Aug 1, 2013

சமையல் செய்வதும், பாத்திரம் கழுவுவதும், ராக்கெட் சயின்ஸூம்

பாத்திரம் சுத்தம் செய்வது என்ற சிக்கலான வேலை ராக்கெட் சயின்ஸூக்கு இணையானது என்று யாராவது சொன்னால் மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்  கொள்ளலாம். ஆண்கள் எப்படியாவது கஷ்டப்பட்டு சமையலைக் கூட செய்துவிடலாம். ஆனால் பாத்திரத்தை கழுவி வைக்கச் சொல்லிப் பாருங்கள். ஹூம். செம கஷ்டம். அதே மாதிரிதான் இன்னொரு மேட்டரும், சிக்கன் செய்வது கூட கொஞ்சம் எளிதுதான். ஆனால் சாம்பாருக்கு உப்பு போடுவதையும் ரசத்திற்கு அளவான புளியைக் கரைத்து ஊற்றுவதிலும் இருக்கும் த்ரில் இருக்கிறதே! இந்த விஷயத்தில் நம் பெண்களை கையெடுத்துக் கும்பிடலாம். கிச்சனில் இவற்றையெல்லாம் அசால்ட்டாக செய்யும் அசகாய சூரிககளாக இருக்கிறார்கள். 

இதையெல்லாம் ஏன் அவர்களே செய்ய வேண்டும்? ஆண்களுக்கு ம் வளைவதில்லை. வேறு வழி? அம்மாவிடம் ரோபோ விண்வெளிக்கு போவதிலிருந்து விவசாயம் வரைக்கும் எதை வேண்டுமானாலும் செய்யும் என்றால் ‘அதெல்லாஞ் சரிதான். சமையல் செய்யுமா?’ என்கிறார் அம்மா. செய்யாமல் என்ன?

ரோபோவை வைத்து விதவிதமாக படம் காட்டும் நம்மவர்கள் சமையலை மட்டும் விட்டுவைப்பார்களா?அதற்கான ரோபோவை உருவாக்கிவிட்டார்கள். அமெரிக்கக்காரனைப் பொறுத்த வரைக்கும் பீட்சா செய்யும் ரோபோதான் அவனுக்கு கனவு. நமக்கு அப்படியில்லை. குழம்பு, ரசம், கூட்டு, பொரியல் என விதவிதமாகச் செய்ய வேண்டுமே. எத்தனை சிக்கலான உணவு தயாரிப்பு முறையாக இருந்தாலும் செய்துவிடக் கூடிய ரோபோக்கள் வந்துவிட்டன். இவற்றை ‘ரோபோ செஃப்’ என்கிறார்கள்.

கிச்சனில் இருக்கும்  ரோபோவை கட்டுப்படுத்தும் கம்யூட்டர் ஹாலில் அல்லது பெட்ரூமில் இருக்கும். கட்டுப்பாடு என்றால் ரோபோ சமையல் செய்யும் போது ‘அதைச் செய், இதைச்  செய்’ என்று கட்டுப்படுத்தத் தேவையில்லை. சமையலின் ஆரம்பத்திலேயே என்ன குழம்பு, என்ன பொரியல், என்ன ரசம் என்று ரோபோவிற்கு  கட்டளையிடுவதற்குத்தான் இந்த கம்ப்யூட்டர். இந்தக் கம்யூட்டரில் நூற்றுக்கணக்கான மெனுக்களை சேர்த்து வைத்துக் கொள்ளலாம். சமையலை ரோபோ துவங்குவதற்கு முன்பாக என்ன மெனு என்றும், எத்தனை பேருக்கு தயாரிக்க வேண்டும் என்று கம்யூட்டரிடம் சொல்லிவிட வேண்டும். 

ரோபோவுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்தக் கம்யூட்டர்தான் ரோபோவை இயக்கும். கம்யூட்டர் சிக்னல் கொடுக்கக் கொடுக்க தாளிப்பதில் ஆரம்பித்து கொதிவிட்டு இறக்கி வைப்பது வரை அத்தனையையும் செய்துவிட்டு ‘சாப்பாடு ரெடி’ என்று ரோபோ அழைக்கும். இந்த ரோபோ செஃபை ட்ரையல் ஓட்டிப்பார்த்தவர்கள் ரோபோவால் தயாரிக்கப்படும் உணவு எப்பொழுதும் ஒரே சுவையாக இருப்பதை உணர்ந்தார்கள். அதற்கு காரணம் , கம்ப்யூட்டரில் செய்யப்பட்டிருக்கும் ப்ரோகிராம்தான். மூன்று பேருக்கு என்றால் ஒன்றரை டம்ளர் தண்ணீர், ஒன்றரை சிட்டிகை உப்பு என்ற கணக்கு இரண்டு பேருக்கு என்றால் ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு சிட்டிகை உப்பு என்று மாறிவிடும். 

அம்மாவோ மனைவியோ உணவு தயாரிக்கும் போது ஒவ்வொரு முறையும் சமையலில் சில விஷயங்கள் ஏறக்குறைய அமைவதால்தான் வீட்டுச்சமையல் எப்பொழுதுமே  சலிப்பதில்லை. ரோபோவின் இயந்திரத்தனமான உணவு தயாரிப்புமுறை எப்பொழுதும் ஒரே ருசியைத் தருவதால் அது தோல்வியடைந்துவிடக் கூடும் என்று முடிவு செய்தவர்கள், ரோபோவை கட்டுப்படுத்தும்  கம்யூட்டரில் ‘ஆர்ட்டிஃபிஷியல் இணடலிஜென்ஸ்’ என்னும் செயற்கை அறிவை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆர்ட்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் பொருத்தப்பட்ட ரோபோவுக்கு பயிற்சியளிக்க வேண்டும். அந்த பயிற்சியை நமக்கு பிடித்தமான சமையல் செய்பவர்கள் செய்யலாம். அவர்களின் பயிற்சிக்கேற்ப ரோபோவின் சமையலிலும் ஏறக்குறைய வித்தியாசங்கள் இருக்கும். ஆனால் அப்பொழுதும் ரோபோவை கண்டுபிடித்தவர்களுக்கு பெரிய திருப்தி இல்லை.

இதைவிடவும் சிறப்பான சமையல் ரோபோவை செய்ய முடியுமா என்று யோசித்தவர்கள் இன்னொரு டெக்னாலஜியை பயன்படுத்தினார்கள். அது Genetic Algorithm.

டார்வினின் பரிணாமக் கொள்கையை கேள்விப்பட்டிருக்கிறீர்கள்தானே. தக்கன தப்பிப்பிழைக்கும் (Survival of the fittest)- மில்லியன் கணக்கில் உயிரினங்கள் இருந்தாலும் காலப்போக்கில் தகுதியுடைய சில நூறு உயிரினங்கள் மட்டுமே நிலைத்து நிற்கும். மனிதனுக்கு முன்பே தோன்றியிருந்தாலும் இன்னமும் நமது டாய்லெட்களிலும் சமையலறைகளிலும் கோலோச்சும் கரப்பான்பூச்சிகள் மிகச் சிறந்த உதாரணம். எரிமலைக்குழம்பு மேற்புறமாக ஓடிக்கொண்டிருக்கும் போது கூட பாறைகளுக்கு அடியில் பதுங்கிக் கூட அவற்றால் உயிர்பிழைத்துவிட முடியும். இதுதான் தக்கன தப்பிப் பிழைத்தல்.

இந்த கான்செப்ட்டை பயன்படுத்தி கம்ப்யூட்டர் ப்ரோகிராம் எழுதினால் அதுதான் ஜெனிடிக் அல்காரிதம். ஒரு பிரச்சினைக்கு மில்லியன் தீர்வுகள் இருக்கக் கூடும். அதில் பெஸ்ட் தீர்வுதான் நமக்குத் தேவை. ’சிறந்த தீர்வை’ எப்படி தேர்ந்தெடுப்பது என்பதுதான் ஜெனிடிக் அல்காரிதம். உதாரணமாக ரசத்தை ஆயிரம் முறைகளில் தயாரிக்க முடியும். இந்த ஆயிரம் முறைகளில் நமக்கு ஒத்து வராத முறைகளை ஒவ்வொன்றாக கழித்துக் கொண்டே வர வேண்டும். கடைசியாக எஞ்சி நிற்பதுதான் ‘சிறந்த முறை’. இதையும் கம்ப்யூட்டர் ப்ரோகிராம் செய்துவிடும். இப்படி இருபப்திலேயே பெஸ்ட் முறையில் தயாரிக்கும் ஒரு ரசம் செம டேஸ்டாக இருக்கும். அதற்கடுத்த முறை ஆயிரத்து ஒன்றாவது முறையில் இன்னொரு பெஸ்ட் ரசத்தை ருசிக்கலாம். இப்படி ஜெனிடிக் அல்காரிதம் ப்ரோகிராம் எழுதபட்ட ரோபோக்கள் மார்க்கெட்டுக்கு வரத் தயாராகியிருக்கின்றன. இவற்றால் அரியலோ பொரியலோ ஆயிரம் முறைகளில் செய்ய முடியும் என்பதும் அதிலும் சிறந்த முறையில் செய்ய முடியும் என்பதுதான் ஹைலைட். 

ரோபோக்கள் உணவு தயாரிக்கும் போது பொருட்களை சரியான இடத்தில் வைக்க வேண்டியது அவசியம். உப்பு இருக்க வேண்டிய இடத்தில் மிளகாய்ப்பொடியை வைத்தாலோ அல்லது தண்ணீர் இருக்க வேண்டிய இடத்தில் எண்ணெய்யை வைத்தாலோ கதை கந்தலாகிவிடும். எதை எங்கு வைத்தாலும் கண்டுபிடித்து எடுக்கக் கூடிய ரோபோவை வடிவமைப்பது தொழில்நுட்ப ரீதியில் கடினமான செயல் இல்லை. அதற்கான சென்ஸார்களை பொருத்திவிடலாம். ஆனால்ம்உப்பு, மிளகையெல்லாம் கண்டறியும் சென்சார்கள்தான் ‘காஸ்ட்லி’ என்பதால் இந்த சென்சார்களால் ரோபோக்களின் விலை மிக அதிகமாகிவிடக் கூடும். அதனால் ‘சீப்’பாக பொருட்களைக் கண்டறியும் முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஜப்பானில் சில சிக்கலான உணவுப் பண்டங்களை ரோபோக்களை வைத்து 2011 ஆம் ஆண்டு பரிசோதனைகளைச் செய்தார்கள். சமையலுக்கு தேவையான பொடிகள், எண்ணெய் உட்பட என அனைத்தையும் குறிப்பிட்ட இடங்களில் வைத்துவிட்டார்கள். ரோபோவுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் ரோபோ மிகச் சாதாரணமாக சமையலைச் செய்து முடித்துவிட்டது. இந்தப் பரிசோதனையை நேரில் பார்க்கவும், உணவை சுவை பார்க்கவும் பல்வேறு ரெஸ்டாரண்ட் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். ரோபோ பிரமாதப்படுத்தியிருந்தது.  தங்களது ஹோட்டல்களில் வேலை செய்யும் ‘செஃப்’களை நீக்கிவிட்டு ரோபோக்களை பணிக்கு அமர்த்தலாமா என்று யோசிக்க ஆரம்பித்துவிட்டார்களாம். இனி இந்தியாவிலும் கூட கூடிய சீக்கிரம் கிச்சன் கேபினட்கள் ரோபோக்களின் கைகளுக்குள் வந்துவிடக் கூடும்.