனமா, பொழுதான்னா ஊடு வந்து சேந்தமா, பொண்டாட்டி புள்ள கூட படுத்து தூங்கிட்டு மாசமானா சம்பளம் வாங்குனமான்னு இருக்கறது கூட நல்ல பொழப்புதானுங். இல்லீன்னெல்லாஞ் சொல்லுலீங்க. ஆனா அப்படியிருக்கறது என்னமோ எனக்கு புடிக்கலீங்க. கண்ணுல படறது, காதுல உழுகுறதையெல்லாம் எழுதி வெச்சுப் பாத்தா நெசமாவே நல்லாருக்குதுங். பட்டது பட்டாப்ல அப்டியே எழுதுணா நாலு பேரு படிப்பாங்களா? ருசி வேணுமில்லீங்களா? எதுல குருமொளகு போடோணும், எங்க சக்கரயத் தூவோணும்ன்னு கணக்கு இருக்குதுங்குல்ல. இந்தக் கணக்கத் தெரிஞ்சுக்குறதுமு ஒரு சொவந்தான். அதத்தானுங்க பண்ணீட்டு இருக்குறேன்.

தடத்துல போவலீயுமு வரலீயுமு கண்டத நெனச்சுட்டு, இத அப்டிச் சொன்னா நல்லாருக்குமா அத இப்டிச் சொன்னா நல்லாருக்குமான்னு இருவத்து நாலு மணியுமு நெஞ்சுக்குள்ள கொழப்பிட்டே திரியறதுல ஒரு மயக்கமிருக்குதுங்க. அந்த சொவத்துக்குமு, இந்த மயக்கத்துந்தான் எழுதீட்டு இருக்கேன் பாத்துக்குங்க.

எழுதிப் பழவறதுக்கு பிலாக்குல ஏகப்பட்ட வசதிங்க. நம்ம எழுத்த மல்லாக்க போட்டு கீறியும் பாக்கலாம், அல்லக் கெடையா போட்டு அறுத்தும் பாக்கலாங்க. இங்க நாமதானுங்க ராசா? கட்டுரய அவ்வெடைத்திக்கி ஆரமிச்சு கண்டதையெல்லாம் பேசி, எங்கியோ போயி முடிக்கறதெல்லாம் வேணும்ன்னே செய்றதுதானுங். ராவுடி பண்ற மாதிரி. மத்தியானம் கூட வேல செய்யறவிய கூட குச்சுட்டு சோறு உங்கீல்ல வரிச வரிசயாவா பேசறோம்? இங்கொண்ணும் அங்கொண்ணும்மாத்தானுங்க பேசறோம்? அப்டித்தானுங்க பிலாக்கும். 

மத்தபடி அன்னாடம் எழுதோணும்ன்னு எனக்கு எந்த அதுப்புமில்லீங்க. எண்ணிப்பாத்தா இருவத்தஞ்சு வரி இருக்குமுங்களா? ரெண்டாயிர வருஷமா இருக்குற மொழில ஒரு நாளைக்கி இருவத்தஞ்சு வரி எழுதறது எனக்கு பெரிய செரமமா தெரியிலீங்க. குமிஞ்சு வளைஞ்சா ஆரு வேணும்ன்னாலும் எழுதுலாமுங்க. படிக்கிறவியளுக்கு நாம எழுதறது சுலுவா இருந்தாச் செரி. பத்து நிமுசங் கூடி படிக்கிறங்காங்க. அவியள ஏமாத்தப்புடாது. அவ்ளவுதானுங் நம்ம கணக்கு. நானுஞ் சந்தோசமா இருக்கறேன். படிக்கிறவியளுக்கும் பொழுது போவுது. சோலி முடிஞ்சுது. இத மீறி வேற எந்த மொய்யும் வேண்டாமுங்க. 

மத்தபடி பிலாக்குல எழுதறதுல்ல பேரும் பொகழும் மம்மானையா வந்து சேரும்ன்னு வெளில கீது சொன்னமுன்னு வெச்சுக்குங்க, கேக்கறவிய வாய்ல சிரிக்க மாட்டாங்க பாத்துக்குங்க. எகத்தாளம் பேசறன்னு நெனச்சுக்கப்புடாதுங்க ஆனா அதுதாஞ் சாமி நெசம். இதுல வாங்குற பேரயும் பொகழையும் ஓடுற ஆத்து தண்ணீலதான் எழுதி வெக்கோணும். இதெல்லாம் தெரிஞ்சேதானுங்க ஓடிட்டு இருக்கேன்.

இதையெல்லாம் வெட்டுருப்பா பேசிட்டுத் திரியறதுன்னால இவுனுக்கு தலக்கனம்ன்னு கீது நெனச்சுக்காதீங்க. அப்டிக் கூட ரெண்டு மூணு பேரு எழுதி வெச்சிருந்தாங்க. சாமி சாமி நல்லா இருப்பீங்க! சத்தீமா அப்டியெல்லாம் ஒண்ணுமில்லீங்க. இவ்வடத்தாளக்கி ஒண்ணு சொல்லியாகோணும்- நம்புவீங்களான்னு தெரிலீங்க. எப்போ சாமி கும்முட்டாலும் ‘சாமீ ஆண்டவா தலக்கனம் மட்டும் வந்துறக் கூடாது’ன்னு தானுங்க கும்முடுறேன். 

அப்பொறமேண்டா இதயெல்லாஞ் சொல்லுறேன்னுதானோ கேக்குறீங்க? மனசுக்குள்ள வெச்சு அரிச்சுட்டு கெடக்கறதுக்கு வதுலா சொல்லிப் போட்டம்ன்னா மனசுக்கு வெடுக்குன்னு இருக்கும் பாருங்க. அதானுங்க! உனிமேலு இத பத்தி பேச மாட்டன்னு நெனக்குறனுங்க. இருக்கன்குடி மாரியாத்தாதான் என்ர வாய அடக்கோணும். நாம பண்ணீட்டு இருக்குற பத்துபைசா வேவாரத்துக்கு இப்டியெல்லாம் அந்த சாமீய போட்டு டார்ச்சர் பண்ணோனுமுங்களா? நீங்களே சொல்லுங்க! ஆனா என்னங்க பண்ணுறது? பல்லு மேல நாக்க போட்டு ஆராச்சும் நம்மள பத்தி நாலு வார்த்த சொல்லிடக் கூடாதுன்னுதானுங்க இத்தன அலும்பும் பண்ணுறேன்.

சொல்றத சொல்லிட்டனுங்க. உனிமேலு இந்த பிராது சொல்ல மாட்டனுங்க. புரிஞ்சவிய பேச மாட்டாங்க. உனியுமு நிக்காம பேசறவிய பேசிச்சாறாங்க. அவியள உட்டுட்டு நம்ம பொழப்ப பாக்கலாம். இன்னொருக்கா சொல்றம் பாத்துக்குங்க. எப்போ எனக்கு புடிக்கலையோ அடுத்த நிமுசமே இதயெல்லாம் நிறுத்திக்குவுனுங்க. ஆனா இன்னத்த தேதிக்கு இதெல்லாம் எனக்கு புடிச்சுருக்குதுங். நீங்க என்னதான் பேசுனாலுஞ் செரி, ஏசுனாலுஞ் செரி. இந்த வண்டி நிக்காதுங்க.

கும்புட்டுக்கிறேனுங்க சாமீ!