Aug 25, 2013

நான் அவ்வளவு வொர்த் இல்லைங்க

கடந்த சில நாட்களாக ஒரு பிரச்சினை. சமூகப்பிரச்சினை எல்லாம் இல்லை. ஒரு சில்லி பிரச்சினை. யாரோ ஒரு புண்ணியவான் மின்னஞ்சலைக் களவாடுவதற்கான முயற்சியைச் செய்திருக்கிறார். 

இருபதாம் தேதி மாலையிலிருந்து  மின்னஞ்சலையும் திறக்க முடியவில்லை; ப்லாக்கரையும் திறக்க முடியவில்லை. முயற்சிக்கும் போதெல்லாம் Account Locked என்று காட்டியது. ஆரம்பத்தில் சர்வரில் ஏதோ பிரச்சினையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் அடுத்த சில மணி நேரங்கள் கழித்தும் பிரச்சினை தொடர்ந்த போதுதான் யாரோ முட்டுச்சந்தில் விட்டு  சாத்தப் போகிறார்கள் என்று பொறிதட்டியது. 

எதனால் இப்படி அக்கவுண்ட் பூட்டப்படுகிறது என கூகிளில் தேடிப்பார்த்தால் ஏதாவது சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருந்தால் ஒரு நிமிடத்திலிருந்து இருபத்திநான்கு மணி நேரம் வரைக்கும் account ஐ lock செய்துவிடுவார்களாம். குண்டக்க மண்டக்க விளையாட முயற்சித்திருக்கிறார்கள் போலிருக்கிறது. பூட்டிக் கொண்டது.

லாக் ஆகிக் கிடப்பது பிரச்சினையில்லை. மின்னஞ்சல் அனுப்பவில்லையென்றால் குடியா முழுகிவிடும்? ஆனால் இருபத்து நான்கு மணி நேரத்தில் மின்னஞ்சலில் இருந்து எந்தத் தகவலை எல்லாம் வழித்தெடுக்கப் போகிறார்களோ என்று பயமாக இருந்தது. அப்படியொன்றும் ‘பெரிய’ விஷயம் சிக்காது என்ற நம்பிக்கையிருந்தாலும் கிட்டத்தட்ட எட்டு வருடங்களாக இதே மெயில் ஐடியைத் தான் பயன்படுத்துகிறேன். ஏதாவது விவகாரமான தகவல்களை ‘அழிக்காமல்’ விட்டுவைத்திருக்க வாய்ப்பிருக்கிறது. துழாவினால் எதாவது தட்டுப்பட்டுவிடுமோ வாய்ப்பிருக்கிறது என்ற பயமும் இருந்தது. 

டெக்னாலஜியின் சிக்கலே இதுதான். ஒற்றை பாஸ்வேர்ட். கிடைத்தால் போதும் நமது மொத்த அந்தரங்கமும் பல்லிளித்துவிடும். சென்ற தலைமுறையில் இந்த பிரச்சினை எல்லாம் இருந்திருக்காது அல்லவா? அதிகபட்சமாக ஒரு டைரி அல்லது லவ்லெட்டர். அதையும் கிழித்து வீசிவிட்டால் ஒரு சாட்சியம் கிடையாது. இந்தத் தலைமுறைதான் சபிக்கப்பட்டிருக்கிறது. யாராவது நம்முடைய இமெயில், சாட்டிங், ஃபேஸ்புக் என்று எதில் கைவைத்தாலும் சிக்கல்தான்.

ஜிமெயில் போனால் கூட தொலைகிறது என்று விட்டுவிடலாம். மின்னஞ்சல்தானே? இன்னொரு கணக்கைத் துவக்கிக் கொள்ளலாம். ஆனால் அதே ஐடிதான் ‘நிசப்தம்’தளத்திற்கான ஐடியும் என்பதால் பதற்றம் அதிகம் ஆகியிருந்தது. சிறுகச் சிறுக சேர்த்து வைத்திருக்கும் Regular readers, எழுநூற்றுச் சொச்சம் கட்டுரைகள் என அத்தனையும் போய் விடக் கூடும் என்று நினைத்தேன். அங்கலாய்ப்பாக இருந்தது. மறுபடியும் ஒரு வலைப்பதிவைத் தொடங்கி, வடிவமைத்து, எழுதி...நடக்கும்ம்ம்ம்ம்ம் ஆனால் நடக்காது மாதிரிதான். 

வேறு என்னதான் செய்வது? அலுவலகத்தில் ஜிமெயில் திறக்காது. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் ஏதாவது குறுக்குவழி இருக்கிறதா என ‘நோண்டி’ பார்க்கலாம். ஆனால் அலுவலகத்தில் குவிந்து கிடக்கும் வேலையின் காரணமாக விடுமுறை எடுக்க வாய்ப்பே இல்லை. எனவே இரவு நேரத்தில்தான் வழிகளைத் தேட வேண்டியிருந்தது. இருபத்து நான்கு மணி நேரம் தாண்டியும் பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இலவச மின்னஞ்சல் சேவையைப் பயன்படுத்துபவர்கள் கூகிளின் கஸ்டமர் சர்வீஸூக்கு ஃபோன் செய்ய முடியாதாம். முடியாது என்பதைவிட கூடாது என்ற சொல்தான் சரியாக இருக்கும். ஓசியில் கணக்கு வைத்திருந்தால் பதில் சொல்லமாட்டார்களாம். நல்லவேளையாக கூகிளுக்கு வருடம் ஒரு சிறு தொகையை கப்பம் கட்டி வருவதால் அழைத்தவுடன் பதில் சொன்னார்கள். பிரச்சினையைச் சொன்னவுடன் கூடிய சீக்கிரம் நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அதுவரை பொறுத்திருக்கும்படி அறிவுறுத்தினார் அந்தப் பெண்மணி. பொறுத்திருப்பது சரி; யாராவது கை வைத்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொன்னதற்கு சிரித்தபடியே ‘லாக் ஆகிவிட்டால் யாரும் தகவலை எடுக்க முடியாது’ என்றார். அப்பாடா. மூச்சை நன்றாக இழுத்துவிட்டுக் கொண்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். 

நேற்றைக்கு காலையில் மின்னஞ்சல் விடுவிக்கப்பட்டது. உள்ளே எந்த மாறுதலும் இல்லை. யாரும் கை வைக்கவில்லை போலிருக்கிறது. இருக்கட்டும். கூகிள்காரி சொன்ன பேச்சை காப்பாற்றிவிட்டாள். 

அக்கவுண்ட்டை ஹேக் செய்யுமளவிற்கு ‘வொர்த்’ என்று என்னை நினைத்த அந்த பிரகஸ்பதிக்கு கோடானு கோடி நன்றிகள். அவர் செய்த ஒரே நல்ல காரியம் மூன்று நாட்கள் நிசப்தத்தில் பதிவு இல்லாமல் பார்த்துக் கொண்டததுதான்.  அவருக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. மற்றவர்கள் கண்ணை மூடிக் கொள்ளுங்கள். ப்ளீஸ்!  “சார் அடுத்த முறை நீங்களும் சிரமப்பட்டு என்னையும் சிரமப்படுத்தாதீர்கள். ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள். பாஸ்வேர்டை கொடுத்துவிடுகிறேன்”