ரொம்ப நாட்களுக்கு பிறகாக நாங்கள் சந்தித்துக் கொண்டோம். இந்த ‘ரொம்ப’ என்பதில் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் அடங்கும். ஈரோடு செல்வதற்காக கோபி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது ‘டேய், என்னெய தெரியுதாடா?’ என்று அருகில் வந்தவன் சில நொடிகளில் கைகளை பற்றிக் கொண்டான். அவனை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. சுரேஷை இப்பொழுதுதான் எட்டாம் வகுப்பில் பார்த்தது போல இருக்கிறது. நானும் அவனும் ஒரே பெஞ்சில்தான் அமர்ந்திருந்தோம்- இரண்டாவது வரிசையில். அப்பொழுது அவனுக்கு கீச்சுக்குரலாக இருக்கும். இப்பொழுது கீச்சுவையெல்லாம் எங்கோ தொலைத்துவிட்டான்- புரோட்டா கடையொன்றில் வேலை செய்வதாக கட்டைக்குரலில் சொன்னான்.
இத்தனை வருடங்களில் அவ்வப்போது ஊருக்கு வருவதும் போவதுமாக இருந்தாலும் அவன் எப்படியோ கண்ணில் படாமல் தப்பித்திருக்கிறான். ஆனால் எப்பவாவது- பழைய நண்பர்களை பார்க்கும் போதோ அல்லது ஆசிரியர்களை நினைக்கும் போதே அவனையும் நினைத்துக் கொள்வதுண்டு. கடைசியாக முத்து மீனாளின் ‘முள்’ புத்தகத்தை வாசிக்கும் போது ஞாபகத்திற்கு வந்தான்.
சுரேஷ் எட்டாம் வகுப்பு வருவதற்கு முன்பாகவே தனது அப்பாவை இழந்திருந்தான். ஒரு அண்ணன் உண்டு. அண்ணன் படித்த மாதிரி ஞாபகம் இல்லை அல்லது நாங்கள் படித்த போது அவனை பள்ளியில் பார்த்ததிவில்லை. கச்சேரி மேட்டில் ஒரு டெலிஃபோன் பூத்தில் வேலைக்கு இருப்பதாக சுரேஷ் சொல்லியிருக்கிறான். சுரேஷ் ஓரளவுக்கு படிக்கக் கூடிய பையனாக இருந்தான். படிப்பதைவிடவும் அவனுடைய கையெழுத்தும், நோட்டுப்புத்தகங்களை பராமரிக்கும் விதமும் அட்டகாசமாக இருக்கும். நுனி மடங்காமல் வைத்திருப்பான். யார் சொல்லிக் கொடுத்தார்கள் என்று தெரியவில்லை- ஒவ்வொரு பக்கத்திலும் ‘உ’ போட்டுவிட்டுத்தான் எழுதத் தொடங்குவான். விநாயகரின் குறி என்பான். உவுக்கும், விநாயகருக்கும் என்ன சம்பந்தம் என்று இதுவரைக்கும் எனக்குத் தெரியாது. பெரும்பாலான வாத்தியார்கள் அவனிடம்தான் நோட்டுகளை வாங்கி தாங்கள் வகுப்பில் கடைசியாக என்ன நடத்தினோம் என்பதை ஞாபகப்படுத்திக் கொள்வார்கள்.
எட்டாம் வகுப்பு காலாண்டுத் தேர்வுகளுக்கு முன்பாக ஒரு நாள் எங்கள் பெஞ்ச் அருகில் நின்று பாடம் நடத்திய வெங்கடாசல வாத்தியார் திடீரென பாடத்தை நிறுத்திவிட்டு ‘இது என்னடா கன்னத்துல தழும்பு?’ என்று சுரேஷிடம் கேட்டார். நாங்கள் வாயைத் திறந்து ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருந்த போது தனது அரைஞாண்கயிற்றில் இருந்து ஒரு பின்னூசியை எடுத்துக் தழும்பு மீது குத்தி ‘வலிக்குதா?’ என்றார். அவன் அசராமல் ‘இல்ல சார்’ என்றான். அவருக்கு முகம் மாறியதை உணர முடிந்தது. ஆனால் எதுவும் பேசவில்லை. பாடத்தை அவர் அதற்கு மேல் தொடரவில்லை. அவர் கிளம்பிப் போன சில நிமிடங்களிலேயே ப்யூன் வந்தார்.
‘சுரேஷை ஹெட்மாஸ்டர் கூப்புடுறாரு’ என்றவுடன் அவன் திடீர் வி.ஐ.பி ஆகிப் போனான். அவ்வளவு சீக்கிரமாக தலைமையாசிரியர் யாரையும் அழைக்க மாட்டார். நன்றாக நினைவில் இருக்கிறது- பின்னூசியால் குத்தியும் வலிக்காததால் அவனுடைய ‘ஸ்பெஷல் சக்தி’யை தெரிந்து கொள்ளத்தான் அழைத்திருக்கிறார் என்று நினைத்திருந்தேன். சுரேஷை அன்றே அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். மாலை வகுப்பு முடியும் நேரத்தில்தான் வந்தான். கையில் ஒரு ப்ளாஸ்திரி ஒட்டியிருந்தது. ரத்தம், சிறுநீர் எல்லாம் அவனிடமிருந்து எடுத்துக் கொண்டதாகச் சொன்னான்.
அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஒரு நாள் அவனது அம்மா வந்து தலைமையாசிரிடம் அழுது கொண்டிருந்தார். அது தனது மகனை இழந்துவிட்ட தாயின் ஒப்பாரியாகவே இருந்தது. தலைமையாசிரியரும் சில வாத்தியார்களும் ஏதேதோ சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். சுரேஷ் அத்தனையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற மாணவர்களை ப்யூன் வந்து விரட்டியதால் வகுப்பறைக்கு ஓடி வந்துவிட்டோம்.
அதன் பிறகு சுரேஷை இப்பொழுதுதான் பார்க்கிறேன்.
சில நாட்களுக்கு பிறகு அவனை மறுவாழ்வு மையத்தில் சேர்த்திருப்பதாக வெங்கடாசல வாத்தியார்தான் சொன்னார். அது தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையம். அவனுக்கு தொழுநோய் என்பதால் சில வருடங்களுக்காவது மருந்து தின்ன வேண்டியிருக்கும் என்று சொல்லிவிட்டு ‘க்ளாஸ்ல ஒரு பையனுக்கு தொழுநோய்ன்னு ஊட்ல சொல்லாதீங்கடா..உங்க அம்மா அப்பனெல்லாம் பயந்துக்குவாங்க’ என்று எச்சரித்திருந்தார். அருகில் அமர்ந்திருந்ததால் எனக்கும் நோய் ஒட்டிக் கொள்ளக் கூடும் என்று பயந்து கொண்டிருந்தேன். ஆனால் வீட்டில் இது பற்றி எதையுமே பேசவில்லை.
சுரேஷை இப்பொழுது பார்த்த நேரத்தில் இந்த அத்தனை சம்பவங்களும் ஃபாஸ்ட் ஃபார்வேர்ட்டில் மண்டைக்குள் சுழன்றடித்தது. சுரேஷ் என்னைப் பற்றி நிறைய விசாரித்தான். வழக்கமான விசாரிப்புகள்தான். வேலை, கல்யாணம், சம்பளம் இத்யாதிகள். உள்ளூருக்குள் இருப்பவர்கள் பெரும்பாலும் ‘நம்ம கூட படிச்சவங்க எல்லோருமே நல்லா இருக்காங்கடா’ என்பார்கள். அதையே இவனும் இம்மிபிசகாமல் சொன்னான். என்னையுமறியாமல் கண்கள் அவனது கன்னத்திற்கு போய் வந்தன. தழும்பு எதுவும் இல்லை.
‘கண்டிப்பா புரோட்டா சாப்புட்டுத்தான் போவோணும்’ என்றான். மறுக்கத் தோன்றவில்லை. அவனோடு போன போது ஒரு அறைக்கு கூட்டிச் சென்றான். புரோட்டாக்கடைக்கு பின்புறமாகவே உள்ள ஒரு சிறிய அறை அது. அந்த அறையில்தான் வசிப்பதாகச் சொன்னான்.அறைக்கு முன்பாக ‘Praise the Lord' என்று எழுதி சிலுவை போட்டிருந்தான். ‘உ’வை சிலுவையாக மறுவாழ்வு மையம் மாற்றியிருக்கிறது. அறைக்குள்ளேயும் சில யேசுநாதர்கள் கருணையுடன் ஆசிர்வதித்துக் கொண்டிருந்தார்கள். புத்தகங்கள் நிறைய வைத்திருந்தான். பெரும்பாலானவை ‘க்கோட்டானு கோட்டி ஸ்தோத்திரங்கள் யேசுநாதரே’ வகையறா. சில நிமிடங்கள் அமைதியாக இருந்தோம். அமைதியை குலைக்க விரும்பியவன் டிவியை ஆன் செய்தான். கலைஞரின் இலவச தொலைக்காட்சி அது.
டிவி ஓடிக் கொண்டிருக்கும்போது அவனாகவே பேசத் தொடங்கினான். இரண்டு வருடங்களுக்கு முன்பாக அம்மா இறந்துவிட்டாராம். அண்ணனைப் பற்றி விசாரித்தேன். அவன் மூன்று வருடங்களுக்கு முன்பாகவே ஒரு கவுண்டர் வீட்டு பெண்ணை கூட்டிக் கொண்டு ஓடிவிட்டான். ‘திருப்பூரில் கம்பெனிக்கு போவானாட்ட இருக்குது’ என்றான். இருவரும் தொடர்பில் இல்லை போலிருக்கிறது. ‘உனக்கு கல்யாணம்?’ என்றேன். அதிர்ச்சியாக பார்த்தான். ஒருவேளை கேட்டிருக்கக் கூடாது என்று தோன்றியது. சில வினாடிகளில் ‘ஹவுஸ்ல இருந்தவனுக்கு யார்றா பொண்ணு தருவாங்க?’ என்றான். மறுவாழ்வு மையத்தைத்தான் ஹவுஸ் என்கிறான்.
அவனுடைய அம்மா இருக்கும் போது ஒன்றிரண்டு பேர் வந்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்தில் விசாரித்துவிட்டு ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டார்களாம். ‘எங்கம்மா இருக்க வரைக்கும் அவியளுக்கு சாபமா உட்டுட்டு இருந்துச்சு’ என்று பயங்கரமாக சிரித்தான். ‘நோவு இருந்ததை மறைக்கிறது பெருசில்ல பின்னாடி தெரிஞ்சா நல்லா இருக்குதில்ல?’ என்றான். என்னிடமிருந்து ‘நல்லா இருக்காது’ என்ற பதிலைத்தான் எதிர்பார்த்தான். அவனுடைய எதிர்பார்ப்பை பொய்யாக்கவில்லை. ஆசுவாசமாக சிரித்தான்.
கடந்த ஓரு வருடமாக திருமணம் செய்து கொள்ளும் ஆசையே போய்விட்டதாகச் சொன்னான். ‘உம்’ கொட்டிக் கொண்டிருந்தேன். பக்கத்துவீட்டுப் பெண்மணி கவனித்துக் கொள்கிறாராம். எப்படியான கவனிப்பு என்று கேட்கவில்லை. அவளுக்கு அவ்வப்போது காசு கொடுத்துவிடுகிறானாம். ‘இந்த லைஃப் போரடிக்குது’ என்று சொல்லிவிட்டு கொஞ்ச நாளில் சர்ச்சில் வேலைக்குச் சேரப் போகிறேன் என்றான். புரோட்டாக்கடையை விட அது அவனுக்கு நல்ல வேலையாக இருக்கும் என்று தோன்றியது. நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே உடைமாற்ற எத்தனித்தான். அந்த ஒற்றை அறையில் எந்த மறைப்பு எதுவும் இல்லை. அவன் எந்த சங்கோஜமும் இல்லாமல் சர்வசாதாரணமாக சில வினாடிகள் நிர்வாணமாகி வேறு துணிக்குள் தன்னை புகுத்திக் கொண்டான். எனக்குத்தான் அந்த சில வினாடிகளை எப்படிக் கடப்பது என்று தெரியவில்லை. ஆனால் அப்பொழுதும் அவன் எதையாவது பேசிக் கொண்டே இருந்தான்.
பிறகு புரோட்டாக்கடைக்குச் சென்றோம். அதுவரை கல்லில் நின்று கொண்டிருந்த மாஸ்டரை நகர்த்திவிட்டு ஸ்பெஷல் கொத்துபுரோட்டா ஒன்று போட்டுத் தந்தான். அந்த சுவைக்காகவாவது காசு கொடுக்க விரும்பினேன். வாங்க மறுத்துவிட்டான். ‘ரெண்டு நாளைக்கு இங்கதான் இருப்பேன். மறுபடியும் வர்றேன்’ என்றேன். கடைக்கு வெளியே வந்த போது அவசர அவசரமாக ஓடி வந்து கையில் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டைத் திணித்து ‘பையனுக்கு கொடு’ என்றான். மறுத்த போதும் வற்புறுத்தினான். வாங்கிக் கொண்டேன்.
ஈரோடு செல்வதை விட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினேன். டவுன்பஸ்ஸில் ஏறி அமர்ந்த போது ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் நினைவுக்கு வந்தவையெல்லாம் ஸ்லோ மோஷனில் ஓடத் துவங்கின. சுற்றிலும் கீச்சுக்குரல் கேட்கத் துவங்கியிருந்தது.